மௌனப் பிள்ளையார்/004-015
ஒண்டுக் குடித்தனம்
யாரோ ஒருவர் தெருக் கதவைப் பலமாகத் தட்டினார். எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். தடபுடலாய் ஓர் ஆசாமி உள்ளே நுழைந்து, என்னிடம் ரொம்ப நாளாகப் பழக்கப்பட்டவர்போல் என் அருகில் வந்து தட்சிணாமூர்த்தி இரண்டு விரலை மடித்துக் கொண்டிருக்கிறதே அந்த மாதிரி நின்றார்.
ஒரு சிமிட்டா பொடி கேட்கிறாரென்பது எனக்கு விளங்கிற்று.
"இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டமாய்க் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தார்?” என்று கேட்கலாமா என்றுகூடப் பார்த்தேன். கொஞ்சம் நிதானித்து "தாங்கள் யார்? என்னிடம் பொடிபோடும் வழக்கம் கிடையாதே" என்றேன்.
"நான் பொடி ஏதும் கேட்கவில்லையே" என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே தெருவிலிருந்த 'டு வெட்' போர்டைக் காட்டினார்.
நெற்றியில் மூன்று ரேகைச் சந்தனம், பஞ்சகச்சம், பட்டையான அங்கவஸ்திரம், எல்லாவற்றையும்விட ஏழெட்டு நீட்டிக்கொண்டு விளங்கும் உச்சிக்குடுமி இவ்வளவும் சேர்ந்து அவரைக் குடும்பஸ்தர் என்று முறையிட்டன.
வந்தவர், "இந்த வீட்டுக்கு வாடகை என்னவோ ?" கேட்டார்.
"வீடு பூராவும் வாடகைக்கு விடுவதில்லை. இதோ பாருங்கோ! இந்தச் சமையலறை, இந்தக் கூடம்; அதோ எதிர்த்தாப் போலிருக்கிறதே அந்த ரேழி அறை - அது வரைக்கும்தான் வாடகைக்கு விடப்படும். வாடகை பன்னிரண்டே முக்கால் ரூபாய் ஆகும். அதைத் தவிர வீடு கூட்டும் கூலி,தாம்புக் கயிறு வாங்க, துடைப்பம் வாங்க இதற்கெல்லாம் 'எக்ஸ்ட்ரா' செலவு. அதில் பாதி நீங்கள் கொடுக்க
ஒண்டுக் குடித்தனம் 21. வேண்டும். இன்னும் மாதத்தில் பதினைந்து நாள் தெருவில் விளக்குப் போட வேண்டும். நாங்கள் பதினைந்து நாள் போடுவோம். சரிக்குச் சரியா போயிடும். கிருஷ்ண பக்ஷம் பூராவும் நீங்கள் விளக்குப் போடுங்கோ; சுக்ல பக்ஷம் பூராவும் நாங்கள் போட்டுவிடுகிறோம். தெரிந்ததா? இதைத் தவிர்த்து உங்ககளுக்குத் தனியாக ஓர் வெந்நீர் அறை உண்டு. அதை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். கூடத்துச் சுவரிலேயோ, உள் சுவரிலேயோ, ஆணி கீணி அடிக்கப்படாது. வீட்டைக் கண்ணாடி மாதிரி வைத்துக்கொள்ள வேண்டும். தெரிஞ்சுதா?" என்று வழக்கப்படி ஒரு குட்டி லெக்சர் அடித்து முடித்தேன். இந்த லெக்சரை ஒண்டுக் குடித்தனக்காரரிடம் ஒப்புவிப்பதற்காகப் பாடம் பண்ணி வைத்திருக்கிறேன். இதுவரையில் வந்தவர்கள் என் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு, "நாளைக்கு வருகிறேன்" என்று போய் விடுவார்கள். ஆனால் போனவர்கள் திரும்பி வருவதில்லை. இந்த நபரோ என் பிரசங்கத்துக்குச் சிறிதும் சளைக்கவில்லை.
"சரி, பரவாயில்லை; கூரையில் ஒட்டடை, சிலந்திப் பூச்சிக் கூடு இதெல்லாம் இருக்கே, வாரத்திலே ஒருநாள் இதெல்லாம் பழுது பார்க்கவேண்டும் ஸார். இப்படி வீட்டை வைத்துக்கொண்டிருந்தால் யார் வருவார்கள்?" என்று எனக்கு அவர் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
"அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நீங்கள் இங்கு வரும் பக்ஷத்தில் அதையெல்லாம் சுத்தப்படுத்தித் தருகிறேன்" என்றேன்.
"வீடு ஒழுகும் போலிருக்கே?" என்றார்.
"ஒழுகவாவது? அப்படி ஒழுகினாலும் நான் 'ரிப்பேர்' பண்ணித் தருகிறேன். கவலைப்படாதீர்கள்” என்றேன்.
