மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/025
4. சங்க காலத்து நடுகற்கள்[1]
பழங்காலத்துத் தமிழர் வீரத்தைப் போற்றினார்கள். போர்க்களத்தில் புறங்காட்டி ஓடாமல் திறலோடு போர் செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து போற்றிப் பாராட்டினார்கள். திறலோடு போர் செய்து களத்தில் விழுந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தார்கள். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்களில் காணலாம்.
வெட்சிப்போர், கரந்தைப்போர், வஞ்சிப்போர், உழிஞைப் போர், நொச்சிப் போர், தும்பைப் போர், வாகைப் போர் என்று போரைத் தமிழர் ஏழு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். சங்க காலத்தில் அரசர்கள் போர் செய்வதைத் தங்கள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதினார்கள். ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர் செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறளும் கூறுகிறது.
‘என் ஐமுன் நில்லன்மின் தெவ்விர்,
பலர் என் ஐ முன்நின்று கல்நின் றவர்’ (படைச்செருக்கு)
வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால் நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு. வீரக்கல் நடுவதற்கு ஐந்து துறைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர். அவை காட்சி, கல்கோள், நீர்ப்படை, நடுதல், வாழ்த்து என்று ஐந்து துறைகளாம். காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கல்கோள் என்பது தேர்தெடுத்த கல்லைக் கொண்டுவருவது, நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும் அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுதல் என்பது அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு அதற்கு மயிற் பீலிகளையும், மாலைகளையுஞ் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறலையும், புகழையும் வாழ்த்திப் பாடுவது, கல் நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பாக வீரர்களும் வந்து சிறப்பு செய்வார்கள்.
போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் பழந்தமிழகத்தில் மட்டுமல்லாமல் வேறு நாடுகளிலும் பழங்காலத்தில் இருந்து வந்தது. ஐரோப்பாக் கண்டத்திலும் சில நாடுகளில் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. அந்த நடுகற்களுக்கு அவர்கள் மென்ஹிர் என்று பெயர் கூறினார்கள். மென்ஹிர் என்றால் நெடுங்கல் அல்லது உயரமான கல் என்பது பொருள். மென்ஹிர் (Menhir) என்பது பிரெடன் (Breton) மொழிச்சொல் (men = stone. Hir = High) இந்தோனேசியத் தீவுகள் எனப்படும் ஜாவா சுமத்திரா போன்ற கிழக்கிந்தியத் தீவுகளிலும் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. இதனால், பழந்தமிழரைப் போலவே வேறு நாட்டாரும் நடுகல் நடுகிற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது.
வீரர்களுக்கு நடுகல் நட்டதைச் சங்கச் செய்யுள்களில் காண்கிறோம். கரந்தைப் போரில் இறந்துபோன ஒரு வீரனுக்கு நடுகல் நட்டதை ஆவூர் மூலங்கிழார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். (புறம். 261:13-15.) இன்னொரு கரந்தைப் போரில் வீரமரணம் அடைந்த ஒரு வீரனுக்கு வீரக்கல் நட்டபோது அவன் மீது கையறுநிலை பாடினார் புலவர் உறையூர் இளம்பொன்வாணிகனார். அந்த நடுகல்லின் மேல் அவனுடைய பெயரைப் பொறித்து மாலைகளாலும், மயிற்பீலிகளாலும் அழகு படுத்தியிருந்ததை அச்செய்யுளில் அவர் கூறுகிறார். (புறம். 264)
