முஸ்லீம்களும் தமிழகமும்/இணைப்பும் பிணைப்பும்


20

இணைப்பும் பிணைப்பும்

அரபு நாடுகளுடனான தமிழரது வாணிகம், இந்த வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கியது. வணிகர்களாக தமிழகம் வந்த அரேபிய இஸ்லாமியர் நாளடைவில் தமிழக இஸ்லாமியராக மாறியது, தமிழ்ச் சமுதாயத்தில் தலைமுறை தலைமுறையாக பேணப்பட்டு வந்த பண்பாடு, நாகரீகம் ஆகிய நிலைகளில் புதிய கலப்புகளும் வார்ப்புகளும் நிகழ்வதற்கு நெம்புகோலாக உதவின. தமிழக, கலை, இலக்கியம், வாழ்க்கை இயல் சமய ஒழுகலாறுகளில் அவை காலூன்றி பரிணமித்து பிரதிபலித்து நின்றன.

சோழர் ஆட்சிக் காலத்தில் நாகையில் புத்த விகாரமொன்று நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதை ஆனை மங்கலச் செப்பேடு விவரிக்கிறது. காலப்போக்கில் எத்துணையோ விதமான மதக் கோட்பாடுகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மன்னர்களால் மதிக்கப்பட்டாலும், இஸ்லாம் மதத்திற்கு ஏற்பட்ட சூழ்நிலையும் ஆதரவும், வேறு எந்த மதத்திற்கும் ஏற்படவில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இதயபூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சிலரானாலும், இஸ்லாமிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டு எதிர்ப்பு அணியில் சேராதவர் பலர். இஸ்லாத்திற்கு ஆதரவு திரட்ட அனல்வாதம், புனல்வாதம் போன்ற நேரிடையான கொள்கை விளக்கங்களுக்கு அவசியம் ஏற்படவில்லை. இதன் காரணமாக, தமிழ் மண்ணில் ஆழமாக வேரோடிய இந்த புதிய வித்திற்கு தமிழ்ச் சமுதாயம் அனுகூலமான விளைநிலமாகவே விளங்கியது.

தங்கள் வாழ்க்கை நெறியை வல்லவன் வகுத்தருளிய திரு மறையின் படி வகுத்துக் கொண்டாலும், தாங்கள் வாழும் சூழ்நிலை, சமூக அமைப்பு காரணமாக தங்களுக்கு இல்லாத பழக்க வழக்கங்களை வெறுத்து ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவைகளை அவர்கள் பொறுத்துக் கொள்ளவேண்டியது இயல்பாகிவிட்டது. வரலாற்று நிகழ்ச்சிகள் சில இதனை வலியுறுத்துகின்றன. பாண்டியன் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1262) ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரையில் உள்ள தீர்த்தாண்ட தானத்துக் கல்வெட்டில் “... ... ... .... இவ்வூரில் இருக்கிற அஞ்சு வண்ணமும் மணிக் கிராமத்தாரும். ஆரியரில் சாமந்த பண்டசாலையும் பட்டாரியரும் தோயா வத்திரச் செட்டிகளும் தென்னிலங்கை வலஞ்சியரும் கைக்கோளரும் தூசுவரும், வாணியரும், நீண்ட கரையாருங்கூடி .... ... கோயில் திருமுன்னிலே நிறைவுறக் கூடியிருந்து .... ...." அந்த ஊர் திருக்கோவிலில் திருப்பணி பற்றிக் கலந்து முடிவு எடுத்தனர்.[1] இந்த கலந்துரையாடலுக்கும் ஒரு மித்த முடிவிற்கும் இஸ்லாமியர்களான அஞ்சு வண்ணத்தவரும் கட்டுப்பட்டதாகத் தெரிகிறது. இது பதின்மூன்றாம் நூற்றாண்டில் மட்டுமல்ல. தொடர்ந்து பிந்தைய நூற்றாண்டுகளிலும் தமிழக இஸ்லாமியர் தாங்கள் வாழும் சமுதாயத்தை சேர்ந்த இந்து சகோதரர்களின் மத உணர்வுகளை மதித்தவர்களாக சமயப் பொறையுடன் வாழ்ந்தனர், என்பதற்கு இன்னும் இரண்டு கல்வெட்டுச் செய்திகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.

