ரங்கோன் ராதா/அத்தியாயம் 6

அத்தியாயம் 6

1 தொகு

ஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா? நடந்தது என்ன தெரியுமா மகனே? என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத் தங்கையாகப் பிறந்தாளே, அந்தத் தங்கம், அவள் காதுக்கு எப்படியோ எட்டிவிட்டது, நானும் உன் அப்பாவும் சமாதானமாகப் போய்விட்ட விஷயம். எனக்குப் பேய் நீங்கவிட்டதென்றும் பழையபடி புருஷனுடன் சந்தோஷமாக இருப்பதாகவும், யார் மூலமாகவோ கேள்விப்பட்டாள். உடனே அவள் பேயை என் மீது ஏவிவிட்டாள். உன் அப்பாவேதான் பேயாக வந்தார். வரும்போதே என் தலை மயிரைப் பிடித்து இழுத்து முதுகில் அறைந்து என்னைக் கொடுமைக்கு ஆளாக்கினார்.

காலையில் கடைக்குப் போனவர், தங்கத்தைப் பார்த்து விட்டு வர அங்கே சென்றிருந்தார். அவள் அவருக்கு என்ன கலகம் செய்தாளோ எனக்குத் தெரியாது. ஒருவாறு யூகித்துக் கொள்ளத்தான் முடிந்தது. மாலையில் வீட்டுக்குள் நுழைந்த போதே அதிக கோபத்தோடு காணப்பட்டார். சங்கடமெல்லாம் தீர்ந்துவிட்டது என்று எண்ணியிருந்த எனக்கு, உன் அப்பா அவ்வளவு கோபமாக உள்ளே வந்தபோது கொஞ்சம் பயமாகவே இருந்தது.

"என்னங்க ஒரு மாதிரியா இருக்கறீங்க" என்று நான் வாஞ்சையுடன் கேட்டேன். என்னைச் சுட்டுவிடுவதுபோல முறைத்தார். "என்ன கோபம்?" என்று கேட்டுக்கொண்டே அவருடைய கரத்தைப் பிடித்தேன். உதறித் தள்ளிவிட்டு, "அந்தத் தளுக்குக் குலுக்கு இங்கே வேண்டாம்" என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. "நீலி" என்றார். நான் நேரே சமையற்கட்டு சென்று, அவருக்கு இலை போட்டுவிட்டு வந்து சாப்பிடக் கூப்பிட்டேன். "இனி உன் கையால் சோறு போட்டு நான் சாப்பிடுவேன் என்றா நினைக்கிறாய், கள்ளி! நான் என்ன மானங்கெட்டவனா?" என்று ஆத்திரத்தோடு கூறினார். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மரம் போல் நின்றேன்.

"பேய் பிடித்துக் கொண்டால் என்னடி! ஊரிலே, பேய் எவ்வளவோ பேருக்குப் பிடிக்கிறது. பிடித்தால் உன்னைப் போலவா கெட்டார்கள் அவர்களெல்லாம்?" என்றார். "என்னென்னவோ பேசுகிறீர்களே, எனக்கு விளங்கவில்லையே, நான் என்ன கெட்டுவிட்டேன்" என்று கேட்டுக் கொண்டே அழுதேன். "வாயை மூடடி விபசாரி" என்றார். ஆயிரம் தேள் ஏககாலத்தில் கொட்டியது போலாகிவிட்டது எனக்கு, அந்தப் பேச்சு கேட்டதும். விபசாரி! நான் விபசாரி! அவர் வாயால் அவ்விதம் கூறக் கேட்டேன். பழிபாவமறியாத என்னை, திக்கற்ற என்னை, விபசாரி என்று கூறினார்.

