மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/14. பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி

14

பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி சொன்ன

சந்தர்ப்பம் சதி செய்த கதை

"கேளாய், போஜனே! ஒரு நாள் மாலை வழக்கத்துக்கு விரோதமாகப் பாதாளம் கொஞ்ச நேரம் கழித்து வேலைக்கு வர, ‘என்ன விசேஷம், இன்று ஏன் இவ்வளவு நேரம்?' என்று விக்கிரமாதித்தர் விசாரிக்க, ‘எங்கள் மக்கள் மன்றத்தில் ஒரு தகராறு; அதைத் தீர்த்து வைப்பதற்குள் எனக்குப் 'போதும், போதும்' என்று ஆகிவிட்டது!’ என்ப தாகத்தானே அவன் சொல்ல, ‘உங்கள் மக்கள் மன்றமா? அப்படி ஏதாவது ஒன்றை நீயும் எங்கேயாவது ஆரம்பித்து நடத்தி வருகிறாயா, என்ன?’ என்பதாகத்தானே இவர் வியப்பும் திகைப்புமாய்க் கேட்க, 'ஆமாம், மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என் உள்ளத்திலும் திடீரென்று ஒரு நாள் ‘பொங்கு, பொங்கு' என்று பொங்கி, ‘வழி, வழி' என்று வழிந்தது. அது வீணாய்ப் போய்விடக் கூடாதே என்று அப்படி ஒரு மன்றத்தை நானும் எங்கள் வட்டாரத்தில் ஆரம்பித்து நடத்தி வருகிறேன்!’ என்று பாதாளம் பகர, 'உங்கள் வட்டாரத்துக்குச் சொல்வதை என்னிடமும் சொல்லாதே! உண்மையைச் சொல்?’ என்று விக்கிரமாதித்தர் அவன் முதுகில் ஒரு தட்டுத் தட்டிக் கேட்க, ‘உங்களுக்குத் தெரியாததா? இந்தக் காலத்தில்தான் எத்தனை வழிகளில், எத்தனை கைகளில் சம்பாதித்தாலும் செலவுக்குப் போத மாட்டேன் என்கிறதே? இப்படி ஒரு மன்றம், கின்றம் ஆரம்பித்து நடத்திக்கொண்டு வந்தால், அது மக்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்குப் பயன்படுகிறது; தேர்தல் சமயத்தில் அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்கும் வகையில் அது எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் பயன்படுகிறது. தேர்தல் இல்லாத காலங்களிலோ ஆனந்தமாகச் சீட்டாட அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம்!' என்று பாதாளம் இவர் தட்டிய தட்டினால் சற்றே நெளிந்து சொல்ல, 'அப்படியா சமாசாரம்? அதில் என்ன தகராறு உங்களுக்கு?’ என்ற இவர் மேலும் குடைய, ‘எங்கள் வட்டாரத்தில் இப்போது உபதேர்தல் ஒன்று நடந்ததே, அதனால் ஏற்பட்ட தகராறு அது!’ என்று அவன் அப்போதும் அதிலிருந்து நழுவப் பார்க்க, ‘ஏன், கிடைத்ததைப் பங்கு போட்டுக் கொள்ளும்போது உங்களுக்குள் சண்டை வந்துவிட்டதா, என்ன?’ என்று விக்கிரமாதித்தர் அவனை விடாமல் இழுத்து வைத்துக் கேட்க, ‘அந்த விஷயத்தில் நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோமா? வெளியே தெரிந்தால் எங்கள் தொண்டின் தூய்மையே அதனால் கெட்டுவிடாதா? காதும் காதும் வைத்தாற்போல் அந்தக் கதை நடந்துவிட்டது; இது வேறு கதை!’ என்று பாதாளம் சொல்ல, 'அந்தக் கதையைத்தான் கொஞ்சம் சொல்லேன்?' என்று இவர் சிரித்துக் கொண்டே கேட்க, ‘ஏது, ஆளை விடமாட்டீர்கள்போல் இருக்கிறதே?' என்று அவனும் சிரித்துக்கொண்டே சொன்னதாவது:

'ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் எங்கள் வட்டாரத்தில் கிளைகள் உண்டு. ஆகவே, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் எங்கள் மன்றத்தின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை; நாங்களும் அவர்கள் இருக்கும் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டோம். எங்களுடைய வாடிக்கையாளர்களெல்லாம் சுயேச்சையாளர்கள்தான். சுயேச்சையாளர்கள் என்றால் மட்டும் என்ன, சும்மாவா? நிமிஷத்துக்கு நிமிஷம் மந்திரி சபைகள் மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அவர்களுடைய சக்திதானே எல்லோருடைய சக்தியைக் காட்டிலும் அதிகமாயிருக்கிறது. அவர்களால்தானே வோட்டின் விலையும் விஷம் ஏறுவதுபோல் ஏறிக்கொண்டே போகிறது? அத்தகைய சக்தி வாய்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் எங்கள் வட்டாரத்தில் நடந்த உபதேர்தலில் ஆளும் கட்சியையும், எதிர்க் கட்சியையும் எதிர்த்துப் போட்டி யிட்டார்கள். அவர்களில் ஒருவர் பெயர் ராமன்; இன்னொருவர் பெயர் ராவணன். ராமனுக்கு நாய்ச் சின்னம்; ராவணனுக்கு நரிச் சின்னம். ‘நாய் நன்றியுள்ள பிராணி, அதே மாதிரி நானும் உங்களிடம் நன்றியுள்ளவனா யிருப்பேன். ஆகவே, எனக்கே உங்கள் வோட்டைப் போடுங்கள்?’ என்று ராமன் பிரசாரம் செய்தார்; 'இந்தக் காலத்தில் ஒரு ராஜ்யத்தை ஆள நன்றி மட்டும் போதாது; தந்திரமும் வேண்டும். அதைத்தான் ராஜதந்திரம் என்று அந்த நாளிலேயே சாணக்கியன் சொல்லியிருக்கிறான். அந்தத் தந்திரம் நரிக்கு வேண்டிய மட்டும் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, உங்கள் வோட்டை எனக்கே போடுங்கள்!' என்று ராவணன் பிரசாரம் செய்தார்.