முதலாவது, மதுரையில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி நடைபெற்றபொழுது கி பி. 1719 ல் நிகழ்ந்த சம்பவம். மதுரை மாவட்டம் வெற்றிலைக்குண்டு கிராமத்தில் ஆலய மொன்றைப் பராமரிப்பது சம்பந்தமாக அந்த ஊரின் குடிகளான கோமுட்டி, கவண்டன், கைக்கோளன், நாடார், வாணியர், செட்டி, நத்தமடை, இஸ்லாமியர் ஆகிய எட்டு சமூகங்களின் பிரதிநிதிகளும் கூடிய கூட்டத்தில் தங்களது வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு ஈவுத் தொகையை அந்த தர்மத்திற்கு அளிக்க ஒவ்வொரு சமூகத்தினரும் உடன்பட்டதாலும், அந்த எட்டு சமூகப் பிரதிநிதிகளில் இஸ்லாமியரது பிரதிநிதியாக லெவை ராவுத்தன் என்பவரும் கலந்து கொண்டு இணக்கம் தெரிவித்திருப்பது தெரியவருகிறது.[2]

இன்னொரு நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை முஸ்லீம்களைப் பற்றியதாகும். அவர்கள் தாங்கள் வாணிகம் செய்யும் ஊர்களில், குற்றால நாதர் நித்திய பூசைக்கட்டளை வகையறாவுக்கு மகமைப் பணம் கொடுக்க கி.பி. 1788ல் இணங்கி எழுதிய பட்டயமாகும்.[3] இதோ அந்தப் பட்டய வாசகம்.

““சாலிவாகன சகாப்தம் 1710 ம் வருடம் செல்லா நின்ற கொல்லம் 964 ஆண்டு கீலக வருடம் கார்த்திகை மாதம் 25 ம் தேதி குற்றாலநாத சுவாமி கட்டளைக்கு அசரது வாவா சாயபு அகமது பேட்டை மணியம் இஸ்மாயில் ராவுத்தன் முதலான பலரும் எழுதிக் கொடுத்தபடி பட்டயமாவது, சுவாமிக்கு நித்திய விழா பூஜையில் கட்டளை வைத்துவரும்படி படித்தரப் படிக்கி, நடத்திவரும் வகைக்கு, நாங்கள் எல்லோரும் வகை வைத்துக் கொடுத்து ஏறு காற்று, இறங்கு காற்று வாகைச்சை ஒன்றுக்கு, மருவுருட் சட்டை ஒன்றுக்கு கால் மாகாணிப் பணம் வீதமும் நடையொறுக்கு மாகாணி பணம் வீதமும் இன்னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப்படிக்கு திருநெல்வேலி காந்திமதியம்மன் சிறுகால மகிமை காந்திமதி மகிமைப் படிக்கு தென்காசி ஆமது பேட்டையில் உள்ள வனிதசேகர செங்கோட்டை, புலியறை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப் பேட்டை, சுரண்டைச் சந்தை, முதலான துறையிலும் மகமை வைத்துக் கொடுத்தபடியினாலே மாசம் மாசம் உள்ள பணத்தை வாணிபம் கணக்குப் பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை என்றென்றைக்கும் நடத்தி வருவோமாகவும் ... ...”” என முடிவு பெறுகிறது அகமது பேட்டை இஸ்லாமியர் இணக்கம் தெரிவித்துள்ள அந்தப்பட்டயம்.[4]

இத்தகைய சமயப் பொறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாகவும் பிற அரசியல் ஊக்குவிப்புகள் காரணமாகவும் அன்றைய தமிழகத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களுக்கு அரசியலார் பலவித சலுகைகளை அளித்தனர். அவைகளில் சில செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. மதுரையில் இரண்டாவது பாண்டியப் பேரரசின் கர்த்தாவாக விளங்கிய சடையவர்மன் சுந்தரபாண்டியன் தனது எட்டாவது ஆட்சியாண்டில் மதுரைக்கு கிழக்கே உள்ள கீட்செம்பி நாட்டின் பெளத்திர மாணிக்கப் பட்டினத்து கீழ்பால் உள்ள சோனக சாமந்தப்பள்ளிக்கு ஆம்புத்துார் முதலான ஊர்களை இறையிலியாக ஆணையிட்டு உதவினான்.[5] அடுத்து, மதுரையில் அரியணை ஏறிய சுந்தரபாண்டியன் மதுரை மாநகர இஸ்லாமியப் பிரதிநிதியான ஹாஜி தாஜுத்தின் அவர்களை காஜியாக அங்கீகரித்ததுடன் அவர்களது குடியேற்றப் பகுதியில் (இன்றைய மதுரை காஜிமார் தெரு) அந்த சிறுபான்மை மக்களது வழிபாட்டிற்கு தொழுகைப்பள்ளி யொன்றையும் நிர்மாணிக்க உதவினான். மேலும் அந்தப் பள்ளியின் பராமரிப்புச் செலவிற்காக விரகனூர், புளியங்குளம், கிராமத்தையும் முற்றூட்டாக வழங்கி உத்திரவிட்டான்.[6] இந்தப் பாண்டியரைப் போன்று சேர மன்னனான உதயமார்த்தாண்டனும், தமிழக இஸ்லாமியர்களுக்கு உதவிய செய்தியும், உள்ளது. அவர் காயல் பட்டினத்திற்கு வருகை தந்தான். அப்பொழுது காயல்துறை சேரநாட்டின் ஆட்சி வரம்பிற்குள் அமைந்திருந்தது. அந்த ஊரின் அண்மையில் உள்ள காட்டு மக்தூம் பள்ளிக்கும் வருகை தந்த விபரம் அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. அதன் வாசகப்படி, அந்தப்பள்ளி அன்று முதல் உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி என அழைக்கப்பட்டதுடன், அந்த பள்ளியின் காதியாரன அபுபக்கரும் உதயமார்த்தாண்ட காதியார் என அழைக்கப்பட்டார். அந்தபள்ளியின் பராமரிப்பிற்காக சோனாடு கொண்டான் பட்டினம் என வழங்கப்பட்ட அந்த காயல்துறையில் ஏற்றுமதி, இறக்குமதி கொள்ளும் பொருளுக்கு, நான்கு பணத்திற்கு கால் பணம் வரியாக வசூலிக்கும்படி சேரமன்னது ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.[7] இது நிகழ்ந்தது, கி.பி. 1387ல்