"தெய்வமே! இது என்ன பேச்சு!" என்று அலறிக் கேட்டேன். "தெய்வம்! உனக்கு?" என்று அவர் கர்ஜித்தார். முன்பெல்லாம் என்னிடம் அவர் காட்டிய கோபத்துக்கும் இம்முறை காட்டியதற்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டுகொண்டேன். உண்மையிலேயே அவர் என்மீது அடங்காத கோபங் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து நான் பயமடைந்தேன். தம்பி! நான் ஒரு தவறும் செய்துவிடவில்லை. மாசு மறுவற்ற மனம் கொண்ட நான் கொடுமையை அனுபவித்து வந்தவள், என்னை அவர் விபசாரி என்று தூற்றவில்லை, குற்றம் சாட்டினார். நான் என்ன செய்வேன். காலைப் பிடித்துக் கொண்டு, "இப்படிச் சொல்லலாமா? நானா விபசாரி? நீங்களா அப்படிச் சொல்வது? என்னை என்னென்ன பாடுபடுத்தினாலும் சரி. அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லவேண்டாம்" என்று கெஞ்சினேன். யாரோ வருகிற சப்தம் கேட்டது.

"போதும் உன் வேஷம், போ உள்ளே. வருகிறான் ஒருவன். அவனை விசாரிக்கப் போகிறேன். உள்ளே இருந்து கேள், உன் யோக்கியதையை. அவன் வெளிப்படுத்துகிறான் பார்" என்று கூறி என்னைக் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார் ஒரு அறைக்குள். கதவையும் சாத்தி, வெளியே தாள் போட்டுக் கொண்டார். அவரும் புதிதாக வந்தவனும் சில நிமிஷங்களுக்குப் பிறகு பேச ஆரம்பித்தனர். வந்தவன் அடக்கமாகவும் அச்சத்துடனும் பேசலானான். உன் அப்பா ஆத்திரத்துடன் அதிகார தோரணையில்தான் பேசினார்.

"முதலியாரு கூப்பிட்டதாக முருகன் சொன்னான். ஓடி வந்தேன். என்ன விசேஷமுங்க."

"ஏ! அந்தக் கள்ளக் கும்பிடு போடவேண்டாம். மறைக்காமல் நான் கேட்பதற்கு ஜவாப் சொல்லவேண்டும். துளியாவது மறைத்தால் தோலை உரித்துவிடுவேன்."

"எஜமான்! ஏன் இம்மாங்கோவமாப் பேசறீங்க? என்ன கேட்கப்போறீங்க? நான் எதுக்காக, எதைத்தான் மறைக்கப் போகிறேன்."

2 தொகு

"சரிடா, கதையெல்லாம் அளக்காதே. உண்மையைச் சொல்லிட்டா என்ன நடக்குமோன்னு பயப்படாதே."

"பயம் ஏனுங்க நமக்கு? நான் என்ன தப்புச் செய்தேன். மனுஷனுக்கு மனுஷன் பயம் ஏனுங்க?"

'பளீர்! பளீர்' என்று அறையும் சத்தம், "ஐயோ! ஐயோ! சாமி! முதலியாரே!" என்று அவன் அழுகிற சத்தம், "படவா! பயமா இல்லை? மனுஷனுக்கு மனுஷனா! பயம் இல்லாமத் தானேடா பயலுக தலைகால் தெரியாம ஆடறீங்க" என்று உன் அப்பா கூவுவது, இவைகளைக் கேட்டு, நான் அறைக்குள்ளே அடைபட்ட நிலையிலே, ஒன்றுந் தோன்றாமல் மருண்டேன்.

"நடந்ததைச் சொல்லணும், நாவை அடக்கிப் பேச வேணும்."

"ஆவட்டுங்க."

"பூஜாரி புண்ணியகோடியும் நீயும் இரண்டு நாளைக்கு முன்னே குடிக்கப் போனிங்களேல்லோ?"

"அவன் குடிச்சானுங்க, நான் வேறே வேலையா அந்தப் பக்கம் போனேன்."

மறுபடியும் பளார் என்ற சத்தம். அவன் அழுதுகொண்டே, "ஆமாங்க! போனோம், குடிச்சோம்."

"கழுதே! குடிக்கிற நாய் குடிக்கிறதில்லைன்னு ஏண்டா பொய் பேசறே."