‘இப்படியாகத்தானே இவர்கள் பிரசாரம் சூடு பிடித்துக் கொண்டு வந்தகாலை, ஒரு நாள் ஆளுங் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எங்கள் மன்றத்தைத் தேடி வந்தார். தலைவர் என்ற முறையில் நான் அவரை வரவேற்று, ‘என்ன விஷயம்?' என்று விசாரித்தேன். 'ஒன்றுமில்லை; இந்தத் தேர்தலில் உங்கள் மன்றம் யாருக்கு வேலை செய்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ளலாமோ?' என்று அவர் மெல்லக் கேட்டார். 'போர்க்களத்தில் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்துவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்; அதே மாதிரித்தான் தேர்தல் களத்திலும் நாங்கள் எந்த ரகசியத்தையும் வெளிப் படுத்துவதில்லை!' என்றேன் நான். 'அப்படியா, நீங்கள் சுயேச்சையாளர்களுக்குத்தானே வேலை செய்கிறீர்கள்?' என்றார் அவர் அப்பொழுதும் விடாமல். ‘இல்லை, மக்கள் மன்றம் இது. ஆகவே, இது மக்களுக்காகவே வேலை செய்கிறது!’ என்றேன் நான் அதற்கும் அசைந்து கொடுக்காமல். 'அட, சரிதான் ஐயா! யார்தான் இந்தக் காலத்தில் மக்களுக்காக வேலை செய்யவில்லை? எல்லோரும் மக்களுக்காகத் தான் வேலை செய்கிறோம். இப்படிச் சொல்லி மக்களைத் தான் ஏமாற்றுகிறோம் என்றால், நம்மை நாமே வேறு ஏமாற்றிக் கொள்ள வேண்டுமா, என்ன? விஷயம் என்ன வென்றால், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களிடையே கொஞ்சம் அதிருப்தி காணப்படுகிறது. ஆகவே, இந்தத் தேர்தலின் முடிவு என்ன ஆகுமோ, என்னவோ என்று எங்கள் வேட்பாளர் கொஞ்சம் பயப்படுகிறார். எதிர்க்கட்சி வேட்பாளரைப் பற்றி அவருக்குக் கவலையில்லை; அந்தக் கட்சியின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புத் தீர இன்னும் பத்து வருடங்களாவது ஆகும் என்று அவர் நினைக்கிறார். இப்போது எங்கள் பயமெல்லாம் யாரிடம் இருக்கிறது என்றால், சுயேச்சையாளர்களிடம்தான் இருக்கிறது. ஐந்தோ, பத்தோ வாங்கிக்கொண்டு உங்கள் சுயேச்சையாளர்களில் ஒருவரையோ, அல்லது இருவரையுமேயோ வாபஸ் வாங்கிக் கொள்ளச் செய்ய முடியுமா உங்களால்? அதைக் கேட்கத்தான் நான் வந்தேன்!' என்று அவர் உடனே விஷயத்துக்கு வந்தார். 'ஐந்தோ, பத்தோ என்றால்?’ என்று நான் இழுத்தேன். 'ஐயாயிரம், பத்தாயிரம் என்ற அர்த்தம்; அதாகப்பட்டது, இங்கெல்லாம் ஒரு ரூபா என்றால் ஓராயிரம் ஐயா, ஓராயிரம். என்ன, புரிந்ததா?’ என்றார் அவர். ‘புரிந்தது, புரிந்தது!’ என்றேன் நான். 'சரி, இந்தாருங்கள் ரூபா ஐயாயிரம்; முதலில் இதைக் கொண்டு போய்க் காரியத்தை முடிக்கப் பாருங்கள்; முடிந்த பின் மேற்கொண்டு ரூபா ஐயாயிரம் வேண்டுமானாலும் எங்கள் வேட்பாளர் கொடுக்கத் தயாராயிருக்கிறார்!' என்றார் அவர். நான் அதை வாங்கிக்கொண்டு, 'மக்களுக்காக உடல், பொருள், ஆவி மூன்றையும் நாங்கள் தத்தம் செய்யத் தயார், தயார், தயார் என்று நீங்கள் அடித்துப் பேசும்போது, விளையாட்டுக்காக அப்படிச் சொல்கிறீர்களாக்கும் என்று நான் நினைப்பதுண்டு. இப்போதல்லவா தெரிகிறது, உடலையும் ஆவியையும் மட்டும் நீங்கள் உங்களிடமே வைத்துக்கொண்டாலும் பொருளை மக்களுக்காக நிஜமாகவே தத்தம் செய்கிறீர்கள் என்று!' என்றேன் நான். ‘விளையாடாதீர்கள், ஐயா! எல்லாத் தத்தங்களையும் எங்களுக்காகத்தான் நாங்கள் செய்து கொள்கிறோம் என்று நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்? விஷயத்தைக் கவனியும்; நான் போய் நாளை வந்து பார்க்கிறேன்!' என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர். ‘எங்கள் மன்றத்துக்குக் கமிஷன்?’ என்றேன் நான். 'சுயேச்சை வேட்பாளருக்குக் கொடுப்பதில் இருபத்தைந்து சதவிகிதம் உங்களுக்கும் உண்டு!' என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.