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் செம்பி நாட்டையாண்ட சேதுபதிகள் தமிழக இஸ்லாமியர்களது தொழுகைப்பள்ளி, தர்ஹா, ஆகியவைகளுக்கு பல நிலக்கொடைகளை வழங்கினர். அந்த அறக்கொடைகள் தொடர்ந்து தற்பொழுதும் பயன்பட்டு வருகின்றன. அதன் விபரங்களை சேதுபதிகளின் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் விளக்குகின்றன. மறவர் சீமையின் மாண்பை உயர்த்திய சேது மன்னர்களில் சிறப்புற்று விளங்கிய திருமலை சேதுபதி, தமது நாட்டில் குணங்குடி கிராமத்தில் (இராம. மாவட்டம் திருவாடானை வட்டம்) அமைந்துள்ள ஸையது முகம்மது புஹாரி (வலி) அவர்களது தர்ஹா (அடக்கவிடம்) பராமரிப்பிற்காக கி.பி. 1675இல் நிலகொடை வழங்கினார்.[8] அவரை அடுத்து அரியணையேறிய கிழவன் ரகுநாத சேதுபதி காரேந்தல் (காமராசர் மாவட்டம் திருச்சுழியல் வட்டம்) மீராசாகிப் பள்ளிக்கு விளைநிலங்களை விட்டுக் கொடுத்தார். மற்றொரு சேது மன்னரான முத்துக்குமார விஜயரகுநாத சேதுபதி கி.பி. 1744ல் குணங்குடி பள்ளிவாசலுக்கு மேலும் பல நிலங்களை வழங்கினார்.[9] இதே சேது மன்னர் தமது சீமையில் உள்ள ஏனைய இஸ்லாமியரது புனித இடங்களான இராமேஸ்வரம் ஆபில் காபில் தர்ஹா, இராமநாதபுரம் ஈசா சாகிபு தர்ஹா, ஏறுபதி சுல்தான் சையது இபுராகிம் (வலி) தர்ஹா ஆகிய நிறுவனங்களுக்கு முறையே பக்கிரி புதுக்குளம், (இராம. வட்டம்) கிழவனேரி, ஏறுபதி, மாயாகுளம் ஆகிய கிராமங்களை (முதுகுளத்துார் வட்டம்) முற்றூட்டாக வழங்கியுள்ள செய்திகள், அவரது தான சாசனங்களில் வரையப்பட்டுள்ளன.[10] மேலும், இவர் கமுதி வட்டம் பூலாங்கால் பள்ளிவாசலுக்கும், இராமநாதபுரம் வட்டம் நாரணமங்கலம் சுல்தான் பள்ளி வாசலுக்கும், பல ஏக்கர் விளைநிலங்களை வழங்கி பள்ளிவாசல் தர்மத்திற்கு உதவி இருக்கிறார்.[11] இவரை அடியொற்றி இவரது வழியினரான முத்து விஜயரகுநாத சேதுபதியும் பூலாங்கால் பள்ளி வாசலுக்கு நிலக்கொடைகளை வழங்கி உள்ளார்.

