மார்க்சீய அழகியல்/கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்
கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும்
'கலைப்படிமம்' என்னும் அகவயப் பொருள்தான் எல்லாக் கலைப்படைப்புகளுக்கும் அடிப்படையானது. இது எப்படித் தோற்றம் எடுக்கிறது, எப்படிக் கலை வடிவம் பெறுகிறது என்பதை ஆராய்ந்து அறிவதே எல்லாக் கலைகளையும் படைப்பதற்குத் தேவையான தத்துவக் கூறு. இதை மறுப்பதற்குத் தற்கால முதலாளித்துவத் தத்துவ இயலார் முயலுகிறார்கள்.
கலைப் படிமக் கொள்கைக்கு எதிராக முதலாளித்துவத் தத்துவ ஆசிரியர்கள் உருவமற்ற கலை என்ற கொள்கையை முன்நிறுத்துகிறார்கள். அதாவது, உள்ளத்தில் புற உலகினான கலைப் படிமம் தோற்தமெடுத்து நிலைப்பதில்லை என்று அவர்கள் சாதிக்கிறார்கள்.
இயந்திர தொழிலால் உற்பத்தி செய்யப்படும் தொழில் விளைவுட்பொருளுக்கும், மனத்தில் தோன்றுகிற கலைப்படிமங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை முதலாளித்துவத் தத்துவவாதிகள் தகர்க்க முயலுகிறார்கள்.
இயந்திரமும் ஒரு கலைப்படைப்பே என்ற வாதத்தை முதலாளித்துவத் தத்துவங்களில் நாம் கேட்கிறோம். 'உருவமற்ற கலை' என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டால் கணிதம், சைபர்னடிக் போன்ற பெளதிகச் சிந்தனை முறைகளே கலைப் படைப்புக்கு அடிப்படையானவை என்ற (புதிய கலைத் தத்துவ ஆசிரியர்களின்) கூற்றையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டிவரும்.
'கற்பனைப் படிமங்களை' வெட்டி வீழ்த்திவிட்டுப் புதிய கொள்கையின் அடிப்படையில் கலையை ஆராய்கிற தத்துவம் ஒன்றை முதலாளித்துவத் தத்துவ அறிஞர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்களா? இல்லை.
வெளியீட்டுத் தன்மை முறை (Expression)
குறியீட்டு முறை
ஒளிக் கலை
இயக்கக் கலை
போன்ற எத்தனையோ தத்துவங்கள் தோன்றி, கலைப் படைப்பின் தோற்றத்தையும் வெளியீட்டையும் விளக்க முயன்று சோப்பு நுரைபோல வெடித்துப் போயுள்ளன.
கலைப்படிமக் கொள்கையின் துணையின்றி வேறு வழிகளில் கலைப் படைப்பை விளக்க முயன்று தோற்றுப்போன முதலாளித்துவப் போலிக் கலைத் தத்துவங்கள் மிகப்பல.
பல நூற்றாண்டுகள் மனப் படிமங்களைக் கையாண்டு, கலைஞர்கள் சிந்தித்துக் கலையுருவங்களைப் படைத்துள்ளார்கள். அவர்களது கலைப்படைப்புகளின் தோற்ற முறை பற்றிய தத்துவம் ஒத்தகைய தாக்குதல்களாலும் அழியாதது.
கலைப் படிமக் கொள்கைக்கு எதிரான அவர்களின் புதிய கலைத் தத்துவப் பெரு வெள்ளம் இப்போது வற்றி வறண்டு வருகிற நிலையில் உள்ளது. தங்களது கலைக் கொள்கைகளும் கலைப் படைப்புகளும், சில பத்தாண்டுகளில் அழிந்துபோய் விட்டதை, 'புதிய' கலைஞர்கள் காண்கிறார்கள். அதனால் அவர்கள் கொள்கைகளைக் கைவிட்டுக் கலைகளின் வலிமையைக் குறைத்து, அற்பமான பொருள்களைக் குறித்துப்போலிக் கலைகளைப் படைத்துத் தங்களையும் கலையுலகையும் ஏமாற்றி வருகிறார்கள்.
கலையின் 'மனித அம்சத்தை' அழிக்க முயலும் கலைஞர்கள், தத்துவத் தரையை இழந்து ஆகாயத்தில் அற்புத நடனம் ஆடுகிறார்கள். கலை பற்றிய முழுமையான கொள்கையை உருவாக்க அவர்களால் முடியவில்லை.
ஆயினும் முதலாளித்துவ உலகில் கலையின் மனிதத் தன்மையை அழிக்கிற முயற்சியை எதிர்த்து நிற்கும் புதிய சக்திகள் தோன்றியுள்ளன. புதிய கலைத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் காப்ஃகா, மனித நேசக் கவிஞனான வால்ட் விட்மனை வேண்டா வெறுப்பாகப் புகழ்ந்து கூறி, தற்கால அமெரிக்கக் கவிஞர்களுக்கு அவரது கவிதைகள் வழிகாட்டுகின்றன என்று ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், வால்ட் விட்மனது மானுடநேசம், முற்போக்குக் கொள்கைகள், அடிமைப்பட்டோர் மீது அன்பு, போராடும் மக்களோடு ஐக்கியம் ஆகிய கொள்கைகள் காப்ஃகாவுக்கும் அவருடைய சகாக்களுக்கும் வேம்பாகக் கசந்தன. ஆயினும் வால்ட் விட்மனின் கருத்தும் கலையும் உலகை மாற்றுகிற சக்திகளுக்கு அசுர வேகம் கொடுப்பதை உணர்ந்த காப்ஃகா, தனது எரிச்சலை விட்மன் மீது காட்டிக்கொள்ள 'எங்கள் பன்றித் தாத்தாவைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது' என்று ஒரு கட்டுரையை 'அமெரிக்க இலக்கியம்’ என்ற பத்திரிகையில் எழுதினார்.
உலகமெங்கும் பிற்போக்குக் கொள்கைகளையும் கலை வணிகத்தையும் தடுக்கக் கூடிய முற்போக்குக் கலை முன்னணி தோன்றிப் பலம் பெற்று வருகிறது.
பரசுராமனின் வளர்ச்சி பற்றி ஒரு கன்னடக் கதைப்பாடல் உள்ளது. ஒரு வயதாகும் பொழுது அவன் ஓர் அடி வைத்தால் ஒரு மைல் கடப்பானாம்; இரண்டு வயதாகும் போது ஓர் அடி வைத்தால் இரண்டு மைல் கடப்பானாம்...இப்படியே வயதின் விகிதத்தில் கடக்கும் தூரமும் அதிகரிக்குமாம். வளர்ச்சியையும் வலிமையும் இணைத்துக் கன்னட நாட்டுப்புற மக்கள் உருவாக்கிய கற்பனைப் படிமம் இது. இது போலக் கிரேக்கப் படிமங்கள், பாபிலோனியப் படிமங்கள், சீனப் படிமங்கள், இந்தியப் படிமங்கள் என்று பல உள்ளன.
சுரண்டும் கும்பலின் நன்மைக்காக இலக்கியம் படைப்பவர்கள் அவர்களின் நலனுக்காக, உலக மக்கள் பல நூற்றாண்டுகளாக படைத்துள்ள உன்னதமான மானுட மதிப்புகளையும் மேண்மையானது, அற்புதமானது எனப் போற்றப்படும் மதிப்பீடுகளையும் அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த முதலாளித்துவக் கலைக் கயவாளிகளையும், தங்கள் பணப்பையை நிரப்ப, மனிதப் பண்பாட்டையும் இயல்பியக்கப் போக்கையும், நாற்றமடிக்கச் செய்கிற, மனச்சாட்சியை முப்பது வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்ட இலக்கிய ஜூடாஸ்களையும் எதிர்த்து மார்க்சீய முற்போக்கு டாங்கிகளும் விமானப் படைகளும் கிளம்பியுள்ளன. ஈயை நசுக்க, சம்மட்டியா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால், முதலாளித்துவ நச்சு இலக்கியவாதிகள் பரப்பியுள்ள நஞ்சு மிகவும் ஆபத்தானது. உலக இலக்கிய வானத்தையே அசுத்தப்படுத்தி, மக்களின் நேர்மையான, ஆரோக்கியமான மனிதத் தன்மையை அழித்துவிடும். எனவே, வலுவான கலைப்படை ஒன்று உருவாகியுள்ளது. அது முற்போக்குக் கலைத் தத்துவம், மார்க்சீய அழகியல் சிந்தனை என்ற இரட்டைக் கொடியோடு போர் முனையில் நிற்கிறது.
