ரங்கோன் ராதா/அத்தியாயம் 14
1
தொகுமகனே! என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத் தாய்மார்களைப்போல நானும் உன்னைப் பிறந்தது முதல் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் சேவை செய்திருந்தால், உன்னிடம் எவ்வளவு பேசியிருப்பேன், அவ்வளவும் இப்போது பேசிவிடுகிறேன் என்று வைத்துக்கொள். என் வேதனையைக் குறைத்துக் கொள்ள வேறு வழி இல்லை.
எனக்கும் என் கணவருக்கும் இடையே இருந்து வந்த பேத உணர்ச்சி நாளுக்கு நாள், நிமிஷத்துக்கு நிமிஷம் விரிந்து கொண்டே வரலாயிற்று. கொடுமை செய்வதன் மூலம் என்னை அடக்கிவிடலாம் என்று அவர் எண்ணினார். நானோ கொடுமை தாளமாட்டாமல் எதிர்க்கத் தொடங்கினேன். என் சக்தி அவருக்கு மட்டுமல்ல, எனக்கே அப்போதுதான் சரியாகத் தெரிந்தது. எங்கே ஒளிந்து கொண்டிருந்ததோ அவ்வளவு சக்தியும் அதுவரையில். என்னைக் கண்டு அவர் நடுநடுங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது கண்டு நான் களிப்படைந்தேன். என் ஆர்ப்பாட்டம், நான் சின்ன வயதிலே பார்த்த அல்லி நாடகத்தை எனக்குக் கவனமூட்டிற்று. அதனால் நான் பெருமையும் அடைந்தேன். தர்பார் நடத்துகிறோமல்லவா என்று எண்ணிப் பூரித்தேன்.
அல்லி நாடகமே, ஆண்களைப் பெண்கள், இஷ்டப் பட்டால் அடக்கியாள முடியும் என்பதை எடுத்துக்காட்டவே எழுதப்பட்டதோ என்று கூட நினைத்தேன். ஆனால், சில நிமிஷங்களிலே எனக்குப் பயம் பிறந்துவிட்டது. ஏனெனில், அல்லி நாடகத்தின்படி, இவ்வளவு தர்பார் நடத்தி ஆண்களை நெருங்க விடாமல் மிரட்டி ஆட்சி செய்து வந்த அதே அல்லி ராணியை, தந்திரத்தாலே, அர்ஜுனன் தோற்கடித்துவிட்டான் - தாலி கட்டிவிட்டான் - அந்தத் தாலி கட்டியான பிறகு, அல்லியின் தர்பார் நின்று விட்டது. அதுபோல, நாமும் எவ்வளவோ ஆர்ப்பாட்டம் செய்கிறோம், என்ன செய்வதென்று தெரியாமல், அவர் திண்டாடும் அளவுக்கு அவரை ஆட்டிப் படைக்கிறோம் என்றபோதிலும், கடைசியில், அப்படிப்பட்ட அல்லிக்கே தோல்வி நேரிட்டதுபோல நமக்கும் நேரிட்டுவிடுமோ என்ற எண்ணம் உண்டாயிற்று, பயமும் பிறந்தது. அவரை மிரட்டுவதிலே ஏற்பட்ட சந்தோஷத்தை இந்த எண்ணம் குறைக்கத் தொடங்கிற்று. மேலும், அவர் என்ன விதமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்போகிறார் என்பது தெரியாததால் பயம் மேலும் கொஞ்சம் அதிகரித்தது.
ராதா எப்போதாவது என்னிடம் பேசும்போது ஒரு விஷயம் சொல்லுவாள். இப்போது எண்ணிப் பார்த்தால் அவள் சொன்னது முற்றிலும் சரி என்று தோன்றுகிறது. "அம்மா! மக்களின் குணமும், நடவடிக்கைகளும் இயற்கையாக உள்ள சில குணாதிசயங்கள் நீங்கலாக, மற்றவைகள் அவரவர்களின் வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையினால் ஏற்படும் சில நடவடிக்கைகள் இவைகளைப் பொறுத்தே ஏற்படுகின்றன" என்பாள். என் வரையில் பார் தம்பி! எனக்கும் அவருக்கும் போர் மூண்ட பிறகு, புதுப் புதுக் குணங்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டன. அவருடன் வேறு யாராவது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், நாங்கள் சந்தோஷமாக இருந்த காலத்திலே, நான், யார், என்ன பேசுகிறார்கள் என்று கவனம் செலுத்தமாட்டேன். சில நேரத்தில் பெருமை அடைவேன்.