பூஜாரியும் அவனும் சேர்ந்து குடித்துப் புரண்டால் இவருக்கு என்ன? ஏன் அவனைக் கூப்பிட்டு வந்து அடித்து அதைக் கேட்கவேண்டும்? என்னை அநியாயமாக விபசாரி என்று கூறினதற்கும் குடிகாரனை அடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே விளங்கவில்லையே என்று நான் எண்ணித் தவித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சைக் கூர்ந்து கவனிக்கலானேன்.

"கள்ளுக்கடையிலே என்னடா பேச்சு நடந்தது, உனக்கும் அவனுக்கும்?"

"ஒண்ணுமில்லைங்களே."

"உடம்பு ஊறுதா! உள்ளதைச் சொல். புண்யகோடி என்ன சொன்னான் உன்னிடம்?"

"எதைப்பத்திங்க?"

"எதைப்பத்திங்க? எதைப்பத்திப் பேசினீர்கள்னு நான் துரைகளுக்குக் கவனப்படுத்தணுமா?" மறுபடியும் அடி கொடுக்கும் சத்தம்! இந்தத் தடவை சத்தம் தப்பு தப்பு என்று கேட்டது. "செருப்பு அறுந்துவிடும் இப்போ" என்றார் உன் அப்பா. அதிலிருந்து அவனைச் செருப்பினால் அடிக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

"டே! பூஜாரிப் பயல், என் சம்சாரத்தைப் பத்தி என்ன பேசினான்?" என்று கேட்டார். நான் பயந்து கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டு, அவன் வாயிலிருந்து என்ன பதில் வருகிறது என்று உற்றுக் கேட்டேன். ஒரு வினாடி, இரண்டு வினாடி, மூன்று வினாடிகள் பதில் இல்லை.

"டே!" உன் அப்பாவின் குரல், அதுவரை நான் எப்போதும் கேட்டறியாத கடுமையுடன் இருந்தது அந்தக்குரல்.

"எப்படிச் சொல்றதுங்க?" அவன் அழுகுரலில் சொன்னான்.

"சொல்லு! சொல்லாவிட்டால் உன்னை உயிரோடு விடமாட்டேன். நீயும் அந்தப் பூஜாரியும் கள்ளுக்கடைக்குப் போய் என்னென்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்! மறைக்காமல் சொல்லு. விடமாட்டேன் உன்னை."

"அவன், குடி வெறியிலே என்னமோ சொன்னானுங்க!"

"அதைத்தாண்டா சொல்லச் சொல்கிறேன் உன்னை!"

"உங்க எதிர்லே சொல்லக்கூடிய பேச்சு இல்லிங்களே அந்தப் பாவி சொன்னது."

"வீணாக உதைப்பட்டுச் சாகாதே, உள்ளதைச் சொல்லு."

"அம்மாவைப் பத்தி அவன் குடிவெறியில் என்னென்னமோ உளறினான்."

"அம்மா! அந்தக் கழுதை முண்டையைப்பத்தி என்னடா சொன்னான், அந்த நாய். சொல்லுடா முழுதும்."

3 தொகு

"புண்யகோடிப் பயலுக்குப் பொம்பளைப் பைத்தியம் ஜாஸ்திங்க. தெரிஞ்சவங்க, அதனாலேதான் மந்திரத்துக்குக் கூப்பிடுவதில்லைங்க."

"அவன் சொன்னதைச் சொல்லுடா, கதை பேசியே காலத்தை ஓட்டாதே."

"அம்மாவைப்பத்திக் குறைவாகப் பேசினானுங்க. ரொம்ப ஷோக்குடா, அந்தப் பொம்பளை. கிட்டத்தட்ட முடிஞ்சு போன மாதிரிதான். புண்யகோடிகிட்ட எந்தப் பொம்பளையடா இஷ்டப்படாமே போவான்னு என்னென்னமோ உளறினானுங்க."

