மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்/7. வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

7. வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

வீட்டுக்குரிய பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோ மக்கள் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர் என்பது அங்குக் கிடைத்துள்ள பொருள்களிலிருந்து நன்கறியலாம். அப்பொருள்கள் களிமண்ணாலும் மரத்தாலும் செம்பாலும் வெண்கலத்தாலும் சங்கு, வெண்கல் முதலியவற்றாலும் செய்யப் பட்டவை. வீட்டுக்குரிய பெரும்பாலான பொருள்கள் களி மண்ணாற் செய்யப்பட்டனவே ஆகும். சிறப்புடை நாட்களில் சங்காலும் வெண்கல்லாலும் செய்யப்பட்ட பொருள்கள் பயன்பட்டிருக்கலாம் என்று அறிஞர் அறைகின்றனர். மட்டாண்டப் பொருள்களே மிகுதியாக இருத்தலின், அவற்றைப் பற்றி முதற்கண் பேசுவோம்.

மட்பாண்ட மாண்பு

எந்த இடத்தில் நிலத்தை அகழ்ந்து ஆராய்ச்சி செய்யினும், அங்குக் கிடைக்கும் பலதிறப்பட்ட பொருள்களுள் ஆராய்ச்சியாளர் மட்பாண்டங்களையே சிறந்தவையாக மதிக்கின்றனர். ஒரு நகரம் அழிவுறும்போது-துறக்கப்படும்போது அந்நகரத்தார் விட்டுச் செல்வன மட்பாண்டங்களே ஆகும். பிறர் படையெடுப்பினாலும் சேதமாகாதனவும் கவரப்படாதனவும் மதிக்கப்படாதனவும் மட்பாண்டங்களே ஆகும். இவ்விரு காரணங் களாலும் அம்மட்பாண்டங்களும் அவற்றின் சிதைவுகளும் அந்நகர மக்களின் உண்மைநாகரிகத்தை உள்ளவாறு உணர்த்துவனவாகும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து, அவையே அம்மக்களின் காலம், அறிவு, ஆற்றல் இன்ன பிறவும் உண்மையாக உணர்த்தும் ஆற்றல் உடையன. இக்காரணங்களாற்றான் சிந்துப்பிரதேச ஆராய்ச்சியாளர், சிந்துப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களிற் கிடைத்த மட்டாண்டங்களையும் சிதைந்த மண் ஒடுகளையும் விடாமற் பாதுகாத்து வருகின்றனர்; மொஹெஞ்சொ-தரோவில் உள்ள இல்லங்களிலும் கழிநீர்ப் பாதைகளிலும் சிதைந்தும் சிதையாமலும் கிடைத்த மட்பாண்டங்களைச் சேமித்து வைத்துள்ளனர்.

பலவகை மட்பாண்டங்கள்

மொஹெஞ்சொ-தரோவில் விளையாட்டுக் கருவிகள் முதல் வீட்டிற்குப் பயன்பட் மட்பாண்டப் பொருள்கள் வரை யாவும் பல திறப்பட்ட உருவங்களை உடையனவாக உள்ளன. சில நன்னிலையில் கிடைத்துள்ளன; சில அரைகுறையான நிலையில் கிடைத்துள்ளன; பல சிதைந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுக்கும் ஹரப்பாவில் கிடைத்துள்ள பல திறப்பட்ட மட்பாண்டங்கட்கும் சிறிதளவே வேறுபாடு உள்ளது. இவ்வேறுபாடு கொண்டு, ஹரப்பா நகரம் மொஹெஞ்சொ-தரோவை விடச் சிறிது முற்பட்டதாக இருக்கக்கூடுமோ என்று ஐயுறுவாரும் உளர். இவ்விரண்டு இடங்களிலும் நாடோறும் கையாளப்பட்ட மட்டாண்டங்களைப் போன்றவை எகிப்திலும் பாபிலோனியாவிலும் நாடோறும் வீடுகளில் பயன்பட்டனவாகவே காணப்படுகின்றன. எனவே, அக்காலத்து நாகரிக நாடுகளில் எல்லாம் இம்மட்டாண்டங்கள் பெரிதும் ஒன்று போலவே இருந்தன எனக் கூறல் ஒருவாறு பொருந்துவதாகும்.

களிமண் கலவை

சிந்து ஆற்றுக்களி மண்ணே மொஹெஞ்சொ-தரோ மக்கட்குப் பேருதவி புரிந்ததாகும். அம்மண்ணில் ஓரளவு அப்ரகமும் சுண்ணாம்பும் அணுக்கள் வடிவில் கலந்திருந்தன. மட்பாண்பு வினையாளர் அம்மண்ணை ஓரள்வு தெள்ளிய மணலுடன் கலந்து நன்றாக அரைத்து, மட்பாண்டங்களையும் விளையாட்டுக் கருவிகளையும் ஏராளமாகச் செய்தனர். இக்கலவையினால் பொருள்கள் உறுதியாக இருக்கும் என்பதை அவ்வினையாளர் நன்கு அறிந்திருந்தமை வியப்புக்கு உரியதே ஆகும். இப்பலவகைப் பொருள்களை ஆராய்ந்த அறிஞர்கள், ‘இம்மட் பாண்டங்களே உலகில் பழைமையும் உறுதியும் அழகும் பொருந்தியவை’ என்று கூறி வியக்கின்றனர்.

