ரங்கோன் ராதா/அத்தியாயம் 11
1
தொகுதங்கம், தனக்குச் சில மாதங்களில் மரணம் சம்பவிக்கும் என்று சோதிடன் எவனோ கூறினது கேட்டு, என்னிடம் கூறிக் கோவென அழத்தொடங்கியதும், அதுவரை மற்போருக்காக ஒருவர் வலிவை, மற்றவர் அறியும் பொருட்டு எதிர் எதிர் நின்று உற்று நோக்கியபடி இருப்பது போல் இருந்து வந்த நான், அவளை அருகே இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டு, கண்ணீரைத் துடைத்து, "அடி பேதைப் பெண்ணே! உன்னை நான் மகா புத்திசாலி, தைரியசாலி என்று அல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். என்ன பித்தமடி உனக்கு. எவனோ பிதற்றியதைக் கேட்டுக் கொண்டு அழலாமா? அடி அசடே! யார் அந்த மடையன்? எப்படித் துணிந்து சொன்னான் அந்த வார்த்தையை? அவனிடம் நீ என்ன கேள்வி கேட்டாய்? அவன் வாய்த்துடுக்குக் கொண்டவனாக இருக்கவேண்டும். இல்லையானால் இவ்விதமான அவலட்சணப் பேச்சைக் கூறுவானா?
அவன் கூறினதைக் கேட்டுச் சிரித்துவிட்டு, 'போடா மகா பெரிய அறிவாளிதான் நீ' என்று கூறுவதை விட்டு, அவன் பேச்சை உண்மை என்று நம்பி அழலாமா! தங்கம்! இதோ பார் இப்படி! என்னடி உனக்கு? எவனோ ஒரு மூடன் உரை கேட்டு, இப்படி மதி மயங்குவதா?" என்று பலப்பல கூறி அவளைத் தேற்றினேன். தங்கமோ விம்முவதை விடவில்லை. "அக்கா, நானும் சோதிடர்களின் உரையை நம்புவதில்லை. உனக்கே தெரியுமே, நான் தான் எதற்கும் துருவித் துருவிக் காரணம் கேட்பவளாயிற்றே. எந்தப் புரட்டையும் உடனே நம்பிவிடும் பேதையல்ல. இந்தச் சோதிடன் சொன்னது கேட்டு மட்டும் நான் நம்பினதற்குக் காரணம் இருக்கிறது. ஒன்று சொல்கிறேன், கேள் அக்கா! பெரும்பாலும் இந்தச் சோதிடர்கள், உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களிடம் முகஸ்துதியான வார்த்தை பேசி, மூன்று உலகமும் உங்கள் காலடியில் விழும்! உம்முடைய எதிரிகள் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்து ஒழிவார்கள்! உங்கள் மனம் கருணை வெள்ளம் கொண்டது! என்றெல்லாம் கூறுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே நான், என் ஜாதகத்தைச் சோதிடனிடம் கொடுத்தபோது வள்ளியின் ஜாதகம் என்றேன்.
அவன் நம்புவதற்காகவே, என் ஜாதகக் குறிப்பை வேறோர் காகிதத்தில் எழுதி, என் பெயரைப் போடாமல் வள்ளி என்று போட்டுத் தந்தேன். அவன் அந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, இன்னும் ஆறு மாதத்திலே இந்த வள்ளி இறந்துவிடுவாள் என்று கூறினான். நான் நம்பாமல் எப்படி இருக்க முடியும்?" என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள். இதென்னடா சங்கடம் என்று நான் எண்ணினேன். "வள்ளி! யாரவன் அந்த வாயாடி?" என்று கேட்டேன். அவள், "அவர் பெரிய சோதிடர்தானம்மா! வாழ்முனி அவருக்குப் பிரத்யட்சம்" என்றாள். "சரியான மூடத்தனம்! நீயும் சேர்ந்துதான் இப்படி, தங்கத்தின் மனதைக் குழப்பி விட்டிருகிறாய்" என்று அவளையும் கண்டித்தேன். தங்கம் சோகத்துடன், "அக்கா! உனக்கு என் மேல் இருக்கும் ஆசையின் காரணமாக இப்படிப் பேசுகிறாய்.