மார்க்சீய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. 'அறிதல் முறைகளை' சுரண்டும் வர்க்கத் தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும், விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச்சக்திகள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றன. இதனால் சிந்தனைகள் மாறின. இம்மாற்றம் சிந்தனைப் போராட்டங்களைக் கூர்மையாக்கியது. விஞ்ஞானிகள் இரு பிரிவாகப் பிரிந்து 'பொருள் அழிகிறதா? பொருள் பற்றிய நம்முடைய கருத்து மாறுகிறதா?' என்ற கேள்விகளுக்கு விடை காணப் போராடினார். குழப்பம் மிகுந்தது. குழப்பத்தை மிகுவிக்கவே, உண்மையைப் பொய்யால் குழப்பவே முதலாளித்துவ அறிஞர்கள் நூல்கள் எழுதத் தூண்டப்பட்டனர்.
இந்த நிலையில்தான் லெனின், குழப்ப நிலையில் தெளிவு கான, 'மெடிரியலிசமும் எம்பிரியோ கிரிடிசிசமும்' (Materialism and Embryo-criticism) என்ற தத்துவ நூலை எழுதினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய குழப்பமான அறிவுத் தோற்றக் கொள்கைகளை, மார்க்சீயச் சிந்தனையின் ஒளிமிக்க பார்வையில் அவர் ஆழ்ந்து ஆராய்ந்தார்.
கலைப்படிமம் பற்றிய கொள்கை, மார்க்சீய இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் ஒரு பகுதியான அறிவுத் தோற்றவியலில் ஒரு கூறு. படிமம் பற்றிய கொள்கையை, மார்க்சீயப் பொதுத் தத்துவத்திலிருந்தும் அறிவுத் தோற்றவியலில் இருந்தும் பிரிக்க இயலாது.
மார்க்சீய அறிவுத் தோற்றவியலின் அடிப்படையான கருத்துப் 'பிரதிபலிப்புக் கொள்கை'யாகும் (Reflection theory). இக்கொள்கையை உருமாற்றி முதலாளித்துவத் தத்துவ அறிஞர்கள், இது முற்றிலும் பிழையான தத்துவம் என்று வாய்ப்பறை யடிக்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்களின் நிதிச்செழிப்பில் பணிபுரிகிற 'மார்க்சாலஜி' துறைகள் (Maxology) லெனினுடைய அறிவுத் தோற்றக் கொள்கையை விளக்கும் மேற்குறித்த நூலை வரிவரியாக விமர்சிக்கின்றன. ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் நூல்களும் வெளியிடப்பட்டு முதலாளித்துவ உலகில் பரப்பப் படுகின்றன. நமது பல்கலைக்கழக மேதாவிகளின் மார்க்சீய அறிவும் அறிவுத் தோற்றவியல் பற்றிய அறிவும் 'மார்க்சாலஜிக்' கழிவோடைகளில் இருந்து அள்ளிக் கொள்ளப்பட்டவைதாம். எனவே போலிக்கொள்கையை விடுத்து லெனினுடைய பிரதிபலிப்புக் கொள்கையைச் சுருக்கமாகக் கூறுவது அவசியமாகிறது.
அறிதல் (Cognition) பற்றிய இயக்கவியல் பொருள் முதல்வாதக் கூறுதான், லெனினுடைய பிரதிபலிப்புக் கொள்கை. இதன் அம்சங்கள் வருமாறு:
1 பொருள் புறவயமான உண்மை. அது நமது உணர்வினின்றும் சுதந்தரமாகவுள்ளது.
நமது புலனுணர்வுகள், உணர்ச்சிகள், சித்தனைகள் ஆகியவற்றிற்கப்பால் சுதந்திரமாக இயங்குகிறது.
லெனின் எழுதினார்:
நமது உணர்வு, புற உலகின் பிரதிபலிப்பான படிமமே. பொருளின்றி அதன் படிமம் இருக்க முடியாதென்பதுவெளிப்படை. படிமம் இன்றியே பொருள் இருக்க முடியும் என்பதும் தெளிவு.
2 உணர்வு என்பது முழு முதல் பொருளன்று. அது வழி வந்த பொருள்.இதனைத்தான் லெனின் 'இரண்டாவது நிலை ' என்று கூறுகிறார் (Secondary). முதலில் பொருள்; பின்னர் அதன் பிரதிபலிப்புப் படிமம்.
இரு வகைகளில் இது உண்மையாகும். உணர்வு என்பது வளர்ச்சியின் விளைவும், பொருளின் குணமும் ஆகும். இரண்டாவது, புறவயமான பொருளுண்மையே நமது உணர்வுகளையும் புலனுணர்வுச் சித்திரங்களையும் கருத்துக்களையும் உருவாக்குகிறது.
சமூக உணர்வை ஆராய லெனின் இந்த அறிவுத்தோற்றவியல் கருத்தைப் பயன்படுத்துகிறார்.
"உணர்வு பிரதிபலிக்கிறது" ---- இதுவே எல்லா பொருள் முதல்வாதத் தத்துவங்களின் அடிப்படைக் கருத்தாகும் என்று லெனின் எழுதினார்.
புறவய உலகைப் பிரதிபலிப்பது, செயலூக்கமான இயக்கவியல் நிகழ்ச்சி. மிகச் சுலபமான பிரதிபலிப்புக் செயல்களான புலன் உணர்வு, புலன் அறிவு (Perception) ஆகிய இரு செயல்களில் கிடைக்கும் புள்ளிகளில் இருந்து (data) அறிவுபூர்வமான சிந்தனை மூலம் இயற்கை விதிகளும் கருத்தமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன; அறிதல் என்பது இவையனைத்தும் அடங்கிய பொதுவான செயல்முறை. அது முழு முதல் உண்மையை நோக்கி விரையும் இயக்கம். தராதரப் பகுதி உண்மைகளின் கூட்டுக் கருத்தான முழு உண்மையை அடைவதற்கான இயக்கமே அறிதலாகும்.
ஒவ்வொரு விஞ்ஞானத்தின் அறிவும், எல்லைக்குட்பட்டது. இவை தராதர உண்மைகள். இவற்றின் வளர்ச்சி, முழு உண்மையை அடையச் சில வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது. மனிதனது சிந்தனை முழு உண்மையை அடையும் தகுதியுடையது. எல்லாத் துறைகளின் ஒரே சீரான வளர்ச்சி, முழு உண்மையை நோக்கி இயங்குகிறது. அப்பொழுது தனித் தனித் துறைகளின் எல்லைக் கோடுகள் பல இடங்களில் அழிக்கப்பட்டு, துறை தோறும் அறிவுக் கலவையாகிறது. எடுத்துக்காட்டாக பெளதீகம், வானவியல், உயிரியல் முதலிய துறைகளின் அறிவுக் கலப்பால் புதிய இயல்கள் ஏற்பட்டுள்ளன. விண்வெளி உயிரியல், விண்வெளி ரசாயனம், விண்வெளி பெளதீகம் என்பன பல தரையியல் விஞ்ஞானங்களின் கூட்டால் உருவாகியுள்ளன. பெளதீக ரசாயனம், ரசாயன பெளதீகம், உயிரியல், எஞ்சினிரிங் முதலிய புதிய விஞ்ஞானங்கள், அடிப்படை விஞ்ஞானங்களான ரசாயணம், கணிதம், பெளதீகம், உயிரியல், விண்ணியல் ஆகிய விஞ்ஞானங்களின் கூட்டுக் கலப்பால் தோன்றியவையாகும். பல விஞ்ஞானங்களின் அறிவையும் முறையியல்களையும் கூட்டாக விஞ்ஞானிகள் கையாண்டு, விஞ்ஞானங்களின் கூட்டு உழைப்பால் அவ்வவற்றின் எல்லைகளுக்கப்பாலும் சென்று முழு உண்மையை அறிய முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், பொருள்வயமான முழு உண்மையை மனித அறிவு நெருங்கும் அளவு, வரலாற்று இயக்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. நாம் முழு உண்மையை நெருங்கிக் கொண்டு வருகிறோம் என்பதும் உண்மையானது. ஓர் எடுத்துக்காட்டால் இக்கருத்தை விளக்குவோம்.
