மருத்துவ விஞ்ஞானிகள்/வில்லியம் ஹார்வி



வில்லியம் ஹார்வி
(1578 1657)



1
பயந்தவன் தனக்கே பகையானான்!
துணிந்தவன் உலகுக்கு ஒளியானான்!

மனிதன் என்று தோன்றினானோ, அன்று முதல் அவன் இயற்கைச் சக்திகளோடு இன்று வரைப் போராடிக் கொண்டே இருக்கின்றான்!

மனிதகுலப் போராட்டம் - ஏன்?

விண்ணை எதிர்த்துப் போராடினான் - வானவூர்தியைக் கண்டு பிடித்தான். மண்ணை எதிர்த்துப் போராடினான் - அணுவை நூறு கூறுகளாக்கி அதற்குக் கோண் என்ற ஒரு புதுமைப் பெயரையிட்டான்! அணு குண்டைக் கண்டு பிடித்தான்; அவனியை இன்று அதட்டிப் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறான்!

தண்ணிரை எதிர்த்தான்; மீனையே கடலை விட்டுத் தூக்கி எறிந்து, அதையே உணவாக்கிக் கொண்டு, கடல் தண்ணீரையே இரண்டாகக் கிழித்துக் கொண்டே ஓடும் கப்பலைக் கண்டான்; கடல் வணிகத்தைப் பெருக்கி உலகையே பொருளாதாரத்தோடு போட்டிப் போடும் துறைமுகங்களாக்கிக் கொண்டான்:

ஆயிரம் நிலவே வா!’ என்று வெண்ணிலாவை அழைத்து வேல் விழியர் காதல் நெஞ்சத்தோடு நீந்தி விளையாடிய மனிதன், இன்று நிலாவையே எதிர்த்து சந்திர மண்டலத்தில் நடனமாடி கலை நிலாவிலே கவின்மிகு விஞ்ஞானங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றான்!

இந்த அறிவுப் போராட்டம் இன்று நேற்ற துவங்கியது? என்று மனிதன் உலகத்திலே உதிக்கும் கருவாகி, உருவாகி, பிறந்து வளர்ந்து, வாழ முற்பட்டானோ, அன்று முதல் இயற்கைச் சக்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்திக் கொண்டே, புதுப்புது விஞ்ஞான விந்தைகளை உலகின்முன் உருவாக்கிக் கொண்டே இருக்கிறான்.

இந்தப் போராட்டங்களை எல்லாம் மனிதன் ஏன் இயற்கையை எதிர்த்து ஈடுபட்டு நடத்தி வருகின்றான்? மனித இனம் இயற்கையிலே உள்ள அறிவியல் நுட்பங்களைக் கண்டு பிடித்து உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற அறிவு வேட்கையின் ஆர்வத்தாலேதான் - இந்தப் போராட்டங்களை இன்றும் நடத்திக் கொண்டிருக்கின்றான்.

அந்த முறையில், மனித இனத்தின் முன்னேற்றத்திற்கும் - மறுமலர்ச்சிக்கும் போராடி வரும் போராட்டங்களில் ஒன்றுதான் மருத்துவத் துறையின் புதுமைகளைக் கண்டுபிடிக்கும் அறிவியல் ஆராய்ச்சிப் போராட்டம் ஆகும்.

மருத்துவத் துறையில் எண்ணற்ற வைத்திய வித்தகர்கள் தோன்றித் தோன்றி அவ்வப்போது அவர்களால் கண்டுபிடித்த மருந்துகளால்தான், உடற் கூறு விஞ்ஞானத்தின் ஊடுருவல் கருவிகளால்தான், மனித இனம் இன்றும் முன்னேறிக் கொண்டே இருக்கின்றது. மருத்துவ மறுமலர்ச்சி வீரர்; வில்லியம் ஹார்வி!

மருத்துவத் துறையின் மறுமலர்ச்சிக்கு அவ்வாறு உழைத்திட்ட மருத்துவச் சான்றோர்களில் ஒருவர் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவப் பேரறிஞர்.

நமது மனித உடலில் எண்ணற்ற விஞ்ஞான விந்தைகள் நாள்தோறும் நடந்துக் கொண்டே இருக்கின்றன. அது போலவே, உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் மனித உடலின் விந்தைகளை ஆராயும் அறிஞர்களும் தோன்றியபடியே இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் தோன்றினார்கள், வாழ்ந்தார்கள், மறைந்தார்கள் என்றில்லாமல், மருத்துவத் துறையிலும் - மனித உடலிலும் நம்மையும் அறியாத, நம்மாலும் உணர முடியாத சம்பவங்களை எல்லாம் ஒரு மர்மக் கதைபோல, துப்பறிந்துக் கூறிய விஞ்ஞானிகளின் அறிவுத் தியாகத்தை நம்மால் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

மனித உடலில் அன்றாடம் தோன்றும் மர்மங்களை, மாற்றங்களை, அதனால் உருவாகும் நோய்களை, அவற்றைக் குணப்படுத்தும் அறிவியல் கருவிகளை, மருந்துகளை, மருத்துவத் துறை மேதைகள் கண்டுபிடிக்கும் போதெல்லாம், அந்தந்த நாட்டின் சமுதாய மூடநம்பிக்கைகளும் - அவர்களை எதிர்த்துப் போராடிய நிகழ்ச்சிகளும் ஏராளமாக உருவாயின.

மூடநம்பிக்கை - முணுமுணுப்புகள்!

அந்தக் காலத்தில் வைசூரி, காலரா, பிளேக், அம்மை நோய் வகைகள் போன்ற கோரமான, கொடிய நோய்கள் தோன்றி, மக்களை வாட்டி வதைத்து வேதனைப்படுத்திய நேரங்களில், அவை எல்லாமே தேவக் குற்றங்கள் - நாம் தவறு செய்ததால் வந்த வினைகள் என்று நம்பி, மேலை நாட்டு மூடநம்பிக்கைகள் முணுமுணுத்தன.

ஆனால், நமது நாட்டு மூட நம்பிக்கைகள், அந்த நோய்கள் எல்லாம் மாரியம்மன் கோபத்தாலும், முனிஸ்வரன் சேட்டை களாலும், கருப்பசாமி, ஐயனாரப்ப சாமி போன்ற சாமிகளுக்கு மக்கள் மேல் ஏற்பட்ட சீற்றத்தின் காரணம் தெய்வக் குற்றங்கள்தான் என்றார்கள்:

கோயில் பூசாரிகளும், சங்கூதும், பண்டாரங்களும், சலவையாளர்களும். நாவிதர்களும், குறி கூறும் மருளாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு வேப்பிலைக் கொத்துக்களை கைகளில் ஆணவக் கம்பீரத்தோடு ஏந்திக் கொண்டு; அவரவர் அறிவுக்கேற்ப, மந்திரிப்பது, விபூதி பிடிப்பது, குலுசம் கட்டுவது, சிலைகளாபிஷேகம் செய்து பொங்கலிடுவது, பேயாடுவது, மருளாடிக் குறி கேட்பது, முடிக்கயிறு போடுவது போன்ற விவகாரங்களிலே ஈடுபட்டு, நோயாளிகளைப் பயங்காட்டி ஏதேதோ காரணங்களைக் கூறி, அவற்றைச் செய்துவிட்டு பணத்தையும் பெற்றுச் சென்று விடுவார்கள்!

இவ்வாறு அவர்களுக்குத் தோன்றியதை எல்லாம் செய்பவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் அறிவாவது உண்டா என்றால் அதுவுமில்லை. மருத்துவ விஞ்ஞானம் இன்று எவ்வளவோ முன்னேறி வளர்ந்த பிறகும் கூட, இன்றும் நமது மக்கள் தெய்வக் குற்றம், காற்றுக் கருப்பு, பேய், பில்லி சூனியம், வைப்பு போன்ற மாய மந்திர ஏமாற்றுத் தனங்களைத்தான் நம்புகிறார்கள். என்றாலும், மருத்துவமும் பார்த்தாக வேண்டும் என்ற முடிவுக்கும் முன்னேறி வந்திருக்கிறார்கள்.

எனவே, இத்தகைய மூட நம்பிக்கைகளை முறியடித்து, அறியாமைச் சகதியிலே அகோரமாக உழன்று கொண்டிருந்த விகார உள்ளம் படைத்த மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஒளியேற்றி வைத்த பெருமை மருத்துவ விஞ்ஞானிகளையே சாரும்,

அந்த மருத்துவ மேதைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலே சிறந்து விளங்கினார்கள். அத்தகைய மருத்துவ வித்தகர்களுள் ஒருவர்தான் வில்லியம் ஹார்வி என்பவர்.

அவரைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பு, நாம் ஒவ்வொருவரும் நமது உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பைப் பற்றி, அதன் முக்கியத்துவத்தைப் பற்றி - ஓரளவாவது புரிந்து கொண்டால்தான், அந்த இதயத்துக்காக அரும்பாடுபட்ட ஒரு மருத்துவ மேதையின் உண்மையான உழைப்பின் மகத்துவத்தை நம்மால் அறிய முடியும்!

இதயம் பற்றி, திருக்குறள்?

வரம்பு மீறிய ஒரு கொடுங்கோலன் மக்கள் உயிர்களை எல்லாக் கோணத்திலும் வாட்டி வதைக்கும் போது, அவனை நாம் இதயமில்லாதவன் என்று கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்! காதலுக்கு எதிர்ப்பு எழுப்பும் பெற்றோர்களது கட்டுப்பாடுகளை விமரிசனம் செய்யும்போதும், அவர்களை நாம் இதயமில்லாதவர்கள் என்று பெற்ற பிள்ளைகளே குற்றம் சாட்டுகின்ற அளவுக்கு; இதயம் ஓர் அளவுகோலாக மதிக்கப்படுகின்றது - மனித நேயத்தால்!