எனக்கென்னவோ அவன் சொன்னது முதல், மார்பு கூட அடிக்கடி ஒருவிதமாக வலிக்கிறது. இரவிலே தூக்கம் நிம்மதியாக இருப்பதில்லை. கெட்ட நினைவுகள்! என் மனதிலே ஒரு விதமான திகில் பிடித்துக் கொண்டு விட்டது" என்று சொன்னாள். அவளைச் சமாதானப் படித்த நான், சோதிடத்தின் போக்கு, சோதிடர்களின் புரட்டு, அவர்களின் வார்த்தைக்குப் பலவகையான அர்த்தம் இருக்கிற வேடிக்கை ஆகியவற்றைச் சொன்னேன். அவளோ திருப்தியடையவில்லை. "அப்பாவிடம் சொல்லி அவனை நையப் புடைக்கச் சொல்கிறேன்" என்றேன். தங்கம், "அப்பா காதிலே விழுந்தால் அவனை அடிப்பார். ஆனால் அவரும் என்னைப் போலவேதான் வேதனைப்படுவார். ஏனெனில், அவருக்கு அந்தச் சோதிடனிடம் ரொம்ப நம்பிக்கை. நமது மிராசு கேஸ், மேல் கோர்ட்டில் இருந்தபோது அவன் கூறிய சோதிடம் பலித்தது. அதிலிருந்து அப்பாவுக்கு அவன் வார்த்தையிலே அபார நம்பிக்கை. ஆகையாலேதான் நான் அவன் சொன்னதை அப்பாவிடம் சொல்லக்கூட இல்லை. சொன்னால், அவர் இந்த வயோதிகப் பருவத்திலே இதுபற்றி வேறு மனம் கஷ்டப்படுவார். ஏற்கெனவே உன்னால் அவர் ஏக்கம் அனுபவிக்கிறார். இனி என் கதியும் இப்படி ஆகும் என்று தெரிந்துவிட்டால் படுத்த படுக்கையாகிவிடுவார். அக்கா நாம் இருவர் பிறந்து அவரைப் படாதபாடு படுத்திவிட்டோ ம்" என்று கூறித் துக்கித்தாள்.
"நீ என்ன சொன்னாலும் சரி; நான் துளிகூட நம்ப மாட்டேன். எனக்கு இப்போது இப்படிப்பட்ட புரட்டர்களின் போக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டது. போகட்டும்! இந்த மாதிரி புரட்டர்கள், ஆபத்து வரும், மரணம் சம்பவிக்கும், கிரஹம் போதாது என்றெல்லாம் கூறிப் பயங்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டார்களே! இந்த ஆபத்து நீங்க ஆயிரம் கண்ணுடையாளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்! இலட்ச தீபம் ஏற்றவேண்டும்! சொர்ணத்தால் சர்ப்பம் செய்து சொக்கநாதன் கோயிலுக்குத் தானம் தரவேண்டும். நூறு பண்டாரங்களுக்குச் சோறு போடவேண்டும் என்று ஏதாவது உளறுவார்களே! அதுபோல இவன் ஒன்றும் சொல்லவில்லையா?" என்று கேட்டேன். "சொன்னான்" என்றாள் தங்கம். "என்ன?" என்று கேட்டேன். தங்கம் அதற்குப் பதில் கூறவில்லை. நெடுநேரம் ஏதேதோ பேச்சை மாற்றியபடி இருந்தாளே தவிர, என் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நானோ விடவில்லை. சொன்னால்தானாயிற்று என்றேன். "சொல்லி என்ன பயன்?" என்று சோதித்தாள் தங்கம். "சொல்லடி! என்னதான் செய்ய வேண்டுமாம். ஆபத்து போக" என்று கேட்டேன். அவள் அதற்கு நேர்முகமாய்ப் பதில் கூறவில்லை.
