முல்லைக்காடு/பிள்ளைக்கு நீதி

பிள்ளைக்கு நீதி

(ஆனந்தக் களிப்பு மெட்டு)

சோம்பிக் கிடப்பது தீமை—நல்ல
தொண்டுசெயாது கிடப்பவன் ஆமை!
தேம்பி அழும் பிள்ளைபோலே—பிறர்
தீமையை அஞ்சி நடப்பவன் ஊமை!

புதுமையிலே விரைந்தோடு—ஒன்று
போனவழிச் செல்லும் மந்தையில் ஆடு!
எதிலும் நிசத்தினைத் தேடு—பொய்
எவர்சொன்ன போதிலும் நீ தள்ளிப்போடு.

தேகத்திலே வலி.வேற்று—உன்
சித்தத்திலே வரும் அச்சத்தை மாற்று
ஊகத்திலே செயல் ஆற்று!—தினம்
உன்னருமைத் தமிழ் அன்னையைப் போற்று.

பசிவந்த போதுண வுண்ணு—நீ
பாடிடும் பாட்டினி லேசுவை நண்ணு!
வசித்திடும் நாட்டினை எண்ணு—மிக
வறியவர்க்காம் உபகாரங்கள் பண்ணு.

பொய்யுரைப் போன் பயங்காளி—பிறர்
பூமி சுரண்டிடு வோன் பெருச்சாளி
வையக மக்கள் எல்லோரும்—நலம்
வாய்ந்திட எண்ணிடுவோன் அறிவாளி.