என் புருஷரிடம் யாராரோ பெரிய மனுஷர்கள் ஏதேதோ முக்கியமான விஷயங்களைப் பேச வருகிறார்களே என்பதால். என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல்கூட அதிகம் இராது. அப்படிப்பட்ட நான், அவரிடம் வெறுப்படைந்து, எதிர்த்து நடக்க ஆரம்பித்த பிறகு, யாராவது அவரிடம் பேசவந்தால் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று துடிக்க ஆரம்பித்தேன். கொடுமை புரிபவரும், பேராசைக்காரரும், நயவஞ்சகருமான இவரை ஒரு பெரிய மனிதர் என்று எண்ணிக் கொண்டு ஊரிலே சில பைத்தியக்காரர்கள் இவரிடம் நியாயம் கேட்கவும் வருகிறார்களே! குடும்பத்துக்குள்ளேயே வஞ்சகச் செயல் புரியும் இவரிடம் ஊர்ப் பஞ்சாயத்தை ஒப்படைக்கிறார்களே! இது என்ன அநியாயம்? சொந்த மனைவிக்குத் துரோகம் செய்யத் துணிந்து, கட்டுப்பாடாகக் கபட நாடகமாடுகிறார்.
ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு வேதனைப்படச் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்கிறார். ஊரார் பழிக்கவும், தூற்றவும் இழிவாகப் பேசவுமான நிலைமையைக் கூட எனக்கு ஏற்படுத்தத் துணிந்தார். இப்படிப்பட்டவருக்கு, ஊரிலே யோக்கியர் என்ற பட்டம்! இவரிடம் ஊராருக்கு மதிப்பு! இவரிடம் ஊரார் தங்கள் விவகாரங்களைக் கூறிப் பரிகாரம் தேடுகிறார்கள்! பார் தம்பி! இந்த ஊராருக்கு, அவரிடம் மதிப்பு ஏற்பட்டதற்கு ஏதாவது தக்க காரணம் உண்டா? பணம் இருக்கிறது அவரிடம் என்பது தவிர! அவர் செய்த கொடுமைகளுக்காக, ஊரார் அவரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; திருத்தி இருக்கவேண்டும். தண்டித்துக்கூட இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பைத்தியக்காரர்கள், குற்றம் பல செய்தவரை, நியாயாதிபதியாக்கினார்கள்! அவர்கள், ஒரு மனைவியை அவளுடைய கணவன், எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம்; அது சகஜம் என்று எண்ணுகிறார்கள் போலிருக்கிறது.
2
தொகுஊராரின் போக்குக் கண்டு நான் கொதிப்படைந்தேன். இனி என் சார்பில் நின்று வாதிடவோ, நீதி கேட்கவோ, நான் தவிர வேறு யாரும் இல்லை என்று திட்டமாகத் தெரிந்து கொண்டேன். என் கண்ணீரையும் பெருமூச்சையும் யார் கவனித்தார்கள்! நீயோ கருவில் இருந்தாய், உன் தாய் தணலிலே நின்றபோது! உலகில் நான் நிர்க்கதியாக நின்றேன். விரோதிகளால் சூழப்பட்டு இருப்பதுபோலவே எனக்குத் தோன்றிற்று. இந்நிலையில் அவருடைய கட்டுக்கு அடங்க மறுப்பது தவிர, எனக்கு வேறு மார்க்கமே தெரியவில்லை. ஆகவேதான் நான், ஆர்ப்பட்டக்காரியானேன். அநேகம் பெண்கள், வாயாடி, போக்கிரி, கட்டுக்கு அடங்காதவள், புருஷனையே எதிர்த்துப் பேசுபவள் என்றெல்லாம் கண்டிக்கப்படுகிறார்களல்லவா! அவர்களெல்லாம், என்னைப் போலக் கொடுமைக்கு ஆளானவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அன்பும் ஆதரவும் தேடுகிறாள் பெண். அதற்கு மாறாக, வஞ்சனையால் அவளைத் தாக்கினால், தம்பி! அவள் எப்படிப்பட்ட உத்தமியாக இருந்தாலும், என் நிலைக்கு வந்துவிடுவாள். பெரும்பாலான பெண்கள் கேவல நிலைமைக்கு வந்ததற்கே காரணம் இதுதான்.
