முத்தம்/அத்தியாயம் 7

7

ரகுராமன், மறு வாரம் வரட்டும் என்று காத்திருக்கவில்லை. இரண்டு தினங்களுக்குப் பின்னர், திரும்பி வந்தான். அவளுக்கு அவன் வருகை கசக்கவில்லை.

அன்று அவன் மாலை நேரத்தில் வந்தான். ரொம்ப நேரம் வரை பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரது எண்ணங்களும், ஏறக்குறைய ஒரே தடத்தில் ஜோடியாகச் சென்றன. இருவருடைய மனப் பண்பும் ஒத்திருந்தது.

அவர்களுடைய பேச்சில் கலை, இலக்கியம், சமூகப் பிரச்னைகள் எல்லாம் அடிபட்டன. முக்கியமாக, காதல் விவகாரங்களும், அவற்றில் ஈடுபட்டவர்களின் குறுகிய நோக்கமும், களங்கமிலா மனதின் புனிதக் காதலும் இடம் பெற்றன. இருவருக்கும் பரஸ்பரம் கருத்து பரிமாறிக் கொள்வதும், சும்மா பேசிக் கொண்டிருப்பதும் இனிமை மிகுந்த அனுபவமாகத் தோன்றியது. லட்சியமான புனிதக் காதல் அளிக்கும் சுகானுபவம் இதுதான் என எண்ணினாள் பத்மா.

ரகுராமன் மூன்று, நான்கு தினங்களுக்கொரு முறை, அவள் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவனை அவசியம் வந்து போக வேண்டும் என்று வற்புறுத்தினாள் பத்மா. தன் தோழிகளின் கர்வத்தை, அடக்க சந்தர்ப்பம் சுலபமாக, தானாகவே வந்து வாய்த்து விட்டது என நம்பினாள்.

பத்மாவின் தாத்தாவும் வந்து சேர்ந்தார். அவர் வந்தவுடனேயே, அவள் அதிக உற்சாகத்துடன், தனது லட்சிய நண்பன் ரகுராமனைப் பற்றி விரிவாகச் சொன்னாள். மறு நாள் அவன் வந்ததும், அவனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவரும் அவனுடன் தாராளமாகப் பேசி ஆராய்ந்தார். மிகவும் நல்ல பையன் என்று பட்டது.

கிழவர் சிரித்துக் கொண்டார். 'இரண்டும் சரியான அசடுகள், மெத்தப் படித்த அசடுகள். ஆனால் நல்லதுக்குத் தான் கூடியிருக்கின்றன. பத்மாவைப் பற்றி இனிக் கவலையில்லை. அவள் தன் வாழ்வைக் கெடுத்துக் கொள்ள மாட்டாள். அவள் வாழ்க்கை அவள் செயலுக்கு மீறிப்பாழாகி விடவும் செய்யாது’ என்று புரிந்தது அவருக்கு.

பத்மா இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. அவனும் அப்படித்தான். இருவர் உணர்வையும் மூடியிருக்கிற லட்சிய-அறிவுப் பனி சீக்கிரமே விலகிவிடும். அப்புறம் இருவருமே சரியான துணையாகி விடுவார்கள். இதை நினைக்கவும் 'நல்ல வேடிக்கை தான் இது. நாமும் ஒன்றும் தெரியாதவன் போல் பார்த்துக்கொண்டே யிருக்கலாம்' என்று தீர்மானித்தார். அத்துடன் விளையாட்டை துரித வினையாக்குவதற்காக 'நீங்கள் தினம் சாயங்காலவேளைகளில் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கும்பொழுதுபோகவேண்டும். பத்மாவும் தனியாகத் தான் இருக்கிறாள். உங்கள் பேச்சு எனக்கு நல்ல விருந்தாக இருக்கிறது. தினந்தோறும் சாயங்காலம் இங்கு வாருங்களேன்' என்றார்.

பத்மாவுக்கு இந்த வேண்டுகோள் அதிக மகிழ்வு தந்தது. ரகுராமனுக்கும் பிடித்திருந்தது. -

கிழவர் தனிமையில் சிரித்தார். பொங்கும் மகிழ்வை அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரித்தார். ‘மற்றவர்கள் சொன்னால் பத்மா கேட்கமாட்டாள். வேண்டுமென்றே முரட்டுப் பிடிவாதம் சாதிப்பாள். தானாகவே அத்துப்டி காரியங்கள் நடந்தால் தான் அவளுக்குப் புரியும் என்று தனக்குத் தானே உபதேசித்தார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=முத்தம்/அத்தியாயம்_7&oldid=1663357" இலிருந்து மீள்விக்கப்பட்டது