மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/பெரிய வாயாடி

25
பெரிய வாயாடி

ஒரு ஊரில் ஒரு பிராமணரும் அவர் மனைவியும் வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தனர்.

அவர் புரோகிதர் வேலைக்குச் செல்வார். அந்த வேலை கிடைக்காத போது, சமையல் வேலை பார்ப்பதும் உண்டு.

அவர்களுக்கு குழந்தை இல்லை அவருடைய மனைவி பெரிய வாயாடி, யாரிடமாவது ஏதேனும்பேசி, வம்பளத்து கொண்டிருப்பாள். அதனால் அவளுடன் யாருமே பேசுவது இல்லை.

கணவனும் மனைவியும் அந்த ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

அவளுடைய குணத்தை தெரிந்து கொண்டதால், அடுத்த வீட்டில் வசிப்பவர்கள், எதிர் வீட்டில் இருப்போர் எவருமே அவளுடன் பேசுவதே இல்லை. இரண்டு, மூன்று மாதங்களில் அந்த ஊர் அவளுக்குப் பிடிக்க வில்லை.

“வேறு ஊருக்குப் போவோம்” என்றாள் கணவனிடம். “இந்த ஊருக்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் தானே ஆகிறது, எதற்காக வேறு ஊருக்குப் போக வேண்டும்” என்றார் அவர்.

“இந்த ஊருக்கு வந்ததிலிருந்து ஒருவரும் பேசுவது இல்லை. ஒரு சண்டையும் கிடையாது, எனக்குப் பொழுது போகவில்லை” என்று சலிப்படைந்தாள்.

மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு இருவரும் புறப்படத் தயாரானார்கள். திண்ணையில் உட்கார்ந்தனர். சிறிது நேரம் கழித்து, மூட்டையை எடுத்து தலையில் வைத்தார் அவர். அப்போது, எதிர்வீட்டில் இருந்தவள், அவர்களின் மூட்டை முடிச்சுகளைப் பார்த்ததும். “தொலைந்தது சனியன்” என்றாள்.

அவள் சொன்னது அவள் காதில் விழுந்தது. “வந்தது சண்டை மூட்டையைக் கீழே வையும்” என்றாள் அவள்.

“ஊருடன் கூடி வாழ்” என்பது பழமொழி