2
தொகு"அக்கா! இன்று நாம் இருவரும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அத்தானை நான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது உனக்கு ஆத்திரத்தைத்தானே ஊட்டிவிட்டது" என்று கேட்டாள். இவ்வளவு தைரியமாகச் சிக்கல் நிறைந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகப் பேசுகிறாள். தங்கத்தின் சாமர்த்தியம் அதுதானே.
"தங்கம்! மனதிலுள்ளதை மறைக்காமல் தானே பேச வேண்டும்? ஆத்திரமா எனக்கு என்று கேட்கிறாய். இருக்காதா? பிறக்காதா?" என்று நான் அவளைக் கேட்டேன்.
"உன்னை ஆத்திரப்படச் செய்வதால் எனக்கென்ன அக்கா இலாபம்? யோசித்துப் பதில் சொல்லு. உன்னுடைய அன்பைப் பெறவேண்டும் என்று நான் எண்ண முடியுமே தவிர, உன் கோபத்தைக் கிளப்பிவிடுவதிலே எனக்கு விருப்பம் இருக்க முடியுமா? நீயே சொல்லு!" என்று அவள் வேறோர் கேள்வி, முன்னதைவிடக் கூர்மையான அம்பு போட்டாள்.
நான் பேசின பேச்சைக் கேட்ட அந்தப் பேயோட்டி என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னான்; தங்கம் பேசுவதைக் கேட்டால், என்ன சொல்வானோ தெரியவில்லை.
"தங்கம்! வளைத்துப் பேசுவது வம்பில்தான் போய் முடியும். எனக்கு உன் மீது இருந்த அன்பு மாறினதும், நமக்குள் பகை மூண்டதும், உண்மையில் நீ என் கணவரைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு நடைபெறுகிறது என்று நான் அறிந்ததால்தான். நான் மட்டுமல்ல! உலகிலே எந்தப் பெண்ணும் ஆத்திரமடையத்தான் செய்வாள். மரக்கட்டையா நான்? என் கணவர் வேறொருத்தியை, அவள் என் கூடப் பிறந்தவளாகக் கூட இருக்கட்டும், எதற்காக இன்னோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும்? யாருக்குத்தானடியம்மா, கோபம் வராது!" என்று நான் கேட்டேன். எனக்குக் கொஞ்சம் கோபந்தான். அவளோ சாந்தமாகப் பேசினாள்.
"அக்கா! நான் பேசுவதைப் புரிந்துகொண்டு பதில் சொல்லு. நான் நீ ஆத்திரப்பட்டது தவறு, ஆத்திரப்படக்கூடாது என்று சொல்லவில்லையே. அத்தான் என்னைக் கலியாணம் செய்துகொள்ள எண்ணுகிறார் என்று தெரிந்த பிறகுதானே ஆத்திரம் பிறந்தது என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக் கொண்டாய். அடுத்த கேள்வி நான் கேட்டது உன் ஆத்திரத்தைக் கிளப்பி நான் அடையப் போகும் இலாபம் என்ன என்பது. அதற்குப் பதில் கூற வேண்டிக்கொள்கிறேன். பதில் கூறாவிட்டால் போகிறது! அக்கா கொஞ்சம் யோசித்துப்பார் நீயாக, தனியாக இருக்கும் போதாகிலும்!" என்று தங்கம் சொன்னாள். என் கோபம் அதிகரித்தது. "என்ன இருக்கிறது யோசிக்க! சிறு பிள்ளைகள் தும்பியைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் விளையாட்டு என்று எண்ணுகிறார்கள். அது போல நீ என் வாழ்விலே நஞ்சு கலந்துவிட்டு, அது சர்வ சாதாரண விஷயம் என்று எண்ணுகிறாய். தைரியமாக என்னையே கேள்வி கேட்கிறாய். என் வாழ்வைப் பாழாக்கப் பார்க்கிறாய். என் உள்ளத்திலே இருக்கும் சந்தோஷத்தை அழிக்கிறாய். இது தெரியவில்லையா உனக்கு. இதை யோசித்து வேறே பார்க்க வேண்டுமா நான். நீ சுகப்பட்டு, சந்தோஷப்பட்டு இருக்க எண்ணங்கொண்டு, என் வாழ்வைக் குலைக்கிறாய்" என்று சொன்னேன். தங்கத்தின் புன்னகை, என்னை ஈட்டிபோல் குத்திற்று. அவள் தந்த பதிலோ பளிச்சென்று கன்னத்தில் அறைவது போலிருந்தது.