"புகை போக்கியிலே ஒரே கரியாயிருக்கிறதே?"
"அதுவும் 'கிளீன்' பண்ணிக் கொடுத்து விடுகிறேன்."
"அதெல்லாம் இருக்கட்டும், வீட்டிலே குழாய் உண்டா?" என்றார். "குழாயும் உண்டு, ஜலமும் வரும்" என்று பதில் கூறினேன்.
"சுவரில் மூட்டைப்பூச்சி இருக்கும் போலிருக்கே?" என்றார்.
எனக்குக் கோபம் கோபமாய் வந்தது. அடக்கிக் கொண்டேன்.
"ஊஹூம், பேசக்கூடாது; ஒரு பூச்சிகூட இங்கே நாடாது" என்றேன்.
"சாக்கடையைத் தினம் சுத்தம் பண்ணுகிறீர்களோ?" என்று கேட்டார்.
இந்த வீட்டில் நான்தான் சாக்கடை வாருகிறவன் என்று நினைத்துக்கொண்டார் போலும்.
"இதோ பாருங்கோ! வாராவாரம் சுத்தம் பண்ணுவதுண்டு. நீங்க ஒண்ணுமே கேட்க வேண்டாம். என் வீட்டை போலச் சுத்தமான வீட்டை இந்த டவுனிலே வேறு எங்குமே கண்டுபிடிக்க முடியாது."
நீங்க வேண்டுமானால் வந்து குடித்தனம் இருந்து பாருங்கோ. உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் வாடகையே கொடுக்கவேண்டாம் ஸார், இருந்துவிட்டுச் சொல்லுங்கோ" என்றேன்.
"உம்: கிணற்று ஜலம் உப்பாயிருக்குமோ?" என்றார்.
ஒரு டம்ளர் கிணற்று ஜலத்தை எடுத்துக்கொண்டுவந்து, "சாப்பிட்டுப் பாருங்கோ" என்றேன்.
"ஜலம் பரவாயில்லே" என்று கூறி, "ஆமாம், இங்கே சத்தம் கித்தும் ஏதாவது உண்டா? அல்லது ஒன்றுமில்லாமல் இடிஞ்ச கோவில் மாதிரி நிம்மதியாயிருக்குமா?" என்று பதில் சொல்ல முடியாதபடி கேட்டார்.
சத்தம் உண்டு என்று சொல்வதா? சத்தமே கிடையாது என்று சொல்வதா?
நான் வீட்டுக்குச் சொந்தக்காரனாயிருந்துகொண்டு இந்த மனுஷன் என்னைக் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு இஷ்டமில்லை.
"இதெல்லாம் என்ன கேள்வி ? உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது போலிருக்கிறது. நீங்கள் இந்த வீட்டுக்கு வந்துவிட்டீர்களானால் இதை விட்டுப் போகவே மாட்டேள். அப்புறம் நாம்பள்ளாம் ஒரு குடும்பம் மாதிரிதான்" என்று சிரித்துக்கொண்டே கூறினேன்.
"உமக்குக் குழந்தைக் குட்டிகளுண்டா?" என்று நான் கேட்கவேண்டிய கேள்வியை அவர் கேட்டார்.
"இனிமேல்தான் உண்டாகணும்..."
"அதிருக்கட்டும் வீணை, ஹார்மோனியம்... ஏதாவது?...." என்று கேட்டார்.
"பேசக்கூடாது... எங்க வீட்டில் யாருக்குமே பாட வராது" என்றேன்.
எருமை மாடு, பசுமாடு ஏதேனும் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி.
"ஹூம்; பால் வெளியிலேதான் வாங்குகிறேன் " என்றேன்.
"இருந்தால் லக்ஷ்மீகரமாய் இருக்குமே! கிடக்கட்டும்; குலைக்கிற நாய் கீய் இருக்கிறதா?" என்றார் மேலும். எனக்கு ஆத்திரம் பொங்கிற்று. உடனே வாடகைப் பணம் ஞாபகம் வர அடங்கிப் போயிற்று.
"நாயே கிடையாது ஸ்வாமி. இனிமேல் ஏதாவது வந்தால்தான் உண்டு" என்று சொல்லிவிட்டு, "ஐயா, நான் எழுதும் பேனாமட்டும், 'கிறீச் கிறீச்' என்று சத்தம் போடும்" என்று எச்சரித்தேன்.
"அதனால் பரவாயில்லை" என்றார். பிறகு தான் அடுத்த சனிக்கிழமை குடி வருவதாகச் சொல்லிவிட்டுப் போனவர் நான் எதிர்பாராத விதமாய்க் குடியும் வந்துவிட்டார்.