இவர்களைப்போன்று, தமிழக இஸ்லாமியரிடம் பரிவும் பாசமுங்கொண்ட நாயக்கமன்னர்களும் அவர்களது மத உணர்வுகளை மதித்து அறக்கொடைகள் வழங்கினார்கள். கி.பி. 1585ல் தஞ்சையை ஆண்ட செவப்ப நாயக்கர் அந்த நகரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசரது தர்ஹாவிற்கு வருகை தருகிற இஸ்லாமிய துறவிகளது பராமரிப்பிற்காக பத்து ஏக்கர் பரப்பு காணியை அன்பளிப்பாக வழங்கினார்.[12] திருநெல்வேலி நகரில் உள்ள பள்ளியை பராமரிக்க கி.பி. 1692ல் மதுரை நாயக்க மன்னன் விஜயரங்க சொக்கநாதன் நிலைக்கொடை அளித்தான்.[13] இந்த மன்னரது வழி வந்த நாயக்க அரசிகளான ராணி மங்கம்மாளும், ராணி மீனாட்சியும் கி.பி.1701லும் கி.பி.1733 லும் மகான் நத்ஹர் (வலி) பாபாவின் திருச்சி தர்ஹா பராமரிப்பிற்கு சில கிராமங்களை இறையிலியாக வழங்கினார்கள்.[14] திருச்சியையடுத்த அம்மாபட்டி ஜமீன்தார், தமது ஜமீனில் இஸ்லாமியர்கள் தங்கி வாழ்வதற்கென ஒரு கிராமத்தை 17வது நூற்றாண்டில் தானமாக வழங்கினார். அந்த ஊர், இன்று ஜமீன் ஆத்துார் என இப்பொழுது சிறந்து விளங்குகிறது.[15]

இவர்களது முன்னுதாரணத்தைப் பின்பற்றி, தென்பாண்டிச் சீமையில் உள்ள ஜமீன்தார்களும், சிறு பாளையக்காரர்களும். இஸ்லாமியர், ஆங்காங்கு, மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தொடர்ந்து வாழ்ந்து வரவும் இவர்களது, உழைப்பு, தோழமை, தொண்டு, ஆன்மீக வழிகாட்டுதல்கள், தமிழ் மக்களுக்குப் பயன்படும் வகையிலும், தங்களது அன்பளிப்புகளை நிலக்கொடைகளாக வழங்கினர். குறிப்பாக கி.பி. 1739 இல் மதுரை வட்டத்தில் காமாட்சி நாயக்கர் என்பவரும்[16] கி.பி. 1776ல் ஊத்துமலை சின்ன நயினாத்தேவர் என்ற மருதப்பத்தேவரும்[17] கி. பி. 1784ல் சிவகங்கை முத்த வடுக நாததேவரும்[18] இஸ்லாமியரது பள்ளிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் பல நிலக்கொடைகள் வழங்கிய செய்திகள் உள. இவை அனைத்திலும் சிறப்பான செய்தி, தமிழகத்தில் சமய ஒருமைப் பாட்டில் ஒரு சிறந்த சின்னமாக விளங்கும் நாகூர் ஆண்டகையின் தர்ஹாவில் கி.பி. 1753 ல் தஞ்சை மன்னன் துல்ஜாஜி, பல திருப்பணிகள் செய்ததுடன் அந்த தர்ஹாவின் பராமரிப்பிற்காக பதினைந்து கிராமங்களை வழங்கி இருப்பதாகும்.[19] கமுதி பள்ளிவாசளை நிருமாணிக்க 200 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லுத்தேவர் என்பவர் 78 ஏக்கர் நிலக்கொடை வழங்கினார். இவை போன்று தமிழ்ச் சமுதாயத்தில், தமிழக இஸ்லாமியர்களுக்கும். மற்றவர்களுக்கும் இடையில் நிலவிய சமூக ஒற்றுமை, செளஜன்யம், தொடர்ந்ததற்கான பல சான்றுகள் காலத்தால் அழிக்கப்பட்டு விட்டதால் அவை நமக்கு கிடைக்கவில்லை.

