முல்லைக்காடு/அண்ணியை ஏசல்
அண்ணியை ஏசல்
(கத்தாழம் பழமே உனைநத்தினேன் தினமே என்ற மெட்டு)
அண்ணி வந்தார்கள்—எங்கள்
அண்ணாவுக்காக—நல்ல
(அண்)
கண்ணாலம் பண்ணியாச்சு!
கழுத்தில் தாலி கட்டியாச்சு!
பிண்ணாக்குச் சேலை பிழியப்
பெரிய குளமும் சேறாய்ப் போச்சு!
(அண்)
எட்டிப் பிடித்திடலாம்
இரண்டங்குலம் ஜடைநுனிதான்
பட்டி வெள்ளாட்டு வாலைப்
போல மேலே பார்க்கும்படி!
நத்தைப்பல் சொட்டைமூக்கு
நாவற்பழ மேனியிலே
கத்தாழை நாற்றம் எங்கள்
கழுத்தை நெட்டித் தள்ளிடுதே! (அண்)
அழுக்குச் சுமந்துசெல்லும்
அழகுவெள்ளை முகக்குதிரை
வழுக்காது நடப்பதுபோல்
வாய்த்தநடை என்ன சொல்வேன்!
(அண்)
கோல்போல் இடுப்புக்கொரு
கோல ஒட்டியாணம்செய்யப்
பேல்கட்டு வாங்கவேண்டும்
பிரித்துத் தகட்டை எடுக்க வேணும்!
(அண்)
பக்குவமாய்ப் பேசும்போது
பாய்ந்துவரும் குரல்ஒலிதான்,
செக்காடும் சங்கிதமே
செவியில்வந்து துளைத்திடுதே!
(அண்)