அணுக்கொள்கை பண்டைய கிரேக்கத் தத்துவ அறிஞர்களுக்குத் தெரிந்திருந்தது. ஹிராக்ளிடஸ் என்ற பொருள் முதல்வாதி அணு பற்றிய சில கருத்துக்களைக் கொண்டிருந்தார். அக்கால விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ற தொடக்கக் கருத்துக்கள்தான் அவை. இந்தியாவில் கானடர் என்பவர் அணு பற்றிய சில கருத்துக்களை வெளியிட்டார். ஹிராக்ளிட்ஸைப் பார்க்கிலும் வரலாற்று முறையில் முன்னேறிய கருத்துக்கள் அவருடையவை. இந்திய ஆஜீவகர் கருத்துக்கள் மிகப் பிற்காலத்து டால்டன் கருத்துக்களை ஒத்திருந்தன. டால்டன் கருத்துக்கள் இப்பொழுது முற்றிலும் மாறியுள்ளன. தற்காலத்தில் அணுவின் அமைப்பும் தன்மையும் பற்றிய கருத்துக்கள் பெரிதும் முன்னேறியுள்ளன. உலக விஞ்ஞானிகள் தரையின் எல்லைகளையும் மொழி எல்லைகளையும் மீறித் தங்கள் விஞ்ஞான உழைப்பாலும் சிந்தனை உழைப்பாலும், அணு பற்றிய முழு உண்மையை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சமூக வரலாற்று நிலைமைகளால் மனிதனது அறிவும் கருத்துக்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஹன்ராக்ளிடஸ், கானடர் ஆகியவர்களின் காலத்து உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிலையும் அவர்களது கருத்துக்களை உருவாக்கின. அவர்கள் டால்டனைப் போல் சிந்தித்திருக்க முடியாது. டால்டன் தொழிற்புரட்சிக்குப் பின் வாழ்ந்தவர். அவர் காலத்து வரலாற்று நிலைமைகள், உற்பத்தி சக்திகளைப் பெரிதும் வளர்ச்சியடையச் செய்திருந்தன. வளர்ச்சியடைந்த உற்பத்திச் சக்திகளைக் கொண்டு மனிதன் இயற்கையோடு போராடினான். வளர்ச்சியடையும் போதும் வளர்ச்சியடைந்த பின் போராடும் பொழுதும் கிடைத்த அறிவுத் திரளின் மீது ஆதாரப்பட்டு டால்டனும் அவர் காலத்து விஞ்ஞானிகளும் சிந்தித்தார்கள். எனவே அவர்கள் முழு உண்மைக்கு நெருக்குமாக வந்தார்கள். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் கதிர் வீச்சு, அணுப் பிளப்பு, அணு மின்னேற்றம் முதலிய புதிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்புதிய உண்மைகளின் அடிப்படையில் அணுவின் அமைப்பு பற்றிய பல விஞ்ஞானக் கருத்துப் படிமங்களை விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இவ்வாறு ரூதர் போர்ட் மாடல், போர் மாடல் முதலிய படிமங்கள் உருவாயின. மேலும் பல படிமங்கள் அணுத் துகள்களின் இயக்கம் பற்றிய அறிவினால் உருவாக்கப்பட்டன.
இக்காலத்தில் விஞ்ஞானத் தொழில் நுணுக்கப் புரட்சி மிகப் பெரிய அளவில் பரவியபொழுது, புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அணுவைப் பற்றிய கருத்துப் படிமம் உருவாயிற்று. தற்காலக் கருத்துப் படிமம், டால்டன் காலத்திலோ அல்லது அவர்களின் முன்னோர் காலத்திலோ தோன்றியிருக்க முடியாது. இதனால்தான் நமது அறிவு முழு உண்மையை அடையும் நெருக்கத்தின் அளவு வரலாற்றுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்று கூறுகிறோம். மனிதனுடைய சிந்தனையில், இயற்கையின் பிரதிபலிப்பு உயிருட்டமின்றி, சுலபமாக இருப்பதில்லை. அது இயக்க பூர்வமானது; முரண்பாடு கொண்டது. இடையறாத இயக்கத்தில் தோன்றும் முரண்பாடுகளும் அவற்றின் தீர்வுகளும் மனிதனது உள்ளத்தில் பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றன.
இது தொடர்பாக லெனின், கற்பனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கவிஞனுக்கு மட்டுமல்லாமல் கணித இயலாருக்கும் கற்பனை முக்கியமானது என்பதை லெனின் விளக்கினார். ஆனால் அது உண்மையின் மீது ஆதாரப்பட்டிருக்கவேண்டும். அது உண்மையின் பிரதிபலிப்பின் ஒரு வடிவமாக இருக்கவேண்டும். உண்மையிடமிருந்து தனது தொடர்புகளை அறுத்துக் கொண்டு உண்மைக்கு மேலாக அது பறந்துவிடக் கூடாது. மனிதன் ஒரு சமூக உயிர். உண்மையை அந்நிலையிலேயே அவன் அறிகிறான். இதன் காரணமாகவே அவனது உணர்வு, உலகைப் பிரதிபலிக்கும் ஓர் உயிரற்ற கண்ணாடியுடன் ஒப்பிட முடியாதது. உண்மையை அறியும்போது அதன் வளர்ச்சியை அவன் பாதிக்கிறான். ஒரு வர்க்கம் அல்லது சமூக சக்தியின் பக்கத்தில் நிலை கொள்கிறான். எனவே அவனுடைய அறிவு ஒரு வர்க்கம் அல்லது சமூக சக்தியின் நிலைகளிலிருந்து எழுகிறது.
மேற்கூறியவைதாம் பிரதிபலிப்புக் கொள்கையின் முக்கியமான கூறுகள். இவைதாம் அழகியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தப்பட வேண்டிய முன்தேவையான தத்துவக் கருத்துக்கள்.
அறிவுத் தோற்றவியலும் அழகியலும் மிகவும் நெருக்கமான வாழ்வியல்கள். ஆயினும் இவற்றிடையே வேறுபாடுகளும் உள்ளன.
அழகுணர்வு என்பது யதார்த்த உலகத்தை அறிவதற்குப் பயன்படும் சமூக உணர்வின் வடிவம் ஆகும். இதனை உண்மை யானது, பொய்யானது என்று இரு வகைப்படுத்தலாம்.
புலன் உணர்வில் தொடங்கிப் பொதுமைப்படுத்துதல் வரை மேலே மேலே முன்னேறுகிற ஒரு சிந்தனை இயக்கம் அறிவியலுக்கும் அழகியலுக்கும் பொதுவானது.
இங்கும் அழகியல் மதிப்பீடு, சமூக வரலாற்று அனுபவமே.
கற்பனை, அழகியல் சிந்தனை இயக்கத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது.
அழகியல் உணர்வு செயலூக்கம் உடையது. ஏனெனில் சில வர்க்கங்களின், குழுக்களின் தேவைகளையும் ஆர்வங்களையும் அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஒரு மனிதன் வாழ்க்கையோடும் யதார்த்தத்தோடும் முற்போக்குச் சக்திகளோடும் எந்த அளவுக்கு இணைந்திருக்கிறானோ, அவ்வளவுக்கு அவனுக்கு அழகியல் உணர்வு மிகுதியாக இருக்கும்.
இத்தத்துவ விளக்கங்களெல்லாம் கலையைப் பற்றிய பொதுவான அறிவைப் பெறவும், கலைப் படிமம் பற்றிய தெளிவான கருத்தைப் பெறவும் எதற்காகத் தேவையாகின்றன? இவ் விரண்டு பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ள இக்கருத்துக்களெல்லாம் அவசியம்தானா?
மேற்கூறிய தத்துவப் பார்வையில் கலையென்பது ஒரு குறிப்பிட்ட வகையான, புறவய யதார்த்தத்தின் 'பிரதி பலிப்பு'.
யதார்த்தவாதம், கற்பனாவாதம், நடப்பியல்வாதம் (Realism, Romonticism, Naturalism) ஆகிய கலைகளின் பிரதிபலிப்பு, வேறு வேறு வடிவங்களாயிருக்கும். ஆயினும் அவை பிரதிபலிப்புக்கள்தாம்.
ஒரே விதமான யதார்த்தம் வெவ்வேறு கலைகளில் வேறு வேறு விதமாகப் பிரதிபலிக்கும்.
கவிதை, சிற்பம், கட்டிடக்கலை, ஓவியம், நடனம் ஆகிய கலை வடிவங்களில் ஒரே உண்மை பல்வேறு அழகிய முறைகளில் பிரதிபலிக்கப்படுகிறது. எனவே, 'யதார்த்தத்தின் பிரதிபலிப்பு'தான் கலையின் பிரதான இயல்பாகும். அறிவியலில் யதார்த்தம் பிரதிபலிப்பதும் அழகியலில் யதார்த்தம் பிரதிபலிப்பதும் ஒற்றுமையான நிகழ்ச்சிகள்.