இங்ஙனம், தமிழ்ச் சமுதாயத்தில் இஸ்லாமியர்களது ஆத்மீக தேவைகளை மதித்து உதவிய இந்து சகோதரர்களுக்கு, தங்களால் இயன்ற வகையில் இஸ்லாமியர்களும் ஒத்துழைப்பும் உதவியும், நல்கிய செய்திகளை ஒரு சில ஆவணங்கள் அறிவிக்கின்றன. காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகளையும் அவரது காஞ்சி மடத்தைப் பற்றியும் அறியாதார் இருக்க முடியாது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இம்மடத்தில் பூசையும், அன்னதானமும் நடைபெறுவதற்காக தில்லி பேரரசர் பகதுர்ஷா 115 வராகன் தானம் வழங்கி கி.பி. 1710ல் ஆனையொன்று பிறப்பித்தார். செங்கை மாவட்டம் மேல்பாக்கம் கிராம வருவாயிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பாரசீக தெலுங்கு சமஸ்கிருத வாசகங்களுடைய அந்த செப்பேடு உள்ளது.[20] அவைகளில் இன்னொன்று சேலம் மாவட்டம் மின்னக்கல் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ருக்மினி சமேத கோபால கிருஷ்ணன் ஆலயத்திற்கு, தமிழ் நாட்டின் வடமேற்குப் பகுதியை சில ஆண்டுகள் தமது ஆட்சிக்குள் வைத்திருந்த மைசூர் மன்னர் திப்புசுல்தான், ஆண்டுதோறும் 575 வராகன் மான்யம் வழங்க ஏற்பாடு செய்ததாகும். அத்துடன் கோயம்புத்து ருக்கு அருகில் உள்ள குறிச்சி என்ற ஊரில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயிலுக்கும் அவர் பல மானியங்களை வழங்கி உள்ளார்.[21] மேலும், அவர் பூரீரங்கப்பட்டினம், பெருமாள் கோயில், சிருங்கேரி சாரதா பீட மடம், குருவாயூர் கிருஷ்ணன் கோயில், ஆகிய சமய சார்புடைய நிறுவனங்களுக்கு அளித்துள்ள தானங் களை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமுடையதாகவும்.[22] அவையனைத்தையும் ஒன்று சேர இணைத்துச் சிந்தித்தால், திப்பு சுல்தானைப் பற்றி தமிழ்நாட்டில் உலவுகின்ற ஒரு சில கட்டுக் கதைகளை சுட்டெரித்துவிடும் சரித்திரச் சான்றுகள் இவையென்பதை உணரமுடியும். அத்துடன் சிறந்த பேரரறிஞரும் விடுதலை வீரருமான அந்த மன்னனை, மக்கள் மத்தியில் இழிவு படுத்துவதற்காக அவரது பரம வைரிகளான வெள்ளைப் பரங்கிகள் திரித்துவிட்ட பொய்மைச் சரடுகள் அவை என்பதும் புலப்படும்.

தில்லிப் பேரரசரது பிரதிநிதியாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஆற்காடு நவாப்களில் ஒருவரான அன்வர்திகான், திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஆலயத்தில் சுவாமி திருமேனி ஒன்றைச் செய்வித்து உதவினார். இன்னும் அந்ததிருமேனி ஆற்காட்டு நவாப்பை நினைவூட்டும் வகையில் “அனவரநாதன்" என வழங்கப்பட்டு வருகிறது.[23] இதனைப் போன்ற திருவுத்திர கோசமங்கை திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தென்னாடுடைய சிவனுக்கு, திருவாட்சி இல்லாத குறையை நீக்கி, மதுரை முகம்மது இசுமாயில் என்ற இஸ்லாமிய குடிமகன் எட்டு அடி உயர வெங்கல திருவாட்சியை தயாரித்து வழங்கி இருக்கிறார்.[24] அந்த ஆலயத்தில் பழமையான சிறப்புப் பொருட்களில் ஒன்றாக அந்த திருவாட்சி இன்றும் காட்சி அளித்துக் கொண்டு விளங்குகிறது. இத்தகைய சமய பேதங்கள் நீங்கிய நட்புச் சூழ்நிலையில் தமிழக இஸ்லாமியர்கள், வாழ்ந்த வாழ்க்கை நிகழ்ச்சி சில வற்றை வரலாறு நமக்கு நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது. கி.பி. 1311 ல் தென்னாட்டு அரசியலில் குழப்பம் நிலவியது. பாண்டியப் பேரரசு தளர்ந்து மெலிந்த சிம்மத்தைப் போன்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது. தாயாதிச் சண்டைகள் குடுபிடித்து, தங்களது கட்சிக்கு வெளி உதவியை நாடிக் கொண்டிருந்த நேரம், அப்பொழுது தில்லி பேரரசரின் தளபதி மாலிக் நாயிப் கர்நாடகத்தில் துவார சமுத்திரத்தில் ஹொய்சாள மன்னருடன் போரில் ஈடுபட்டிருந்தான். மதுரை அரசு கட்டிலைப் பெற சுந்தரபாண்டியன் தில்லியில் அலாவுதின் அவைக்குச் சென்று உதவி கோரினான். சுந்தரபாண்டியனுக்கு உதவ தில்லி தளபதிக்கு கட்டளை அனுப்பப்பட்டது. தில்லிப் படைகள் மதுரை நோக்கிப் புறப்பட்டன. வழியில் கண்ணனுார், கொப்பத்தில் வீரபாண்டியன் படைகளை, தில்லி தளபதி மாலிக் கபூர் போரில் சந்தித்தான். தோல்வியுற்றான். கைது செய்யப் பட்ட வீரபாண்டியனது வீரர்கள், தில்லி தளபதி முன்பு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் பெரும் அளவில் தமிழக இஸ்லாமியர்களும் இருப்பதை அறிய தளபதிக்கு கோபம் பொங்கி வழிந்தது. தான் ஒரு முஸ்லீம் என்பதை அறிந்தும் தனக்கு உதவாமல், தனக்கு எதிராக, இந்து மன்னனான வீரபாண்டியனுக்காக போரிட்ட “இனத்துரோகிகள்” என அவர்களைக்கருதி கொன்று விடும்படி உத்தரவிட்டான். அந்த வீரர்களும், தாங்கள் எதிரியின் வாளால் மடியவிருப்பது உறுதி என உணர்ந்து, எஞ்சிய சில வினாடிகளையும் இறைவனது சிந்தனையில் கழிக்க இஸ்லாமிய தாரக மந்திரத்தை (லா இலாஹ இல்லல்லாஹீ) முணு முணுத்தனர். இறைவன் ஒருவன் என்ற அந்த ஏகத்துவ முழக்கம், தளபதியின் உள்ளத்தில் அச்சத்தை ஊட்டியது. இஸ்லாமியன் ஒருவன் பிறிதொரு இஸ்லாமியனை எதிரியாகக் கருதாமல் உடன்பிறந்த சகோதரனாகக் கருதவேண்டும் என்ற சமய உணர்வு மேலிட அவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்து ஆணையிட்டான். இதனை நேரில் கண்ட வரலாற்று ஆசிரியர் “அமிர்குஸ்ரு” வீர பாண்டியனுக்காகப் போரிட்ட தமிழக இஸ்லாமியர் தோற்றத்தில் வேறு பட்டவர்களாக இருந்தாலும், இஸ்லாத்தினின்றும் மாறுபட்டவர்களாக இல்லாததாலும் இஸ்லாமிய தாரக மந்திரத்தை முழக்கியதாலும் உயிர்பிழைத்தனர் என குறிப்பிட்டுள்ளார்.[25]