வேட்கோவர் உருளைகள்

மட்பாண்டங்கள் அனைத்தும் வேட்கோவர் உருளையைக் கொண்டே செய்யப்பட்டவை ஆகும். வேட்கோவர், மட்பாண்டங்களை உருளைகள் மூலம் உருவாக்கிய பின்னர், அவற்றின்மீது செங்காவி நிறம் பூசிக் காயவைத்து, பின்னர் அவற்றை வழவழப்பாக்கி, இறுதியிற் சூளையிட்டனர். இவ்வேலைகட்குப் பின்னரே அம்மட்பாண்டங்கள் கண்கவர் வனப்புப் பெற்றுள்ளன. இங்ஙனம் உருளைகள் துணைக்கொண்டு செய்யப்படாமல் வேட்கோவர் தம் கைகளைக் கொண்டே செய்யப்பட்ட மட்பாண்டங்களும் சில கிடைத்துள்ளன. அவை மகளிரால் செய்யப்பட்டு, வீட்டிற்குள்ளேயே சூளையிடப்பட்டனவாக இருத்தல்கூடும் என்று டாக்டர் மக்கே போன்ற ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

காளவாய்

வேட்கோவர் பயன்படுத்திய உருளைகளில் ஒன்றேனும் இன்று கிடைத்திலது. ஆயினும், அவர்கள் பயன்படுத்தின காளவாய்கள் சில சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. அவை வட்டவடிவில் 180 அல்லது 210 செ. மீ. சுற்றளவு உடையனவாக அமைந்துள்ளன. இவற்றின் அடிப்பாகத்தில். நிறையத் துளைகள் உள்ளன. சூளையிடப்பட வேண்டிய பொருள்கள் காளவாயின் மீதுள்ள சமமான இடத்தில் வைக்கப்பட்டன; அடியில் தீமூட்டப்பட்டது. தீ துளைகள் மூலம் மேற்சென்று, மேலே வைக்கப்பட்ட பொருள்களை வேகச் செய்தது, மேற்புறத்தில் குழை ஒன்று இருந்தது, அதன் வழியாகவே புகை வெளிச்சென்றது. சூளையிடப்பட்ட பொருள்களைக் காண்கையில், காளவாய்கள் முதற்றரமான முறையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும், வேட்கோவர் பண்பட்ட வினையாளர் என்பதும் எளிதிற் புலனாகின்றன. மெருகிடும் கருவிகள்

வேட்கோவர் மட்பாண்டங்களை மெருகிட என்றே ஒருவகைக் கருவியைப் பயன்படுத்தி வந்தனர் என்பது தெரிகிறது. அக்கருவி எலும்பினால் ஆனது. அது 38 செ. மீ நீளமும் 4 செ. மீ. அகலமும் 10 செ.மீ. கனமும் உடையது. அக்கருவி ஒன்று ஆராய்ச்சியாளருக்குக் கிடைத்தது. அதைப்போலவே சிறிய அளவுள்ள கருவிகள் சிலவும் கிடைத்தன. இவை அல்லாமல் சிறிய எலும்புத் துண்டுகளும் கூழாங்கற்களும் மட்பாண்டங்களை மெருகிடுவதற்காகப் பயன்பட்டன. ஹரப்பாவில் 42 செ. மீ. நீளமுள்ள மெருகிடும் கருவி ஒன்று கிடைத்தது. இக்கருவிகள் தரையையும் சுவர்களையும் வழவழப்பாக்கவும் பயன்பட்டன. வேட்கோவர் இல்லங்களில் இம்மெருகிடும் பணியைப் பெண்பாலாரே செய்திருத்தல் கூடியதே என்று அறிஞர் அறைகின்றனர்: சூளையிடப்பட்ட பாண்டங்கள்மீது அழகிய நிறங்களைப் பூசியவரும் ஒவியங்கள் தீட்டியவரும் மகளிராகவே இருத்தலும் கூடியதே. என்னை? இன்றும் மொஹெஞ்செர்தரோவைச் சுற்றியுள்ள இராமங்களில் இவ்வேலைகளைச் செய்து வருபவர் பெண்மணிகளே ஆதலின் என்க.[1]