சேலம் மாவட்டத்திலிருந்த தகடூர் கோட்டையின் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசன் தகடூரின் மேல் படையெடுத்து வந்து அக் கோட்டையை முற்றுகையிட்டான். அதன் காரணமாகப் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. அப்போரில் அதிகமான் நெடுமான் அஞ்சி புண்பட்டு இறந்து போனான். அவனுக்கு வீரக்கல் நட்டு அவன் வீரத்தைப் போற்றினார்கள். அப்போது அவனுடைய புலவராக இருந்த ஒளவையார் கையறு நிலைபாடினார். (புறம். 232)
கோவலர் (ஆயர்) வளர்த்து வந்த பசுமந்தைகளைப் பகையரசனுடைய வீரர்கள் வந்து ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இதனையறிந்த அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று வில்லை வளைத்து அம்புமாரி பொழிந்து பகைவரை ஓட்டித் தன்னூர்ப் பசுக்களை மீட்டுக் கொண்டான். ஆனால், வெற்றி பெற்ற அவன் பகைவீரர்கள் எய்த அம்புகளினால் புண்பட்டு மாண்டு போனான். திறலுடன் போர் செய்து மாண்டு போன அவ்வீரனுக்கு அவ்வூர்க் கோவலர்கள் நடுகல் நாட்டார்கள். அந்த நடுகல்லுக்கு வேங்கை மரத்துப் பூக்களினாலும் பனங்குருத்துகளாலும் மாலைகள் கட்டிச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். இந்தச் செய்தியைச் சோணாட்டு முகையலூர் சிறு கருத்தும்பியார் தம்முடைய செய்யுளில் கூறியுள்ளார். (புறம் – 265)
இன்னொரு ஊரில் பகைவர்கள் வந்து அவ்வூர்ப்பசு மந்தைகளைக் கவர்ந்து கொண்டு போனார்கள். அப்போது அவ்வூர் வீரன் அவர்களைத் தொடர்ந்து சென்று போராடி மந்தைகளை மீட்டுக் கொண்டான். ஆனால். பகைவர் எய்த அம்புகள் உடம்பில் பாய்ந்த படியால் அவன் இறந்து போனான். அவனுக்காக நட்டவீரக் கல்லில் அவனுடைய பெயரைப் பொறித்து மயிற் பீலிகளினால் அக் கல்லை அழகு செய்து போற்றினார்கள் என்று மருதனிள நாகனார் என்னும் புலவர் பாடுகிறார். (அகம் 131: 6-11)
தன் ஊர்ப் பசுக்களைப் பகைவர் கவர்ந்துகொண்டு போன போது அவ்வூர் வீரன் அப்பகைவரிடமிருந்து பசுக்களை மீட்டான். ஆனால், பகைவரின் அம்புகளினால் புண்பட்ட அவன் இறந்து போனான். அவ்வூரார் அவ்வீரனின் நினைவுக்காக வீரக்கல் நட்டுப் போற்றினார்கள். அந்தக் கல்லின் மேல் அவ்வீரனுடைய பெயரை எழுதினார்கள். மாலைகளையும், பீலிகளையுஞ் சூட்டினார்கள். நடுகல்லின் மேலே சித்திரப் படத்தினால் (சித்திரம் எழுதப்பட்ட துணி), பந்தல் அமைத்துச் சிறப்புச் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை வடமோதங்கிழார் கூறியுள்ளார். (புறம். 260)
ஒரு ஊரிலிருந்த பசு மந்தைகளைச் சில வீரர்கள் வந்து பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அதையறிந்த அவ்வூர் வீரர் சிலர் அவர்களைத் தொடர்ந்து சென்று பசுக்களை மீட்பதற்காகப் போர் செய்தார்கள். பகைவரும் எதிர் நின்று அம்பு எய்தனர். பகைவரின் அம்புக்கு அஞ்சிச் சில வீரர்கள் ஓடிப்போனார்கள். ஒரு வீரன் மட்டும் புறங்கொடாமல் நின்று போர் செய்தான். பகைவீரர்களின் அம்புகள் அவனுடைய உடம்பில் தைத்து அவன் அக்களத்திலே இறந்து போனான். அவ் விறல்வீரனுக்கு நடுகல் நட்டுப் போற்றினார்கள் அவ்வூரார். (புறம். 263)
ஆண்டுதோறும் வீரக்கல்லுக்கு அவ்வீரனுடைய உறவினர் பூசை செய்தார்கள். அந்நாளில் அந்நடுக்கல்லை நீராட்டி எண்ணெய் பூசி மலர் மாலைகளைச் சூட்டி நறுமணப் புகையைப் புகைத்தார்கள். அந்தப் புகையின் மணம் ஊரெங்கும் கமழ்ந்தது. வீட்டில் சமைத்த மதுவை இறந்த வீரனுக்குப் பலியாகக் கொடுத்தனர். இந்தச் செய்தியை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். (புறம். 329)
சங்க காலத்துத் தமிழகத்திலே அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. ஆகையினால் நாடெங்கும் நடுகற்கள் காணப்பட்டன.
“நல்லமர் கடந்த நலனுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்”
என்று (அகம் 67: 8-10) புலவர் நோய் பாடியார் கூறியது போன்று ஊர்களிலும் வழிகளிலும் நடுகற்கள் இருந்தன.