படுபாவி! என்னைப் பற்றிக் கள்ளுக்கடையில் கண்டபடி பேசி, என் கணவர் என் மீது சந்தேகப்படும்படி செய்துவிட்டாயே. நீ நாசமாய்ப் போக என்று நான் பூஜாரியை திட்டினேன்; கைகளை முறித்துக் கொண்டேன். ஆனால் எவனோ குடிகாரன் என்னமோ உளறினால், அதற்காக என்னைக் கொடுமைப் படுத்துவதா உன் அப்பா, என்று எண்ணினேன். அவன் சொல்லி வந்ததை நிறுத்திக் கொண்டான். மேலும் சொல்லும்படி உன் அப்பா கட்டளையிட்டார். அவன் மளமளவென்று பேசலானான்.

"புண்யகோடி, அம்மாவுக்குப் பேயோட்ட வந்தானாம். அம்மா அழகிலே அவனுக்கு ஆசை பிறந்ததாம். மெதுவாகப் பூஜை செய்கிறமாதிரி, கையைப் பிடிப்பதும், கண்ணைத் துடைப்பதுமாக இருந்தானாம். முதலிலே அவனுக்குப் பயமாகத் தான் இருந்ததாம். பிறகு, அவனை மந்திரிக்கச் சொல்லிவிட்டுத் தனியாக விட்டுவிட ஆரம்பிச்சிங்களாம். அவனுக்குத் தைரியம் பிறந்துதாம். சேஷ்டை செய்வானாம். அம்மா கூவுவாம்! அவன் அதெல்லாம் பேயின் கூச்சலுன்னு சொல்றதாம் உங்களிடம். விபூதி பூசுவதாகச் சொல்லிக்கொண்டு, கிட்டே போவானாம். பேய் எழுந்து ஆடப் போவுது என்று சொல்லிக் கொண்டு அம்மாவை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொள்வானாம். இன்னும் ஒரு பத்து நாளையிலே முடிஞ்சுவிடும்னு சொன்னாங்க. அம்மாவுக்கு வந்துங்க வலது மார்லே துவரம் பருப்பு அளவுக்கு மச்சம் கூட இருக்கிறதாம்."

"அட பாதகா! உண்மையிலே அப்படித்தான் எனக்கு மச்சம் இருக்கிறது. காம சேஷ்டையா செய்து கொண்டு இருந்தாய், மந்திரிப்பதாகச் சொல்லிக்கொண்டு" என்று நான் அந்தப் பூஜாரியைச் சபித்துக்கொண்டிருந்தேன் உள்ளே. பேச்சு நின்றுவிட்டது. கொஞ்ச நேரம் கழித்து உன் அப்பா, "டே! புண்யகோடியும் நீயும் பேசினபோது யார் இருந்ததுகூட குறிப்பாகச் சொல்ல முடியுமா" என்று கேட்டார். "உங்க மாமனார் வீட்டுத் தோட்டக்காரன் இருந்தான்" என்றான் அவன். "சரி! நீ போ! அந்தப் புண்யகோடிக்குச் சொல், நாளைக்கு இந்த ஊரிலே அவனை நான் கண்டால், தலை இராது என்று சொல்லி விடு. போ" என்று உத்தரவிட்டார். அவன் போய்விட்டான். நான் உள்ளே இருந்து, "அபாண்டம்! பழி! அநியாயம்! அந்த நாசமாய்ப் போனவனைக் கொன்றால்கூடத் தோஷமில்லை. கதவைத் திறவுங்கள். பூஜாரியை விளக்குமாற்றாலே அடிக்கிறேன்" என்று நான் கூவினேன். எனக்குப் பேய் பிடித்ததாகக் கூறி அந்தப் புரட்டனை அவர் தான் அழைத்து வந்தார். அந்தப் பாதகன், என்னைப் பற்றிக் கெட்ட நினைப்பு வைத்தால் நான் என்ன செய்ய முடியும் அதற்கு. நான் கெஞ்சினேன், அழுதேன், கதவைத் திறக்கும்படி. உள்ளே இருந்து கதவைத் தடதடவென்று தட்டினேன். கதவை அவர் திறக்கவில்லை. உற்றுக் கேட்டேன். கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது.