'அவருடைய தலை மறைந்ததும், ‘நானும் உங்களைத் தான் பார்க்க வருகிறேன்!' என்று ‘இளி, இளி’ என்று இளித்துக்கொண்டே எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் வந்து எனக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தார். ‘என்ன விஷயம்?' என்றேன். 'ஆளுங் கட்சிக்காரர் சொன்ன அதே விஷயம் தான்! அவர்களிடம் மக்களுக்குக் கொஞ்சம் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் போட்டி நேரிடைப் போட்டியாக இருந்தால் நாங்கள் நிச்சயம் வந்து விடலாம் என்று நினைக்கிறோம். அதற்குக் குறுக்கே சுயேச்சையாளர்கள் இருவர் நின்று தொலைக்கிறார்கள். அவர்கள் இருவரையுமே 'வாபஸ்' வாங்கிக் கொள்ளச் செய்து விட்டால் உங்களுக்கும், உங்கள் மன்றத்துக்கும் நாங்கள் வேண்டியதைக் கொடுக்கிறோம்' என்றார் அவர். 'சரி, வேண்டாமல் என்ன கொடுப்பீர்கள்?’ என்றேன் நான். ‘அவர்கள் உங்கள் மன்றத்துக்கு இருபத்தைந்து சதவிகிதம் தானே கமிஷன் தருவதாகச் சொன்னார்கள்? நான் ஐம்பது சதவிகிதம் தருகிறேன்!' என்றார் அவர். 'சுயேச்சையாளர்களுக்கு?' என்றேன் நான். 'அவர்கள் ஐந்துதானே கொடுத்தார்கள்? நான் பத்து தருகிறேன்!' என்றார் அவர். 'சரி, கொடும்!' என்று வாங்கிக்கொண்டு, 'நாளை வந்துப் பாரும்!’ என்றேன் நான். அவர் போய்விட்டார்.

‘ஆகா! ஜனநாயகம் என்றால் 'பண நாயகம்’ என்று இப்போதல்லவா தெரிகிறது நமக்கு!' என்று எண்ணிக் கொண்டே நான் அவர்கள் கொடுத்த பணத்துடன் முதலில் ராமன் வீட்டிற்குச் சென்று, விஷயத்தைச் சொன்னேன். அவர், 'ராமா, ராமா' என்று காதைப் பொத்திக்கொண்டு, ‘எனக்கு உங்கள் பணமும் வேண்டாம்; அதற்காக என் அபேட்சையை வாபஸ் வாங்க நான் தயாராகவும் இல்லை!' என்றார். 'கிடக்கிறார், பிழைக்கத் தெரியாத மனிதர்!' என்று நான் ராவணனின் வீட்டுக்குச் சென்று அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் இரு கைகளையும் நீட்டி நான் கொடுத்த ரூபா பதினைந்தாயிரத்தையும் வாங்கிக்கொண்டு, ‘ஆகா! அதற்கென்ன, அப்படியே செய்துவிடுகிறேன்!' என்றார். 'நன்றி!' என்று சொல்லிவிட்டு நான் திரும்பினேன். ‘அதை நாய்க்குச் சொல்லுங்கள்; நரிக்குச் சொல்ல வேண்டாம்!' என்றார் அவர்.

மறு நாள் சொன்னது சொன்னபடி ஆளுங் கட்சிக்காரரும் எதிர்க் கட்சிக்காரரும் ஒருவர் பின் ஒருவராக என்னைத் தேடி வந்தார்கள். அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். ‘இரண்டு சனியன்களில் ஒரு சனியனாவது ஒழிகிறேன் என்று சொல்கிறதே, அதைச் சொல்லுங்கள்!' என்று சொல்லிவிட்டு, அவர்கள் இருவரும் எங்கள் மன்றத்துக்குரிய கமிஷனை மறக்காமல் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

‘நரிச் சின்னம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டதால், நாங்கள் நாய்ச் சின்னத்துக்கு வேலை செய்தோம். யார், எதற்கு வேலை செய்து என்ன பிரயோசனம்? கடைசியில் வெற்றி என்னவோ நரிச் சின்னத்துக்குத்தான் கிட்டிற்று. ‘ஏன், அவர் வாபஸ் வாங்கிக் கொள்ளவில்லையா?' என்கிறீர்களா? எங்கே வாங்கினார்? பணத்தைத்தான் இரு கைகளையும் நீட்டி வாங்கினார்; அபேட்சையை வாபஸ் வாங்க அவர் ஒரு கையைக்கூட நீட்டவில்லை!