பதினாறாவது நூற்றாண்டின் துவக்கத்தில் கிழக்கு கடற்கரையில் போர்த்துகேசியரின் செல்வாக்கும் பிடிப்பும் வலுத்திருந்தது. காரணம் அப்பொழுது மதுரையை மையமாகக் கொண்டிருந்த விஜயநகர நாயக்கர் பிரதிநிதிகள் கடல் கரைப் பகுதிகளில் கவனம் செலுத்தவில்லை. கப்பற்படை அவர்களிடம் இல்லாததும் அதற்கு முக்கியமானதொரு காரணமாகும். கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் தங்கள் சமயப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போர்த்துகேசியர், வேதாளையில் ஒரு மண் கோட்டையொன்றைக் கட்டி அங்கு ஒரு படையணியை நிலை கொள்ளுமாறு செய்தனர். அத்துடன் அதற்கு அண்மையில் இராமேஸ்வரம் சாலையில் ஒரு அகழியையும் தோண்டி, இராமேசுவரம் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியவுடன் அவர்களிடம் சங்கம் வசூலித்து வந்தனர். அதனால் பயணிகளுக்கு தொந்தரவு மற்றும் இராமேசுவரத்தில் உள்ள குருக்களது வருமானமும் பாதிக்கப்பட்டது.

இதனை நிவர்த்தி செய்ய வந்த நாயக்கர் படையுடன், அங்குள்ள இஸ்லாமியரும் பெரும் அளவில் சேர்ந்து கொண்டு போர்த்துக்கேசியருக்கு எதிராகப் போரிட்டதும், அவர்களை அழித்து வேதாளையை விட்டு அவர்கள் கடல் மார்க்கமாக ஒடுமாறு செய்தனர். இராமேஸ்வரம் யாத்திரை செல்லும் பயணிகள் சிரமம் நீங்கியது. இது நிகழ்ந்தது. கி.பி. 1549ல்.

