மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்/விவசாயி அடைந்த வருத்தம்
கிராமத்திலிருந்து ஒரு விவசாயி நகரத்துக்கு வந்தான். பசி எடுத்தது அவனுக்கு ஒரு சிற்றுண்டி விடுதிக்குச் சென்று, ஒரு தோசை கொண்டு வரச் சொல்லி, சாப்பிட்டான், பசி அடங்கவில்லை. மேலும், ஒரு தோசை கொண்டுவரச் சொல்லி, அதையும் சாப்பிட்டான் அப்பொழுதும் அவன் வயிறு நிறையவில்லை. மூன்றாவது தடவை, ஒரு தோசை வரவழைத்து அதையும் சாப்பிட்டான். பசி அடங்கவில்லை.
பிறகு ஒரு மசால் வடையைக் கொண்டு வரச் சொல்லி, அதைச் சாப்பிட்டதும் பசி அடங்கியது.
அப்பொழுது அந்த விவசாயி தன் தலையில் அடித்துக் கொண்டு, “என்னைப் போல் மூடன் எங்கேயாவது இருப்பானா? மூன்று தோசைகளையும் வாங்கிச் சாப்பிட்டு, காசை வீணாக்கிவிட்டேனே! முதலிலேயே ஒரு மசால் வடையை வாங்கித் தின்றிருந்தால், பசி அடங்கியிருக்குமே” என்று மனம் வருந்தினான்.