இவ்விரு திகழ்ச்சிகளின் வேறுபாடுகளை முதலாளித்துவ ஆசிரியர்கள் மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். அறிவியலில் கருத்தும், அழகியலில் படிமமும் பெரிதும் வேறுபட்டு இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். கருத்து சூட்சுமமானது, படிமம் ஸ்தூலமானது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இது பொருந்தாத வாதம். கருத்தைப் போலவேதான் படிமமும் புறவய உண்மையினின்று வடித்தெடுக்கப்படுகிறது. புறவய யதார்த்தின் அச்சுநகலாகப் படிமம் இராது. அதன் சில அம்சங்களை மிகைப்படுத்தி அழகியல் படிமம் உருவாக்கப்படும். புறவய உண்மையின் அச்சு நகலாகக் கலைப் படிமத்தை உருவாக்க முயலும் நடப்பியல்வாதி (Naturalist) கலைத்துறையில் எதனையும் படைக்க இயலாது. கலைப்போலிகளைத் தான் படைப்பான். படிமம், கருத்து ஆகிய இரண்டிற்குமே ஸ்தூலத் தன்மை வெவ்வேறு அளவில் உண்டு. முற்றிலும் சூட்சுமமான கருத்து என்றோ, முற்றிலும் ஸ்தூலமான படிமம் என்றோ எதுவும் கிடையாது. எனவே இந்த வேறுபாடுகள் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன. கருத்தோடு ஒப்பிடும்பொழுது படிமம் சிறிது அதிகமான ஸ்தூலத் தன்மைகொண்டது. படிமம் அவ்வாறு சிறிது அதிகமாக ஸ்தூலத் தன்மை பெற்றிருப்பதற்குக் காரணம் புறவய உண்மையிலிருந்து சில கூறுகளைத் தேர்ந்தெடுக்கிற நோக்குகளும் முறைகளுமே.
ஒரு படிமத்தை உருவாக்குவதற்குப் புலனுணர்வாகத் தோன்றுகிற கூறுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பொருளின் கட்புலனாகும் அல்லது செவிப் புலனாகும் இயல்புகளைத் தேர்ந்தெடுத்து இணைத்தால், படிமத்தில் ஸ்தூலத் தன்மை மிகுதியாக அமையும். அதாவது அப்போது, கருத்தை விட ஸ்தூலமாக நமது உள்ளத்தில் ஒரு பிரதிபலிப்புத் தோன்றும்.
எடுத்துக்காட்டாக இராமாயணத்தில் தாடகை என்னும் கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளலாம்.
மிக்க கொடுமை, மிகப் பெரிய ஆகிருதி, மிகப் பெரிய தீமை என்ற இயல்புகளுடைய படிமம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வியல்புகள் சூட்சுமமானவை.
கொடுமையைக் காட்டச் சூழ்நிலை முழுவதும் பாலை நிலமாகக் காட்டப்படுகிறது. இங்கு வாழ்ந்த உயிர்களைச் சுட்டெரித்தவள் தாடகையென்று பாலை நிலவறட்சியை அவளுடைய தன்மையாகக் கூறுகிறான் கம்பன்.
மிகப் பெரிய ஆகிருதியை, மலையோடு ஒப்பிட்டு அங்கங்களை வருணித்துக் காட்டுகிறான்.
மிகப் பெரிய தீமையைக் காட்டுவதற்கு அந்த வனத்தின் ரிஷிகளையெல்லாம் தவம் செய்ய முடியாமல் தடுக்கத் தசையையும் இரத்தத்தையும் யாகத் தீயில் சொரிபவள் என்று காட்டுகிறான்; பேய் வருணனைகளை நாம் பரணிகளில் கண்டுள்ளோம். அவை முற்றிலும் கற்பனையான உருவங்கள். ஆனால் தாடகையென்னும் கற்பனையான கதாபாத்திரம் மூன்று கூறுகளோடும் உருவாக்கப்பட்டதுபோலத் தமிழிலக்கியத்தில் தீய பாத்திரம் எதுவுமில்லை என்ற எண்ணம் நம் மனத்தில் ஏற்படக் கம்பன் அவளுருவத்தையும் குணங்களையும் கட்புலனாகும்படியும் உட்புலனாகும்படியும் படைத்துள்ளான். அவளது வருகை, படிப்பவர் மனத்தில் திகிலை விளைவிக்கிறது.
சிலம்புகள் சிலம்பிடை செறித்த சுழலோடு
நிலம்புக மிதித்தன நெறித்த குழிபோலச்
சலம்புகவா னரர்உ கமா னிடர்க ளஞ்சி
பிலம்புக நிலக்கிரிகள் பின்தொடர வந்தாள்
அவளோடு இராமன் நடத்தும் போர், பெண்னோடு நடத்தும் போர் என்ற எண்ணம் வாசகனுக்கு ஏற்படாதபடி கொடுமை மிக்க உருவத்தைக் கம்பன் படிமமாகப் படைத்துள்ளான்.
மற்றோரிடம், சூர்ப்பனகை அழகிய பெண்ணாக இராமனை மயக்கி அவனைச் சேர வருகிற இடம். வஞ்சகம், கவர்ச்சிகரமான பெண்ணுருவில் வருகிறது. இங்கும் செவிப்புலனாகும், கட்புலனாகும் கலைப் படிமமாகச் சூர்ப்பனகை உருவாக்கப்பட்டுள்ளாள்.
பஞ்சியாளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடி யளாகி
மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
வஞ்ச மகள் என்னும் கவிக் கூற்றுத் தவிர அடுக்கிக் கூறப்பட்டுள்ள படிமக் கூறுகள் கவர்ச்சியென்னும் உணர்வை எழுப்பப் பயன்படுத்தியவையாகும். இவை செவிப்புலன் மூலம் ஸ்தூலத் தன்மையடைகின்றன. கதாபாத்திரங்கள் ஸ்தூலத் தன்மை பெறுவது, ஸ்தூலப் பொருளாயிருந்தால் மட்டுமன்று. அதனை ஆக்கும் படிமக் கூறுகளின் தேர்வாலும், அவற்றின் இணைப்பாலும் அவை நம் அழகுணர்வில் ஸ்தூலமாகின்றன.
மில்டனின் சாத்தான்
கம்பனின் இராவணன்
ஹோமரின் நூற்றுக்கணக்கான வீரர்கள்
பாரதத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள்
ஆகியோர் தனித்த இயல்புகளோடு ஸ்தூலமான மனிதர்களாகவே நமது உள்ளத்தில் படுகிறார்கள்.
கலைப் படிமத்தின் வேறோர் தன்மை அது; பலவிதமாகப் பொருள் கொள்ள இடம் அளிக்கும். எப்பொருள் கொண்டாலும் கலைப் படிமம் அழகுணர்வில் பதிந்து நிற்கும். டால்ஸ்சடாயின் அன்னாகரீனா பலவித இலக்கிய விவாதங்களுக்கும் பொருளாகியிருக்கிறாள். ஒரு சோகக் கதாநாயகியாக உலக இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அவளை நேசிப்போரும் உள்ளனர், வெறுப்போரும் உள்ளனர். ஆயினும் அவள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில், குறிப்பிட்ட சமூக வர்க்கத்தின் உள்ளப் பாங்கினை எதிர்த்து நின்று தோற்றுப் போகும் கதாபாத்திரமாக உருவம் பெற்றுள்ளாள்.
ஜெயகாந்தனின் பாத்திரங்களனைவரும் வாழ்க்கையின் சாதாரணப் போக்கில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரங்கள். இவ்வாறுதான் எல்லா ரியலிச ஆசிரியர்களின் கதாபாத்திரங்களும் இருக்கும். முன்னரே கூறியதுபோல் வாழ்க்கையின் அச்சு நகலாகக் கலைப் படைப்புப் பாத்திரங்கள் இருக்க மாட்டா. இவற்றின் இயல்புத் தொகைக்கேற்ற இயக்கப் போக்கைச் சமூக உறவுகளில் அவை மேற்கொள்ளும்.
வாசகனது மனப்போக்கு, அவனது மனப்போக்கை உருவாக்கும் தத்துவக் கண்ணோட்டம், வாழ்க்கை மதிப்புகள் முதலியவற்றைப் பொறுத்துத்தான், கலைப்படிமங்களை அவன் வெவ்வேறு விதமாகப் பொருள் கொள்ளுகிறான்.
புகைப்படமெடுப்பவன் வாழ்க்கையின் சில அம்சங்களைக் காட்சியாகப் படம் எடுக்கிறான். அதனைப் புலக்காட்சியாகத் தருகிறான். இது கலைப் படிமம் அன்று. கலைப் படிமம் என்பது புறவய உலகத்தின் (மனித) அகவயப் பிரதிபலிப்பு.
கலைப் படிமத்தில் இயல்பான சூழலில் உண்மையான பொருள்களே காட்டப்படலாம். ஆனால் அவற்றைப் போன்ற பொருள்களிலிருந்து அது தனித்திருக்கிறது. அதாவது தனித்துவம் கலைப் படைப்பின் ஓர் இயல்பு. இப்பொருளில் ஒரு வர்க்கத்தின் ஆர்வங்கள், குறிக்கோள்கள், உணர்ச்சிகள் பொதிந்து கிடக்கும்; அல்லது அப்பொருள்களும் சூழலும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனுடைய பார்வையில் இருந்து காட்டப்படும். புகைப்படம் எடுப்பவன் தன்னைக் கவருகிற பொருள்களைப் புகைப்பட மாக்குகிறான். எதனைப் படம் எடுப்பது என்பதைத் தீர்மானிக்க அவனுக்குச் சிறிதளவு மனித உணர்ச்சி பயன்படுகிறது. அதற்கு மேல் கலைப்படைப்புச் செயலில் மனித உணர்விற்கு இடம் இல்லை. புகைப்படக் கருவி ஓர் இயக்க நிலையிலுள்ள பொருளையே படம் பிடிக்கின்றது. அதனைக் கலையுணர்வால் மாற்றுவதில்லை.