கருவிலே நீ உருவாகிக்கொண்டிருந்த நாட்களிலே நான் இப்படிக் கதறிக் கொண்டிருந்தேன். கடைசியில், அவருடைய இஷ்டந்தான் நிறைவேறிற்று. திருத்தணி என்ற திவ்யக்ஷேத்திரம் கிளம்பினார்கள். தங்கத்தின் திருமண ஏற்பாட்டை ஓரளவு இரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்குக் காவலுக்கு வீட்டிலே ஆட்களை நியமித்துவிட்டு, அவர்கள் 'க்ஷேத்திரம்' சென்றார்கள்; திருமணம் முடிந்தது. புது மனைவியுடன், அவர் மைசூர் சென்றாராம். புது நாடகங்களைக் கண்டாராம். ஆனந்தமான வாழ்க்கையாம். இதை எல்லாம் கூடச் சென்றிருந்த ஒரு வேலையாள் எனக்கு விவரமாகப் பிறகு கூறினான். நான் கர்ப்பவதியாக இருக்கும் விஷயத்தைப் பற்றிக்கூட, அவரும் தங்கமும் பேசிக் கொண்டார்களாம். மகனே! இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது. அந்தச் சம்பவத்தை - அவள் சொன்னாளாம், என்ன இருந்தாலும் அக்காவுக்குக் குழந்தை பிறந்தால், உங்களுக்கு அவளிடம் உள்ள கோபமெல்லாம் போய்விடும் என்று. அதற்கு அந்த மகானுபாவர் சொன்னாராம், "சனியன்! என் தலைக்குக் கொள்ளியாக இருப்பதோடு விடவில்லையே! கர்ப்பம் வேறு இந்த இலட்சணத்திலே. இந்தப் பைத்தியக்காரிக்குப் பிறக்கும் குழந்தை எப்படி பிழைத்திருக்கும்! பைத்தியத்திலே அவளே கூடக் கொன்று விடவும் கூடும் - தப்பித் தவறிக் குழந்தை பிழைத்துக் கொண்டாலும், பைத்தியக்காரிக்குப் பிறந்தது பைத்தியமாகத்தானே இருந்து தொலைக்கும்" என்றாராம். தங்கம் சிரித்தாளாம். எப்படியடா மகனே இருக்கும் எனக்கு! கலியாணத்தை முடித்துவிட்டுச் சில நாள் கூட இருந்துவிட்டு உன் அப்பா வீடு வந்தார். நான் அவரிடம் பேசவில்லை. வீட்டிலே உட்கார்ந்திருந்தார் நெடுநேரம்; நான் சட்டை செய்யவில்லை. எப்படி என் மனம் இடங்கொடுக்கும்?
என் வேதனையும் முற்றிற்று. நீயும் பிறந்தாய்!
நீ பிறந்த சமயம் உன் அப்பா தங்கத்துடன் குலவிக் கொண்டிருந்தார் மைசூரில். உன்னைக் கண்டவுடன், நான் களிப்புக் கடலில் மூழ்கினேன் - என் பொருட்டு வாதாட ஒரு வீரன் பிறந்தான் - என்று களித்தேன். நீ, நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ச்சி அடைந்து, திடீரென்று வாலிபனாகி, மீசை கருக்கிடும் பருவமடைந்து, என்னைக் கொடுமை செய்யும் உன் அப்பாவை கண்டிக்கமாட்டாயா, அதைக் கேட்டு நாம் ஆனந்தப்பட மாட்டோ மோ என்று கூடப் பேதை நான் நினைத்தேன். உன்னை வளர்ப்பது தவிர, வாழ்க்கையிலே வேறு இன்பமான இலட்சியம் ஏது! உன்னை என் மகனாக மட்டுமல்ல, எனக்காக வாதிட வேண்டிய பொறுப்பை மேற்கொண்ட வீரனாக மதித்து வளர்த்து வந்தேன்.
இரண்டு மாதங்கள் கழித்தே அவர் வந்தார் தனியாகத் தான் - தங்கம் தனிக் குடித்தனம் நடத்தத்தானே முன்னாலேயே திட்டமிட்டிருந்தாள். வந்ததும், தோட்டம் சென்றார் பயிர் பச்சையைக் கவனிக்க. மாட்டுத் தொழுவத்திலே ஒரு கால் முறிந்து போயிருந்தது கண்டு, வேலையாளைக் கண்டித்தார் - பசு இளைத்துக் கிடந்ததாம்; அதற்காக உருகினார் - பாகற்கொடி வாடிவிட்டதாம்; அதற்காகப் பதைத்தார் - தோட்டத்துக் கிணற்று நீர் ஏதோ வாடை வீசுகிறது என்பதைக் கூடக் கண்டுபிடித்தார் - நீ தொட்டிலிலேதான் தங்கவிக்ரகம் போல் இருந்தாய் - நான் பக்கத்திலே இருந்துகொண்டு உனக்கு பணிவிடை செய்து கொண்டுதான் இருந்தேன் - அவர் - உன் அப்பா - என் புருஷர் - தொட்டில் பக்கம் கூட வரவில்லை! மகனே! உன்னைப் பார்க்கவேண்டுமென்று அவருக்கு எண்ணமே வரவில்லை. பெண், தாயாவது என்றால் மரணத்தின் வாசற்படி போய்த் திரும்புவது என்றல்லவா பொருள். அந்த நெருக்கடியிலிருந்து மீண்ட என்னை, அவர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மாட்டுத் தொழுவத்தைப் பார்த்துவிட்டு, கூடத்துப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்; அப்போது நீ வீறிட்டு அழுதாய் - அவர் அப்போதும் தொட்டிலண்டை வரவில்லை - என்னால் அந்தக் காட்சியைக் கண்டு சகிக்க முடியவில்லை.