இதயம் இளகாதவர்களைக் கல்நெஞ்சர் என்றும், அன்பு, இரக்கம், கருணை, விசுவாசம், மனிதாபிமானம், இன்னும் என்னென்னமோ கூறப்படும் சொற்களால் இதயத்தை நாம் வருணனை செய்கிறோம். அவ்வளவு ஒரு முக்கியமான உறுப்பாக இதயம் மக்களால் போற்றப்படுகின்றது.

திருவள்ளுவர் பெருமான்கூட, இளம் காதலர் நெஞ்சங்களின் பெருமையைக் குறிப்பிடும்பொழுது, அதுவும் ஒரு பெண்ணைக் காதலிக்கும் இதயத்தைப் பெருமைப்படுத்திப் பேசும்போது,

"நெஞ்சத்தார் காத லவராக;வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்(கு) அறிந்து”

என்ற ஒரு குறளில், “காதலி மனத்தில் குடிபுகுந்து நிலைத்துவிட்ட காதலருக்கு இதயம் சுட்டுவிடும் என்பதால், அந்தக் காதலி சூடான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிட அஞ்சுவாள்” என்கிறார்! ஏன் தெரியுமா?

அவளது இதயத்தில் குடிகொண்டிருக்கும் அன்புக்குரிய நாயகனுக்கு, காதலி சூடாக எந்த ஒரு உணவைச் சாப்பிட்டாலும் அவளது காதலன் குடி கொண்டிருக்கும் இதயத்தைச் சுட்டு விடுமாம்! காதலி காதலனிடம் காட்டும் கருணை, அன்பைவிட, அவளது இதயத்தை அவள் எவ்வாறு பாதுகாத்துப் போற்றுகிறாள் பார்த்தீர்களா?

இதன் மூலம் நாம் அறிவது என்ன? அந்தக் காலத்திலேயே, அதற்கும் முன்பான தமிழர் நாகரீக வாழ்க்கையிலேயே, மனதுக்கும் - உணர்வுக்கும் இருப்பிடமாக இதயம் இருந்த அருமையின் பெருமையை அல்லவா சுட்டுகிறார் திருவள்ளுவர் பெருமான்? தமிழர் அக பண்பாட்டை அவர் எவ்வளவு நாகரிகமாக அவனிக்குச் சுட்டிக் காட்டுகிறார் பார்த்தீர்களா?

திருடர்கள் இதயம்!

உடல் இயக்கத்துக்கு மூல காரணம் மூளைதான். என்றாலும், அந்த மூளையின் சிறப்பைக் கண்டறிய முதன் முதல் இரண்டு திருடர்கள்தான் பயன்பட்டிருக்கிறார்கள்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கும்-எட்டாம் நூற்றுண்டுக்கும் இடைவெளியில்: எடின்பரோ நகரில் பர்க், ஹாரே என்ற இரண்டு திருடர்கள். தங்களது திருட்டுத் தொழில்களது வருவாய் அவர்கள் வாழ்க்கைக்குப் போதவில்லை என்ற காரணத்தால், அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது! என்ன சிந்தனை அது?

மனிதனுடைய உடலை அறுத்துப் பார்த்துச் சோதனை செய்திட அப்போது அரசு தடை இருந்த காலம். அதனால் மருத்துவ விஞ்ஞானிகளால் உடல் பரிசோதனை ஆராய்ச்சியைச் செய்ய முடியாததால், அந்தத் திருடர்கள் இருவரும்; சுடுகாட்டுக்குச் சென்று, புதைக்கப்பட்ட பிணத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டு வந்து, மருத்துவர்கள் சோதனைக்குரிய பிணங்களாகக் கொடுத்து விட்டு - ஏராளமான தொகையைப் பெற்று வாழ்ந்து வந்தார்கள்.

சற்று அதிகமாகக் கூறுவதானால், திருடர்கள் பிணங்களை விற்று வந்தத் தொகையை அக்கால ஏழைகளுக்கு வட்டிக்குக் கொடுப்பார்கள். பணத்தைத் திருப்பித் தரமுடியாத கடனாளிகளைச் சமாதானமாக வீட்டு விருந்துக்கு அழைத்து வந்து, உணவில் நஞ்சைக் கலந்து விருந்து வைத்துச் சாகடித்து விடுவார்கள். மருத்துவத்துறை விஞ்ஞானிகளின் அறுவைச் சோதனையிலே அந்தப் பிணங்களின் மூளைப் பகுதிகள், நரம்புகள் அனைத்தும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். பிறகு ஒரு நாள் இந்தப் பிணம் திருடும் செய்தி இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்ததும் தண்டனைப் பெறுவார்கள் அந்தத் திருடர்கள்.

திருடர்கள் கொடுத்தப் பிணத்தைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள், மூளையை அறுவை சிகிச்சை செய்ய ஒரு பிணத்தைப் பயன்படுத்தும்போது, அந்தப் பிணத்தின் இடது கையில் முடக்குவாதம் இருந்ததாம்.

உடனே மருத்துவர்கள் அந்தப் பிணத்தின் தலைக் கபாலத்தைப் பிளந்து பார்த்தார்கள். முடக்கு வாதத்துக்குரிய அடையாளம் மூளையின் வலது பாகத்தில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் வியந்து, மூளைப் பகுதிகளை மேலும் ஆராய்ச்சி செய்திட ஆர்வமடைந்து சிந்தித்தார்கள்.

எனவே, மூளை ஆராய்ச்சிகளுக்குத் திருடர்களின் மூளையில் தோன்றிய சிந்தனையால், பினங்களைத் திருடி அவர்கள் பணக்காரர்கள் ஆனாலும், தண்டனைகளை அவர்கள் பெற்றாலும், மூளை ஆராய்ச்சிக்கு திருடர்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மூளையின் கதை இது. இனி இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஞ்ஞானிகளின் கதையைப் பார்ப்போம்.

வேழத்தின் இதயம்

இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிர்களின் முக்கிய அம்சம்; மூளையை விட இதயத்துக்கு இருந்திருக்கிறது என்பதை, நாம் அறிகிறோம். ஸ்பெயின் நாட்டின் வடக்கே உள்ள ஒரு குகையில், யானை உருவம் ஒன்றை வரைந்து அதன் நடுவில் சிவப்பு வண்ணத்தில் இதயம் போன்ற ஓர் ஓவியத்தை ஒருவர் வரைந்துள்ளார். ஏன் தெரியுமா? வேழத்தைக் கொள்வது என்றால், எந்த இடத்தில் அம்பை எய்ய வேண்டும் என்பதைச் சிவப்பு வண்ணத்தில் சுட்டிக் காட்டியுள்ளார் - அந்த ஒவியத்தில்.

இதுபோலவே, திருவள்ளுர் மாவட்டத்திலே உள்ள திண்ணணுர் எனப்படும் திருநின்ற ஊரிலுள்ள சிவாலயப் பெருமான் பெயர் இருதயாலேஸ்வரர் என்று புராணம் கூறுகிறது. தஞ்சை மாவட்டத்திலே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தியநாத சுவாமி என்ற இறைவன் இருப்பதை நாம் இதுவரை அறிந்திருந்தோம்.

இறைவன் பெயரும் இருதயாலேஸ்வரரே!

ஆனால், திருநின்றவூர் இறைவனுக்குரிய பெயரே இருதயாலேஸ்வரர் என்று நாம் கேள்விப்பட்டபோது, இறைவனுக்கே இதயம் என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்த மக்களின் இதய வேட்கையை நம்மால் எண்ணிப் பார்த்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

இவ்வளவு ஏன், கோவில்கள் அதிகமாகக் காணப்படும் ஊர் என்று போற்றப்படும் காஞ்சிபுரம் நகரில், கி.பி. ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில், இராஜசிம்ம பல்லவன் என்ற மன்னன் கைலாச நாதர் என்ற ஒரு திருக்கோயிலை பிரமிக்கத் தக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் எழுப்பினான். இன்றும் அந்தக் கோவிலைக் காஞ்சிபுரம் செல்வோர் காணலாம்.

பூசலார்நாயனார் : இதயமே கோவில்!

அந்தத் திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் முன்னாள் இரவில் இறைவன் இராஜசிம்மன் கனவில் தோன்றி, “நமது பக்தர் பூசலார் நாயனார் திருநின்றவூரில் நீண்ட நாட்களாக ஓர் ஆலயம் எழுப்பியுள்ளார். நாம் அங்கே நாளை செல்வதால், தங்களது திருக்கோவில் கும்பாபிஷேகத்தை வேறோர் நாளைக்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விட்டார். மன்னன் மறுநாள் திருநின்றவூர் சென்று கனவில் கூறப்பட்டக் கோவிலைத் தேடினான். எங்கும் காணப்படவில்லை ஆலயம். அப்போது பூசலார் நாயினார் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருப்பதைக் கண்ட பல்லவ வேந்தன், அவரை அணுகி கோவில் கும்பாபிஷேகம் குறித்து விசாரித்தான்.