உண்மையான ரியலிசப் படிமம் வாழ்க்கையின் மிகக் சிக்கலான நிலைமையைச் சித்தரிக்கிறது. வாழ்க்கையின் ஓர் அம்சத்தை, மேம்போக்காகக் காணப்படுவதைத் தேர்ந்தெடுத்து, அதனை வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் காட்டுகிறது. அதுவே வாழ்க்கையின் அடிப்படை என்பதைத் தற்காலத்து மக்கள் உணராமல் இருக்கலாம். வாழ்க்கையின் மேம்போக்கான ஒரு கூறு கலையின் மேம்போக்கான கூறாக இராது.
ரியலிசப் படிமம் பன்முகத் தோற்றம் உடையது, உதாரணமாக மோலியருடைய கஞ்சன் கையிறுக்கம் உடையவன் மட்டுமே. அவன் தனிக்குணமாக கஞ்சத்தனம் காட்டப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் ஷைலக்கும் கஞ்சத்தனம் உடையவனே. ஆனால் அவனுடைய இந்த இயல்பு எப்படித் தோன்றியது என்பது நாடகத்தில் காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களது கொடுமைகளால் யூதர்கள் சேரிகளில் ஒதுக்கப்பட்டதாகவும், தங்கள் பண பலத்தால் தங்களை ஒடுக்கியவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற உணர்வு ஷைலக்குக்கு வந்ததாகவும் ஷேக்ஸ்பியர், ஷைலக் வாயிலாகவே கூறுகிறார். ஷைலக்கின் பேச்சு நியாயமற்ற முறையில் அடக்கப்பட்டவர்களுடைய கூற்று. மத்திய காலச் சமூகத்தின் மதக் குரோதம், சமூக ஏற்றத்தாழ்வுகள் முதலியன, அச்சமுதாயத்தைப் பழி வாங்கவேண்டும் என்ற உணர்வை ஷைலக் மனத்தில் ஏற்படுத்தின. தங்கள் தாழ்வுக்குக் கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று ஷைலக் நினைத்ததால்தான், ஒரு கிறிஸ்தவன் தன் மகளை மணக்க அனுமதி மறுத்ததோடு அவளைத் தன் மகளல்ல. என்று கூறவும் செய்தான். அவள் தன் பணத்தோடு ஓடிப் போய்விட்டாள் என்றறிந்ததும், அவள் அந்த நகைகளோடு சவப்பெட்டியில் கிடப்பாளாக என்று சாபம் இடுகிறான்.
ஷைலக், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு, கொடுமைக்குள்ளான ஓர் இனத்தின் பிரதிநிதி...அவனது படிமத்தில் சமூக முரண்பாட்டின் விளைவான தன்மைகள் தரப்பட்டுள்ளன. பன்முகமான கலைப்படிமம் அவன்.
ஓர் அறிவியல் கருத்து, ஓர் இயற்கை அம்சத்தின் சாரத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரே பொருள்தான் இருக்கும். உதாரணமாக அணு எண் (Automic number) எந்த விஞ்ஞானியாலும் ஒரேவிதமாகப் பொருள் கொள்ளப்படும். இதுபோலவே நியூட்டனது குளிர்தல் விதி, பாய்ச்சுவது அழுத்தவிதி, ஈன்ஸ்டினது E = MC2 என்ற விதி, பிரதான குவாண்டம் எண் ஆகிய ஒவ்வொன்றும் ஒரே பொருள் தருவனவாகத்தான் உள்ளன. எந்த விஞ்ஞானக் கருத்தும் இரு பொருள் கொள்ள இடம் அளிக்காது.
ஆனால் கலைப்படிமம் அறிவியல் கருத்தைப் போன்றதல்ல பொதுவான ஓர் அம்சத்தின் சாரத்தை (அறிவியல் விதியைப் போல) படிமம் பிரதிபலித்த போதிலும், யதார்த்தப் பொருளின் பல்விதத் தோற்றங்கள், அம்சங்கள், மனித உள்ளத்தைக் இயல்புகள் ஆகியவற்றையும் தனது உருவத்தில் பிரதிபலிக்கும். ஆயினும் அது முழுமையான ஒருமையாகவே இருக்காது யதார்த்தத்தின் தன்மைகள், பன்முகக் கூறுகள், பண்புகள் அனைத்தையும் பிரதிபலித்து, அதுவாகவே கூடிய மட்டும் தோற்றமளிக்கும். இதனாலேயே படிமத்தை வெவ்வேறு விதத்தில் பொருள் கொள்ள முடிகிறது. அளவுக்குட்பட்டு அடிப்படையை மாற்றாமல் இவ்வாறு பொருள் கொள்வது தவறாகாது.
உண்மையான கலைப் படைப்பு என்பது முழு உலகத்தின் பிரதிபலிப்பு. தமிழ் நாட்டின் வாழ்க்கை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை ஒரு பெரிய மலையை, ஒரு கண்ணாடிக்குள் காட்டுவதுபோலத் தமது காப்பியத்தில் தாம் படைத்திருப்பதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் முடிப்புரையில் கூறுகிறார்.
கலை ஒரு பிரதிபலிப்பு என்பதையும் தமிழ்நாட்டின் வாழ்க்கை முழுவதையும் கண்ணாடியில் படிமம் போலக் காட்டுவது தமது கலை நோக்கம் என்றும் அவர் கூறுகிறார்.
தமிழ் நாட்டைப் பற்றிய படிமத்திற்குப் பதிலாக, தற்கால வரையறையில் உலகத்தைச் சிறிய அளவில் கட்புலனாகும்படி செய்வதே கலைப் படிமம். இன்று மனிதனது தன்மை உலக வியாபகமானது.
ஒரு கலைப் படிமத்தில் யதார்த்தத்தில் இருப்பதைவிட ஓர் அம்சம் மிகையாகச் சித்திரிக்கப்படலாம். இதனை மிகை நவிற்சி, மிகைப்படைப்பு என்று கூறலாம். காப்பியங்களிலும் நாட்டுக் கதைப் பாடல்களிலும் இது ஓர் இன்றியமையாத மரபு. தசரதனுக்கு 60,000 மனைவியர், 60,000 அமைச்சர்கள், இராவணனுக்கு 10 தலைகள். கம்பன் காவிய உலகில் அனைத்தும் பெரிதாகக் காட்ட வேண்டுமென்பதற்காகத் தனது படிமங்களை மிகை நவிற்சியாகவே படைத்துள்ளான். நல்லதங்காளுக்குச் சீதனம் கொடுத்தது ஒரு பட்டி மாடுகள், மனை பொன், தயிர் கடையும் பாத்திரம் பொன், கடை கயிறும் பொன் என்று யாவும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. அவள் ஒரு விவசாயியின் பெண்தான். அவள் ஊரில் இருந்து அண்ணன் ஊருக்கு நடந்துதான் வருகிறாள். அவளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியின் கொடுமையைக் காட்ட அவளுடைய செல்வச் சிறப்பு இவ்வளவு மிகை நவிற்சியாகக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால் ரியலிசப் படைப்பில் மிகை நவிற்சி அளவாகவே பயன்படுத்தப்படும். ஏதாவது ஓர் உணர்ச்சியையோ, பாத்திரத்தின் தன்மையையோ, அழுத்தமாகப் பதியவைக்க இந்த உத்தி பயன்படுத்தப்படும்.
அறிவியல் விளக்கங்களில் மிகை நவிற்சி பெரிதும் கேடு விளைவிக்கும். ஓர் உலோகத்தின் இளநிலை 400°c என்பதை 4000°c என்றால் அது பொய்யாகிவிடும். அது விஞ்ஞான உண்மையாக இராது. ஒரு ஹைட்ரஜன் அணுவில் ஒரு புரோட்டானும் ஓர் எலெக்ட்ரானும் உள்ளன என்பதைக் கவிதை பாக்க 100 புரோட்டானும் 100 எலெக்ட்ரானும் ஹைட்ரஜனில் உள்ளன என்று சொல்லலாமா?