3
தொகு"என்ன இது பெரிய சனியன்!" என்று வேறு கடுமையான குரலிலே கூறினார். உன்னையுமல்ல - என்னையுமல்ல - நம்மை மனதிலே வைத்துக்கொண்டு, வேலையாளைத் திட்டினார் அதுபோல. எனக்கு அதுகூடவா புரியாது மகனே! நாம் இருவரும் வெறும் ஜடங்களாக அவருக்கு ஆகிவிட்டோ ம். இதைவிட வேறு வேதனை என்ன வேண்டும். என் துக்கமனைத்தையும் போக்கிக் கொள்ள எனக்கு, ஒரே வழிதானடா இருந்தது - உன்னைத் தொட்டிலிலே இருந்து வாரி எடுத்து, அணைத்துக் கொண்டு, உச்சிமோந்து முத்தமிட்டேன். உன் அழகிய புருவங்களிலே நான் தீட்டியிருந்த மையும், என் கண்ணீரும் சேர்ந்து குழைந்து, உன் தங்கநிற மேனியைக் கறுப்பாக்கிற்று! அவர், தெருத்திண்ணையிலே உட்கார்ந்துகொண்டு, பெங்களூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த கலர்ச் சுண்ணாம்பைத் தடவி வெற்றிலை மடித்துப் போட்டுக்கொண்டு, எதிர் வீட்டுக்காரர்களிடம், மைசூர் மிருகக் காட்சிச் சாலையிலே தான் கண்ட அற்புதங்களைக் கூறிக்கொண்டிருந்தார்.
குடிசைகளிலும், மரத்தடியிலும், சாவடிகளிலும்கூட குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தந்தை உண்டு. இங்கோ என் செல்வம் தொட்டிலிலே இருக்க, என் கணவர் ஏறெடுத்தும் பாராமல், எதிர்வீட்டுக்காரருடன் மிருகக் காட்சிச்சாலையிலே கண்ட காட்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். கொல்லும் புலியும் கூட, இவர் போல் இருக்காது; என் நிலை எப்படியடா மகனே இருந்திருக்கும். அந்தஸ்து, ஐஸ்வரியம் எல்லாம் இருந்தும் நாம் இருவரும் அனாதைகளானோம்! அனாதைகள் கூடச் சுதந்திரமாகவாவது இருப்பார்கள், நமக்கு அதுவுமில்லை மகனே! அழாதே நீ!
தற்கொலை செய்து கொள்வது, அல்லது எதிர்த்துப் புரட்சி செய்வது என்ற எண்ணமெல்லாம் நீ பிறந்த உடனே மாயமாய் மறைந்துவிட்டன. எனக்கு வேலை இருக்கிறது; வாழ்ந்தாக வேண்டும்! தொட்டுத் தாலி கட்டியவனால் அலட்சியப்படுத்தப் பட்டாலும், நான் மனம் உடைந்துவிடக் கூடாது என்று தீர்மானித்துவிட்டேன் - உன்னை வளர்க்கும் சேவைக்காக என்னை நான் அர்ப்பணித்துவிட்டேன். சாக நேரம் இல்லை. உன்னை வாலிபனாகுமளவு வளர்க்க வேண்டும். யுத்தத்துக்காகத் தயாராக்கப்படும் வாளை, வீரன் எவ்வளவு ஆசையுடன் பார்ப்பானோ, அப்படி உன்னை நான் பார்த்துப் பூரித்தேன்.