அப்போது பூசலார் இடது கையைத் தனது இதயத்தில் வைத்துக் காட்டி, “நான் எழுப்பிய இறைக் கோட்டம் இதுதான்” என்றார். நாயனாரின் அந்த இதயப் பாகத்துள் இறைவன் திருத்தலம் காட்சி அளித்ததை பல்லவன் பார்த்தான். அதாவது, நாயனார் இதயமே மன்னனுக்குக் கோவிலாகத் தெரிந்தது.

உடனே பல்லவ வேந்தன், அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் வியக்கத் தக்க நிலையில் ஒரு பெரிய திருக்கோவிலை எழுப்பினான். அவர்தான் இருதயாலேஸ்வரர் என்ற இறைவன் ஆவார்.

இவ்வாறாக, காலம் காலமாக இதயத்தின் பெருமைகளைக் கூறப்பட்டு வந்ததின் காரணமாக - மருத்துவ விஞ்ஞானிகளும், இதயம் பற்றி ஆராய்ச்சி செய்யவே அஞ்சி இருக்கிறார்கள்.

உடலின் எந்தப் பாகத்தையும் ஆராய்ச்சி செய்யலாம்; ஆனால், இதயத்தைப் பற்றி மட்டும் யாரும் தொட வேண்டாம் என்று சென்ற நூற்றாண்டு வரை சிலர் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தியோடர் பில்ராத் என்ற மருத்துவ விஞ்ஞானி இதயத்தின் காயத்தை எவன் தைக்கிறானோ, அவன் தனது மருத்துவ இனத்தின் மரியாதையை இழப்பான் என்று கூறி பயமுறுத்தி விட்டதால், எவரும் இதய பாகத்தை ஆராய்ச்சி செய்வதையே கைவிட்டு விட்டார்கள்.

ஹிப்போ கிரேட்டஸ்; இதய ஆய்வு!

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஹிப்போ கிரேட்டஸ் என்ற மருத்துவமேதை கூட, இதயத்தை ஒரு மர்மப் பாகமாகவே கருதி, இதயத்தை வெறும் காற்றுக் குழாய் என்றே நினைத்து விட்டார்.

அவருக்குப் பிறகு வாழ்ந்த கேலன் என்ற மருத்துவ விஞ்ஞானிதான், இரத்தக் குழாய்களில் காற்று இல்லை; ரத்தம் மட்டும் இருப்பதாகக் கண்டுபிடித்தார்.

‘இதயத்தின் வலது பக்கத்திலிருந்து சிறு துவராங்கள் மூலம் இதயத்தின் இடது பக்கத்துக்கு ரத்தம் பாய்ந்து, அது அங்கு காற்றுடன் கலந்து உயிர்ச் சக்தி பெறுகின்றது என்றார். பிற்காலத்தில் அவருடைய ஆராய்ச்சியும் தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

இரத்தத்தில் காற்று கலந்தால், காற்றுக் கட்டி உண்டாகி, அது உயிரையே கொன்றுவிடும் என்று அப்போது உணரப்பட வில்லை.

அந்தக் காலக் கட்டத்தில் மருத்துவம், விஞ்ஞானம், அரசியல் எல்லாவற்றையும் கிறித்துவ தேவாலயங்கள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்ததால், மனித உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் உரிமை எந்த மருத்துவ விஞ்ஞானிக்கும் வழங்கப்படவில்லை.

லியோ டாவின்சி ; இதய ஒவியம்!

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகுதான், இதயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் உரிமையும், அதில் உண்டாகும் நோய்களைப் பற்றி அறியும் உரிமை, ஆராய்ச்சி செய்யும் தகுதி எல்லாம் இந்த நூற்றாண்டில் தான் உண்டானது.

இந்த நிலையில், மனிதன் இதயத்தைப் பற்றித் தெளிவாக ஒரு வரைபடம் எழுதி உலகுக்குக் கொடுத்தவர் உலகப் புகழ் பெற்ற லியோ டாவின்சி என்பவர் ஆவார். ஆனால், அவர் ஒரு மருத்துவ விஞ்ஞானி அல்லர்.

இதயம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை ஒவியம் மூலம் வரைந்து காட்டியவர் ஓவியர் மேதை டாவின்சி தான். அன்று முதல் இதயம் ஒரு வரலாற்றுப் புதையல்போல மருத்துவ உலகுக்குப் பயன்பட்டது.

அதற்குப் பிறகுதான் டாவின்சி, இறந்தவர்களின் உடலை அறுத்து இதயத்தின் உண்மையான உருவத்தை டாவின்சி அறிந்து, உலகுக்கு இதுதான் இதயம் என்ற மனிதப் பகுதி என்பதை அறிவுறுத்தினார்.

இதயத்தின் வடிவில் மெல்லியதாக ஒரு கண்ணாடிக் கூட்டை உருவாக்கி, அதில் இளகிய மெழுகை உருக்கி ஊற்றி, ‘இதோ பாருங்கள், இதில் எங்கெல்லாம் மெழுகு போகின்றதோ. அதுதான் இதயத்தில் ரத்தம் செல்லும் பாதை என்று விளக்கியும் காட்டினார் - டாவின்சி.

உண்மை கூறியதால் : உயிரோடு எரிந்தார்!

ஓவிய மேதை டாவின்சிக்குப் பிறகு, மிகுவேல் செர்விட்டஸ் என்ற ஸ்பெயின் நாட்டு மருத்துவ விஞ்ஞானி. இதயத்தை மேலும் ஆராயும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், இந்த செர்விட்டஸ் என்பவர் ஓர் இறைமை ஆய்வாளார், மத ஆராய்ச்சிப் பாதிரியார்.

‘இதயத்தின் ஒரு பக்கத்தில் இருந்து, நுரையீரல் வழியாகத் தான் ரத்தம் மறுபக்கத்திற்குச் செல்கிறது. நுரையீரல்தான் காற்றுடன் கலந்து அது சிவப்பு நிறமாகின்றது; உயிர்ச் சத்தும் பெறுகிறது என்று கண்டுபிடித்துக் கூறியவர் இந்த இறைமை ஆய்வாளரான செர்விட்டஸ் என்ற வித்தகர்தான்.

அவர் இந்த விவரத்தைத் தான் எழுதிய கிறிஸ்துவம் மீட்க்கப்பட்டது (Christianity Restored) என்ற நூலில் இந்த விளக்கத்தைக் குறிப்பிட்டார்.

விஞ்ஞானி கேலன் முடிவுக்கு எதிர்ப்பா?

கேலன் என்ற மருத்துவ மேதையின் ஆராய்ச்சிக் கண்டு பிடிப்புக்கு எதிராக, விரோதமாக, செர்விட்டஸ் கண்டுபிடிப்பு இருந்ததால், அது மருத்துவ உலகில் ஒரு பெரும் விவாத சர்ச்சையை எழுப்பி விமரிசனத்துக்கு உட்பட்டு விட்டது. ஆனால், நுரையீரல் பற்றிய குறிப்பே கேலன் ஆராய்ச்சியில் குறிப்பிடப்படவில்லை.

கேலன் கண்டுபிடித்தது என்னவென்றால், “இதயத்தின் இடது பக்கத்துக்கு ரத்தம் வந்து, அங்குதான் அது காற்றுடன் கலந்து உயிர்ச் சக்தி பெறுகிறது” என்பதுதான்.

மருத்துவ மேதை கேலன் என்பவருக்கு எதிராக, ஓர் அரிய கருத்தைக் கூறினார் செர்விட்டஸ் என்பதற்காக, அவர் மீது மற்ற மருத்துவர்கள் தீராக் கோபம் கொண்டு, அவரை 1553-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் உயிரோடு கொளுத்தி எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள் மத குருமார்கள். அத்தோடு மட்டுமா விட்டு விட்டது. கிறித்துவ தேவாலய ஆதிக்கம்? அவர் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருந்த குறிப்புகளை எல்லாம் தீ வைத்துக் கொளுத்திவிட்டது.

அஞ்சா நெஞ்சன் ஆர்வி துணிவு!

இந்த உயிர்க் கொலைக்குப் பிறகு, எந்த மருத்துவ விஞ்ஞானியும், இதயம் என்ற பேச்சையே பேசுவதற்கு பயந்து போய் மேற்கொண்டு எந்த ஓர் ஆராய்ச்சியிலும் ஈடுபட முன்வர மறுத்து விட்டார்கள்.

இந்த உயிர்க் கொலையைப் பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு படித்த வில்லியம் ஹார்வி என்ற மேதை, கொஞ்சமும் பயப்படாமல், வீரமான நெஞ்சம் படைத்த ஒரு விஞ்ஞானியாக, மருத்துவ உலகிலே மீண்டும் இதயம் பற்றி ஆராய்ச்சி செய்த மேதையாக விளங்கினார் என்றால், வில்லியம் ஹார்வி எப்படிப்பட்ட அஞ்சாநெஞ்சுர ஆராய்ச்சியாளராக இருந்தார் என்பதைச் சற்றே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம் அல்லவா?

எனவே, செர்விட்டஸ் உயிர்க் கொலையைக் கண்டு பயந்து, இதயம் என்றால் என்ன என்பது பற்றி வாய் திறவாமல் வாழ்ந்த மருத்துவ உலக விஞ்ஞானிகள் எல்லாம், தங்களது ஆராய்ச்சிக்கே, ஏன் விஞ்ஞான அறிவுக்கே பகையானார்கள்.