பலநிறப் பண்டங்கள்

மொஹெஞ்சொ-தரோ மக்கள் பயன்படுத்திய மட்கலன்களுள் ஒரு சில தவிரப் பெரும்பாலான ஏதேனும் ஒருவகை நிறம் தீட்டப் பட்டனவாகவே இருக்கின்றன. அவற்றுட்பல, செந்நிறம்பூசப்பட்டுக் கறுப்புப் பட்டைகள் அடிக்கப்பட்டுள்ளன. சிவப்பு கருமை என்னும் இரண்டு நிறங்களே பெரிதும் பயன்பட்டு இருப்பினும் பசுமை, வெண்மை, சாம்பல் நிறங்களும் மிகுதியாகவே பயன்பட்டுள்ளன. மஞ்சள் நிறம் அருமையாகவே பயன்பட்டுள்ளது. சில பாண்டங்கள் மீது வெளுத்த மஞ்சள் பட்டைமீது கறுப்புப்பட்டை அடிக்கப்பட்டிருக்கிறது. சில பாண்டங்கள் மீது பழுப்பு நிறம் தீட்டப்பட்டு அதன்மீது கறுப்புப்பட்டை அடிக்கப்பட்டுள்ளது.

இப்பன்னிற மட்பாண்டங்கள் மொஹெஞ்சொ-தரோவுக்குத் தெற்கே 128 செ.மீ. தொலைவில் உள்ள அம்ரீயிலும் கிடைத்தன. அவற்றுள் சிவப்பும் கறுப்பும் மிகுதியாகப் பூசப்பட்டவையே பலவாகும். மொஹெஞ்சொ-தரோவிற்கு வடமேற்கில் 176 செ. மீ. தொலைவில் உள்ள ‘நால்’ என்னும் பழம்பதியிற் கிடைத்த மட்பாண்டங்கள் பல பச்சை நிறம் பூசப்பட்டவை ஆகும். இங்ஙனம் மட்பாண்டங்கட்கு நிறம் பூசும் வழக்கம் அப்பண்டைக்காலம் முதல் இன்று வரை இந்நாட்டில் இருந்து வருதல் கவனிக்கத் தக்கது. இப்பழக்கம் இன்றும் மொஹெஞ்சொ-தரோவுக்கு அருகில் உள்ள சில கிராமங்களிலும் இருந்து வருகிறது.

நிறங்களைப் பூசுவானேன்?

மட்கலங்களில் கட்புலனுக்குத் தெரியாத பல சிறிய துளைகள் இருத்தல் கூடும். நிறங்கள் உள்ளும் புறமும் பூசப்படுவதால் அத்துளைகள் அடைபடும்; அழகும் கொடுக்கும். இவ்விரு காரணங்களை நன்கு உணர்ந்த அப்பண்டை நகரத்து வேட்கோவர் தாம் செய்த மட்பாண்டங்கட்கு நிறம் பூசினர் என்று டாக்டர் மக்கே கருதுகின்றார். இங்ஙனமே தண்ணீர் சேமித்துவைக்கப் பயன்பட்ட பெரிய தாழிகள் நிலக்கீல் பூசப்பட்டிருந்தனவாம்.

ஒவியம் கொண்ட மட்பாண்டங்கள்

மொஹெஞ்சொ-தரோவில் ஒவியம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் பல கிடைத்துள்ளன. சிவப்பு நிறம் பூசப்பட்ட பாண்டங்கள் மீது கறுப்பு நிறங்கொண்டு தீட்டப்பட்ட ஒவியங்கள் காண்கின்றன, ஊர்வன, பறப்பன, நடப்பன, நீந்துவன முதலியன ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பறவைகள், விலங்குகள் இவற்றின் உருவங்களே பல விலங்குகளின் ஒவியம் புல் தரையுடனும் காடுகளுடனும் சேர்த்து இயற்கைக் காட்சியாக எழுதப்பட்டுள்ளன. பறவைகள் மரக்கிளைகளில் இருத்தல் போலவும், மரங்கட்கு அடியில் இருப்பன போலவும் தீட்டப் பட்டுள்ளன. இரண்டு காட்டுக்கோழிகள் புதர் அருகில் இருத்தலைப்போல எழுதப்பட்டுள. ஒரு தாழியின் மீது பல விலங்குகளின் உருவங்கள் தீட்டப்பட்டுள. இத்தகைய சித்திரங்கள் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் ஏலம், சுமேர் முதலிய இடங்களிலும் கிடைத்துள்ளன. மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த பாண்டங்கள் மீது மனித உருவம் தீட்டப்பட்டிலது. ஆனால் ஹரப்பாவில் கிடைத்த உடைந்த மட்கல ஒடு ஒன்றின் மீது மனிதன் உருவமும் குழந்தை உருவமும் தீட்டப்பட்டுள்ளன. இவை அல்லாமல், மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த பாண்டங்கள் மீது மீன்தோல், ஒரு வட்டத்திற்குள் மலர், வாயில் மலர் வைத்துக்கொண்டு நிற்கும் மயில் மலர்க்கொத்துக்கள், மாவிலை, அரசிலை முதலியவற்றின் உருவங்கள் தீட்டப் பட்டுள்ளன. சிலவற்றின்மீது கழுகுகள் வரிசை வரிசையாகப் பறப்பன போலவும், மயில் ஒன்று பறப்பது போலவும் வரையப்பட்டுள்ளன. ஒன்றின்மீது ஓடம் ஒன்று எழுதப்பட்டுளது. சிந்து ஆற்றில் பல ஓடங்களைத் தினமும் கண்ட அம்மக்கள், ஓடத்தின் படத்தைத் தீட்டப் பெரிதும் விரும்பினரிலர். என்னை? ஓடம் திட்டப்பெற்ற பாண்டம் இதுகாறும் ஒன்றே கிடைத்த தாதலின் என்க.