தங்கத்துடன் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தார் உன் தந்தை. பகல் வேளைகளில் இங்கு இருப்பார் - பண்ணைச் செய்தி விசாரிக்க, கடை ஆட்களிடம் பேச, கிராமத்து விவகாரத்தைக் கவனிக்க, ஒவ்வோர் சமயம் சாப்பாட்டுக்கும் இருப்பார் - மாலை ஆனதும் புது மனைவியின் மனைக்குச் செல்வார். என்னிடம் பேசுவது கிடையாது - உன்னைக் கவனிப்பதும் கிடையாது. அவர் என்னை அலட்சியமாக நடத்திவரும் விஷயம் ஊராருக்குத் தெரியும்; தெருக்கோடியிலும் வம்பர் சபைகளிலும், "முதலியார் காரணமின்றி இந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டார், அவளை நோயும் பேயும் பிடித்தாட்டி, குணத்தையே கெடுத்துவிட்டது. அவர் மனம் முறிந்துவிட்டது. அதனால்தான், வீட்டிலே அவருக்கு நிம்மதியில்லை. வேறு கலியாணம் செய்து கொண்டார். அப்போதும் அவருடைய பெரிய மனது போன போக்கைப் பாருங்கள், ரங்கத்தின் சொந்தத் தங்கையைத்தான் கலியாணம் செய்து கொண்டார்" என்று பேசினர். என் எதிரிலேயே, என் வீட்டுக்கே வந்து, இதுபோல் அவருடன் சிலர் பேசுவார்கள். அவ்வளவையும் நான் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டேன். எல்லாம் உன் பொருட்டுத்தாண்டா கண்ணே!
4
தொகுஉனக்கு அழகான அலங்கார ஆடைகளை அணிவித்து நான் ஆசைப்படுவேன். நீ சிரிக்கும்போது கன்னத்திலே குழி விழும். அதைக் கண்டால் எனக்குப் பிரமாதமான சந்தோஷம்; பெருமையாகவும் இருக்கும்; ஏனெனில், எனக்கும் சிரித்தால் அப்படித்தான். உனக்குப் பொட்டிட்டு, தொட்டிலிலிட்டு நான் பாடுவேன். எப்போதோ சின்ன வயதிலே காதிலே கேட்ட பாட்டுகள் எல்லாம் தொட்டிலருகே வந்ததும் என் நினைவிற்கு வந்தன. இப்படி நான், உன்னை வளர்த்துக் கொண்டு, வீடு வாசல், நகை நட்டு, சொத்து இருந்தும், அனாதை போலிருக்கும் நிலையில், ஒருநாள் நடுப்பகலில் தள்ளாடியபடி ஒரு கிழவி, நம் வீட்டு வாசற்படியண்டை வந்தாள் - "அம்மா! தாயே" என்று ஈனக் குரலில் கூப்பிட்டாள். யார் என்று போய்ப் பார்த்தேன். தரித்திரத்தால் தாக்கப்பட்டு, பட்டினியால் பாதிப் பிராணனை இழந்தவள்; யாரோ பாவம் பிச்சைக்காரி. வயது நாற்பது இருக்கும். ஆனால், மரணம் அவளைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும் நிலைமை. அவளுடயை பரிதாபமான நிலையைக் கண்டு, நான் கொஞ்சம் நீரும் சோறும் கலந்து அளித்தேன். நாலைந்து பிடியை அவள் அவசர அவசரமாகச் சாப்பிட்டு, சுவரிலே கொஞ்சம் சாய்ந்தபடி, "அம்மா! உயிர் வந்தது. நீ புண்ணியவதி, உன் பிள்ளை குட்டிகளோடு நீ தீர்க்க சுமங்கலியாக இருக்க வேணும்" என்றாள். அப்போதுதான் நான் அவள் கழுத்தைக் கவனித்தேன். கயிறு இருந்தது. அவள் மேலும் கொஞ்சம் சோறும் நீரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சோகக் கதையைக் கூறினாள்.