எதற்கும் அஞ்சாமல், துணிவே துணை என்று நம்பி, துணிந்தவனுக்குத் துக்கமில்லை. தலைக்கு மேலே சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன என்ற வைர நெஞ்சுரத்தோடு மருத்துவ விஞ்ஞானக் கடலிலே இறங்கி ஆழம் காண நினைத்த வில்லியம் ஹார்வி போன்ற மேதைகள் - உலகுக்கே ஒளியானார்கள். அவரது வரலாற்றைப் படிப்போம் வாருங்கள்.

துணிந்து செயல்பட்ட ஹார்வி;
Father of Cardiology ஆனார்!

விஞ்ஞான ஆராய்ச்சி என்பது ஒரு பெருங்கடல்; அதாவது சமுத்திரம் குடும்ப வாழ்க்கையை ‘சம்சார சாகரம்’ என்பர் சான்றோர். அதைக் கூட சரியான, சமத்துவமான, சுதந்திரமான, வறுமை நீக்கும் பொருளாதாரமான வழிகள் - வளைவு நெளிவுகள் இல்லாமல் இருந்தால் - கடந்து விடலாம் போல் தெரிகிறது.

இதயத் துறை தந்தை : ஹார்வி

ஆனால், அறிவையே முழுக்க முழுக்க நம்பி, ஆராய்ச்சிச் சாகரத்தில் இறங்கினால், அது எத்தகையதோர் ஆபத்து, ஏளனம், ஏகடியம், அவமானம், அரசியல், சமுதாய தண்டனைகள் என்ற சுழல்கள், சூறாவளிகள் ஆகியவற்றில் சிக்கிச் சீரழிந்து, இறுதியாக செர்விட்டஸ் போன்ற இறை ஊழியர்கள் தீக்கிறை ஆகி சாம்பலானது போல - ஆக வேண்டிய ஆதிக்கம், அழுக்காறு நெருப்புக் குண்டங்கள் இன்னும் என்னென்ன எதிர்நோக்க உள்ளனவோ, எப்படியெல்லாம் அவற்றைச் சந்தித்து அனுபவிக்க வேண்டியிருக்குமோ, என்ற அச்சங்களிலே இருந்து ஒரு விஞ்ஞானியால் உயிர் மீள முடியுமா?

மீண்டார் வில்லியம் ஹார்வி என்ற அறிவுத்துறை மீகாமன்! ஆராய்ச்சி என்ற கடலுக்குள் அவர் ஆழம் காண அஞ்சாமல், அறிவியல் கலமேறி, இதயத் துறை தந்தை Father of Cardiology என்ற உலகைக் கண்டுபிடித்து மருத்துவத் துறைக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

இதயம் என்பது ரத்தவிசை அழுத்தமுள்ள இயந்திரம் ழுத்ல்யு என்றார். ரத்தம் எப்போதும் ஒரே திசையில் செல்கிறது; உடலில் ஒடும் ரத்தத்தின் அளவு மாறாத நிலையான அளவு கொண்டது: என்றெல்லாம் இதயம் பற்றியும், ரத்தம் குறித்தும் மேலும் தெளிவான, உண்மையான ஆராய்ச்சிக் கருத்துக்களை கூறியவர்தான் வில்லியம் ஹார்வி என்ற மா மனிதர்.

அவரது கண்டுபிடிப்புக்கு பிறகுதான், மருத்துவ உலகம் இதயம் பற்றிய ஆராய்ச்சிக் கருத்துக்களை மருத்துவ உலகம் காது கொடுத்து கேட்டது என்று டாக்டர் சிவகடாட்சம் என்ற மருத்துவ அறிஞர் தனது ‘ஹார்ட் அட்டாக் முன்னும் - பின்னும்’ என்ற நூலில் கூறுகிறார்.

நுரையீரல் ரத்த ஓட்டம் - அதாவது, சிறிய ரத்த ஓட்டம் என்றும், உடலமைப்பு முழுவதும் சார்ந்த ரத்த ஒட்டம் - பெரிய ரத்த ஓட்டம் என்றும், மனித உடலில் இரண்டு விதமான ரத்த ஓட்டங்கள் உள்ளன என்ற விவரத்தை முதன் முதலாக உலகுக்கு விளக்கிக் கூறியவரே மருத்து விஞ்ஞானி வில்லியம் ஹார்விதான்.

‘இந்த இரண்டு இரத்த ஓட்டங்களும் தனித்தனியானவைகள் இல்லை; இணையான ரத்த ஓட்டங்களும் இல்லை; இரண்டுமே தொடர் ரத்த ஓட்டங்களாகவே இருக்கின்றன’ என்ற கருத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்தவரும் வில்லியம் ஹார்விதான்.

இதயம் : ஒரு பம்பிங் ஸ்டேஷன்!

அவ்வாறானால், உடலில் எப்போதும் ரத்த ஓட்டம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு விளக்கம் விவரிக்க வந்த வில்லியம் ஹார்வி; “இதயத்தின் விசை, இயக்க சக்தியே. அதாவது, ழுத்ல்யுஏலீஙி கீய்ஙிஏடூலீனே” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்த ஓட்டம் பற்றி தற்கால விஞ்ஞானமும் நம்பும் அளவுக்கு சில உண்மைகளை அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்ததால், வில்லியம் ஹார்வியை மருத்துவ விஞ்ஞான உலகம் ‘இதயத் துறையின் தந்தை Father of Cardiology என்று இன்றும் போற்றிப் புகழ் பாடுகின்றது.

வில்லியம் ஹார்வி இவ்வளவு விவரங்களைத் தமது ஆராய்ச்சியில் கண்டுபிடித்த பிறகு, ‘’ “மனித உடற் கூறு விதிகள், மனித இரத்த ஓட்டம்” ‘’ எனும் ஆராய்ச்சி நூல்களை எழுதி, ஜெர்மன் நாட்டில் நடந்த ஒரு புத்தக விழாவில் வெளியிட்டார்.

இதயத்தில் இருந்து இரத்த ஓட்டம் எவ்வாறு மனித உடலில் ஒடுகிறது? நுரையீரல், இதயம் ஆகியவை ரத்த ஒட்டத்தில் வகிக்கும் முக்கிய பங்குகள் என்னென்ன? என்பதை எல்லாம் வில்லியம் ஹார்வி தனது நூற்களில் மிகத் தெளிவாக எல்லாருக்கும் புரியும் படியாக ஆராய்ச்சி செய்து தனது நூற்களில் கூறியுள்ளார்.

மருத்துவ ஞானியான வில்லியம் ஹார்வியின் இந்தக் கருத்துக்களை அன்றைய மருத்துவ உலகமும், மக்களும் முதலில் நம்ப மறுத்தார்கள். ஹார்வியின் ஆய்வுகளைக் கேலியும் கிண்டலும் செய்து அவரை வேதனைப் படுத்தினார்கள்.

ஹார்வி ஆய்வு : எதிர்ப்பு ஏன்?

இன்றைய மருத்துவ உலகின் முற்போக்கு சேவைக்கு வித்திட்ட வில்லியம் ஹார்விக்கு - இந்த எதிர்ப்பு ஒரு புதிராகவே இருந்தது. அதனால், அவர் அந்த எதிர்ப்பையும், ஏளனத்தையும் பொருட்படுத்தாமல், மருத்துவ ஆய்வில் தளராமல் ஈடுபட்டார்.

இதயத்திலே இருந்து உருவாகும் ரத்தம் ஓட்டம் உடலெல்லாம் பாய்ந்தோடி, மீண்டும் உருவான இடத்திற்கே அந்த ரத்தம் திரும்ப வந்து சேரும் முறையைப் பற்றி அன்று வில்லியம் ஹார்வி தெரிவித்தக் கருத்துக்கள், இன்றை மருத்துவ உலகத்திற்கும் பயன்படுவதாக இருப்பதை மருத்துவ உலகம் புரிந்து கொண்டு விட்டது.

ஹார்வியின் : இளமைப் பருவம்!

மருத்துவத் துறைக்கு இதயம் பற்றி அவர் செய்த ஆராய்ச்சியும், சத்தம் ஒட்டம் குறித்து அவர் வெளியிட்ட சிந்தனைகளும் உலகத்தாரால் போற்றப்பட்டன.

அந்த மருத்துவ விஞ்ஞான மேதை, 1578-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள போல்க்ஸ்டன் கெஸ்ட் என்ற நகரில் பிறந்தார். இவருடைய தந்தை போக்ஸ்டன் நகரின் மேயராக இருந்தார். அவருக்கு ஹார்வி முதல் மகன். ஹார்வியுடன் பிறந்தவர்கள் ஏழு பேர்கள் ஆவர்.

வில்லியம் ஹார்வியின் தந்தையான தாமஸ் ஹார்வி, முற்போக்கு சிந்தனைகள் உடையவர். அவர் நகர மேயராகப் பணியாற்றிய வராதலால், அந்த நகரில் அவர் செல்வாக்கும், சொல்வாக்கும் உடையவர். பணவசதி படைத்தவர்; அதனால், தமது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்த சிறந்தக் கல்விமானாகவும் விளங்கினார்.

வில்லியம் ஹார்வியின் உடன் பிறப்புகள் நல்ல கல்வி யாளராக மட்டுமல்லாமல், செல்வச் சீமான்களாகவும் விளங்கி னார்கள்.

இவரது தம்பிகளில் ஐவர் வணிகப் பெருமக்களாகவும், ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், புகழோடு வாழ்ந்தவர்கள் ஆவர். இவர்களில் புகழ்பெற்றவர்தான் வில்லியம் ஹார்வி என்ற மருத்துவ விஞ்ஞானி.