உருவகம்: கவிதையில் தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்க உவமையும் உருவகமும் பயன்படுகின்றன. தமிழில் பண்டைய இலக்கியங்களில் காணப்படும் உவமைகள், உருவகங்கள் குறித்துச் சில (Phd) ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்த உருவகங்கள் கலை உத்திகள் என்ற முறையில் ஓர் அழகியல் விளைவை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும் பான்மையான உவமைகள் நாட்டுப்புற மக்களின் பேச்சு வழக்கில் இருந்து எடுத்தாளப்படுகின்றன. பத்தாயிரக் கணக்கான பழமொழிகள் நாட்டுப்புற மக்களின் அனுபவ அறிவின் திட்டபமான வெளியீடுகளாக வழங்கி வருகின்றன. கவிஞர்களும் இலக்கியப் படைப்பாளிகளும் பாமரர் வழக்குகளை அறிந்திருந்தால் உவமைகளையும் உருவகங்களையும் தமக்குத் தேவையான இடத்தில் எடுத்தாளவும் புதியன புனையவும் எளிதாயிருக்கும்.
சிங்கம் மிருகேந்திரன்
கண்கள் ஆன்மாவின் சாளரங்கள்
இத்தகைய உருவகங்களால் அறிவியலுக்கு என்ன பயன்? எனவே உருவகங்கள் அறிவியலில் பயன்படா.
கலைப் படிமத்தில் கலை அளவு காணப்படவேண்டும். அழகியல் விதிகளின்படி உருவாகிற படிமத்தில், அது எதன் படிமமோ அப்பொருளின் வளர்ச்சிக் கட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகளின் ஒழுங்குகள் காணப்படவேண்டும். எனவே கலைப் படைப்புகளில் ஒத்திசைவு (Rythm), உறுப்புப் பொருத்தம் (Harmony), உட்பொருத்தம் (Symmetry), வனப்பு (Grace). இன்னிசை (melody) முதலியின இருக்கவேண்டும். புறவய உலகை ஒன்றாக அறிந்து கலைப் படைப்பாக ஆக்குகிற கலைஞனுக்கு இவ்வம்சங்கள் பற்றிய வளர்ச்சி இருக்கும். பயிற்சியால் அதனை மிகுவித்துக் கொள்ளலாம்.
கலைப் படைப்புகளில் கலைஞனது கலைத் தீர்ப்பு அல்லது விமரிசனம் உள்ளார்ந்து காணப்படும். அவனது அனுதாபம்,நேசம், கோபம், வெறுப்பு அப்படைப்பின் பொருள் மீது இருப்பது, கலைப் படிமத்தில் நாசூக்காக வெளிப்படும். பிக்காலோவின் புறா, உலகமெங்கும் பரவவேண்டிய சமாதானத்தின் குறியீடாகும். மனத்தில் விருப்பத்தை எழுப்புகிறது. இது குறிக்கும் பொருள் விரும்பத்தக்கது என்பது கலைஞனின் தீர்ப்பு. பங்களாதேஷ் போரின்போது வரையப்பட்ட ஓர் ஓவியரின் சித்திரத்தில் ஓர் இளம் பெண் பாகிஸ்தானிய முரடர்களால் கற்பழிக்கப்பட்டுக் கிடக்கிறாள்; அவளது சிறு குழந்தை பசியால் கதறிக் கொண்டு அவள் மேல் ஏறி, அவளது மார்பைத் தேடுகிறது; பின்னணியில் ஒரு பெரிய பெண் உருவத்தின் தலை, கால், மார்பு முதலிய உறுப்புகள் வெட்டப்பட்டுப் பல திசைகளில் எறியப்பட்டுள்ளன; வாள் பிடித்த கையொன்று சித்திரத்தின் ஒரு மூலையில் காட்டப்பட்டுள்ளது.
இங்கும் ஓவியன் தனது தீர்ப்பை அளித்துள்ளான். ஆதிக்கப் போர்களின் அழிவை அவன் சித்திரித்துள்ளான். வாள் பிடித்த கை அவனது தீர்ப்பு. அதாவது இக்கொடுமையை ஒழிப்பதற்கான மனித சங்கற்பம்.
இலக்கியத்திலும் எழுத்தாளனுடைய தீர்ப்பு வெளியாகும். நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் மூலம் கலைஞனது ஆன்மா வெளிப்படும்.
தனி மனித வாழ்க்கையில் பொதுமையின் செயல்பாட்டைக் காட்டுவதன்று கலைப் படிமம். பொதுமைதான் வலிமை வாய்ந்தது. பொதுமையின் கீழ் எத்தனை தனித்துவங்களை வேண்டுமானாலும் கொணரலாம்.
பொதுமை வாழ்க்கையில் எத்தனையோ வகைகளில் தனி மனிதன் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடலாம். இதனைப் பலவகையான படிமங்களாக உருவாக்கலாம்.
தியோடோர் டிரீஸர் என்னும் அமெரிக்க நாவலாசிரியர் அமெரிக்க ஏகபோக முதலாளித்துவத்தின் கொடுமைக்குள்ளான ரொபர்ட்டா என்னும் பெண்ணின் வாழ்க்கையையும், கிளைட் என்ற இளைஞனின் வாழ்க்கையையும், 'அமெரிக்கன் டிராஜடி' என்ற தனது நாவலில் சித்திரிக்கிறார். கிளைடின் குணங்களின் வளர்ச்சியையும் அவனது சமூகத் தொடர்புகளையும் ஆசிரியர் ஆராய்கிறார். கிளைடின் இளமை, சமுதாயத்தினால் தூண்டப்படும் அவனது ஆர்வங்கள், அதனால் அவனது மனித நேசம் அழிந்து அவன் தன்னால் நேசிக்கப்படும் பெண்ணையே கொலை செய்தல் என்ற கதைப் பொருளை அவர் மூன்று பகுதிகளில் சித்திரிக்கிறார்.
முதல் பகுதியில் கிளைடின் மனப்போக்கு உருவாகிறது. சமுதாய உறவுகளால்தான் அவனது தனித்தன்மை உருவம் பெறுகிறது. ஒரு கார் விபத்தில் கிளைட் ஒரு பெண்ணைக் கொன்றுவிடுகிறான். போலீசிற்குப் பயந்துகொண்டு அவன் கான்ஸாஸ் நகரத்திற்குப் போய்ச் சேருகிறான்.
இரண்டாவது பகுதியில், அவன் வேலை தேடி அலைவதும், அப்பொழுது அவன் அனுபவிக்கும் துன்பங்களும் வருணிக்கப் படுகின்றன. ஒரு பெரிய தொழில் முதலாளியின் ஆதரவு அவனுக்குக் கிடைக்கிறது. இனி வாழ்க்கை நிலைப்படும்போலத் தோன்றுகிறது. இப்பொழுதுதான் ரொபர்ட்டா என்னும் பெண் அவனது வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். இது இரண்டாவது காதல். முதல் காதல் தோல்வியாயிற்று. விலையுயர்ந்த பரிசுகளை முதலில் தான் காதலித்த பெண்ணுக்கு அளித்திருந்தான். ஆனால் அவள் உள்ளம் திருப்தியடையாமலேயே இருந்தது. அவளோடு ஒப்பிடும்பொழுது ரொபர்ட்டா நல்லவளாகத்தான் இருந்தாள். ஆனாலும் கிளைடின் மனத்தில் புதிய சூழ்நிலையில் தோன்றிய ஆசை காரணமாக அவளை மணக்க விரும்பவில்லை. அவள் உணர்ச்சி மிக்கவளாகவும் இனிமை யானவளாகவும் இருந்தாள். ஆனால் சமூகத்தின் மேல்தட்டில் ஓர் இடம் பிடிக்க அவன் ஆசைப்பட்டான். இதற்குத் தகுந்த ஒரு பெண்ணை அவன் மணம் செய்துகொள்ள ஆசைப்பட் டான். 'லொன்ட்ரா' மேல்தட்டு வாழ்க்கையின் நிறை உருவமாக அவனுக்குத் தோன்றினாள். அவள் உணர்ச்சியேயில்லாதவள். இப்பருவப் பெண்களில் அவன் மேல்தட்டு வாழ்க்கையில் நுழையக் கைகொடுக்கக்கூடிய லொண்ட்ராவைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்தான். ரொபர்ட்டாவின் மீதுள்ள காதல், உயர்மட்ட வாழ்க்கை மீது கிளைடு கொண்ட பேராசைக்கெதிரே நிலைக்க முடியவில்லை. தேய்ந்து துரும்பாய்ப் போயிற்று. ரொபர்ட்டாவிற்கு கிளைட், செல்வம், ஆடம்பரம் இவற்றின் உருவமாக விளங்கினான். இன்னும் அவை வசப்படவில்லையாயினும் இனி ஒரு நாள் அவன் செல்வம் பெற்று ஆடம்பர உலகில் நுழைவான் என்று நம்பினாள். இவனை எப்படியாவது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியான நிலைமைகளை ஏற்படுத்த அவள் விழைந்தாள். அவனோடு அவள் உடலுறவு கொண்டாள். இது நல்லதல்ல; ஒழுக்கக் குறைவானது, சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிந்துமே அவள் அப்படிச் செய்தாள்.