அவள் கணவன் உயிரோடுதான் இருக்கிறானாம், எங்கேயோ, தெரியாதாம்; அவளுக்குக் குழந்தை குட்டி கிடையாதாம். பாடுபட்டுப் பிழைத்துக்கொண்டு கொஞ்சம் நிம்மதியாகவும் புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாளாம். ஒருநாள் கழைக்கூத்தாடும் கூட்டம் ஒன்று வந்ததாம். அதிலே இருந்த ஒரு மைக்காரியிடம், இவள் புருஷனுக்கு மோகம் பிறந்ததாம் - இவளையும் கைவிட்டு விட்டு அவள் பின்னோடு போய் விட்டானாம்; திரும்பவே இல்லை - இவளுக்கும் திக்கு இல்லை. திக்கற்ற நிலையிலே விடப்பட்ட இவள், கொஞ்ச காலம் ஊரிலேயே, சிறு நகைகளை விற்று ஜீவித்தாளாம் - பிறகு ஆப்பக் கடை வைத்தாளாம் - அதுவும் முடியாமற்போன பிறகு வீடு கூட்டுவது தண்ணீர் தெளிப்பது போன்ற ஊழியம் செய்து பிழைத்து வந்தாளாம்; அப்போது ஆண்களின் சேஷ்டைக்கு இணங்க மறுத்து, அதனால் வேறு தொல்லைப்பட்டாளாம். விபசாரத்துக்கு இணங்காததால் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, கடைசியில் ஊரைவிட்டே வெளியேறவேண்டி நேரிட்டதாம். கடைசியில் பிச்சைக்காரியே ஆகிவிட்டாளாம். இதுவரை ஒரு கெட்ட நினைப்பு, கெட்ட நடவடிக்கை கிடையாது என்றும் சொன்னாள். அவள் கழுத்திலே அந்தக் கயிறு மட்டும் இருந்தது. கயிறு கொஞ்சம் நீளமும் கனமும் அதிகமாக இருந்தாலாவாது தூக்கிட்டுக் கொள்ள உதவும். அதற்கும் பயனற்று அந்தக் கயிறு இருந்தது. அவளுடைய கதையைக் கேட்டதும், எனக்கு என் இனத்தில் ஒருத்தியைக் கண்டதாக எண்ணம் வந்து, நான் மனம் உருகி அழுதேன். ஆண்களின் கல் மனதினால் அவதிக்கு ஆளான அபலைகளைக் கொண்டு நீதி வழங்கச் சொன்னால், எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆண்கள் ஊரிலே யோக்யர், நாணயஸ்தர், கண்ணியமானவர், தர்மவான் என்றெல்லாம் புகழப்படுபவர்கள் கடுந்தண்டனை பெறவேண்டி நேரிடும். என்ன செய்வது! ஆண்களிடமே நீதி வழங்கும் உரிமை விடப்பட்டிருக்கிறது. குற்றவாளிக்கே நீதிபதி உத்யோகம்.
5
தொகுபிச்சை எடுத்து இனிப் பிழைக்க வேண்டாம். இங்கே இருந்துகொண்டு எனக்கு உதவி செய்துகொண்டிரு என்று கூறினேன். போன வாழ்வு திரும்பி வந்ததுபோல் ஆனந்தமடைந்தாள். அன்று முதல் அவள் சாகும்வரை - சாகடிக்கப்படும் வரையில் - என் வீட்டில் தான் இருந்தாள். தன் சக்திக்கேற்ற மட்டுமல்ல, சக்திக்கு மீறிய அளவு கூட வேலை செய்தாள். தன்னிடம் நன்றி காட்டும் எனக்கு என்னென்ன வகையாலே உபசாரம் செய்து திருப்தி செய்விக்கலாம் என்பதில் அவள் விசேஷ அக்கறை கொண்டாள். உலகிலே காப்பாற்றுவாரற்று உருக்குலையும் ஏழைக்கு, எதிர்பாராதவிதமாக உதவி கிடைத்தால், எவ்வளவு மனக் குளிர்ச்சி ஏற்படும் என்பதை நான் அப்போதுதான் நன்றாகத் தெரிந்துகொண்டேன்.
அவளிடம் நான் கொஞ்சம், கொஞ்சமாக என் கதையைக் கூறினேன். அவளும் என் கணவரின் போக்கைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பெருமூச்செறிந்தாள், தன்னைக் கைவிட்ட கணவனை முன்பு பேசியதைவிட அதிகக் கொடுமையாகக் கண்டித்தாள் - அவள் மனப்பான்மை எனக்குப் புரிந்தது. என் கணவரின் கண்மூடிப் போக்கையே அவள் மறைமுகமாகக் கண்டித்தாள் - எனக்குத் திருப்தியாக இருக்குமென்று. 'கழைக் கூத்தாடியுடன் ஓடிவிட்டான் என் புருஷன்; நானாவது ஒண்டிக்கட்டை. உன் அழகுக்கும் குணத்துக்கும் எதற்காக அம்மா அவர் உன்னை இப்படி இம்சைப்படுத்துகிறார். தங்கவிக்ரகம் போலக் குழந்தை இருக்கிறது; இதைப் பார்த்துக்கூட அவருடைய மனம் இளகவில்லையே. என்ன மனம்மா அவருக்கு" என்று கூறி ஆயாசப்பட்டாள். கிராமத்தில் மந்திரவாதியிடம் சிகிச்சை பெறச் சென்ற இடத்திலே, தன் இன்மொழியாலும் சமர்த்தாலும், என் மனதுக்குச் சந்தோஷமூட்டிய துளசி, எனக்குத் தாயார்போல வந்து சேர்ந்தவள் இருவரையும் நான் என்றும் மறக்கமுடியாது.