'இதை வெளியே சொல்வது எப்படி? சம்பந்தப்பட்ட மூவரும் தேள் கொட்டிய திருடர்கள்போல் விழித்தோம். இந்தச் சமயத்தில் எங்கள் மன்றத்தின் காரியதரிசி வந்து, ‘ராவணனுக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும்; இனி நம் வளர்ச்சி-இல்லையில்லை, மன்றத்தின் வளர்ச்சி அவருடைய கையில்தான் இருக்கிறது!’ என்றார். எனக்கு எப்படி இருக்கும்? 'அந்தத் துரோகிக்கா பாராட்டு விழா?' என்று சீறினேன். 'அவர் துரோகி என்றால் நாமும் துரோகிகள்தான்!' என்றார் அவர். எனக்கு ஆத்திரம் தாங்கவில்லை; 'அவன் சந்தர்ப்பவாதி!’ என்று இரைந்தேன். 'அவர் சந்தர்ப்பவாதி என்றால் நாமும் சந்தர்ப்பவாதிகள்தான்!' என்று அவரும் இரைந்தார். இருவருக்கும் வாக்குவாதம் தடித்தது. ‘கடைசியாகச் சொல்கிறேன்-ராவணன் துரோகி இல்லை. புத்திசாலி; படுபுத்திசாலி. அவரைப் புத்திசாலி என்று ஒப்புக் கொண்டால்தான் நாமும் புத்திசாலிகளாவோம். இல்லையென்றால் அவரும் துரோகிதான்; நாமும் துரோகிகள்தான்!' என்று அவர் சாதித்தார். அதை நான் மறுத்தாலும் என் மனம் என்னவோ 'உண்மை; அவர் சொல்வது முற்றிலும் உண்மை!’ என்று சதா சொல்லிக்கொண்டே இருந்தது. ஆகவே, வேறு வழியின்றி அவர் சொன்னதை ஒப்புக் கொண்டு, நாளைக்கு எங்கள் மன்றத்தின் சார்பில் ராவணனுக்குப் பாராட்டு விழா நடத்தவிருக்கிறோம். இதை உங்களிடம் சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது. அதனால்தான் கொஞ்சம் ஒதுங்கிப் பார்த்தேன். நீங்கள் விடவில்லை; சொல்லிவிட்டேன்!'

பாதாளம் இதைச் சொல்லிவிட்டுத் தலை குனிய, விக்கிரமாதித்தர் அதன் தலையை நிமிர்த்தி, 'சந்தர்ப்பவாதி இந்த உலகத்தில் வாழ்கிறான்; அவன் வாழ்வதை எல்லோரும் பார்க்க முடிகிறது. சத்தியவாதி அந்த உலகத்தில் வாழ்வதாகச் சொல்கிறார்கள்; அவன் வாழ்வதை யாரும் பார்க்க முடிவதில்லை. இதற்கு ஒரு முடிவை என்று காண முடிகிறதோ, அன்றுதான் இந்த மாதிரி அயோக்கியத் தனங்களுக்கும் ஒரு முடிவைக் காண முடியும். அதுவரை எளிதில் ஆசைக்கு இரையாகக் கூடிய நிலையில் இருக்கும் உன்னைப் போன்ற எளிய மக்கள் அதற்காக வெட்கப்படுவதே இந்த நாடு பெற்ற பெரும் பேறாகும்!' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே வெளியே செல்ல, பாதாளம் அவரை முந்திக்கொண்டுச் சென்று அவருக்காகக் காரின் கதவைத் திறந்து விடுவானாயினன்."

தினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பதினைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அமிர்தா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.......