தமிழகம் போந்த இசுலாமிய மனிதப் புனிதர்களில் முக்கியமானவர் நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகையார். பதினைந்தாம் நூற்றாண்டில், தமிழகத்தில் அன்பையும், சகோதர உணர்வையும் மக்களிடையே தளிர்க்கச் செய்தவர்கள் அவர்கள். செயற்கரிய செய்வர் பெரியர் என்ற வள்ளுவத்துக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து சமுதாயத்தின் சகல துறைகளிலும் ஏக தெய்வ நம்பிக்கையும், சகிப்புத்தன்மையும், கமழச் செய்த சான்றோர். அவரது இளவலான பாபா பக்ருத்தீனும் மறை வழி நின்று மனித நேயம் காத்து வந்தார். ஒரு சமயம் சேது நாட்டிற்கும் சோழநாட்டிற்கும் இடைப்பட்ட கானாட்டில் அவர் தங்கி இருந்த பொழுது, அந்த வழியில் தஞ்சையில் இருந்து இராமேசுவரம் தலயாத்திரை சென்ற அந்தணப் பெண் மணிகள் எழுவரை ஆறலைக் கள்வர்கள் வழிமறித்தனர். நிராதரவாக நின்று தவித்த அவர்களது நிலை கண்டு நெஞ்சுருகிய இறைநேசர் அவர்கள், தமது அறிவுரையினால், கள்ளர்களைத் திருத்தி அந்தணப் பெண்களைக் காக்க முற்பட்ட பொழுது, கள்வர்களால் கொலையுண்டு மடிந்தார். தாய்க்குலத்திற்கு ஏற்றம் காண முனைந்து தியாகியான அவரது நினைவு என்றென்றும் போற்றிப் பரவத்தக்க தொன்று. மதத்தை எதிர்த்து அறத்தைக் காக்க முற்பட்ட அவரது நினைவை, “காட்டுபாவா சாகிபு அம்மானை” “காட்டுபாவா சாகிபு காரணீகம்” என்ற சிற்றிலக்கியங்கள் காலமெல்லாம் போற்றிப் பரவி நிற்கின்றன. புதுக்கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள அந்தப் புனிதரது அடக்கவிடத்தில் (காட்டுபாவா சாகிபு பள்ளிவாசல்) நடைபெறும் கந்துாரி விழாவில் கள்வர் இனத்தவர் மிகுந்த மன நெகிழ்வுடன் இன்றும் ஈடுபடுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்ச்சியைப் போன்ற இன்னொரு அவல நிகழ்ச்சி தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.பி. 1614ம் ஆண்டு பட்டயம் ஒன்றிலிருந்து தெரியவருகிறது.[26] இந்தப் பட்டயத்தின்படி பிராமணப் பெண் ஒருத்தி வல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் பொழுது காட்டுப்பாதையில் கள்ளர்கள் அவளை வழிமறித்தனர். அந்தச் சமயம் அந்தப்பாதையில் வந்த இசுலாமிய துறவியிடம் (பக்கீரிடம்) அடைக்கலம் கோரினாள் துறவியும் அந்த பிராமணப் பெண்ணுக்காக கள்ளரிடம் பரிந்து பேசி அவளுக்கு ஊறு இழைக்க வேண்டாமென்று கெஞ்சினாள். ஆனால் அவர்கள், பக்கிர் சாயபுவை குத்திபோட்டார்கள் அவள் நாக்கை பிடிங்கிக் கொண்டு செத்துப்போனாள். இந்தப் பெண்ணுக்காக இசுலாமியத்துறவியும், இசுலாமியத் துறவியின் நிமித்தம் இந்துப் பெண்ணும் தங்களது இன்னுயிரைப் பறி கொடுத்த பாங்கினை அந்தப் பட்டயம் சொல்லுகிறது.

தென்னகத்தை கைப்பற்ற அனுப்பப்பட்ட தில்லி பேரரசர் அவுரங்கஜேப்பின் படைக்கு செஞ்சிக்கோட்டையில் பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது. எத்தனையோ குறுநில மன்னர்களையும் அவர்களது கோட்டைகளையும் எளிதில் முகலாயப் பேரரசில் இணைத்த தில்லி தளபதிகளுக்கு செஞ்சி ஒரு பெரிய வினாக் குறியாக இருந்தது. வீரத்தையும் விவேகத்தையும் ஆதாரமாகக் கொண்டு முகலாயப் படைகளை எதிர்த்தவர்கள் கூட முகலாயப் படை பலத்தின் முன்னே இலவம் பஞ்சைப் போல பறந்தோடி மறைந்தனர். அல்லது இனத் துரோகிகளின் வஞ்சனையால் எளிதில், காட்டிக் கொடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டனர். ஆனால், செஞ்சிக் கோட்டை கி.பி. 1714 இல் தில்லி ஏகாதி பத்தியத்தை எதிர்த்து நின்றது. தேசிங் (தேஜ் சிங்) மன்னனது சுதந்திர ஆர்வம் இறுதிவரை குறையவில்லை. ஆனால் கோட்டைக்குள் இருப்பில் இருந்த எல்லாப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை. முடிவு முற்றுகையைத் தகர்க்க இறுதிப்போர் தொடுப்பதைத் தவிர வேறுவழி இல்லை என்ற நிலை. எதிரிக்கு அடிபணிந்து வாழ்வதைவிட மாற்றானை எதிர்த்து மோதி மடிந்து விடுவது புனிதமானது என தேசிங்கு மன்னன் முடிவு செய்தான். தனது முடிவை தனது உயிர்த் தோழன் மஹமத்கானுக்குச் சொல்லி அனுப்பினான்.