கிளைடின் ஆன்மா வளர்ச்சி பெறுவதைச் சமூக மதிப்புப் பெறும் ஆசை தடை செய்தது. கிளைட் - ரொபர்ட்டா காதல் ரொபர்ட்டாவின் சாவில் சென்று முடிந்தது. இச்சாவு எப்படி ஏற்பட்டது?
கிளைடு ஒரு செய்தித்தாளைப் படிக்கிறான். அதில் ஒரு செய்தியைக் காண்கிறான். பாஸ் ஏரியில் ஒரு மனிதனும், பெண்ணும் மூழ்கிவிடுகிறார்கள்; பெண்ணின் உடல் மட்டும் அகப்படுகிறது என்ற செய்தி காணப்படுகிறது. நாவலாசிரியர், இச்செய்தி கிளைடின் மனத்தில் ஏற்படுத்திய சிந்தனை யோட்டத்தைச் சித்திரிக்கிறார். 'இப்படியொரு விபத்தைச் சிருஷ்டித்தால் என்ன? இவ்வளவு சிக்கலான பிரச்சினைக்கு இது ஒரு சுலபமான தீர்வு' என அவன் நினைக்கிறான்.
ஆனாலும் இது ஒரு பயங்கரமான கொலை என்று நினைக்கிறான். மனம் இரண்டுபடுகிறது. போராட்டம். இது தவறு, தவறு என்று அவனது மானுடத் தன்மை கதறுகிறது. ஆனால் 'உயர்நிலை' வாழ்க்கை ஆசை அவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது. டிரீஸர் இம்முரண்பாட்டையும் அதன் தீர்வையும் இயக்கவியல் பார்வையில் காண்கிறார்.
கிளைடை இதயமற்ற கல்நெஞ்சனாகவும் கொலைகாரனாகவும் காட்ட டிரீஸர் விரும்பவில்லை. அதே சமயம் அவனுடைய செயலை நியாயப்படுத்தவுமில்லை.
ரொபர்ட்டாவின் சாவுக்கு கிளைட்தான் காரணம் என்று நிரூபிக்க அமெரிக்கச் சட்ட நிபுணர்களால் முடியவில்லை, கிளைடு குற்றவாளிதான். ஆனால் அவன் அவளைக் கொல்ல வில்லை. அவனது மனசாட்சியின் குத்தல்களால் அவன் மனம் குழம்பியிருக்கிறான்.
மூன்றாவது பகுதி நீதிமன்ற விசாரணையைச் சித்திரிக்கிறது. மறுபடியும் சில நிகழ்ச்சிகள் வாசகன் மனக்கண் முன் நிழலாடுகின்றன. சமூகத்தின் குற்றம் நிரூபிக்கப்படுகிறது. ஆனால் நீதிபதிகள் கிளைடைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக் கின்றனர். சமூகம், கிளிடைக் குற்றவாளியாக்கியது. அதே சமூகம் அவனை மின்சார நாற்காலிக்கு அனுப்புகிறது.
கைதியாக இருக்கும் கிளைடின் சிந்தனைகள், நீதிபதிகளின் முதலாளித்துவச் சார்பு நோக்கைத் தெளிவாகக்காட்டுகின்றன.
கிளைடின் சோக நிலைமை இரண்டு அம்சங்கள் கொண்டது. ஒன்று, அவன் கொலை செய்தது; இரண்டாவது, அவனைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விசாரணைக் காலத்தில் அவன் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளின் போராட்டத்தில் கால்பந்தாக உதைபடுகிறான். நீதிமன்றத்தின் சார்புத்தன்மை, குழு நலன்களைப் பாதுகாக்க நீதிமன்றம் சட்டத்தைப் பயன்படுத்துவது, இப்பணியைச் செய்வதில் வழக்கறிஞர்களது பங்கு எல்லாமே விசாரணைக் காட்சிகளில் அம்பலப்படுத்தப்படுகின்றன.
ரொபர்ட்டாவும் கிளைடும் சமூக மதிப்புகளான 'உயர்ந்த ஆடம்பர வாழ்க்கை' என்ற முதலாளித்துவ மாயா உலகில் நுழைய ஆசைப்பட்டு அழிந்துபோகிறார்கள்.
இங்கு தனி மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கையோடு இணைக்கப்பட்டு அழிவில் சென்று முடிகிறது. முதலாளித்துவச் சமூக வாழ்க்கையின் ஓரச்சார்பு தெளிவாக்கப்படுகிறது. யாருடைய நலன்களைப் பாதுகாக்கச் சட்டமும் நீதிமன்றங்களும் உள்ளன என்பதைக் கிளைடு மின்சார நாற்காலியில் ஏறி உட்காருவதற்கு முன் உணருகிறான்.
முதலாளித்துவம் தனி மனிதனை அழிக்கிறது என்ற கருத்தை டிக்கன்ஸ் 'ஹார்டு டைம்ஸ்' என்ற நாவலின் பொருளாகக் கொண்டுள்ளார்.
ஸோலாவின் நாவல்கள் இதே கருத்தை வேறுவிதமாகக் காட்டுகின்றன.
அப்டன் சிங்க்ளேரின் எண்ணெய் (Oil), காடு (jungle) என்ற நாவல்கள் அமெரிக்க முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளிகளது வாழ்க்கையை மிகவும் ஸ்தூலமாகச் சித்திரிக்கின்றன.
நிலக்கரி ராஜா என்ற நாவலில் அவர் சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையையும், எண்ணெய் என்ற நாவலில் எண்ணெய்த் தொழிலாளிகளின் வாழ்க்கையையும் சித்திரிக்கிறார். காடு என்ற நாவலில் மாட்டிறைச்சித் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர் வாழ்க்கையை வருணிக்கிறார். அமெரிக்கர்களுக்கு உணவையும் சக்தியையும் அளிக்க உழைக்கும் தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையைப் பிழிந்து கொடுத்துத் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு, சுரங்க முதலாளிக்கும் எண்ணெய் முதலாளிக்கும் இறைச்சித் தொழில் முதலாளிக்கும் டாலர் ஆறுகள் பெருகச் செய்கிறார்கள். இதை அவர்கள் படிப்படியாக உணர்கின்றபோது போராட்டங்கள் தோன்றுகின்றன. போராட்டங்களை அடக்க ஒருபுறம் சட்டத்தின் இரும்புக் கரமும் மறுபுறம் பணம் என்ற மென்மையான கரமும் பயன்படுத்தப்படுகின்றன.
ஜூர்கிஸ் என்ற தொழிலாளி ஹாலந்திலிருந்து வந்தவன். தெருவெல்லாம் சிதறிக் கிடக்கும் தங்கத்தை அள்ளிக் கொண்டு தன் நாட்டுக்குப் போய், செல்வந்தனாகத் தான் விரும்புகிற காதலியை மணந்துகொண்டு வாழவேண்டுமென்ற ஆசையோடு அமெரிக்காவுக்கு வந்தவன், பாஸ்டன் நகரில் இறைச்சித் தொழிற்சாலையில் பணிபுரிகிறான். இயந்திரமயமாக்கப்பட்ட கொலைத் தொழிலில் ஈடுபடுகிறான். அவன் தொழிற்சாலையில் தங்கத்தைக் காணவில்லை. மாடுகளை இயந்திர வாள்கள் வெட்டுவதையும், இரத்தம் பீறிட்டு வருவதையும் ஓர் ஓரத்தில் உயிருள்ள மாடுகள் நிற்பதையும் மற்றோர் புறம், தகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி வருவதையும் காண்கிறான். அவன் பணியிடத்தில் கானும் காட்சிகள் அவனது மனித உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்கின்றன. குடிக்க ஆரம்பிக்கிறான்; பணம் தேவைப்படுகிறது. இத்தகைய உடல் பலமுள்ள இளம் தொழிலாளர்களை அடிப்படையாக அமைக்கும் நிருவாகம் இவனுக்குப் பணம் கொடுத்தே இவனைப் படுகுழியில் ஆழ்த்துகிறது.
தேர்தலில் அடியாளாக ஒரு முதலாளித்துவக் கட்சிக்குப் பணிபுரிகிறான். இதில் பல அனுபவங்கள் பெறுகிறான். தேர்தலுக்குப் பின், முதலாளித்துவக் கட்சிக்கு இவன் தேவையில்லை. கைவிட்டு விடுகிறார்கள். கருங்காலியாகிவிட்ட ஜூர்க்ளை தொழிலாளிகள் வெறுக்கிறார்கள்.