மகனே! என்னைப் போலவே, அந்தக் கிழவியும் உன்னிடம் மிகுந்த ஆசை கொண்டிருந்தாள். எப்படியாவது இந்தக் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்படி செய்யவேண்டும் என்று அவள் என்னென்னவோ செய்து பார்த்தாள். என் பொருட்டு அவரிடம் இதமாகப் பேசியும் பார்த்தாள். அவள் பத்து நிமிஷம் பேசுவாள். அவர் அரை நிமிஷத்தில் அலட்சியமாக ஏதாவது பதில் கூறி விடுவார். "கிரஹம் போறாது" என்று எண்ணி அவள் காத்துக் கொண்டிருந்தாள்.
இந்தச் சமயத்திலே, உருட்டும் கண்களும், மிரட்டும் மீசையும் கொண்ட ஒரு முரடன், அவரிடம் அடிக்கடி வந்து ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். ஆரம்பத்தில் அவன் அவரிடம் அடக்கமாக நடந்து கொண்டான். பிறகு சமத்துவமாக நடந்து கொண்டான். ஒரு வார காலத்திலே, அவர் அவனிடம் அடக்கமாக நடந்து கொண்டார். அவனுக்கு, அவர் காப்பி ஆற்றிக் கொடுப்பார்; வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டு வந்து தருவார்; "வாங்க! உட்காருங்க!" என்று மரியாதையாகப் பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "இதென்னவோ வேடிக்கை! எவனோ, வெறியன் போலிருக்கிறான். இவனிடம் ஏன் இவர் இப்படிப் பாசம் காட்டுகிறார்" என்று நான் கேட்டேன். "இதிலே என்னம்மா ஆச்சரியம்! என் வீட்டுக்காரர், கழைக்கூத்தாடும் "பொம்பளை" கூட ஓடி விட்டாரே, என்ன இருந்தது அவளிடம்; மைக் கண்; காவி ஏறிய பல்லு; கந்தல் துணி; கையிலே புண்கூட இருந்தது; இருந்தும் அவள் பின்னாடி ஓடிவிட்டாரே, என்னை மறந்து, கௌரவத்தை, நிம்மதியான வாழ்வை மறந்து. இந்த ஆண்களின் சுபாவத்தை நம்மால் கண்டறிய முடியாதம்மா. சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று பேசுவார்கள். பெண்ணின் மன ஆழத்தைக் கண்டறிய முடியாது என்று பேசுவார்கள். ஆனால் உண்மையிலே பெண்ணின் மனதிலே ஆண்களிடம் தோன்றக் கூடிய சூது, சூழ்ச்சி, வஞ்சனை இவை அவ்வளவு சுலபத்திலே தோன்றாதம்மா. பெண்ணைக் கைவிட்ட ஆண்கள், பெண்ணைத் துரோகம் செய்த ஆண்கள், பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்தவர்கள் - ஆகியோரின் தொகை ஏராளம். ஆனால் வெளியே தெரிய ஒட்டாதபடி அவர்கள் திரை போட்டுவிடுவார்கள். உன் புருஷனும், இந்த ஆசாமியிடம் நேசம் கொண்டாடுவது வேறோர் பெண்ணுக்காகத்தான் இருக்குமென்று எண்ணுகிறேன். அதனால்தான் அவ்வளவு குழைகிறார்" என்றாள்.
இருக்குமா? இருக்கவிட மாட்டாளே தங்கம்! என்னிடமிருந்து அவரைப் பிரித்தவள், அவரை வேறு ஒருத்தியிடம் பறிகொடுக்க இசைவாளா? அவளுடயை சாமர்த்தியத்தினால் தடுத்துவிடுவாளே என்று எண்ணினேன்.
6
தொகுபுதியவனிடம் பேசும்போதெல்லாம், அநேகமாக, சாமி கதை, தேவி மகாத்மியம், வரப்பிரசாதம், அருள் இப்படிப்பட்ட வார்த்தைகளே அதிகமாக இருந்தன. சத்விஷயமாகவே பேசுவதாகத் தோன்றிற்று. ஆனால் எப்படி நம்புவது? ஆண்களின் மனதை எப்படிக் கண்டறிய முடியும்? சாமியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தபசு செய்பவர்களாகக்கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஜபதபமெல்லாம், பெண்ணைக் கண்டதும் பஞ்சாகப் பறக்கிறதே. ரிஷிகளும் முனீஸ்வரர்களுமேகூட இந்த மோகத்திலிருந்து தப்பவில்லை என்று கதை படிக்கிறார்களே, அப்படி இருக்க, நயவஞ்சகரான என் கணவர் பேச்சிலே சாமி கதை இருந்தாலும், மனம் உண்மையில் வேறோர் மாதிடம் தாவி விடவில்லை என்று நான் எப்படி நம்ப முடியும். அன்பால் அவரை அபிஷேகித்த என்னைத் தவிக்கச் செய்துவிட்டுத் தங்கத்தைத் தேடிக் கொண்டவர், இப்போது தங்கம் கிடைத்துவிட்டாள், இனி ஒரு முத்துவைத் தேடுவோம் என்று எண்ணியிருக்கக் கூடுமல்லவா?