நடுகற்கள்,பலகை போன்று அமைந்த கருங்கற்களினால் ஆனவை. அவை நீண்டதாக இருந்தன. ‘நெடுநிலை நடுகல்’ என்று ஒரு புலவர் கூறுகிறார். பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் இருந்தன. பழமையான நடுகற்களின் மேலே செடி கொடிகள் படர்ந்திருந்தன. நடுகல்லில் இறந்த வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டிருந்தபடியால் ‘எழுத்துடை நடுகல்’ என்று கூறப்பட்டது. வழிப்போக்கர் வழியில் உள்ள நடுகற்களண்டை நின்று அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படிப்பது வழக்கம். சில சமயங்களிலே அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துகளில் சில எழுத்து மழுங்கி மறைந்து போய் சில எழுத்துக்களே எஞ்சியிருக்கும். அவ்வெழுத்துக்களைப் படிப்போருக்கு அதன் பொருள் விளங்காமலிருக்கும்.
சில வீரர்கள் தங்களுடைய அம்புகளை நடுகற்களின் மேல் தேய்த்துக் கூராக்குவர். எஃகினால் ஆன அம்பு முனையைத் தேய்க்கும்போது நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் சில மாய்ந்து போகும். எஞ்சியுள்ள எழுத்துக்களைப் படிப்போருக்கு அவ்வெழுத்தின் பொருள் விளங்காமற் போயிற்று. இச்செய்தியை மருதன் இள நாகனார் கூறுகிறார்.
“இருங்கவின் இல்லாப் பெரும்புல் தாடிக்
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
சூர்முதல் இருந்த ஒமையம் புறவு.” (அகம் 297-5:11)
உப்பு வாணிகராகிய உமணர் உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்பார்கள். செல்லும் போது வழியில் உள்ள நடுகற்களின் மேல் வண்டிச் சக்கரம் உராய்ந்து நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களில் ஒன்றிரண்டு எழுத்துக்களைத் தேய்த்து விடுவதும் உண்டு. அவ்வாறு மறைந்துபோன எழுத்து இல்லாமல் மற்ற எழுத்துக்களைப் படிக்கிறவர்களுக்கு அதன் வாசகம் வேறு பொருளைத் தந்தது என்று மருதன் இளநாகனாரே மீண்டுங் கூறுகிறார்.
“மரங்கோள் உமண்மகன் பேரும் பருதிப்
புன்றலை சிதைத்த வன்றலை நடுகல்
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தால்
ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்குங்
கண்பொரி கவலைய கானகம்”(அகம். 343: 4-9)
நடுகற்கள் பலவித உயரங்களில் அமைக்கப்பட்டன. மூன்று அடி உயரமுள்ள நடுகற்களும் பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் உண்டு.
இதுவரையில் கடைச்சங்க காலத்து (கி.மு. 300 முதல் கி.பி. 250 வரையில்) நடுகற்களைப் பற்றி ஆராய்ந்தோம். அக்காலத்து நடுகற்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சங்க காலத்துக்குப் பிறகு கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும், கன்னட நாட்டிலும் வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் இருந்து வந்தது. பிற்காலத்து வீரக்கற்களில் பல நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பிற்காலத்து நடுகற்களில் பிற்காலத்து வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சங்ககாலத்து வீரக்கற்கள் ஒன்றேனும் இதுகாறும் கிடைக்கவில்லை.
சங்க காலத்தில் வழங்கி வந்த தமிழ் எழுத்து எது?
வட்டெழுத்து என்னும் ஒருவகையான எழுத்து முற்காலங்களில் தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. வட்டெழுத்து வழங்குவதற்கு முன்பு பிராஃமி எழுத்து சங்க காலத்தில் வழங்கிவந்தது என்பதை இப்போது அறிகிறோம். மலைக் குகைகளிலே பாறைக் கற்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள பிராஃமி எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்துக்கு முன்பு பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்தது என்பதை அறிகிறோம்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி காலத்தில் பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அதாவது கடைச்சங்க காலத்திலே பிராஃமி எழுத்து தமிழகத்தில் வழங்கப்பட்டது என்பது தெரிகின்றது. இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கிற பிராஃமி எழுத்துக்கள் தமிழ் நாட்டுப் பெளத்த ஜைன மதத்தார்களால் எழுதப்பட்டவை. பௌத்த ஜைனர் காலத்துக்கு முன்பு, அதாவது பிராஃமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் என்ன எழுத்து வழங்கி வந்தது?