"அக்கா! அவரவர்கள் தங்கள் தங்கள் வாழ்வு சுகமாக, சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றுதான் எண்ணுவார்கள், அது தவறல்ல! நானும் அதுபோல எண்ணிடுவதிலே குற்றம் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை யோசிக்காமலே நீ பேசுகிறாய். நானும் சந்தோஷமாக இருக்கவும் நீயும் சந்தோஷமாக இருக்கவும் முடியாதா? உன் வாழ்வைக் கெடுத்துத்தானா நான் சுகம் தேடிக் கொள்ள வேண்டும்? ஏன் அக்கா, அதை எண்ணிப் பார்க்கவில்லை நீ?" என்று கேட்டாள்.
"எப்படி முடியும்? நீதான் என் கணவருக்கு மனைவியாகி, மனமகிழ்ச்சி தேடிக்கொள்ள முனைந்து விட்டாயே! சக்களத்தியாகக் கிளம்பிவிட்டு, சாவதானமாகப் பேசிக் கொண்டும் இருக்கத் துணிகிறாய். தங்கம்! இதோ பார். நீ சுகப்படுவதற்காக என் வாழ்விலே வேதனையை அனுபவிக்க வேண்டுமா? ஏனடி உனக்கிந்த கெடுமதி?" என்று பதைபதைத்துக் கேட்டேன்.
"அக்கா! நான் சுகமடைய, வாழ்விலே சந்தோஷம் தேட ஏன் வேறு ஒருவரை மணம் செய்து கொள்ளக்கூடாது! உலகிலே ஆடவரே இல்லையா? இருக்கும் ஆடவர் அத்தனை பேரும் தங்கம் குரூபி என்று தாலி கட்ட மறுத்துவிட்டார்களா? நான் உன் தங்கைதானே! அழகற்றவளல்லவே! செல்வமும் சீரும் நமக்குள் சமமாகத்தானே இருக்கிறது! நான் வேறொருவரைக் கலியாணம் செய்துகொண்டு இன்பமாக இருக்கலாம்; அது போலவே நீயும் இருக்கலாமல்லவா?" என்றாள்.
3
தொகு"என்னடி இது! நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்? உன்னை மணம் செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் இராது. என்னிலும் நீதான் அழகி! அதைக் கண்டு பூரித்த கண்கள்தானே இவை! உன் வயதும் வசீகரமும் வளர வளர, என் மனதிலே, உன் மீது அன்பும் வளர்ந்தபடிதானே இருந்தது. உனக்குத் தக்கமணாளன் கிடைத்துத் திருமணம் நடக்க வேண்டும், கண்ணால் கண்டுகளிக்க வேண்டும் என்று தானே நான் ஆவலாக இருந்தேன். நீதானே என் ஆசையிலே கல் வீசத் துணிந்தாய். யார் வேண்டாமென்றார்கள், நீ ஓர் மணாளனைத் தேடிக் கொள்வதை?" என்று நான் கேட்டேன்.
"இருவருமே ஒரே விதமான கேள்வியை கேட்டுக்கொள்கிறோமே அக்கா! அதற்குப் பதில்தான் என்ன? அழகு, இளமை, செல்வம், வசதி எல்லாம் இருக்கிறது. வேறு ஒருவரைக் கலியாணம் செய்துகொண்டு சுகப்படலாம்; சந்தோஷமாக இருக்கலாம்; நீ துக்கப்பட்டு அதனாலே நான் சந்தோஷப்பட வேண்டும் என்பதில்லை. இருவருமே சந்தோஷமாக இருக்கலாம். அதற்கான சௌகரியத்துக்குக் குறைவில்லை! ஆனால் அது முடியவில்லை! ஏன் அக்கா?" என்று மறுபடியும் கேள்வி போட்டு மடக்கினாள்.
