முத்தம்/அத்தியாயம் 10
10
அன்று பெளர்ணமி. சில மோகன சக்தியோடு, பூமியை எழில் மிகு வெள்ளிமயப் பனி நிலமாய் மாற்றிக் கொண்டிருந்தது. நிலவின் காந்தம், கடல் அலைகளை மட்டுமல்ல. எண்ணற்ற மனிதரின் உணர்ச்சிகளிலும், ஏறலை இறங்கு அலைகள் காட்டிக் கிளுகிளுப்பு உண்டாக்கியது.
பத்மாவும், ரகுராமனும் சந்திரிகையின் மோகனத்தில் சொக்கி, தம்மை மறந்த லயத்தில் நீந்த முயன்றனர். சூழ்நிலை அழகும், குளிர் இரவும், தனிமையும், நிலவும் அவனையும், அவளையும் உணர்ச்சிப் பரவச மிகுதி நிலைக்கு உந்திக் கொண்டிருந்தன. அவர்கள் பேச்சு இயல்பாக இலக்கியக் காதல் உலகில் வட்டமிட்டு வந்தது. ரோமியோவும், ஜுலியட்டும், லைலாவும் மஜ்னுவும் இன்னும் பல காவிய நாயக, நாயகிகளும் அவர்கள் மனத் திரையில் புகையாகப் படர்ந்து, பேச்சுப் பரப்பில் நிழலாக ஆடித் திரிந்தனர். முழு நிலா தன் வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தது.
பத்மாவுக்கு உள்ளமும், உடலும் என்னவோ போல் வந்தது. தேகம் கதகதத்துக் கொண்டிருந்தது. அவள் பார்வை அவன்மீதே விளையாடியது. அவளை யுணராமலே பெருமூச்சு விட்டாள் அவள் அடிக்கடி. அவன் அழகு, அவன் தோற்றம் - நிலவிலே குளித்து மோகனமாக விளங்கும் அவனே -அவளை வாட்டி வதைப்பதை அவள் உணர்ந்தாள். அவன் உடலைத் தொடவேண்டும்; அவன் கன்னத்தை அன்பாக வருடவேண்டும்; அவனது மினுமினுக் கூந்தலிலே விரல்களை ஓடவிட்டு விளையாடி மகிழவேணும்; அப்படியே அவனை ஒரு முத்தம் இட்டால்தான் என்ன என்ற எழுச்சி பிறந்துகொண்டிருந்தது அவள் உள்ளத்திலே.
அவனுக்கும் அப்படித்தான். இன்ப நிலாச் சோறுபோல் அவள் இருந்தாள். ஆனால் அவளை அவன் தொடமுடியாது. தொடக்கூடாது என்று அவர்களது லட்சியக் கொள்கை தடை விதித்து விட்டது. அவனாக ஒன்றும் செய்யமுடியாது அவளை அணுகக்கூடாது. அவள் பட்டுக் கன்னத்தை வருடினால், அவளேயே கட்டியணைத்து முத்தமிட்டால் அப்பொழுதுதான் இந்த நிலவு வீண்போகாது. ஊம் என்ன பயன்!........ அவனும் எரிக்கும் நெடு மூச்செறிந்தான். தன்னை மறந்து கனவின் இனி மையிலே மயங்கிவிட, கட்டிலில் துவண்டு விழுந்து கண்களை மூடினான்.
அவனையே அவள் பார்த்தாள். உயிரோவியம்போல், பனிவண்ணப் பளிங்குச் சிலைபோல் கிடந்தான் அவன். அவன் முகத்தை, கருங்கூந்தலைத் தொட்டுத் தடவவேண்டும் எனும் ஆசையை அடக்க முடியவில்லை அவளால். ஆசை வெறியாகியது. நிலவும் காற்றும் இரவும் தங்கள் வேலையைச் செய்தன.
அவள் எழுந்து, மெதுவாக-அவன் விழித்து விடக்கூடாது என்று ஜாக்கிரதையாக-நடந்தாள். தொட்டாள். கன்னங்களைத் தொட்டாள். அவன் மேனியைத் தொட்டாள். கூந்தலில் விரல்களை ஓட விட்டாள். கண்டிரா இன்ப உணர்ச்சி-உணர்வின் பெருக்கு-அவள் உள்ளத்தில் ; உடலில்.
அந்த ஸ்பரிசம் அதை உறுதி செய்தது. அவன் உணர்வுத் தீயை மீண்டும் கிளறிவிட்டது. அதிகம் எவ்விடச் செய்தது. அவன் கண்விழித்து அவளையே பார்த்தான். பார்வையால் விழுங்கினான்.
‘பத்மா' என்றான் உணர்ச்சியோடு. அவள் அவனருகில் அமர்ந்தாள். 'ரகு....ரகுராமா!' அவள் முகம் தாழ்ந்தது. தாழ்ந்து..... தாழ்ந்து.... அனல் துண்டங்கள் போன்ற உதடுகள் இலேசாகப் பிரிந்து துடித்து நிற்கத் தாழ்ந்து....
'பத்மு!' என்று ஆவலோடு கரங்களை வளைத்து அவள் கழுத்தில் சேர்த்தான் அவன்.
அவள் முகம் அவன் முகம் சேர்ந்தது. உதடுகள் உதடுகளைக் கூடின. முத்தம்.
முதல் முத்தம் 'இச்' என்று ஒலித்தது. அது உணர்ச்சியின் வெற்றிக்குரல். அறிவு வகுத்த அதீதமான ஆத்மக் காதல்-லட்சியக் கனவுகளுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியின் மெல்லிய ஓசை.
அவள் சிறிது விலகினாள். அவன் உணர்வுடன் அவளைப் புல்லி, கன்னத்தில், கண்களில், மூக்கில், உதடுகளில், நெற்றியில் எங்கும் முத்தமிட்டான். முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தங்களிட்டு.........
இன்ப ஒலிப்பு. வாழ்க்கை மறுமலர்ச்சிக்கு வரவேற்பு கூறும் இனிய மணியோசைபோல ஒலித்தது. 'இச்' 'இச்' எனும் முத்த நாதம் !