தமிழர்களுக்கு வேறு எழுத்து இல்லை என்றும் பிராஃமி எழுத்தைத்தான் தமிழர்களும் கைக்கொண்டார்கள் என்றும், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு முதலிய சங்கநூல்கள் எல்லாம் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகிறவர்கள், (பிராஃமி எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு), தொல்காப்பியம் முதலிய சங்க காலத்து நூல்கள் வட்டெழுத்தினால் எழுதப்பட்டன என்று கூறி வந்தார்கள். இப்போது பிராஃமி எழுத்து சங்க காலத்தில் வழங்கி வந்தது என்பது தெரிந்த பிறகு, தொல்காப்பியம் முதலிய சங்க நூல்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்று கூறுகிறார்கள்.
இன்னொரு சாரார், பிராஃமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒரு வகையாக எழுத்து சங்க காலத்தில் வழங்கி வந்தது என்றும், பிராஃமி எழுத்து வந்த பிறகு அந்த பழைய எழுத்து மறைந்துவிட்டதென்றும் கூறுகிறார்கள். அந்தப் பழைய எழுத்து இன்ன உருவமுடையது என்பது தெரியவில்லை.
பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் வேறு வகையான பழைய எழுத்து இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கும் சான்று இல்லை. இருக்கவில்லை என்று சொல்வதற்கும் சான்று இல்லை.
பிராஃமி எழுத்துத்தான் முதன் முதல் தமிழர் அறிந்த எழுத்து, அதற்கு முன்பு எந்த எழுத்தும் தமிழில் இல்லை என்று கூறுகிறவர். வேறு பழைய எழுத்து இருந்ததில்லை என்று கூறுவதற்குச் சான்று காட்டவில்லை.
பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறு எழுத்து இருந்ததா இல்லையா என்னும் கேள்விக்குச் சரியான விடை கூறத்தகுந்தவை சங்ககாலத்து நடுகற்களே. சங்ககாலத்து நடுகற்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை மேலே சான்று காட்டிக் கூறினோம். அந்த வீரக்கற்கள் கிடைக்குமானால், அக் கற்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அந்தக் காலத்தில் வழங்கி வந்த எழுத்தின் வரிவடிவத்தையறியலாம். ஆனால், இது வரையில் சங்க காலத்து நடுகல் ஒன்றேனுங் கண்டுபிடிக்கப்படவில்லை.
பௌத்தர் ஜைனர் மட்டும் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டில் பிராஃமி எழுத்தை எழுதினார்கள் என்றால், அக்காலத்தில் பௌத்தர் ஜைனரல்லாத தமிழர் வேறு ஒரு வகையான எழுத்தை எழுதியிருக்க வேண்டும். அந்த எழுத்துக்கள் நிச்சயமாக அக்காலத்து நடுகற்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, கடைச்சங்க காலத்தில் பிராஃமி எழுத்து வழங்கி வந்ததா அல்லது வேறு வகையான எழுத்துவழங்கி வந்ததா என்பதை அறிவதற்கு அக் காலத்து நடுகற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அகழ்வாராய்ச்சி செய்யும் புதை பொருள் ஆய்வாளர் (ஆர்க்கியாலஜி இலாகா) இதுபற்றி இதுவரையில் சிந்திக்கவே இல்லை. இனியாயினும் இதுபற்றிச் சிந்திப்பார்களாக.
தமிழக அரசு தன் சொந்தச் செலவில் ஆர்க்கியாலஜி இலாகா ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்த இலாகா, சங்ககாலத்து நடுகற்களைக் கண்டுபிடித்து உதவுமானால் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வீரக்கற்கள் நிலத்திலே ஆழ்ந்து புதைந்து கொண்டிருக்கும் பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்திலும் புதைந்து கிடக்கலாம். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் தமிழகத்து ஆர்க்கியாலஜி இலாகாவும், மத்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகாவும் இணைந்து ஒன்று சேர்ந்து இதில் முயல்வார்களானால் பயன் காணக்கூடும்.
தமிழ்நாட்டு ஆர்க்கியாலஜி இலாகாவும் மத்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகாவும் (எபிகிராபி இலாகாவும் உட்பட) கோயில்களிலுள்ள கல்வெட்டெழுத்துகளையும், தரைக்குமேலே காணப்படுகிற கல்வெட்டெழுத்துகளையும் மட்டும் கண்டு பிடித்துக் கொண்டிருப்பது போதாது. தரைக்குள் புதைந்து கிடக்கிற வீரக்கல் போன்றவற்றையும் அகழ்ந்தெடுத்து வெளிப்படுத்த வேண்டும். பெயரளவில் மட்டும் செயலாற்றாமல் சுறுசுறுப்பாக முயற்சியோடு செயலாற்ற வேண்டும். “உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?”
- ↑ ஆராய்ச்சி இதழ் 1:2; 1969.