"ஏனா! பேராசை பிடித்த என் புருஷர், பணத்தாசைக்கு அடிமையாகி, நமது குடும்பச் சொத்திலே உனக்கு வரவேண்டிய பாதி பாகம், நீ வேறு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால், அவனுக்குப் போய்விடுமே என்று எண்ணி உன்னையும் தானே கலியாணம் செய்து கொண்டு, மொத்தச் சொத்தையும் தானே அடைய வேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டு, உன் மீது வலை வீசினார்; நீ அதிலே விழுந்தாய். இருவரும் சதிசெய்து என்னை இக்கதிக்குள்ளாக்கினீர்கள். பேய் பிடித்தவள் பித்தம் பிடித்தவள் என்று தூற்றினீர்கள்" என்று ஆத்திரமும் அழுகையும் பொங்கும் குரலிற் சொன்னேன்.
"நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் மறைக்கவில்லை. அத்தான், பணத்தாசை பிடித்துத்தான் என்னை மணம் செய்து கொள்ளத் தந்திரமெல்லாம் செய்தார். அவர் எண்ணத்தையும் ஏற்பாட்டையும், தெரிந்துதான் கூறியிருக்கிறாய்! ஆனால், முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறாயே அக்கா! அத்தான், தன் சுயநலத்துக்காக, இந்தச் சூது செய்திருக்கிறார். அது விளங்கிவிட்டது. நானும் அதனை மறைக்கவில்லை. ஆனால், அந்த ஏற்பாட்டுக்கு அவருடைய தந்திரத்துக்கு, சூதுக்கு, நான் ஏன் சம்மதிக்கிறேன்? அதற்கு காரணம் என்ன? அதை யோசித்தாயா?" என்று கேட்டாள்.
"வலையில் வீழ்ந்துவிட்டாய்" என்று நான் பதில் சொன்னேன். ஆனால், எனக்கே, அந்தப் பதில் திருப்திகரமாக இல்லை. அவள் இலேசாகச் சிரித்துவிட்டு, "அத்தானால், தன்னிடம் வியாபார நிமித்தமோ பஞ்சாயத்துக் காரியமாகவோ வருபவர் மீது வலைவீச முடியும்! அக்கா! என்னைச் சரியாகப் பார்த்து விட்டுச் சொல்லு. என் மீது அவரால் முடியுமா? அவர் அந்தஸ்தின் அறிகுறி, செல்வத்தின் சின்னம், கௌவரமான நடை, நொடி பாவனை, அவரால் ஊரிலே மதிப்புத் தேடிக் கொள்ள முடியும். அவ்வளவுதான் முடியுமே ஒழிய, ஒரு இளமங்கையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவரிடம் என்ன இருக்கிறது! அவர் வலை வீசினார். அதிலே நான் வீழ்ந்தேன் என்று கூறுகிறாய், என்னை அறிந்துகொள்ளாமல். உன் தங்கை ஏமாளியல்ல; அத்தான் மங்கையரை மயக்கிடும் மாந்தரீகரல்ல! அவர் வலைவீசியது என் மீதுமல்ல, சொத்தின் மீது; ஆனால் அந்தச் சொத்தைக் காட்டி அவரைச் சொக்கவைத்து என் அருகே வரும்படி செய்தவள் நான்; வலையை நானும் வீசினேன் அவர் மீது! ஆனால் அவருக்காக அல்ல! அவரிடம் மயங்கி அல்ல! உலகிலே அவரே கடைசி ஆடவர் என்பதற்காக அல்ல! உன் வாழ்வை வேதனையுள்ளதாக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல! எனக்காக - அக்கா - என் உயிருக்காக - நான் பிழைக்க சோதிடன் குறிப்பிட்ட பேராபத்திலிருந்து தப்ப" என்றாள்.