காண்டர்ஸ்பரி என்ற புகழ் பெற்றக்கிராமத்தில் வில்லியம் ஹார்வி தனது ஆரம்பக் கல்வியைத் துவக்கியவர். பிறகு கேம்பிரிட்ஜ், பல்கலை கழகத்தில் படித்து, பிறகு காயஸ் என்ற கல்லூரியில்1597-ஆம்ஆண்டில்மருத்துவப் பட்டம் பெற்றார்.

காயஸ் கல்லூரியில் அவர் மருத்துவத் துறைப் படிப்பைப் பெற்றபோதே, வில்லியம் ஹார்வி அந்தத் துறையில் ஆராய்ச்சி மாணவராகவும் கல்வி கற்று வந்தார்.

இத்தாலியில் உள்ள ‘இத்தாலிப் பல்கலைக் கழகம்’ அப்போது மருத்துவத் துறையில் புகழ் பெற்றிருந்ததால், அக் கல்லூரியிலே ஹார்வி சேர்ந்து மருத்து மாணவர் கல்வியைத் தொடர்ந்தார்.

கலீலியோ குரு, ஹார்வி மாணவர்!

உலகத்தில் சிறந்த மருத்துவக் கல்லூரியாகத் திகழ்ந்த பாதுவா கல்லூரியிலே; வில்லியம் ஹார்வி சேர்ந்துப் படித்த போது; புகழ்பெற்ற விஞ்ஞானி கலீலியோ பேராசிரியராகப் பணியாற்றினார். அக் கல்லூரி ஆய்வுக் கூடங்களில் ஆராய்ச்சி செய்வதற்கான எல்லாவசதிகளும் இருந்தன. அதனால் ஹார்வி அந்த ஆய்வுக் கூடங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

அந்தக் கல்லூரியில் பெப்ரீசியஸ் என்ற மேதை உடற்கூறு இயல்களை ஆய்வதிலும், ஆய்வு செய்த கருத்துக்களை மற்ற மாணவர்களுக்குத் தனது சொற்பொழிவு மூலம் உரையாற்றி விளக்குவதிலும் வல்லவராக விளங்கினார். பாதுவா கல்லூரியில் 1602-ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்று ஹார்வி இலண்டன் நகர் திரும்பினார்.

பெப்ரீசியஸ் என்ற அந்த மேதை ஆற்றிய உடற்கூறு உரைகளை வில்லியம் ஹார்வி அடிக்கடிக் கேட்டுக் கேட்டு, நுண்ணியக் கருத்துக்களை குறிப்பெடுத்துக் கொண்டு, பிறகு அதையே ஆராய்ச்சியும் செய்து பார்த்து உண்மைகளை ஒப்பிட்டு உணர்வார்.

அதனால், அவரையே தனது உடற் கூறு ஆய்வுக்குரிய ஆசானாக ஏற்றுக் கொண்டு, சுருக்கமாகக் கூறுவதானால், தனது ஆசானையே மிஞ்சுமளவுக்கு ஆய்வு மேதையாக ஹார்வி திகழ்ந்ததை எண்ணி பெப்ரிசியசே வியப்படைந்தார்.

பெப்ரீசியஸ் தனது மாணவரான வில்லியம் ஹார்வியை மனம் திறந்து பாராட்டி, அத் துறையில் அவரது ஆக்கத்தின் நோக்கத்திற்கு ஊக்கமளித்து வாழ்த்தினார். புகழ்பெற்ற தத்துவஞானி பிரான்சிஸ் பேகன் ஹார்வியின் நண்பர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

வில்லியம் ஹார்வி, இத்தாலியில் உள்ள ஆங்கில மருத்துவ மாணவர் மன்றத்திற்குச் செயலாளர் ஆனார்! மற்ற மாணவர்களுக்கும் அவர் மருத்துவ நுட்பங்களை விளக்கப் பயிற்சி கொடுக்கும் விஞ்ஞான வித்தகராகவும் விளங்கினார்.

மருத்துவத் துறையின் பட்டத்தை வில்லியம் ஹார்வி 1602ம் ஆண்டு பெற்றதும், இங்கிலாந்து திரும்பி தனது சொந்த ஊருக்கு வந்து தனது ஆராய்ச்சியை அங்கு தொடர்ந்தார். மருத்துவராகப் பணிபுரிந்த நேரத்தில் அவரது தந்தையார் - ஹார்விக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், கடைசி வரை அவர் மக்கட்பேறு இல்லாமலே மறைந்தார்.

இரண்டு மன்னர்கள் : நண்பராயினர்

மருத்துவத் துறை டாக்டராகப் பணிபுரிந்த ஹார்வி தலைசிறந்த மருத்துவர்களிலே ஒருவர் என்ற புகழை போர்ஸ்டோன் நகரிலே பெற்றார்.

இல்லற வாழ்க்கையை அவர் செம்மையாக நடத்தி வந்தபோது, இராயல் கல்லூரியின் மருத்துவ ஆலோசகராகத் தேர்வு செய்யப்பட்டார். 1609-ஆம் ஆண்டில் வில்லியம் ஹார்வி செயிண்ட் பஸ்தலோமி யூஸ் மருத்துவமனையில் மருத்துவரானார்.

இந்தப் பதவி புகழ்பெற்ற மருத்துவ மேதைகளுக்கு மட்டுமே கிடைக்கும். ஹார்விக்கு அந்த பதவி கிடைத்தது அவரது மருத்துவத் திறமைக்கே ஆகும். இந்தப் பதவியில் ஹார்வி நியமனம் செய்யப்பட்டதற்குப் பிறகுதான், இங்கிலாந்து மருத்துவ உலகத்தில் அவருடைய அறிவுக்கு உத்திரவாதம், அங்கீகாரம் கிடைத்தது எனலாம். முதலாம் சார்லஸ், முதலாம் ஜேம்ஸ் என்ற இங்கிலாந்து மன்னர்கள் நண்பர்கள் மட்டுமல்லர்; ஹார்வியின் நோயாளிகளும் கூட!

இந்தப் பதவியை அவர் பெற்ற பின்புதான், மக்களுக்கு ஏதாவது புதுமையான மருத்துவக் கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்து, மக்கட்சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனைகளே வில்லியம் ஹார்விக்கு எழு ஞாயிறுபோல ஒளி பெற ஆரம்பித்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக அந்தப் பதவியிலே நீடித்தார். அதனால் இங்கிலாந்து நாட்டு மன்னர்கள் நட்பு அவரைத் தேடி வந்து கிடைத்தது. காரணம், அந்த மருத்துவமனையின் பதவிகள் மன்னரால் நியமிக்கப்படும் பதவிகள் ஆகும்.

மதிப்பும் மரியாதையும் அந்தப் பதவிக்கு அதிகமாக இருந்ததே தவிர, அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆண்டொன்றுக்கு நாற்பதே டாலர்தான். செல்வாக்குள்ள குடும்பம் என்பதால், அவரால் அந்தப் பதவியில் முப்பது ஆண்டுக் காலம் நீடிக்க முடிந்தது.

இந்தக் குறைவான ஊதியம் பெற்றவரது குடும்பம் எப்படி இருந்திருக்கும்? வாரம் இரு முறை மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவப் பாடம் போதிக்க வேண்டும். வாரம் ஒரு முறை மனித உடலை அறுவை செய்து காட்டிப் பாடம் எடுக்க வேண்டும். இருந்தும், ஊழியப் பற்றாக்குறை குறித்துக் கவலைப்படாமல், அவற்றை ஒழுங்காக அவர் செய்து வந்ததுடன், தனது ஆராய்ச்சி நுட்பங்களையும் தனக்குத் தானே வளர்த்துக் கொண்டார் வில்லியம் ஹார்வி.

ஹார்வி எழுதிய ஆய்வு நூல்கள்!

செயிண்ட் பஸ்தலோமியூஸ் மருத்துவமனையில் ஹார்வி மருத்துவ உடற் கூறு விரிவுரையாளராக இருந்தபோது, அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகள், பயன்படுத்திய பொருட்கள், அத்தனையும் இன்றும் பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் காணலாம்.

வில்லியம் ஹார்வி எழுதிய குறிப்புகள் எல்லாம் 1628ஆம் ஆண்டில் மருத்துவ நூற்களாக, An Anatomical Treatise on the Movement of the Heart and Blood in Animals என்ற நூலிலும், On the Generation of Animals என்ற நூல் 1651-ம் ஆண்டிலும் வெளியானது.

வில்லியம் ஹார்வி எழுதிய மருத்துவக் குறிப்புகள் எல்லாமே இலத்தீன், இங்லிஷ் மொழிகளின் கலப்பாகவே இருக்கின்றன. நமது தமிழ்நாட்டிலும்கூட ஒரு காலத்தில் மணிப் பிரவாளம் என்ற தமிழ்நடை ஒன்று இருந்ததல்லவா? ஏன், இன்றும் கூட சிலரது தமிழ்மொழி நடை அப்படித்தானே இருக்கின்றது?

இந்த மருத்துவக் குறிப்பில், இருதயத்தினால் இரத்தம் உடலைச் சுற்றி வரும் உண்மையை ஹார்வி அழகாகவும் - தெளிவாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதை இங்லிஷிலும் மற்றவர்கள் அருமையாக மொழியாக்கம் செய்துள்ளார்கள். காரணம், மருத்துவக் குறிப்புகள் அல்லவா? அதனால்!

