முல்லைக்காடு/தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை


தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை

காலை விழித்தெழுந்தாள் கைம்மலரால் கண்துடைத்தாள்!
கோல மலர்கமழும் கூந்தல் திருத்தினாள்.
காந்தி முகம்கழுவிக் கைவிளக்கை ஏற்றி,மிகு
சாந்த உரைபேசிப் பிள்ளைகளைத் தானெழுப்பி,
வீணை எடுத்தாள்! விளைத்தாள் அமுதத்தை!
ஆணழகன் தன்நாதன் அவ்வமுதம் கேட்டெழுந்தான்!
காதற் கணவன், கனியன்புப் பிள்ளைகள்
சோதித் தமிழ்க்கவிதை சுருதியொடு கலக்கப்
பாடினார்! பாடிப் பனிக்காலைப் போதுக்குச்
சூடிஅழைக்கச், சுடரும் கிழக்கினிலே
செம்மை ஒளியிற் சிரித்துத் தலைநிமிர்ந்தான்!
அம்மை குடித்தனத்தை ஆளும் அரசியிவள்
பிள்ளைகளைக் கூட்டிப்போய்ப் பீடத்தி லேயமைத்துப்
பள்ளிக்கு வேண்டியநற் பாடங்கள் சொல்லிவிட்டு,
நல்ல கதையுரைத்து ஞாலப் பதுமைகளைச்
சொல்லி மகிழ்வித்தாள். தோயன்பு நாதன்முதல்
எல்லாரும் இன்ப உணவுண்டார். மக்களெலாம்
கல்விச்சாலை செல்லக் கட்டும் உடைப்பொத்தலெல்லாம்
இல்லக் கிழத்தி எழில் தையற் காரியாய்த்
தைத்துடுத்தி விட்டாள்; தனது கணவனிடம்
அத்தினத்தில் ஆனபல ஆலோசனை பேசி

நாதன் வெளிச்செல்ல நங்கை இனிதிருந்த
போதில், வெளியூர்ப் புறத்தி லிருந்து தன்
வீட்டுக்கு வந்த விருந்தாளி, வீதியிலே
போட்டிருந்த கல்தடுக்கப் பொத்தென்று வீழ்ந்ததனால்
மண்டை யுடைந்துவந்தான்; வஞ்சி இரக்கத்தால்
அண்டையிலே கட்டில் அதில்வளர்த்தி நற்சிகிச்சை
தக்கபடி புரிந்தாள். தன்நாதன் வீடுவந்தான்.
ஒக்க இருந்தான். உடலும் நலமாச்சு.
நல்ல சுகாதாரம் நாடிச் சமைத்திருந்த
பல்லுணவும் இட்டாள். பகல் கணக்கும் தான்எழுதிச்
சித்திரத்தில் மக்கள் திருந்தப் படமெழுதி
வைத்திருந்த நூலை மணவாள னோடிருந்து
வாசித்தாள். நல்ல வடிவழகன் பேச்சமுதை
ஆசித்தாள், இன்பம் அடைந்தாள். சிறிதயர்ந்தாள்.
பக்கத்து வீட்டுப் பருவதத்தாள் தான்வந்து
சொக்கர் திருவிழாச் சோபிதத்தைச் சொல்லி,
வருவாய் நாம்போய் வருவோம்; மாலைதிரும்பி
வருவோம் என்றாள்! இந்த வார்த்தைகளைக் கேட்ட
இல்லக் கிழத்தியவள் சும்மா இருந்துவிட்டாள்.
நல்ல விழாவைத் தன்நாவால் மறுப்பாளா?
வந்த விருந்தாளி பருவதததின் வார்த்தைக்குத்
தந்தபதில் இதுவாம்:— “தையலரே கேளுங்கள்!
சங்கீதக் கோகிலத்தைத்— தாவும் கிளையினின்று
அங்கு விழாவுக் கழைத்தால் வருவதுண்டோ?

மக்களுக்கு வாத்தியென வாய்ந்த மருக்கொழுந்தைக்
கக்கும் அனலில் கசக்க அழைப்பீரோ?
தையற்றொழில் அன்னம் தாமரைப்பூ வைமறந்து
வெய்யிற் சுரத்திடையே வீழ்த்த அழைப்பீரோ?
வீட்டுக் கணக்கெழுதும் வித்தகத்தை அவ்விழவில்
போட்டுக் குலைக்கப் பொறாமை உமக்கமோ?
காவியங்கள் கற்றுக் கவிசெய்து நல்லநல்ல
ஓவியங்கள் தீட்டும் உயர்புலமைத் தேவியினை
வம்புக் கிழுக்க வசமாமோ சொல்லிடுவீர்?
அம்மையீர், நல்ல அறிவும் திருவுமுறும்
சீமாட்டி தன்னைத், திருவிளக்கைக் கல்வியெனும்
மாமேட்டில் வீற்றிருக்கும் மங்கைக் கரசிதனைச்
சொந்தக் கணவனுடன் சேய்கள் தொடர்பறவே
எந்நிமிஷமும் பிரிதல் ஏற்றதல்ல என்றுரைப்பேன்.
நிர்மலமாங் கல்வி நிறைந்தாள் இருந்தகுடி
சர்வகலா சாலை எனத்தகுமே! அவ்வம்மை
ஊமைஎன இருந்தாள் உங்கள் அழைப்புக்கே!
தீமை புரியாதீர்” என்று தெரிவித்தான்!
இல்லக் கிழத்தி எதிரிருந்த மங்கைதனை
முல்லை மலர்ந்த சிரித்த முகங்காட்டி,
தோழி, விழாவுக் கழைத்தாய் அதுவேண்டாம்;
வாழி உலகென்றாள் வாய்ந்து.