✽
அவர் குடும்பத்தில் இருந்த ஒன்பது ஜீவன்களையும் நவக்கிரகங்கள் என்றால் ரொம்பப் பொருத்தமாய் இருக்கும். அவருடைய பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. ஹார் மோனிய சகிதமாய், அப்பப்பா! அது 'விடமுசாயவே' பாட ஆரம்பித்துவிட்டால், சுற்றுப் பக்கத்தில் ஏழேட்டு வீடுகளே அதிர்ந்து விடும். அந்தக் குடித்தனத்தில் யாருமே தூங்கமாட்டார்கள். நான் மட்டும் எப்படித் தூங்கமுடியும்? அவர் வந்து ஒரு மாதமாகியும் இன்னும் வாடகை கொடுத்த பாடில்லை. அன்றைக்கு வந்ததும் வராததுமாய் வாடகை என்னவென்று முதல் கேள்வி கேட்டானே எதற்காகக் கேட்டான்? நாளாக ஆக அந்த ஒண்டுக் குடித்தனக்காரனின் முழு யோக்யதையும் தெரிந்தது.
ஊரிலுள்ளவர்கள் என்னிடம் ரகசியமாக வந்து, 'ஐயையோ! அவனையா சேர்த்தாய்? அவன் பெரிய பொல்லாதவனல்லவா!" என்று துக்கம் விசாரித்தார்கள்.
இப்பொழுது கூடம் முழுவதும் ஆணியடித்துப் படங்களை மாட்டி வைத்திருக்கிறான். தினந்தோறும் காலையில் எழுந்ததும் வரட்டுத் தவளை மாதிரி நாலு ஸம்ஸ்கிருத சுலோகங்களைத் திரும்பத் திரும்ப நூறு தரம் சொல்ல ஆரம்பித்து விடுகிறான். அவன் மூட்டை முடிச்சுகளோடு சுமார் ஐயாயிரம் மூட்டைப் பூச்சிகளும் என் வீட்டுக்குக் குடிவந்து விட்டன. தெருவில் ஒரு பட்சத்திலும் அவன் விளக்குப் போடும் வழக்கம் கிடையாது.
வீட்டுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும் துடைப்பத்துக்கு ஒரு ஈர்க்குச்சிகூட அவன் வாங்கிப் போடவில்லை. ஆனால் பல் குத்துவதற்கென்று என் வீட்டுத் துடைப்பக் கட்டையிலிருந்து குச்சியை உருவிக்கொண்டு போகாத நாள் கிடையாது.
அவன் பசங்கள் செய்யும் லூட்டியோ சகிக்க முடியவில்லை. தவளை, நண்டு, ஊரிலிருக்கும் தென்னங்குறும்பைகள் ஓட்டாஞ்சல்லி அத்தனையும் 'ஸ்டாக்' சேர்க்கின்றன. நாயோடு அவை பண்ணும் கலாட்டாவை நான் என்ன சொல்ல?
அவன் மனைவி வாசலில் கூடைக்காரியைக் கூப்பிட்டு விட்டாளானால் போதும்; அடுத்தநாள் முதல் அந்தக் கூடைக்காரி இந்த வீட்டுப் பக்கம் நாடமாட்டாள். அவன் தன் குழந்தைகளுடன் ஸ்நானம் பண்ண ஆரம்பித்துவிட்டால் கிணற்றண்டை ஒரு 'பக்கிங்ஹாம்' சாக்கடையே தயாராகிவிடும்.
போன மாதத்தில் ஒருநாள் துணிச்சலாக அவனிடம் சென்று சென்றமாத வாடகையைக் கேட்டேன்.
"நாமெல்லாம் ஒரு குடும்பம் மாதிரி இருக்கலாம் என்றேளே?" என்று சிரித்து மழுப்பிவிட்டு நடந்து விட்டான்.
✽
இன்னொரு மாதம் கழிந்தது. மறுபடியும் தைரியமாக அவனை அணுகிக் கேட்டேன். "ஏன் ஐயா. வீடு சௌகர்யமாயில்லை என்றால் வாடகையே கொடுக்க வேண்டாமென்று சொன்னீரே? இங்கே என்ன வாழ்றது? ஒரு கூடைக்காரி கூட இந்த வீட்டை எட்டிப் பார்க்க மாட்டேங்கறாள். கிணற்றங்கரை யெல்லாம் சாக்கடையாயிருக்கு; ஒரே மூட்டைப்பூச்சி மயம். இந்த லட்சணத்தில் வாடகை கேட்க வாயிருக்கா? மூதேவி மாதிரி இருந்த வீட்டிலே ஒரு மாட்டை கட்டினேன். இரண்டு மூன்று குழந்தைகள் வந்ததில் லக்ஷ்மீகரம் ஏற்பட்டது. வீட்டுக் காவலுக்கு நாய் வேறே. எல்லாம் நான் கொண்டுவந்தவை. வாடகை வேணுமாம்! வாடகை! உமக்குத் தெரிந்த விதத்திலே வசூலித்துக் கொள்ளும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
இவணை வீட்டைவிட்டுக் கிளப்ப ஏதாவது ஒரு யோசனை சொல்லுங்களேன்!