என்னை உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டார் உன் தந்தை! சொந்த வீட்டிலேயே கைது செய்யப்பட்டேன். ஒரு குற்றமும் செய்யாத நான், எவனோ பூஜாரி, குடிவெறியில் எதையோ உளறினால், அதற்காக என்னை இப்படிக் கொடுமை செய்வதா? பெண் இனத்தின் தலை மீது இருக்கும் இந்தப் பெரிய ஆபத்தைப் பற்றி யார் கவலை எடுத்துக் கொள்கிறார்கள்? உலகிலே, எதை எதையோ சீர்திருத்தம் செய்வதாகப் பேசிக் கொள்கிறார்கள். என்னென்னவோ கொடுமைகளை நீக்க வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமை இருக்கிறதே, ஆண், பெண்ணைப் படுத்தும் பாடு, இதனை நீக்குவதற்கு யார் வேலை செய்கிறார்கள். பரமசாது, தர்மவான், ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படாதவர், கௌரவமான குடும்பத்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட உன் தகப்பனாரிடம் நான் இந்தக் கொடுமைப்பட நேரிட்டது என்றால், குடியனிடம் குணங்கெட்டவனிடம் சிக்கிய பெண்கள், எவ்வளவு பாடுபடுவார்கள்! நமது ஊர்களிலே பார்க்கிறோமே இந்தக் கோரத்தை. குடித்துவிட்டுக் கூத்தாடும் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் வடிக்கும் கண்ணீரை யார் கவனிக்கிறார்கள்? அவள் வாயாடி, புருஷனுக்கு அடங்குவதில்லை. அவன் தான் குடிகாரன் என்று தெரியுமே, அதற்கேற்ற படிதானே இவள் நடந்துகொள்ள வேண்டும் என்று, பெண்ணுக்குப் புத்தி கூற வருவார்களே தவிர புருஷனைக் கண்டிக்கத் துணியமாட்டார்கள். அதிலும் உன் அப்பா, ஊருக்குப் பெரியவர்; ஊர் பஞ்சாயத்து அவரிடம் வரும். அப்படிப்பட்டவரை யார் கண்டிப்பார்கள்? மேலும், எனக்குப் பேய் பிடித்து ஆட்டுகிறது என்று வதந்தி வேறு, ஊர் எங்கும் பரவி விட்டது. ஆகவே என்னை அவர் என்ன கொடுமை செய்தாலும் கேட்பார் கிடையாது.

4 தொகு

என்னை அறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார். நான் திகைத்துப் போனேன். கதவைத் தடதடவென்று தட்டினேன்; கோவெனக் கதறினேன்; இப்படி அவதிப்படுவதைவிட, உயிரைப் போக்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர் இருந்தால் தானே பதில் பேச. என்னைப் பூட்டிவிட்டு நேரே என் அப்பாவிடம் ஓடி இருக்கிறார். அங்கு போய் என்ன சொன்னாரோ தெரியாது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என் அப்பா வந்தார். கதவு பூட்டினது பூட்டியபடி இருந்தது; உள்ளே நான் கொஞ்சம் மயக்கத்தோடு, தரையில் படுத்துக் கிடந்தேன். வெளியே பேசும் குரல் கேட்டு, எழுந்து நின்றுகொண்டு, கதவைத் தட்டினேன். என் அப்பா பேசினார் கதவைத் திறக்காமலே.

"ரங்கம்! என்னம்மா இப்படிச் செய்கிறாயே" என்றார். மகனே! உன் தாத்தா, என் அப்பா என்னைக் கேட்டார், 'ஏனம்மா இப்படிச் செய்கிறாய்' என்று. நான் செய்தது என்ன? புருஷனின் கொடுமைக்கு ஆளாகிப் புலம்பிக் கொண்டிருந்தேன். என்னை இம்சித்தவரைக் கேள்வி கேட்டுக் கண்டிக்க வேண்டிய என் தகப்பனார், என்னைக் கண்டிக்கலானார்.