இந்தக் குறிப்புகள் எல்லாமே வில்லியம் ஹார்வி எழுதியதுதான் என்பதை அவரது கையெழுத்தான் டபிள்யூ.எச். என்ற எழுத்துக்களை ஒரங்களில் போட்டிருப்பார். அந்தச் சான்றுத் தன்மையிலே இருந்து நாம் நம்பிக்கை பெறலாம்.

ஏன் இவ்வாறு செய்தார் ஹார்வி தெரியுமா? அவர் கண்டுபிடித்த மருத்துவக் குறிப்புக்களை உடனுக்குடன் உலகுக்குத் தெரியப்படுத்தாமல் இருந்தார்.

ஏன் என்றால், கண்டுபிடிக்கும் உண்மைகளை அவ்வப் போது தெரியப்படுத்தத் தயங்கி, பல ஆய்வுகளைக் கண்டு பிடித்தப் பிறகே, ஒட்டு மொத்தமாகக் கூறலாம் என்பதே அவரது நம்பிக்கை. அதனால், இறுதியிலேதான் தனது கண்டுபிடிப்புக்களை எல்லாம் அவர் தொகுத்துக் கூறினார்.

உலகளாவி நின்ற புகழ்

வில்லியம் ஹார்வியின் புகழ், இங்கிலாந்து நாட்டில் மட்டுமன்று, பிரிட்டிஷ் ஆட்சி எங்கெங்கு நடைபெற்றதோ அங்கங்கே எல்லாம், ஹார்வி புகழ்க் கொடி மருத்துவத் துறையில் பறந்தது.

மருத்துவ உலகின் பேரறிஞர்கள் அனைவரும்; அந்தந்த நாட்டில் அவரது அரிய கண்டுபிடிப்புகளை வரவேற்றுப் பாராட்டிப் போற்றி வாழ்த்திக் கொண்டே இருந்தார்கள்.

பெரும் பணக்காரர்களும், சீமான்களும் - கோமான்களைப் போல அக்காலத்தில், கோச்சு வண்டியிலேதான் எங்கும் செல்வார்கள். அல்லது குதிரை சவாரியிலும் போவார்கள்.

இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதிகள், பணம் படைத்த பிரபுகள், புகழ்பெற்ற அறிஞர் குடும்பங்கள், சமுதாயத்தால் மதிக்கப்படும் சான்றோர்கள், லார்டுகள், சான்சலர்கள், சர். பிரான்சிஸ் பேகன் போன்ற புகழ் பெற்ற சமுதாய ஆன்றோர்கள் ஆகியவர்கள் எல்லாருமே; வில்லியம் ஹார்வி திறமையான ஒரு மருத்துவர் என்பதோடு, அவர் ஒரு கைராசி பெற்ற மருத்துவர் என்ற மரியாதையுடன் எந்த நோய் வந்தாலும் அவரிடமே சிகிச்சைப் பெற்று வரும் வாடிக்கையாளர்களாகவும் இருந்தார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல; அரண்மனையாளர்களும், குறிப்பாக முதலாம் ஜேம்ஸ் மன்னர் - முதலாம் சார்லஸ் உட்பட்ட அனைவரும்; ஹார்வியிடமே மருத்துவ சிகிச்சை பெறும் வாடிக்கையாளர்களாவார்கள். இந்த நிலையில் ஹார்வி செல்வாக்கும் செல்வமும், சொல்வாக்கும் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போருக்குப் புரியும்.

குதிரைகளில் ஏறி மருத்துவச் சிகிச்சைக்குச் செல்வார் ஹார்வி. அவர் பின்னால் சில ஆரம்ப மருத்துவர்களாலும், மருந்து கலப்பவர்களும், எடுபிடி வேலை செய்ய ஆண் செவிலியர்களும் வண்டிகளில், பரி சவாரிகளில் செல்வது வழக்கமாக இருந்து வந்தது.

புகழ் பெருகப் பெருக, பணம் சேரச் சேர, சிலருக்கு மன கர்வம் உருவாவது உண்டு. ஆனால், ஹார்விக்கு அடக்கம்தான் தலை சிறந்து ஓங்கியது. மருத்துவர்களுக்கு மிகச் சிறந்த அடக்கம், ஒழுக்கம், பிறரை மதிக்கும் மனம்; அறிவின் தெளிவு எல்லாமே ஒன்றிணைந்து இருப்பவரால் தானே சிறந்த மருத்துவராகத் தோன்ற முடியும்? அவை எல்லாமேல அவரிடம் பொருந்தி இருந்தது.

மனித இதயம் ஆராய்ச்சியை எழுதிய நூலோடு மட்டுமல்லாமல், அறுவை மூலமும் அதை நிருபித்துக் காட்டிய ஹார்வி, ஏறக்குறைய நாற்பது விலங்குகளின் இதயங்களையும் அறுத்து - ஆராய்ந்து - சோதித்த பிறகே, அவற்றைத் தனது அச்சு நூல்களுள் பதிவு செய்தார்.

விலங்குகளை அறுத்துப் பார்த்ததோடு மன நிம்மதி பெறாமல், புழுக்கள், பூச்சிகள், சிப்பிகள் போன்றவற்றையும் பிடித்து வரச் செய்து அவற்றையும் ஹார்வி அறுத்துச் சோதனை செய்து பார்த்தார்.

வில்லியம் ஹார்வி அன்று துவங்கிய இதய ஆராய்ச்சி, இந்த இருபதாம், இருபத்தோறாம் நூற்றாண்டிலும் கூட, அவருடைய வழிகாட்டுதல்களையே பின்பற்றி வெற்றி பெற்று வரும், மருத்துவ மேதைகளையும் நாம் இன்றும் கண்டு கொண்டுதான் வருகின்றோம். ஆனால், அன்று?

அரைப் பைத்தியன்! கிறுக்கன்!!

நமக்குத் தெரியாத கருத்தைத் தெரிந்து கூற இவன் யார்? அதனால், அந்தக் கருத்துக்களை ஏலோம் என்ற எண்ணமுடைய அழுக்காறு, அலட்சிய, ஆணவப் பிறவிகள் அதிகம் பேர் இருந்த காலம் அது? அதனால், ஹார்வி கருத்துக்களை நேரிடையாகப் பார்த்தவர்களும், கேட்டவர்களும் ஏகடியம் செய்தவர்களும் “அவரை, அரைப் பைத்திய மருத்துவன் இவன்” என்று பிரச்சாரம் செய்தார்கள். 

இதயத்தைப் பற்றியும், அதன் மர்மங்களையும் கண்டு பிடித்த ஓர் அறிவின் மேதையை - மனங் கூசாமல், மனசாட்சிக்கு விரோதமாக அவருக்குக் ‘கிறாக்’ என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

இதயாசனத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டிய ஒரு மருத்துவ ஞானியை, எந்தெந்த முறைகளில் எல்லாம் அந்த மேதையின் புகழைச் சீர்குலைக்க முடியுமோ - அந்தந்த அளவில் விடாமல், ‘அறை பறை அன்னர் கயவர்’ என்று நமது திருவள்ளுவர் பெருமானது மொழியைப் பொய்யாக்காமல் மெய்ப்பித்துக் காட்டி வெற்றியும் பெற்றார்கள் - கயவர்கள் பலர்!

வில்லியம் ஹார்வி புகழ் அதனால் குன்றிய ஒளியானது: சிகிச்சைப் பெற வரும் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டார்கள் ஹார்வியை! யார்யார் முன்பு ஹார்வியின் மருத்துவ நோயாளி வாடிக்கையாளர்களோ, அவர்கள் வற்றிய குளத்தைவிட்டுப் பறந்தோடி வேறோர் தடாகம் தேடும் பறவைகள்; ஆனார்கள்! இவ்வளவு இடையூறுகளையும் தைரிய நெஞ்சினரான ஹார்வி எதிர்த்து நிற்கும் விண்நோக்கிய சிகரமானார்!

என்றாவது ஒரு நாள் காற்றுத் திரும்பியும் நம் பக்கம் அடிக்கும் என்ற மன வைராக்கியத்தோடு ஹார்வி காத்திருந்தார். உண்மை என்றும் சாகாது என்று நம்பிய ஹார்வியின் வீர நெஞ்சுரம் வெற்றி பெறும் நாட்களும் வந்தன.

வில்லியம் ஹார்வி, ரத்த ஓட்டத்தைப் பற்றியும், இதயத்தின் இயக்கத்தைக் குறித்தும் என்னென்ன ஆய்ந்து அறிவித்தாரோ, அவை எல்லாமே உண்மைகள் என்பதை மருத்துவ உலகம் மலை மேல் ஏறி ஒப்புக் கொண்டது.

உலகெங்கும் உள்ள மருத்துவ மனைகள் எல்லாமே, ஹார்வியின் கண்டுபிடிப்புகளையே பின்பற்ற ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றன.

கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் மருத்துவ உலகம், இதயம் என்றால் அது ஒரு மனித உடலுறுப்பு என்றுதான் புரிந்து வைத்திருந்ததே தவிர, இதயத்தின் அமைப்பு எப்படி இருக்கும்? அதன் இயக்கத்தால் மனித குலத்துக்கு என்ன நன்மைகள் என்பதையே அறியாதவர்களாக இருந்தன - மக்கள் உலகமும் - மருத்துவ உலகமும்!

இதயம் : ஒரு விமர்சனம்!

இதயத்தை விமரிசனம் செய்தவர்கள் பலர் - பல விதமாக! இதயத்தில் உள்ள ஒரு வித சக்தி உடலின் பல பாகங்களுக்குத் தள்ளப்படுகின்றது என்றார்கள் சிலர். வேறு சிலர் நாம் சுவாசிக்கும்போது நடைபெறுகிறது என்றார்கள். இதயத்திற்கும் - இரத்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று வேறு சிலரும் இதயத்தை விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.

