மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/துறவிக்கு உண்டான மதிப்பு

46
துறவிக்கு உண்டான மதிப்பு

ஒரு நாட்டின் அரசனுக்கு ஒரு நாள், ஒரு சந்தேகம் எழுந்தது. எத்தகைய பற்றும் அதாவது. மண், பெண், பொன் இம் மூன்றிலும் ஆசை கொள்ளாத துறவி இருக்க முடியுமா? என்று சிந்தித்துக் கொண்டிருந்தான்.

பிறகு அமைச்சனை அழைத்து, “எந்தப் பற்றும் இல்லாத ஒரு துறவி நாட்டில் இருக்க முடியுமா?” என்று கேட்டான் அரசன்.

“அப்படிப்பட்ட துறவி ஒருவர் இருக்கிறார்” என்றான் அமைச்சன்.

அப்படியானால், அந்தத் துறவியை அழைத்து வரும்படி சொன்னான் அரசன்.

“அரசே துறவிக்கு வேந்தன் துரும்பு” என்று கூறுவார்கள். ஆகையால், அவர் அரண்மனைக்கு வரமாட்டார். நகரத்துக்கு வெளியே, ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். நாம் தான் சென்று அவரைக் காணவேண்டும்” என்றான் அமைச்சன்.

அதற்கான ஏற்பாட்டைச் செய்யும்படி சொன்னான் அரசன். தான் கூறியதை மெய்ப்பிக்க எண்ணி முயற்சி செய்தான் அமைச்சன்.

ஒரு நாடக நடிகனைத் தேடிக் கண்டு, ‘தனக்கும் அரசனுக்கும் நடந்த உரையாடலைக் கூறி’, நகரத்துக்கு வெளியே, ஒரு மரத்து அடியில், காவி உடை அணிந்து உட்கார்ந்து, ‘எல்லாம் இறைவன் செயல்’ என்று சொல்லும்படியும், அரசன் பரிசுகள் எதுவும் அளித்தால், அதைப் பெற்றுக் கொள்ளக் கூடாது' என்றும் கூறினான்.

மேலும், இந்த நடிப்புக்காக தான் ஆயிரம் பொன் தருவதாகவும் சொல்லி, துறவியை தயார் செய்தான் அமைச்சன்.

மறுநாள் அரசன், அரசி, அமைச்சர் அகிய மூவரும் துறவியைக் காணச் சென்றனர்.

துறவியைப் பார்த்ததும் அரசனும் அரசியும், அவர் காலில் விழுந்து வணங்கினர். வெள்ளித் தாம்பாளத்தில், பட்டாடை, பழங்கள், பூ ஆகியவற்றோடு, ஐயாயிரம் பொன்னையும் வைத்து, துறவியிடம் வைத்து, அதை ஏற்கும்படி கூறினர்.

“அரசனே! “எல்லாம் இறைவன் செயல்!” நானோ முற்றும் துறந்தவன், எனக்கு எதற்காக இவை? இவற்றைப் பார்த்தால், என் உடலும், உள்ளமும் நடுங்கும். இவற்றை நீ எடுத்துச் சென்று, ஏழை எளியவர்களுக்கு வழங்கி, நலத்துடன் வாழ்வாயாக! எல்லாம் இறைவன் செயல்” என்று வாழ்த்தினான் துறவி.

அரசன் வியப்புற்று மனநிறைவோடு அரண்மனைக்குத் திரும்பினான்.

அதன்பின், அமைச்சன், துறவியிடம் சென்று, உண்மையான துறவியைக் காட்டிலும் சிறப்பாக நடித்து விட்டாய். நான் சொன்னபடி, இதோ ஆயிரம் பொன் என்று கூறி அவனிடம் கொடுத்தான்.

“எனக்கு வேண்டாம். நாட்டின் அரசனும் அரசியும் இந்த ஏழையின் காலில் விழுந்து வணங்கியது மிகவும் பெருமைப் படத்தக்கது. இப்படி ஒரு செயல் புரிந்து, இந்த ஏழை நடிகனை, நீங்கள் பெருமைப்படுத்தி விட்டீர்கள். அதுவே எனக்குப் போதுமானது. மற்றும், இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் குடும்பத்தில் சில கடமைகளை நிறைவேற்றி விட்டு, உண்மையிலேயே, துறவி ஆகி விடலாமா என்ற எண்ணம் எனக்கு எழுகின்றது” என்றான்.

உண்மையிலேயே பற்றற்றவனுக்கு மதிப்பு உண்டாகும்.

உண்மையிலேயே அத்தகையவர்களைக் காண்பது எளிது அல்ல.