"அப்பா! கதவைத் திற" என்று கூறினேன்.

"திறக்கிறேன்; ஆனால் ஒன்றும் நீ அமர்க்களம் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. என் மீது ஆணையிட்டுச் சொல் திறக்கிறேன்" என்றார்.

"என்னப்பா இது! நீங்களும் அந்தப் பாவிபோலவே நடந்து கொள்கிறீர்கள்" என்று கேட்டேன். என் புருஷர் பேசலானார்.

"கேட்டீர்களா, நான் பாவி! உங்களுக்குத் தெரியாது மாமா, ரங்கம் பேசின பேச்செல்லாம். இதுவரை நான் இப்படி ஒரு பெண் பேசிக் கேட்டது இல்லை" என்றார். என் அப்பாவோ சற்றுச் சோகமாக,

"என்னப்ப செய்யலாம்! அவளா பேசுகிறாள். ரங்கம் பரமசாதுவல்லவா? உனக்கே தெரியுமே! இவ்வளவு காலமாக அவளோடு நீ குடித்தனம் செய்யவில்லையா? நீங்கள் இருவரும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதைக் கண்டு நான் எவ்வளவோ ஆனந்தப்பட்டேன். என்ன செய்யலாம்! ரங்கம் தன் பழைய நிலையில் இருந்தால், இப்படி ஏன் நடக்கப் போகிறது? எல்லாம் அதன் சேஷ்டை. அவள் என்ன செய்வாள்?" என்றார். அதாவது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் போக்குக்கு நான் பொறுப்பல்ல என்று என் கணவனிடம் வாதாடினார். உன் அப்பா அதற்கு, "மாமா, இதற்கு என்ன தான் வழி?" என்று கேட்டார். "நான் விசாரித்து வைத்திருக்கிறேன். இந்த ஊர் மந்திரக்காரர்கள் பிரயோஜனமில்லை; நாற்பதாவது கல்லிலே பனையவரம் என்றோர் கிராமம் இருக்கிறதாம். அங்கே ஒரு பக்கிரி இருக்கிறானாம். அவன் நாற்பது நாள் பூஜை நடத்தி, ரட்சை கட்டுகிறானாம்! எப்படிப்பட்ட பிரம்மராட்சசாக இருந்தாலும் நொடியிலே போய்விடுமாம்" என்றார். எனக்குச் சிரிப்புத்தான் பொங்கிற்று. உரக்கச் சிரித்தேன். சிரித்துக் கொண்டே இருந்த நான், "ஐயோ, ஐயோ" என்று அலறினேன்.

என் கணவனும் அப்பாவும் எனக்குப் பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது. அதன் சேஷ்டையாலேயே நான் உளறுகிறேன் என்று பேசுகிறார்கள். அதே குற்றம் சாட்டியே என்னைக் கொடுமைப்படுத்தினார், உன் அப்பா. நான் என்ன செய்தேன்? அவர்கள் கூறுவது முற்றிலும் சரி என்பதுபோல நடந்து கொண்டேன்! ஒருத்தி சிரித்துக்கொண்டே இருந்து விட்டு திடீரென்று 'ஐயையோ' என்று அலறினால் என்ன எண்ணுவார்கள். உண்மையிலேயே பேயாட்டம் என்று தானே நினைப்பார்கள்? ஆனால் ஏன் நான் அவ்விதம் செய்தேன்? கணவனின் பேராசைக்குக் குறுக்கே நிற்கும் என்னை அவர் கொடுமைப்படுத்துகிறார்; அதற்கு ஏதாவது சாக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக, எனக்குப் பேய் பிடித்துக் கொண்டதாக வீண் புரளி செய்துவந்தார். அந்தப் புரளியை ஆதரிப்பது போல, சிரித்துக் கொண்டே இருந்த நான் திடீரென்று அலறினேன். எனக்கென்ன கொழுப்பா! நான் சுவரின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அங்கே ஒரு பாழாய்ப்போன தேள் இருந்து என்னைக் கொட்டிவிட்டது. அதனால் நான் அலறினேன்.