இவ்வாறாக, இதயத்தைப் பற்றி எவருமே திட்டவட்டமானக் கருத்துக்களைக் கூறமுடியாமல் தவித்தபோது, திணறிய போது தான் - ஹார்வி இதயத்தின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாக ஆராய்ந்து, உண்மைகளை உணர்ந்து உலகுக்கு உரைத்தார்.

இரத்தக் குழாயில் வால்வுகள் இருப்பதை முதன்முதல் கண்டுபிடித்தவர் ஹார்வியின் ஆசான் பேப்ரிசியஸ் ஆவார். அதற்கு மேலும் அதை ஆராய்ந்தார் அவர் வால்வுகள் ரத்தத்தை இதயத்தை நோக்கிச் செலுத்தும் என்பதையும் அவர் கண்டறிந்தார்.

ஆனால் ஹார்வியோ, இரத்தம் இதயத்தை நோக்கி ஓடச் செய்யுமே ஒழிய, வால்வுகள் இரத்தத்தை அங்கிருந்து வெளியேற விடாது என்பதை அறிவித்தார்.

அதாவது, ஒவ்வொரு ரத்தத் துடிப்புக்கும் தமனிகள் விரிவடைந்து, நாடித் துடிப்பை ஏற்படச் செய்யும் என்றார் ஹார்வி. தமனிகள் யாவும் ரத்தத்தை இதயத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லுமே தவிர, அதன் உள்ளே விடாது என்பதையும் ஹார்வியே கண்டுபிடித்தார்.

இதயம் ரத்தத்தைத் தள்ளுவதால், ரத்தம் தமனிகள் வழியாக ஒடி உடல் முழுவதும் பரவுகிறது என்பதாகும்.

ஹார்விக்கும் : சிக்கல்கள் சில!

இவ்வாறு இதயத்தை ஹார்வி ஆராய்ந்தபோது, ஒரு சிக்கல் அவருக்குப் புலப்பட்டது. அது என்ன சிக்கல்?

மனிதனுடைய நாடித் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 72 முறைகள் துடிக்கும். ஒவ்வொரு வெண்டிக்குகளும் இரண்டிரண்டு அவுன்சு ரத்தம் உடையனவாகும். அதனால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் இடது வெண்டிக்குகள் 144 அவுன்சு குருதியை, அயோர்டாவில் பாய்ச்சுகிறது. அதாவது, 60 நிமிடத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு 8640 அவுன்சு ரத்தம் அயோட்டாவில் பாய்ச்சப் படுகிறது.

இவ்வளவு எடையுள்ள ரத்தம் எங்கிருந்து வருகிறது? என்பதுதான் ஹார்விக்கே புரியாத ஒரு சிக்கலாக இருந்தது. அதனால், இடைவிடாமல் தொடர்ந்து அவர் அதை ஆராய்ந்து சிக்கலைக் கண்டுபிடித்தார்.

இரத்தம் இதயத்திலிருந்து அயோர்டா வழியாக வெளியே தள்ளப்படுகிறது என்றும், பிறகு, சிரைகள் வழியாக வந்து சேருகின்றது என்றும், ரத்தம் ஒரே சுழற்சியில்தான் உள்ளது என்பதையும் ஹார்வி கண்டுபிடித்தார்.

இதய இயக்கம் : என்ன என்று கூறினார்!

இரத்தம் ஒரே சுழற்சியில் இருந்தாலும், அவற்றிற்கு அசைவு உண்டாக வழியில்லை என்பதையும் உணர்ந்தார் ஹார்வி.

இதயத்திலிருந்து அயோர்டா வழியாக வெளியேறிய ரத்தம், பிறகு சிரை வழியாக நுரையீரல் தமனி மூலமாக இதயத்திற்குப் போய் சேருகிறது - இதயம் ஒரு முத்ல்யு பம்ப் போல வேலை செய்கிறது என்ற உண்மையை முதன் முதலாக மருத்துவ உலகுக்குக் கூறியவர் ஹார்விதான் ஆகும்.

கருவிலிருந்து கல்லறை போகும் வரை இதயம் துடித்துக் கொண்டே இருக்கிறது. உடலின் முழு பகுதிகளுக்கும் உரிய உணவை, ரத்தத்தை கொடுக்கிறது. இவற்றை சற்று விரிவாக உணர்ந்தால், இதயம் தான் நாம் செய்யும் எல்லாப் பணிகளுக்கும் முதல் பொருளாக அமைந்துள்ளது. இரத்தச் சுழற்சியே ஒரு மர்மக் கதை போல இருப்பதை நம்மால் உணர முடியும் என்பதையும் ஹார்விதான் நமக்குப் புலப்படுத்தினார் என்பதே உண்மை ஆகும்.

இப்படிப்பட்ட ஒரு மர்மத்தை எவருக்கும் அதுவரை புரியாத ஓர் எண்ணத்தை, தனது ஆராய்ச்சி மூலமாக மற்றவர் களுக்கு எடுத்துக் கூறியதால் அவர் பெற்ற பட்டம் என்ன தெரியுமா?

ஹார்வி ஒரு கிறுக்கன்; அரைப் பைத்தியம் பிடித்தவன்; இல்லாததை இருப்பதாகக் கூறும் ஒரு பொய்யன், விஞ்ஞானப் புரட்டன் என்றெல்லாம் ஹார்வியைக் கண்டனம் செய்தவர்கள் கணக்கற்றப் பேர்கள் ஆவர்.

இந்தப் பட்டங்களை ஹார்வி சுமந்தாலும், தனது கண்டு பிடிப்பு முழு உண்மை உணர்வுகளை வெளியே கூறலாமா? வேண்டாமா? என்று யோசித்தார். இருந்தாலும், உலகம் உய்ய வேண்டுமே என்ற மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அவர் தனது கருத்துக்களைத் துணிந்து வெளியிட்டார் !

அவர் மகா துணிச்சல்காரர் என்பதை, செர்விட்டசைக் கயவர்கள் உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் தெரிந்தும் கூட, இதயம் பற்றிய ஆராய்ச்சியில் அவர் இறங்கி அறிவாழம் கண்டவராயிற்றே அவரா எதற்கும் அஞ்சுவார்?

ஆனாலும், அவர் அச்சப்பட்டதற்கேற்பவே, அழுக்காறு நெஞ்சங்களும், அறியாமை உள்ளங்களும் அவரைப் பலமாகத் தான் எதிர்த்தன ஏளனம் செய்தன: ஏகடியம் பேசின.

வில்லியம் ஹார்வி தனது ஆராய்ச்சியில் ஒரே ஒரு ரகிசயம் மட்டும் புரியாமல் திணறினார் என்ன அந்த ரகசியம்?

இதயத்திலே இருந்து தமனி வழியாகப் பயணம் செய்யும் இரத்தம், திரும்பி வரும் வழியில் எப்படி சிரைக்குச் சென்று மீண்டும் இதயத்திற்கு வருகிறது? என்பதுதான் அந்த இரகசியம்.

ஹார்வி ஆராய்ச்சி செய்த நேரத்தில், நுட்பமாக எதையும் நோக்கும் பூதக்கண்ணாடி என்ற கருவி இல்லை. இருந்திருந்தால் அந்த ரகசியச் சிக்கலையும் ஹார்வி அப்போதே கண்டு பிடித்திருப்பார்!

சிறிய சிறிய தமனிகள், மேலும் சிறிய தந்துகிகளாகப் பிரிந்து, அயோர்டாவில் உள்ள சுத்த ரத்தத்தை எடுத்துக் கொண்டு போய், உடலில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்குகிறது.

இந்த தந்துகிகள் வெறுங்கண் பார்வையால் பார்க்க முடியாத அளவுக்கு மெல்லியதாக இருக்கும். இந்தச் சிறிய ரத்தக் குழாய்கள் மற்ற உறுப்புகளில் உள்ள அழுக்குப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிரைக்கு அனுப்ப, சிரை அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு அனுப்புகிறது. வலது ஆர்ட்டிக்கிகளுக்கு வந்த அந்த கெட்ட ரத்தம் வலது வெண்டிக்குகளுக்கு அனுப்பப் படுகின்றது.

வலது வெண்டிக்களுக்கு வந்த அந்தக் கெட்ட ரத்தம், நுரையீரல் தமனி வழியாக நுரையீரலுக்குச் சென்று, நுரையீரல் உள்ள ரத்தம் தந்துகிகளில் சென்று சுவாசித்த பிராண வாயு வினால் சுத்தமடைந்து, திரும்பவும் நுரையீரல் சிரை வழியாக இதயத்திலுள்ள இடது ஆர்ட்டிக்குகளுக்கு வருகிறது. அதனால் தான் ஹார்வி ரத்தம் சுழற்சியாகவே ஓடிக் கொண்டிருக்கிறது எனறார்.

ஹார்வியை ஓட ஓட விரட்டினர்!

இதயத்தைப் பற்றி இவ்வளவு ஆழமான, தெளிவான, அரியதான் உண்மைகளைக் கண்டு ஆராய்ந்த வில்லியம் ஹார்வியைப் பாராட்ட மனமில்லாவிட்டாலும், அவரை அவமானப்படுத்தாமலாவது, கேலிக் கிண்டல்களை அவரது அறிவு மீது எய்யாமலாவது இந்த அறியாமை உலகம் இருந்திருக்கலாம் அல்லவா?

