மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/பணத்தைச் சேமிப்பது எப்படி?

23
பணத்தைச் சேமித்தது எப்படி?

பெரியவர் ஒருவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அவனுக்கு வருவாய் கிடைக்க வழியையும் ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் அமைத்து கொடுத்தார்.

அவ்வப்போது வந்து மகனைப் பார்த்துச் செல்வார் தந்தை ஒரு நாள் தந்தை வந்திருந்தார். இரவு நேரம், தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர்.

“அப்பா! நீங்கள் எப்படி பணத்தைச் சேர்த்தீர்கள்? என்னுடைய வருமானத்துடன், உங்களுடைய உதவி இருந்தும்,எனக்கு ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறதே, ஏன்?” என்று கேட்டான் மகன்.

"மகனே! எதுவும் பழக்கத்தால் வருவது. வாழ்க்கையில் மிகவும் கவனம் தேவை. அவசியமான செலவு எது, அவசியம் இல்லாத செலவு எது என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; ஆடம்பரமான உடைகள், சினிமா - நாடகம், சிற்றுண்டி விடுதிக்குச் செல்லுதல் ஆகியவற்றை நான் தவிர்த்து வந்துள்ளேன்.

வீட்டில் வெளிச்சத்துக்கு ஒரு விளக்கே போதும் என்றால், எதற்காக மற்றொரு விளக்கை எரிய விடவேண்டும்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

உடனே மகன் எழுந்து, தேவையின்றி, எரிந்து கொண்டிருந்த மற்றொரு விளக்கை அணைத்தான்.