முதல் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
முதல் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி
தொகு- 1.ஸ்வஸ்திஸ்ரீ
- 2.திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
- 3.தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
- 4.காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி
- 5.வேங்கை நாடுங் கங்க பாடியுந்
- 6.தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
- 7.குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
- 8.முரட்டொழிற் சிங்கள ரீழமண் டலமும்
- 9.இரட்ட பாடி யேழரை யிலக்கமும்
- 10.முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரமுந்
- 11.திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
- 12.னெழில்வள ரூழியு ளெல்லா யாண்டுந்
- 13.தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
- 14.தேசுகொள் கோராச கேசரி வர்மரான
- 15.உடையார் ஸ்ரீராச தேவர்க்கு யாண்டு
அருஞ்சொற்பொருள்:
- 1.ஸ்வஸ்திஸ்ரீ=மங்களம் உண்டாகட்டும்
- 2.பெருநிலச்செல்வி= பூமிதேவி/நிலமகள்
- 3.மனக்கொள= மனங்கொண்டு
- 4.காந்தளூர்ச்சாலை= சேரநாட்டுக்கடற்கரை ஊர், ஒரு கப்பல் துறைமுகம்.கலம்= கப்பல்;
- "காந்தளூர்ச்சாலையில் உள்ள கபபல்களை அழித்து" என்பது இதன் பொருள்.
- 5.வேங்கைநாடு= கீழைச்சாளுக்கியர்க்குரியது. கோதாவரி, கிருஷ்ணை இருஆறுகளுக்கிடையே உள்ளநாடு.
- 5.கங்கபாடி= மைசூரின் தென்பகுதி
- 6.தடிகைபாடி= கங்கபாடிக்கும் நுளம்பபாடிக்கும் இடையே உள்ளபகுதி
- 6.நுளம்பபாடி= மைசூர் மாநிலத்திலுள்ள சித்தல்துர்க்கம்,பெல்லாரி மாவட்டப்பகுதி.
- 7.குடமலைநாடு= குடகுப்பகுதி
- 7.கொல்லம்= சேரநாட்டு/கேரளாவின் கொல்லம்
- 7.கலிங்கம்=கோதாவரிக்கும் மகாநதிக்கும் இடையே உள்ளநிலப்பகுதி; இன்றைய ஒரிசா மாநிலம்.
- 8.முரட்டொழில்= முரட்டுத்தொழில்
- 8.ஈழமண்டலம்= இன்றைய இலங்கை
- 9.இரட்டபாடி= மராட்டிய மாநிலத்தின் தென்பகுதி
- 10.முந்நீர்ப் பழந்தீவு= மாலத்தீவுகள்/அரபிக்கடல்தீவுகள்
- 11.வென்றி= வெற்றி; தண்டு= சேனை;
- 13.தொழுதக= வணங்கக்கூடிய நிலையில்
- 14.செழியர்= பாண்டியர்
- 14.தேசு= ஒளி (தேஜஸ்)
இம்மெய்க்கீர்த்தியில் குறிக்கப்பெற்ற மன்னன் முதலாம் இராசராசன் ஆவான். கி.பி.985 முதல் கி.பி.1014 வரை சோழநாட்டை ஆண்டவன். இவன் பிறந்தநாள் ஐப்பசிமாதம் சதயநாள் ஆகும். இவன்தந்தை சுந்தரசோழன் என்ற இரண்டாம் பராந்தகசோழன் ஆவான்.தமிழகவரலாற்றிலேயே பொற்காலம் எனப்படும் பிற்காலச்சோழர்காலத்தில் ஆண்ட பெருமன்னன். இவனுடைய மைந்தனே 'கடாரம்' முதலிய கீழ்த்திசை நாடுகளைத் தன்கப்பற்படைகொண்டு வென்ற 'கங்கைகொண்டான்' எனும் சிறப்புப்பெயர் பெற்ற முதலாம் இராசேந்திரன் ஆவான்.இராசராசனே மெய்க்கீர்த்தி முறையை முதன்முதலில் உருவாக்கிய பெருமை உடையவன்;இம்மெய்க்கீர்த்திகள் வரலாற்றுக்கருவூலங்கள் ஆகும். இவனால் தமிழகம் பெருமை அடைந்தது.
- [[]] :[[]] :[[]] :[[]]