எங்கும் எல்லா எழிலுறு ஒவியம்

ஒரு மட்பாண்டத்தின்மீது வட்டத்திற்குள் வட்டம் தீட்டப்பட்டுளது. இவ்வட்டங்கள் பிழைபடாமல் அமை வதற்காக, முதலில் சதுரக் கோடுகள் இழுக்கப்பட்டு, அவற்றின் உதவியால் வட்டங்கள் ஒழுங்காக அமைக்கப் பட்டுள்ளன. இவ் அமைப்பு முறை பிற நாட்டு மட்பாண்டங்கள் மீது காணுமாறு இல்லை என்று அறிஞர் அறைகின்றனர். மொஹெஞ்சொ-தரோவிலும் இம்முறை சில பாண்டங்கள் மீதே அமைந்துள்ளது. வேறு சில பாண்டங்கள் மீது கையால் வட்டங்கள் இழுக்கப்பட்டுள. எனவே, அவ்வட்டங்கள் நன்றாக அமைந்தில.

வேறு பல ஒவியங்கள்

சில தாழிகள் மீது மரங்கள் எழுதப்பட்டுள்ளன. அடிமரத்தைக் குறிக்கத் தடித்த கோடுகளும் கிளைகளைக் குறிக்க மெல்லிய வளைந்த கோடுகளும் இழுத்துவிடப்பட்டுள்ளன. சில பாண்டங்கள் மீது பிறைமதி திட்டப்பட்டுள்ளது. சிலவற்றின் மீது - திறம்படத் திட்டப்பட்டுள்ள சதுரங்க ஒவியம் குறிப்பிடத் தக்கது. ஒரு கட்டம் கறுப்பாகவும் மற்றொன்று சிவப்பாகவும் அளவு பிறழாமலும் வரையப்பட்டிருத்தல் வனப்புடன் காட்சி யளிக்கின்றது. பல பாண்டங்கள் மீது முக்கோணம் ஒன்றாகவும் இரண்டாகவும் மூன்றாகவும் சேர்த்து எழுதப்பட்டுள்ளன.

மட்பாண்ட வகைகள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ள மட் பாண்டங்களில் சில வேறெங்குமே இல்லாதவையாக இருத்தல் கவனித்ததற்குரியது. அவை சிந்துப் பிரதேசத்திற்கே உரியவை எனக் கூறல் தவறாகாது. நீர் அருந்தப் பயன்பட்ட பாண்டங்கள், அடியில் குமிழ் போன்ற கூரிய வடிவம் பெற்றுக் காண்கின்றன. அவை நீர் பருகிய பின்னர்க் கவிழ்த்து வைக்கப்பட்டன் போலும்! சில பாத்திரங்கள் அடிப்புறம் தட்டையாகவும் மேற்புறம் திரண்டு கூம்பிய வடிவத்துடனும் காண்கின்றன. இவை பலவகைக் கிண்ணங்கள், சிறு தண்டின்மீது பொருத்தப்பட்ட தட்டுக்கள், சிறிய அகல்கள், சிறிய மூக்குடைய ஏனங்கள், தட்டுகள், தாம்பாளங்கள், வட்டில்கள், படிக்கங்கள், குடங்கள், சிறிது குடைவான பாத்திரங்கள், மேசைமீது மலர் வைக்கப் பயன்படும் நீண்ட பாத்திரம் போன்றவை, பம்பர உருவில் அமைந்த சீசாக்கள், இக்காலச் சீசாக்களைப் போன்றவை, பானைகள், சட்டிகள், பெருந் தாழிகள், நீர்த் தொட்டிகள், பலவகை முடிகள், புரிமனைகள் எனப் பலவகை ஆகும்.

பூசைக்குரிய மட்பாண்டம்

இதன் உயரம் 5 செ. மீ. இஃது அடிப்புறத்தில் தண்டு போன்ற வடிவம் உடையது. இதன் மேற்புறம் வட்டில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புடன் இருக்கும் இப்பாண்டம் பூசைக்கென்றே பயன்பட்டதாதல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். இத்தகைய கலன்கள் பாபிலோனிய நகரங்களான, ‘கிஷ், உர், பாரா’ என்னும் இடங்களில் கிடைத்திருத்தல் கவனித்தற்குரியது.