இருளில் ஒளிபோல ஒரு சோஷலிஸ்டு யுவதி அவனது வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். சோஷலிஸ்டுக் கூட்டம் ஒன்றிற்குச் செல்லுகிறான். பேச்சாளரின் உணர்ச்சிமிக்க பேச்சைக் கேட்கிறான். சோஷலிசத்தின் மீது ஆழ்ந்த பற்றும் ஈடுபாடும் உண்டாகிறது. ஆனால் இக்கதாபாத்திரம் திடீர் மாற்றம் பெறுகிறது. ஜூர்கிளின் கருத்துப் புரட்சிக்குத் தேவையான தயாரிப்பு இல்லை. ஒரு புதிய மட்டத்தில் சிந்திக்கத் தொடங்குகிற உணர்ச்சி மாற்றத்தைச் சரியாகத் தயார்படுத்தி ஆசிரியர் சித்திரிக்கவில்லை. புதிய ஜூர்கிஸ் இரத்தமும் சதையுமுடையவனாகப் படைக்கப்பட வில்லை.
அப்டன் சிங்க்ளேர் தொழிலாளர் சார்பு எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. சோஷலிசம்தான் தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிகாட்டும் குறிக்கோள் என்பதிலும் அவருக்கு ஐயம் எதுவும் இல்லை. ஆனால் அவர் உணர்ச்சிவயமான, சோஷலிஸ்டு (Socialist in Emotion). பிற்காலத்தில் சோகை பிடித்த முதலாளித்துவச் சோஷளிசத்தை அவர் ஆதரித்தார். சோவியத் மக்கள் மீது அளவற்ற நேசம் அவருக்குண்டு, அவர் மறைவிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார்.
அவர் முதலாளித்துவப் பத்திரிகைகளின் தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால் வரலாற்றின் ஒளியில் நீதிக்காகப் போராடிய தலைசிறந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். உலக இலக்கியத்தில், சர்வதேசத் தொழிலாளர் விடுதலைக்காகத் தமதுவாழ்க்கையை அர்ப்பணித்த, தமது கலைத்திறமையைப் பயன்படுத்திய கலைப் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்.
அழகற்றது, ரசனையற்றது. என்று கருதப்பட்ட கதைப் பொருள்களான சுரங்கம், எண்ணெய், இறைச்சித் தொழில் போன்றவைகளைத் தமது கலைப் படைப்புக்குள்ளாக்கி, சமூக முரண்பாடுகளையும் போராட்டங்களையும், தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் நின்று சித்திரித்த மிகச் சில அமெரிக்க எழுத்தாளர்களில் அவர் மறக்க முடியாதவர்.
கார்க்கியின் படைப்புத் தொடக்கம் ஏழை எளிய மக்களின வாழ்க்கையைச் சித்திரித்ததுதான். மாஸ்கோவில் புரட்சி முற்காலச் சேரி வாழ்க்கையைக் கலைப் பொருளாகக் கொண்டு அதல பாதாளம் (Lower depths) போன்ற நாடகங்களும் குறு நாவல்களும் படைத்தார். இதில் கதாபாத்திரங்களின் உள்ளத்தில் சமூக வர்க்க உணர்வு இல்லை.
அதன் பின்னர் எதிரிகள் (Enemies) என்ற நாடகத்தில் தொழிலாளர், முதலாளிகள் என்ற சமூகப் பிரிவுகளையும், சமூகத்தில் மனித வாழ்க்கையை எல்லா வகையிலும் கட்டுப்படுத்துகிற சக்தி முதலாளித்துவ வர்க்கத்திற்கு உண்டு. என்பதையும் காட்டி அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுகிற தொழிலாளி வர்க்கப் பிரதிநிதிகளைக் கலைப் படைப்பாக்கிப் போராடுகிற, பிளவுபட்ட சமுதாயத்தைச் சித்திரிக்கிறார். இதில் வெற்றி யாருக்கு என்பதைச் சூசகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
பின்னர் வர்க்க இணைப்பிற்குத் தத்துவமும் அரசியலும் தேவை என்பதையும், அதனைத் தொழிலாளி வர்க்கக் கட்சியே தொழிலாளருக்கு அளிக்க முடியும் என்பதையும் உணர்ந்து 'தாய்' என்ற நாவலில் சித்திரிக்கிறார். இவையனைத்தும் தொழிலாளி வர்க்கப் பாத்திரங்களின் மூலமே, சமூகத்தில் அவர்களது வர்க்கப் போராட்டங்களில் தத்துவ அரசியல் தாக்கத்தால் தனித் தொழிலாளிகள் இணைந்து கொள்வதன் மூலமே சாத்தியமாகிறது என்பதை அவர் காட்டுகிறார். தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு மாற்றங்கள் படிப்படியாக, இயல்பாகத் தொழிற்சங்கங்களாலும் கட்சியினாலும் வழி நடத்தப்பட்டு, கம்யூனிசத்தைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றன என்று காட்டுகிறார்.
அவருடைய பெருமை தொழிலாளி வர்க்கக் கதாபாத்திரங்களை உலக இலக்கியத்தில் உலவவிட்டது மட்டுமன்று.
மாபெரும் வரலாற்றுப் புரட்சிகளில் விரோத வர்க்கங்களின் செயல்பாடுகளையும் அவர் சித்திரித்துள்ளார். நிலப் பிரபுத்துவ ஆட்சியில் விவசாயிகளின் போராட்டங்கள், நில அடிமை முறையை அகற்றுவதன் காரணங்கள், சில நில அடிமைகள் பணம் இருந்ததன் காரணமாக வணிக வர்க்கமாக மாறியது, முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் இவர்களது அழிவு ஆகியவற்றையெல்லாம் அவர் சித்திரித்துள்ளார். பொதுவாக வரலாற்றை அவர் பல வர்க்கங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள நடத்தும் போராட்டமாகத் தான் காண்கிறார். இவற்றுள் தொழிலாளி வர்க்கம், எல்லா வர்க்கங்களையும் விடுதலை செய்யும் கடப்பாடு உடையது. ஏனெனில் சுரண்டல் சமுதாயத்தின் அடிப்படையான, மனிதனை மனிதன் சுரண்டுகிற வழக்கத்தையே அது எதிர்க்கிறது.
பிற வர்க்கங்களை விடுதலை செய்யாமல் தொழிலாளி
வர்க்கம் விடுதலை பெறமுடியாது.
தன்னை விடுதலை செய்து கொள்ளும்பொழுதே அது
என்று மார்க்ஸ் எழுதினார்.
தொழிலாளி வர்க்கம் உலக மக்களது விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு போராடுகிறது. இதனையுணர்ந்த கார்க்கி உலக விடுதலைக்காகப் போராடுகிற கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட தொழிலாளிகளைத் தமது கதாபாத் திரங்களாகப் படைத்தார்.
ஒரு கலைப் படைப்பு என்பது ஒரு வர்க்கச் சித்திரமல்ல. சமுதாயத்தில் செயல்படும் சகல வர்க்கங்களிடையே நடைபெறும் பொருளாதார, அரசியல் சிந்தனைப் போராட்டங்களின் ஒருமையான சித்திரம்தான் அது. சமுதாயம் என்பதே போராடும் வர்க்கங்களின் ஒருமைதானே?
வளர்ச்சியடைந்த சோஷலிச சமுதாயத்தில்தான் குழு நலன்களுக்காகப் போராடும் குழுக்கள் இல்லை. தொழிலாளி, விவசாயி, அறிவுத்துறையினர் என்ற வேறுபாடுகள், அனைத்து வர்க்கங்களின் ஒரு சீரான பொருளாதார, கலாசார வளர்ச்சியினால் அகன்றுவிடுகின்றன. அப்பொழுதுதான் நாட்டு மக்களனைவரின் நலன்களும் ஒன்றாகின்றன. வர்க்க அரசு என்ற தன்மையிலிருந்து மக்கள் அரசு என்ற தன்மை தோன்றுகிறது. சோவியத் மக்கள், தங்கள் 60 ஆண்டுச் சாதனையில் இந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
மேற்கூறிய கருத்துக்களால் இரண்டு அடிப்படைகள் தெளிவாகின்றன. அவையாவன:
1. ஒரே பொதுவான கருத்தைக் கலைஞனது திறமை, கற்பனை, வரலாற்று நோக்கு, தத்துவ நோக்குகளுக்கேற்பப் பலவிதப் படிமங்களாக்கலாம்.
2. எல்லாக் கலைஞர்களும் வாழ்க்கையின் முரண்பாடுகளில் இருந்துதான் கலைப் படைப்புகளைத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையின் இயக்கப் போக்கை மேலும் மேலும் அறிந்துகொண்டு வரலாற்றுக் கண்ணோட்டமும் தத்துவ நோக்கமும் பெறும்பொழுது, அவர்களுடைய கலைப் படைப்புகள் செழுமையடைகின்றன.