அப்பொழுது மஹமத் கான் வழுதாவூரில் மனமேடையில் இருந்தான். மங்கல வாத்தியங்கள் முழங்கிய இனிய ஓசையை மறைத்து, போர் முரசின் படபடப்பு கோட்டை மதில்களில் இருந்த போர் முரசுகள் அதிர்ந்தன. தனது வாழ்க்கைத் துணைவியின் கரம் பற்றும் மங்கல விழாக் கற்பனைகளில் ஆழ்ந்து இருந்த அவனது சிந்தனையை அந்தப் போர்ப்பரணி கலைத்தது. அவ்வளவுதான் மகமத்கான் வீறு கொண்டு எழுந்தான். வாளையும் வேலையும் அவனது கரங்கள் விரைந்து ஏந்தின. அவனது, மனக்கோலம் இமைப்பொழுதில் போர்க்கோலமாக மாறியது. ஆட்டுக்கிடையிலே புகுந்த அரிமா போல போர்க் களத்தில் புகுந்தான். தனது உயிர்த் தோழனான தேசிங்கிற்கு உறுதுணையாக நின்று போராடினான். தனது நண்பனைச் சூழ்ந்த முகலாயப் பெரும்படையைச் சின்னா பின்னமாக்கினான். என்றாலும், புற்றிசல் போல புறப்பட்டு வந்த எதிரிகளின் ராட்சத தாக்குதலின் முன்னால், ஆற்றலும் பேரார்வமும் மிக்க அந்த இளைஞனது போராட்டம் எடுபடவில்லை. பாரதப் போரில் வீழ்ந்த பிதாமகர் பீஷ்மரைப்போல, செஞ்சிப்போரிலே மகபத்கான் மடிந்து தியாகியானான்.[27] நாட்டுப்பற்றுடனும் நட்புணர்வுடனும் போராடி மடிந்த தேசிங்கு ராஜாவின் நல்ல துணைவனாக மகமத்கானது மகத்தான தியாகத்தை மக்கள் மறுக்கவில்லை. தேசிங்கு ராஜன் கதைபாடும் நாடோடிப் பாடகர்கள் இன்னும் உடுக்கை இழந்தவனை போல, இடுக்கண் களைந்த அவனது வீரவடிவை, அரிய நட்புணர்வை புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்மண்ணில், மலர்ந்து, மனம் பரப்பி காலவெளியிலே மறைந்துவிட்ட இந்த இனிய மலர்கள், காலமெல்லாம் மக்கள் மனத்தில்,வரலாற்றில், மனம்பரப்பும் வாடாமலர்களாக விளங்கி வருகின்றன. நமது தாயகத்தின் சமய ஒற்றுமையையும் மனிதாபிமான உணர்வுகளையும் உந்து சக்தியாகக் கொண்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க எழுந்த இளம் உள்ளங்கள் அல்லவா அவர்கள்!.

  1. AR 598/1926 தீர்த்தாண்டதானம்
  2. List of Copper Plates No 65 A of Mr. A. Sewe II
  3. AR 43/1946 (C.P).
  4. AR 43 / 1946 (C. P)
  5. AR 116 / 1903 - திருப்புல்லாரிை
  6. Hussaini Dr. S.A.R - History of Pandia Соuntry p. 55
  7. AR 311/1964 காயல்பட்டினம்
  8. Sevvell - List of Copper plates
  9. Antiquities vol I. p. 298.
  10. சேதுபதி மன்னர் செப்பேடுகள்.
  11. இராமநாதபுரம் சமஸ்தான நிலமான்ய கணக்கு.
  12. Sewell - Copper plates No. 53.
  13. Ibid
  14. MER / 911 p. p. 89.90.
  15. அப்துல் ரஹீம் M.R.M. இசுலாமிய கலைக்களஞ்சியம் (1970) தொகுதி பக் 628.
  16. Sewell – Copper plate No. 43
  17. Ibid
  18. A. S. S. I. Vol 4
  19. Rangacharya - List of inscriptions – vol. – 2 (1919) p. 13. 46
  20. GOPINATH RAO – Copper Plate Inscriptions — (1916) pp. 113-20x
  21. Rangacharya - List of inscriptions vol. II.
  22. Bowring – Haider and Tippu.
  23. ஆயிசா பேகம் - தமிழ்நாட்டு வரலாற்றுக் கருத்தரங்கு (1979) பக் : 295
  24. மதுரை செய்யது இசுமாயில் சாயபு - சகம் 1706ல் (1784). திருவாட்சியை வழங்கியது அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
  25. Elliott—History of India - vol Ill p. 90.
  26. தஞ்சாவூர் மன்னர் செப்பேடு. தொல்லியல் கருத்தரங்கு - (1983) பக்கம். 3
  27. Srinivasachari - History of Gingi Fort,