கனல் சட்டி

இதுவும் மண்ணால் இயன்றதேயாம். இஃது, இக்காலத்து மரக்கால் போன்று காணப்படுகின்றது. இது நிறையத் துளைகள் இடப்பட்டு மேல் மூடியுடன் இருக்கின்றது. இதற்குள் நெருப்பிட்டு அறைக்குள் கட்டில்களுக்கு அடியில் வைப்பின், துளைகள் வழியே அனல் வெளிப்பட்டு அறைக்குள் உள்ள குளிரை அப்புறப்படுத்தும் அறை சூடாக இருக்கும். இக்கனல் சட்டிகள் பல கிடைத்துள்ளன. இக்கனல் சட்டிகளைப் பயன்படுத்திச் சுகவாழ்வு வாழக் கற்றிருந்த அப்பண்டைப் பெருமக்கள் பெருமையை என்னென்பது!

குமிழ்கள் கொண்ட தாழி

இது மிக்க வியப்பூட்டும் பாத்திரமாகும். இதனைச் சிறப்புடைப் புதை பொருள் என்று ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். இதன் உடம்பில் முள், போன்ற அமைப்புகள் உள்ளன; அஃதாவது, குமிழ்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.இதன் அடிப்புறம் கூம்பி ஒரு தண்டு போல் அமைந்துள்ளது. இத்தகைய நூதன பாண்டங்கள் மிகச் சிலவே கிடைத்துள்ளன.இவை போன்ற்வை இராக்கின்மேல்பகுதிகளில் உள்ள டெல் அஸ்மர் என்னும் இடத்தில் கண்டெடுக்கப் பட்டன என்பது கவனித்தற்குரியது.

வெண்கற் பானைகள்

வெண் கல்லாற் செய்யப்பட்ட பாண்டங்கள் சிலவேனும் மொஹெஞ்சொ-தரோவில் இருந்தன என்பதை உறுதிப்படுத்தச் சில சிதைந்த ஒடுகள் கிடைத்துள்ளன.இவை நீலங் கலந்த சாம்பல் நிறத்துடன் காணப்படுகின்றன. உடைந்த ஒடுகள் நிரம்பக் கிடைக்காமையின், இப்பாத்திரங்கள் மொஹெஞ்சொ-தரோவில் அருகியே இருந்தன என்று நினைக்கலாம். ஆனால், இவை சுமேரியாவில் நிரம்பக் கிடைத்துள்ளன. பலுசிஸ்தான்-ஈரான் எல்லைப் பிரதேசத்தில் கறுப்பும் நீலமும் தீட்டப்பட்ட இத்தகைய வெண்கற் பாத்திர ஓடுகள் பலவற்றை டாக்டர் மக்கே கண்டு பிடித்தனர். எனவே, ‘இவை, சிந்துப் பிரதேசத்திற்கு மேற்கே பேரளவில் பயன்பட்டன; சிந்துப் பிரதேசத்தில் மிகக்குறைந்த அளவிலேயே பயன்பட்டன’, என்று அவர் கூறுகின்றார்.

கைப்பிடி கொண்ட கலன்கள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த வாணல் சட்டி ஒன்று இருபுறமும் கைப்பிடி கொண்டதாக இருக்கின்றது. பெரிய தாழிகளின் கலயம் போன்ற மேல்மூடிகளின் மேற்புறத்தில் மட்டும் கைப்பிடிகள் உள்ளன. வேறு சில மட்கலன்களில் கைப்பிடிக்குப் பதிலாகக் கைவிரல் நுழையத் தக்கவாறு துளைகள் அமைந்துள்ளன. ஆயின், ஹரப்பாவில் ஒரு புறம் கைப்பிடி கொண்ட கலயமும் இருபுறம் கைப்பிடி கொண்ட கலயமும் கிடைத்தன. இரட்டைக் கைப்பிடி உள்ள பாத்திரங்கள் பல இராக்கில் கிடைத்துள்ளன.[2] கைப்பிடி களுடன் ஓவியம் தீட்டப்பட்ட பாத்திரங்கள் பல மால்ட்டாவில் கிடைத்துள்ளன.[3] கைப்பிடியுள்ள மூடிகள் ஜெம்டெட்நஸ்ர் என்னும் இடத்தில் கிடைத்துள்ளன[4]

மைக்கூடுகள்

மொஹெஞ்சொ-தரோவில் ஆடுகள் போலச் சிறிய கற்களில் செதுக்கப்பட்ட உருவங்கள் கிடைத்தன. அவற்றின் மேற்புறம் குழியாக இருந்தது. அக்குழி மை ஊற்றிக்கொள்ளப் பயன்பட்டதாம். இப்பொருள்கள் அங்கு மிகுதியாகக் கிடைக்கவில்லை. ஆனால், இவை போன்றவை பல கிரிஸை அடுத்த ஏஜியன் தீவுகளில் அகப்பட்டுள்ளனவாம். இவை ‘உர்’ என்னும் இடத்தில் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் மைக் கூடுகளாகவே பயன்பட்டன என்று ஸர் ஆர்தர் இவான்ஸ் அறைகின்றார். இஃது உண்மையாயின், சிந்துப் பிரதேச மக்கள் 5000 ஆண்டுகட்கு முன்னரே மையைக் கொண்டு எழுதும் முறையைக் கையாடி வந்தனர் என்பது அறியத்தகும்.