ஆனால், அன்றைய மருத்துவ உலகம் அவரை என்ன செய்து தெரியுமா? அவரை ஓட ஓட விரட்டியது; அதுமட்டு மன்று, யார் யார் அந்தப் பெருமகனிடம் சிகிச்சைப் பெற்றிட நோயாளிகள் என்று வந்தார்களோ, அவர்களை எல்லாம் கூட ஒட ஒடத் துரத்தியடித்தது.

இங்கிலாந்து நாட்டின் அப்போதைய மன்னராக இருந்த முதலாம் சார்லஸ் ஒருவர்தான், வில்லியம் ஹார்வியிடம் மா மனிதனாகவே நடந்து கொண்டார்.

மனித மனம் படைத்த அந்த மன்னன், மக்களும் - மருத்துவ உலகமும் நாணப்படும் படியாக பரிசுகள் பல வழங்கிப் பாராட்டிப் போற்றினார்: ஹார்வியை அரசு மருத்துவராக மதித்து நடத்தினார். அதற்கும் மேலாக, வில்லியம் ஹார்வியின் அறிவை மதித்து அவரது பெருமைக்கு ஆணி வேராக விளங்கினார்.

சார்லஸ் மன்னன், டியூக் ஆஃப் லெனோக்ஸ் என்பவருடன், வில்லியம் ஹார்வியை ஃபிரான்ஸ், ஸ்பெயின் முதலிய நாடுகளுக்கு அனுப்பி வைத்து, அவருடைய ஆராய்ச்சி அறிவால் விளைந்த நன்மைகளைச் சொற்பொழிவுகள் ஆற்றி அவரது புகழை வளர்க்க மன்னர் உறுதுணையாக இருந்தார்.

வில்லியம் ஹார்வி அந்த நாடுகளுக்குச் சென்றபோது, அங்கே உள்நாட்டுச் சண்டைகள் மலிந்து காணப்பட்டதைக் கண்டு; மீண்டும் இங்கிலாந்து நாட்டுக்கே திரும்பி வந்து விட்டார்.

மன்னன் - மன்னனாக மதித்தான் ஹார்வியை!

மன்னர் தனக்குச் செய்த உதவிகளைக் கண்ட ஹார்வி, மன்னரை மனமுருகப் பாராட்டி மகிழ்ந்தார். ஆனாலும், மன்னன் சார்லஸ் வில்லியம் ஹார்வியை ஒரு மருத்துவ உலகின் மன்னராகவே மதிக்க வைத்தார்.

மன்னன் சார்லஸ் வில்லியம் ஹார்விக்கு கொடுத்த மதிப்பையும் - மரியாதையும் கண்ட மருத்துவ உலகமும், மக்களும், ஹார்வியை பெரிதும் மதித்துப் போற்றி, மரியாதை வழங்கினார்கள்.

அப்போதுதான், வில்லியம் ஹார்வியின் அறிவை எல்லாரும் மதிக்கத் தலைப் பட்டார்கள். மக்களிடம் ஹார்விக்குச் செல்வாக்கும் ஓங்கியது. மருத்துவ உலகமும் அவரை வானளாவப் போற்றி வாழ்த்தியது.

மருத்துவ உலகில் ஹார்விக்கு இருந்த எதிர்ப்பும் குறைந்தது - அவர் போகும் இடங்களிலே எல்லாம் மக்கள் வில்லியம் ஹார்விக்குப் பாராட்டுக் கூட்டங்களை நடத்திவரவேற்பையும்; வாழ்த்துக்களையும் வழங்கிக் கொண்டே இருந்தார்கள்

மன்னர் சார்லஸ் செய்த இந்த செயற்கரிய உதவிகளை வில்லியம் ஹார்வி தான் சாகும்வரை மறக்காமலேயே நன்றி பாராட்டினார்.

எந்த ஹார்வியை அரைப் பைத்தியம், கிறுக்கன் என்று மருத்துவ உலகம் அவமதித்ததோ அதே மருத்துவ உலகம் வில்லியம் ஹார்வியின் வார்த்தைகளைத் தேவ வாக்குகளாக மதித்துப் போற்றியது. சார்லஸ் மன்னனும் ஹார்வியின் வாக்குகளை மதித்து நடந்தான்.

‘இங்கிலாந்து நாட்டுக்கு மட்டும்தான் நான் மன்னன். ஆனால், வில்லியம் ஹார்வி மருத்துவ உலகிற்கும், மக்கள் அபிமானத்துக்கும் மன்னன்’ என்று வாயார வாழ்த்தினார் மன்னர் சார்லஸ்.

சார்லஸ் எடின்பர்கில் முடி சூட்டிக் கொள்ளும் விழா நடைபெற்ற போது, வில்லியம் ஹார்விதான் உடனிருந்து எல்லா வேலைகளையும் அரண்மனையில் செய்தார்.

இங்கிலாந்து நாட்டில் அப்போது சூனியக்காரிகள் அதிகமாக நடமாடி வந்தார்கள். அவர்கள் மந்திர வித்தைகளால் மக்களுக்கு வரும் நோயைக் குணப்படுத்துகிறார்கள் என்ற பிரச்சாரம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டிருந்தது.

மன்னன் சார்லஸ் சூனியக்காரிகள் செயல் உண்மையானது தானா என்று ஆராய்ச்சி செய்யுமாறு ஹார்வியை கேட்டுக் கொண்டார்.

ஹார்வி மன்னனது வாக்கை ஏற்று சூனியக்காரிகளின் மந்திர வித்தைகளைப் பரிசோதனை செய்து, மந்திரம் எல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்கான தந்திரங்கள் என்று கூறி, அவர்களை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டதற்கேற்ப, மன்னர் அவர்களை மன்னித்து விட்டார்.

இங்கிலாந்து நாட்டில் கி.பி. 1642-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று கொண்டிருந்தது. மன்னர் சார்லசும் வில்லியம் ஹார்வியும் இணை பிரியா நண்பர்கள் அல்லவா?

அதனால் மன்னருடனேயே ஹார்வி தங்கியிருந்து தக்க உதவியாளராக செயல்பட்டார். மன்னனுக்குரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வந்தார்.

உள் நாட்டு புரட்சியாளர்களுக்கு இந்த விவரம் தெரிந்தது. அதனால், ஹார்வியையும் அவர்கள் எதிரிகளாக நினைத்தார்கள். வில்லியம் ஹார்வி வீட்டுக்குள் புரட்சிக்காரர்கள் புகுந்து விட்டார்கள். அவருடைய நூற்களை எல்லாம் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அவர் எழுதி வைத்திருந்த மருத்துவக் குறிப்புகள் எல்லாமே சாம்பலாகி விட்டன.

புரட்சிகாரர்கள் செய்தக் கொடுமைகளை எல்லாம் வில்லியம் ஹார்வி மன்னனுக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். 

நான் அரும்பாடுபட்டு ஆராய்ச்சி செய்து வைத்திருந்த எல்லாக் குறிப்புகளையும் தீயிற்கு இரையாக்கி விட்டார்களே என்று மன வேதனையோடு தெரிவித்தார் ஹார்வி.

சார்லஸ் மன்னன் வில்லியம் ஹார்விக்கு ஆறுதல் கூறினார். தனது மகன்கள் இருவரையும் ஹார்வியிடமே பாதுகாப்புக்காக ஒப்படைத்தார்.

வில்லியம் ஹார்வி மீண்டும் தனது ஆராய்ச்சியைச் செய்ய முடியாதபடி, புரட்சிக்கார்கள் அவருடைய குறிப்புக்களை கொளுத்தி விட்டதால் மனமுடைந்த ஹார்வி, தனது ஆராய்ச்சிப் பணிகளை நிறுத்தி விட்டார். அதனால் மனம் தளர்ந்தார்.

உலகத்துக்கு ‘இதயம்’ என்ற உடற் கூறு ஆராய்ச்சியை வழங்கிய வில்லியம் ஹார்வி; 1659-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.

ஏப்ரல் ஃபூல் தினமான 1.4.1578ஆம் ஆண்டு பிறந்த வில்லியம் ஹார்வி, ஏறக்குறைய 79 ஆண்டுகள் வாழ்ந்து மருத்துவ விஞ்ஞான மேதையாகப் புகழ் பெற்றார்.

இலண்டன் இராயல் மருத்துவக் கல்லூரி, அவரை அந்த மருத்துவக் கல்லூரிக்குத் தலைவராகத் தேர்வு செய்தபோது, தலைவர் பதவியை வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டார்.

மனித இனத்தை உய்வித்திட, மருத்துவத் துறை மறுமலர்ச்சிக்காக, இதயம், இரத்த ஓட்டம் என்ற தலை சிறந்த ஆராய்ச்சிகளை நடத்தி, அதன் நன்மைகளை உலகுக்குக் கொடையாகக் கொடுத்த மருத்துவத் துறையின் இதயக் கோமான் வில்லியம் ஹார்வி மறைந்ததைக் கண்டு இலண்டன் நகரமும், ஏன் உலகமே கண்ணீர் சிந்தியது.

ஆனால், இன்று வில்லியம் ஹார்விக்கு Father of Cardiology என்ற விருதுவை உலக மருத்துவ உலகம் வழங்கி, இதயத் துறையின் தந்தை என்றே போற்றியதுடன், அவருக்குத் தனது நன்றியைக் கூறிக் கொண்டு வாழ்ந்து வருகின்றது.