முதற் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி
முதற் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி
தொகுமெய்க்கீர்த்தி 1
தொகு- திருமன்னி விளங்கு மிருகுவ டனையதன்
- தோளும் வாளுந் துணையெனக் கேளலர்
- வஞ்சனை கடந்து வயிரா கரத்துக்
- குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில்
- சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத்
- திக்கு நிகழத் திறைகொண் டருளி
- அருக்க னுதயத் தாசையி லிருக்குங்
- கமல மனைய நிலமக டன்னை
- முந்நீர்க் குளித்த வந்நா ளாதிக்
- கேழ லாகி யெடுத்த திருமால்
- யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
- தன்குடை நீழற்கீ ழின்புற விருத்தித்
- திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப்
- புகழும் தருமமும் புவிதொறு நிறுத்தி
- வீரமுந் தியாகமும் மானமுங் கருணையும்
- உரிமைச் சுற்ற மாகப் பிரியாத்
- தலநிகழ் சயமுந் தானும் வீற் றிருந்து
- குலமணி மகுட முறைமையிற் சூடித்
- தன்கழல் தராதிபர் சூடச் செங்கோல்
- நாவலம் புவிதொறும் நடாத்திய
- கோவி ராச கேசரி வன்மரான
- உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு....
மெய்க்கீர்த்தி 02
தொகு- புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப
- நிலமக ணிலவ மலர்மகள் புணர
- உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி
- மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர
- ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதர
- விக்கலன் சிங்கணன் மேல்கடற் பாயத்
- திக்கனைத் துந்தன் சக்கர நடாத்தி
- விசயாபி டேகம்பண்ணி வீரசிம் மாசனத்துப்
- புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய
- கோவி ராசகேசரி வன்மரான சக்ரவர்த்திகள்
- ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு...
மெய்க்கீர்த்தி 03
தொகு- புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியிற்
- பொன்னேமி யளவுந் தன்னேமி நடப்ப
- விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச்
- சக்கரக் கோட்டத்து விக்கிரமத் தொழிலாற்
- புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம்
- வியரா கரத்து வாரி யயிர்முனை
- கொந்தள வரசர் தந்தள மிரிய
- வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப்
- போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி
- வடதிசை வாகை சூடித் தென்றிசை
- தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
- பொன்னி யாடை நன்னிலப் பாவையின்
- தனிமையுந் தவிரப் புனிதத்
- திருமணி மகுட முரிமையிற் சூடித்
- தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
- தொன்னில வேந்தர் சூட முன்னை
- மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
- செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை
- இருநில வளாக மெங்கணுந் தனாது
- திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி
- மேருவிற் புலி விளை யாட வார்கடற்
- றீவாந் தரத்துப் பூபாலர் திறைவிடு
- கலஞ்சொரி களிறுமுறை நிற்ப விலங்கிய
- தென்னவன் கருந்தலை பருந்தலைத் திடத்தன்
- பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப விந்நாட்
- பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னுஞ்
- சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை
- வில்லது கோடா வேள்குலத் தரசர்
- அளத்தியி லிட்ட களிற்றினதீட்டமும்
- பட்டவெம் பரியும் விட்டதன் மானமும்
- கூறின வீரமும் கிடப்ப வேறின
- மலைகளு முதுகு நெளிப்ப விழிந்த
- நதிகளுஞ் சுழன்றுடைந் தோட விழுந்த
- கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத்
- தந்நா ளுகந்து தானும் தானையும்
- பன்னா ளிட்ட பலபல முதுகும்
- பயத்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும்
- பரியிகந்து கொடுத்த புகழின் செல்வியும்
- வாளா ரொண்கண் மடந்தைய ரீட்டமும்
- மீளாது கொடுத்த வெங்கரி நிரையும்
- கங்கமண் டலமும் சிங்கணமென்னும்
- பாணீ யிரண்டுமொருவிசைக் கைக்கொண்
- டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங்
- கொள்ள திருவுளத் தடைத்து வெள்ளம்
- வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும்
- தந்திர வாரியு முடைத்தாய் வந்து
- வடகடல் தென்கடல் படர்வது போலத்
- தன்பெருஞ் சேனையை ஏவிப் பஞ்சவர்
- ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி
- வெரிநளித் தோடி யரனெனப் புக்க
- காடறத் துடைத்து நாடடிப் படுத்து
- மற்றவர் தம்மை வனசரர் திரியும்
- பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற
- விசயத் தம்பந் திசைதொறு நிறுத்தி
- முத்தி்ன் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு
- மத்தவெங் கரிபடு மய்யச் சையமும்
- கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட்
- டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள
- சாவே றெல்லாந் தனிவிசும் பேற
- மாவே றியதன் வரூதினித் தலைவரைக்
- குறுகலர் குலையக் கோட்டா றுட்பட
- நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள்
- வீரசிம் மாசனந் திரியவிட் டருளி
- வடதிசை வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்
- கலிங்க மேழுங் கனலெரி பரப்ப
- விலங்கல் போல விளங்கிய வேந்தர்
- விட்டவெங் களிற்றோடு பட்டுமுன் புரளப்
- பொருகோ பத்தோடு போர்முக மதிர
- வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட
- எங்க ராய னிகலவ ரேச்சணன்
- மாப்பிறளா மதகரி யிராசணன்
- தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
- மண்டலிக தானய னெண்மர்த் திசைமுகன்
- போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி
- என்றிவ ரனைவரும்
- வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர்
- கருந்தலை யொடுவெண் ணினங்கழு கோடு
- பருந்தலைத் தெங்கணும் பரப்ப வுயர்த்து
- கருங்கட லடையத் தராதலந் திறந்து
- கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல்
- ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல
- வீரமுந் தியாகமும் விளங்கப் பார்தொழிச்
- சிவனிடத் துமையெனத் தியாக வல்லி
- உலக முழுதுடையா ளிருப்ப வவளுடன்
- கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலகம்
- ஏழிசை வல்லபி யேழுலகு முடையாள்
- வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந்
- திருமா லாகத்துப் பிரியா தென்றும்
- திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து
- வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான
- திரிபுவன சக்கர வர்த்திகள்
- ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு...
- [[]] :[[]]:[[]] :[[]] :[[]] :[[]]