புரிமணைகள்

பல வகை மட்பாண்டங்களை வைக்கப் புரிமனைகள் பயன் பட்டன. அவை மண்ணாலும் மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. அவை உயரமாகவும் பருமனாகவும் அமைந்துள்ளன. ஹரப்பாவில் 20 செ.மீ. உயரமுள்ள புரிமணைகள் கிடைத்தன. பெரியதாழிகளை வைக்க மரப்புரிமனைகளே பயன்பட்டன. சாதாரண மான புரிமணை போன்று கருங்கல்லைக் கொண்டு 30 செ.மீ. உயரத்தில் செய்யப்பட்ட புரிமணைகள் பல மொஹெஞ்சொ-த்ரோவில் கிடைத்தன. இவை இலிங்கங்களின் அடியில் வைக்கத்தக்க ‘யோனிகள்’, என்று இவற்றைக் கண்டு பிடித்த இராய்பஹதூர் தயாராம் சஹனி கூறியுள்ளார். ஆயின், டாக்டர் மக்கே, இவை தூண்கட்கு அடியில் வைக்கத்தக்க கல் புரி மணைகள்’ என்று கூறியுள்ளார்.

புதைக்கப்பட்ட தாழிகள்

பல வீடுகளில் தானியங்களைக் கொட்டிவைக்கப் பயன் பட்ட பெரியதாழிகள் பாதியளவு நிலத்திற் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மேற்பாகம் மிக்க வழவழப்பாக அமைந்துள்ளது. எலிகள் ஏறாதிருத்தற்கென்றே இவ்வளவு வழவழப்பாக இம்மேற்பகுதி அமைக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் மக்கே கருதுகின்றார். நிலத்திற் புதைத்த மட்பாண்டங்களிற்றான் நகைகளும் பிற விலை உயர்ந்த பொருள்களும் வைத்துப் பாதுகாக்கப்பட்டன. இப்பழக்கம் சிந்துப் பிரதேசக் கிராமங்களில் இன்றும் இருப்பதாக அறிஞர் கூறுகின்றனர்.

எலிப் பொறிகள்

எலிகளைப் பிடிக்கும் பொறிகள் சுட்ட களிமண்ணால் இயன்றவை. இவற்றில் இரண்டு கண்டு பிடிக்கப்பட்டன. பொறிக்குள் உணவு முதலியவற்றை இரையாக வைத்து எலிகள் பிடிக்கப்பட்டு வந்தன.

பிங்கான் செய்யும் முறை

சில பெரிய தாழிகளின் வெளிப்புறமும் சிறிய பாண் டங்களும் தட்டுகளும் பீங்கான் போலப் பளபளப்பாக்கப் பட்டுள்ளன. இதனால், சிந்துப் பிரதேச மக்கள் அப்பண்டைக் காலத்திலேயே பீங்கான் செய்யும் முறையை ஒருவாறு உணர்ந்திருந்தனர் என்பது புலனாகிறது. இப்பிங்கான் போன்ற பளபளப்பு உண்டாக்கப் பல பொருள்களைச் சேர்த்து அரைத்த கலவையையே பயன்படுத்த வேண்டும். சிந்துப் பிரதேச மக்கள் அக்கலவையைப் பயன்படுத்தினர் என்பது வெளியாகிறது.ஆயின், இப்பிங்கான் போன்ற பொருள்கள் ஏலம், சுமேர் என்னும் நாடுகளில் இருந்த சவக் குழிகளில் கண்டெடுக்கப்பட்டன. அதனால், இப்பொருள்கள் அங்கிருந்து கொண்டுவரப்பட் டிருத்தலும் கூடும் என்று அறிஞர் நினைக்கின்றனர்.

அம்மி, ஏந்திரம், உரல்

சிந்துப் பிரதேச மக்கள் அம்மி, குழவி, உரல் இவற்றைப் பயன்படுத்தினர். மாவரைக்கும் கல் ஏந்திரங்கள் நிரம்பக் கிடைத்துள்ளன.இவை பெரிய கல்தட்டுகள் மீது வைக்கப்பட்டே மாவரைக்கப் பயன்பட்டன. அரைக்கும்பொழுது மா சிதறிக் கீழே விழாமல் இருப்பதற்காகவே கல் தட்டு ஏந்திரத்தின் அடியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஹரப்பாவிலும் இத்தகைய ஏந்திரங்கள் கிடைத்துள்ளன. கல்லுரல்களும் ஹரப்பாவில் கிடைத்துள்ளன.