யாராக இருக்கும்? எவள் மீது வலை வீசுகிறார்கள்? இதை அறிய நான் வெகு பாடுபட்டேன். அவர்கள் இருவரும் பேசுகிற பேச்சிலே மறைந்துதான் அந்த ரகசியம் இருக்கவேண்டுமென்று எண்ணி, வெகு ஜாக்கிரதையாக அவர்கள் சம்பாஷணையைக் கவனிக்கலானேன். ஒரு துப்புக்கூடக் கிடைக்கவில்லை. ஒரு தடவை மட்டும் "சிந்தாமணிக்காக என்ன செலவிடவும் நான் தயார்" என்று உன் அப்பா, புதியவரிடம் கூறிடக் கேட்டேன். சிந்தாமணி! ஒரு சமயம் அந்தப் பெயர் கொண்ட ஒருத்தியைப் பெறத்தான் முயற்சி நடக்கிறதோ என்று யோசித்தேன். இருக்கும், ஏன் இருக்கக்கூடாது! ரங்கம் - பிறகு தங்கம் - பிறகு சிந்தாமணி - மல்லிகை, ரோஜா, மருக்கொழுந்து! வண்டுக்கு வித்யாசமோ திருப்தியோ ஏது? மலருக்கு மலர் தாவிக்கொண்டுதானே இருக்கும். அதுபோலவே இவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்று தீர்மானித்தேன். யார் அவள்? எங்கிருப்பவள்? என்ற கேள்வி என் மனதிலே புகுந்து குடைந்தன. கிழவியாலும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. "இந்த ஊரிலேயே சிந்தாமணி என்ற பெயர் கொண்டவள் ஒருத்தியும் இல்லையே அம்மா!" என்று கிழவி கூறினாள். வெளி ஊரோ? நாடகக்காரியோ! பாட்டுப் பாடுபவளோ! சீமான் மகளோ! யார் இந்தச் சிந்தாமணி என்று அறிய நான் துடியாய்த் துடித்தேன்.
இந்தத் துடிப்பை அதிகப்படுத்திற்று, இன்னோர் நாள் அவர்கள் பேசிய பேச்சு. "முதலியார்! கொஞ்சங்கூடக் கவலை வேண்டாம். எப்படியும் இன்னுமோர் பதினைந்து நாட்களில், தவறினால் ஒரு மாதத்துக்குள் சிந்தாமணி உமக்குக் கிடைக்கும் படியாகச் செய்கிறேன். இது தேவி மீது ஆணையாக நான் கூறுவது. சிந்தாமணி கிடைத்ததும், உமது வீட்டிலே, தனி அறை தயாராக வேண்டும். அந்த அறைப் பக்கம் நீர் தவிர வேறு யாரும் போகக் கூடாது. சதா சர்வகாலமும் பரிமளத் தூபம் இருக்க வேண்டும். சிந்தாமணி நிச்சயம் உமக்குத்தான், பயப்படாதீர்" என்று அந்த உருட்டுக் கண்ணன் உரைத்தான். இன்னும் என்ன சந்தேகம்? சிந்தாமணி என்ற எவளோ ஒருத்தியை, வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிடச் சதி நடக்கிறது. ரங்கமும் தங்கமும் போதவில்லை! சிந்தாமணி வரப்போகிறாளாம். ஒன்று இரண்டல்ல, மூன்று! இந்த ஆண்களென்ன, கணக்கையா கவனிப்பார்கள்! உத்தம தசரதனுக்கு அறுபதினாயிரம் தேவிமார்களாமே! இந்த உதவாக்கரையார் மூன்றாவது இல்லாமல் எப்படிக் கௌரவம் பெற முடியும்!
சிந்தாமணி வரப்போகிறாள்! எனக்கு மற்றுமோர் சக்களத்தி! வரட்டும் அவளும். சிந்தாமணியின் கோலத்தையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.