முல்லைக்காடு/நல்லினஞ் சேர்தல்
நல்லினஞ் சேர்தல்
(பக்ஷமிருக்கவேணும் மன்னனே எ-மெ)
சேரிடம் அறிந்துசேர் எந்நாளும்—மைந்தா
தீயரை அணுகிடிற் பழி மூளும்!
சீரிய ஒழுக்கம்
சிறந்தநூற் பழக்கம்
ஆரிடம் உள்ளதோ அன்னவரிடமே—சினேகம்
ஆகுதல் அல்லவோடா உன் கடமை!
மண்ணின்குணம் அங்குள்ள நீருக்குண்டு—மைந்தா
மாலையில் மலர்மணம் நாருக்குண்டு.
திண்ணம் பன்றியொடும்
சேர்ந்த கன்றும் கெடும்!
கண்செய்த பாவம் தீயர் தமைக்காண்டல்—மைந்தா
கை செய்த புண்யம் நல்லார் அடி தீண்டல்
சடுதியிலே துஷ்டர் சகவாசம்—பிராமண
சங்கடம் உணர் இந்த உபதேசம்.
தடையிதில் ஏது
தாய் எனக் கோது?
சுடுநெருப் பானவரின் குணம் தெரிந்து—மைந்தா,
சுப்புரத்தினம் சொல்லும் அமுதருந்து!
(சேரிடம்)