பலவகை விளக்குகள்

ஹரப்பாவில் முட்டை வடிவத்தில் விளக்கொன்று கிடைத்தது. இதன் வாய்ப்புறம் குவிந்து, திரி இடுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விளக்கிற்குள் ஒருவகை எண்ணெய் இட்டுத் திரியிட்டுக் கொளுத்தும் வழக்கம் இருந்திருத்தல் வேண்டும். வேறு பலவகை விளக்குகளும் கிடைத்துள. மொஹெஞ்சொ-தரோவில் ஒரு வகை மெழுகுவர்த்தி வைக்கும் தட்டுகள் களிமண்ணாற் செய்யப்பட்டுள்ளன. ‘அப்பழங்காலத்தில் மெழுகு வத்திகள் உபயோகத்தில் இருந்தன என்பது சுவை பயக்கும் செய்தியே ஆகும்’, என்று டாக்டர் மக்கே கூறி வியக்கின்றார்.[5]

பிற பொருள்கள்

கதாயுதம் போன்று சாம்பல் நிறக் கல்லால் செய்யப்பட்ட ஒரு கருவி மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்தது. கல் ஊசி, எலும்பு ஊசி, கற்கோடரி, செம்பு அரிவாள், மரக்கட்டில்கள், ! நாணற்பாய்கள், கோரைப்பாய்கள், மேசைகள், நாற்காலி போன்ற உயர்ந்த மரப்பீடங்கள் முதலியன இருந்தமைக்குரிய குறிகள் காணப்படுகின்றன. சுருங்கக் கூறின், மொஹெஞ்சொ-தரோவில் இல்லத்துக்குரிய எல்லாப் பொருள்களும் குறைவின்றி ஒருவாறு அமைந்திருந்தன என்று கூறுதல் பொருந்தும்

விளையாட்டுக் கருவிகள்

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டுக் கருவிகள் பலவாகும்: மண் கொண்டு செய்யப்பட்ட விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, ஆண்பெண் பதுமைகள், சிறு செப்புக்கள் முதலியன நிரம்பக் கிடைத்துள்ளன. குச்சி ஒன்றில் கயிறு இணைக்கப் பட்டுள்ளது. அக்கயிற்றை அசைத்தற்கு ஏற்றவாறு அக்குச்சி மீது பறவை ஒன்று ஏறுவதும் இறங்குவதுமாக இருத்தற்குரிய வசதியோடு கூடிய கருவிகள் சில கண்டெடுக்கப்பட்டன. சிந்துப் பிரதேச வேட்கோவர் இப்பொருள்களைச் செய்வதில் காட்டியுள்ள திறமை பெரிதும் வியப்புக்குரியதாகும். அப்பெரு மக்கள் 1.5 செ. மீ. உயரத்திலும் அழகு மிகுந்த பொருள்களைச் செய்துள்ளனர் எனின், அவர்தம் பண்பட்ட தொழிற் சிறப்பை என்னெனப் பாராட்டுவது இச்சிறிய பொருள்களும் ஒழுங்காகவும் வெளிப்புறம் மினுமினுப்பாகவும் எழில் மிகுந்து காணுமாறு செய்யப்பட்டுள்ளமை இக்காலத்தார் பாராட்டுதற்கு உரியதேயாகும். தொழிலாளர் சங்கு தந்தம், கிளிஞ்சல் ஒடுகள், எலும்புகள் முதலியவற்றாலும் விளையாட்டுப் பொருள்களைச் செய்துள்ளனர். இத்தகைய பொருள்கள் சிந்துப் பிரதேசத்தில் புதையுண்டுள்ள பிற நகரங்களிலும் கிடைத்தலால், இவ் வேலைப்பாடு அப்பழங்காலத்தில் உயரிய நிலையில் இருந் திருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து, களிமண் பொருள்கள் பலவும் பல திறங்கள் கொண்டவை.

இன்றும் ஊதும் ஊதுகுழல்

களிமண்ணைக் குடைவான உருண்டையாகச் செய்து அதன் உள்ளே சிறிது கற்களை இட்டுக் கலகல என்று ஒலிக்குமாறு செய்யப்பட்ட கிலுகிலுப்பைகள் பார்க்கத்தக்கவை ஆகும். மண் பந்துகள், வால்புறம் துளையுடைய கோழி, குருவி போன்ற ஊது குழல்கள் கண்ணைக் கவர்வனவாகும். ‘யான் ஓர் ஊதுகுழலை எடுத்து ஊதினேன். அது நன்றாக ஊதியது. 5000 ஆண்டுகட்குமுன் பயன்பட்ட ஊதுகுழல் இன்றும் அங்ஙனமே பயன்படல் வியத்தற்குரியது அன்றோ!’ என்று அறிஞர் சி.ஆர்.ராய் கூறியுள்ளது வியப்பூட்டும் செய்தியாகும். ஒரு பறவை வடிவம் அமைந்த ஊதுகுழல் பலவகை ஒசைகள் உண்டாகுமாறு திறம்படச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலை அசைக்கும் எருது

வேட்கோவர், களிமண்ணைக்கொண்டு விலங்குகளின் தலைவேறு-உடல்வேறாகச் செய்து, பிறகு இரண்டையும் இணைப்பதற்கு இயன்றவாறு துளைகள் இட்டுச் சூளை யிட்டனர். பின்னர் இரண்டையும் கயிறுகொண்டு பிணைத்து விட்டனர். இங்ஙனம் செய்யப்பட்ட விலங்குப் பதுமைகள் காற்றுப்படினும் கயிற்றை இழுப்பினும் தலையை அசைத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு தலை அசைக்கும் விலங்குப் பதுமைகளுள் எருதுகளே பலவாகக் கிடைத்துள்ளன. கைகளை அசைக்கும் குரங்குப் பதுமைகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வண்டிகள்

மொஹெஞ்சொ-தரோவில் களிமண் (விளையாட்டு) வண்டிகள் சில் கிடைத்துள்ளன. இவை மிக்க வனப்புடையவை: நன்கு உருண்டு ஒடக்கூடியவாறு அமைந்துள்ளவை. இவை, கி.மு.3200 ஆண்டுகட்கு முற்பட்ட ‘உர்’ என்னும் நகரத்திற் கிடைத்த கல்லிற் செதுக்கப்பட்ட தேர் ஒன்றினைப் பெரிதும் ஒத்துள்ளனவாம். இத்தகைய வண்டிகள் களிமண்ணாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டுள்ளன. வெண்கல வண்டிப் பதுமைகளிலிருந்து, அக்காலத்தவர் வண்டிக்கு மேற்கூரையை அமைத்துப் பலர் உள்ளே அமர்ந்து செல்லுவதற்கு ஏற்றவாறே வண்டிகளை அமைத்துப் பயன்படுத்தினர் என்பதை அறியலாம்: அவ்வண்டிகளைப் போன்றவையே இன்றும் சிந்துப் பிரதேசக் கிராமங்களில் இருப்பவை ஆகும். மண் விலங்குகளை மண் தட்டுகளில் நிறுத்திச் சக்கரம் அமைத்துக் குழந்தைகள் இழுப்பு வண்டிகளாகப் பயன்படுத்தினர் என்பதும் அறியத்தக்கது.

சொக்கட்டான் கருவிகள்

மொஹெஞ்சொ-தரோவில் களிமண்ணாலும் கற்களாலும் செய்யப்பட்ட பல திறப்பட்ட சொக்கட்டான் காய்கள், கவறுகள், தாயக்கட்டைகள் முதலியன கண்டெடுக்கப்பட்டன. கவறுகள் ஆறு பட்டைகளை உடையனவாகக் காண்கின்றன. ஒவ்வொரு பட்டையிலும் வட்டப்புள்ளிகள் இட்டு, வெவ்வேறுவித எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தந்தத்தால் செய்யப்பட்டபாய்ச்சிகைகள் இக்காலத்தன போலவே அமைந்துள்ளன. இவை நிமித்தம் பார்ப்போரால் குறி கூறுவதற்காகப் பயன்பட்டவை. இவற்றின் மீது புள்ளிகள் இல்லை; ஒவியங்களும் நீலக்கோடுகளும் வரையப்பட்டுள்ளன. ஆதலின், இவை சொக்கட்டான் ஆடப் பயன்பட்டவை அல்ல என்று ஒரு சார் அறிஞர் அறைகின்றனர். இவை அல்லாமல், சொக்கட்டான் காய்கள் பல கல்லாலும் களிமண்ணாலும் செய்யப்பட்டு அழகிய நிறங்கள் பல பூசப்பட்டுள்ளன. ஆயின், ஆராய்ச்சியாளர் சிலர் இவற்றைச் சிவலிங்க வடிவங்கள் என்று கூறுகின்றனர். இவற்றின் மாதிரிகள் சில சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை இக்காலத்தில் சதுரங்கம் ஆடுவோர் பயன்படுத்தும் காய்கள் (Pawns) போலவே இருக்கின்றன.



  1. Drr Mackay’s ‘The Indus Civilization’, p.142
  2. ‘Iraq’ Vols. 1-4 published by the British School of Archaeology
  3. M.A.Murray’s ‘Excavations in Malta’, part II, pp. 26-28.
  4. Dr.Mackay’s ‘The Indus Civilization’, p.151.
  5. In any case, it is extremely interesting to discover that candles were also in use at such an early date’. Dr.Macky’ The Indus Civilization’, p. 137