5 தொகு

சிரித்துக் கொண்டே இருந்த நான், 'ஐயையோ!' என்று அலறியதும் என் அப்பா, "என்னம்மா ரங்கம்!" என்று பதை பதைத்துக் கேட்டார். நான் அலறியபடி "ஐயையோ! அப்பா! தேள் கொட்டிவிட்டது!" என்று கூறினேன். "அப்பா, தேள் கொட்டிவிட்டதாமே. அலறுது பார்" என்று என் அப்பா சொன்னார். உன் அப்பாவோ, சிரித்துக் கொண்டே, "நீங்கள் ஒரு பைத்தியம் மாமா! தேளும் இல்லை, பாம்பும் இல்லை. அவள் சிரித்ததும் பேயின் சேஷ்டை, அதுபோலவே அழுததும் பேயின் சேஷ்டைதான். இப்படித்தான் சிரிப்பு, அழுகை, தூற்றுவது, கொஞ்சுவது, மிரட்டுவது, பயந்து பேசுவது என்று பலரகம் நடந்தபடி இருக்கும்" என்றார். உள்ளே நான் துடியாய்த் துடித்தேன். வலி தாங்காது கூவினேன். கொட்டியது காலிலே, ஆனால் வலியோ உடலெங்கும் வியர்த்துவிட்டது; மார் அடைப்பது போலாகிவிட்டது.

"ஐயோ அப்பா! சத்தியமாகத் தேள் கொட்டிவிட்டதப்பா! மார் அடைக்கிறது; பிராணன் போகிறது; உங்களைக் கும்பிடுகிறேன். கொஞ்சம் கதவைத் திறவுங்கள்; கொலை பாதகம் செய்யாதீர்கள்" என்று நான் கதறினேன். "ஒரு வேளை தேள்தான் கொட்டிவிட்டிருக்குமப்பா! அலறுவது தெரியவில்லை! கதவைத் திற" என்றார் என் தகப்பனார். பிடிவாதமாக உன் அப்பா, "உங்களுக்கு ஒன்றும் தெரியாது மாமா! இதெல்லாம் பேயின் பாசாங்கு. நான் சதா அனுபவிக்கிறேன். எனக்கல்லவா தெரியும் அந்த சேஷ்டைகள். கொஞ்ச நேரம் அழுதான பிறகு தானாக அடங்கிவிடும்" என்று கூறினார். எப்படியடா மகனே அடங்கும்! தேள் கொட்டினதால் விஷம் ஏறத் தொடங்கிற்று. கொட்டின இடம் நெருப்புப்பட்டது போல எரியலாயிற்று. கால் முழுதும் குடைச்சல்; மார்வலி; மயக்கம் வரலாயிற்று; அலறினேன். துடித்தேன்; ஓவென அழுதேன்.

வெளியே இருந்துகொண்டே என் அப்பா அழுதார். "என்ன கண்றாவியம்மா இது! உன்னை எவ்வளவு அருமையாக வளர்த்தேன். இது என்ன கோரம்" என்று கதறினார். "அப்பா! அப்பா!" என்று கூவினேன். "அடேயப்பா! தேளாக வேணும் இருக்கட்டும், இல்லை பேயின் சேஷ்டையாகவே இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் சரி. என்னால் ரங்கம் துடித்து அழுவதைக் கேட்டுச் சகிக்கமுடியவில்லை. தயவுசெய்து கதவைத் திற; நான் என் குழந்தையைப் பார்த்தாக வேண்டும்; என்னால் இனி ஒரு நிமிஷமும் பொறுக்க முடியாது" என்று கூறிக்கொண்டே என் அப்பா சிறு குழந்தையைப் போல் அழுதார். அவ்வளவு வேதனையிலும் எனக்கு அவருடைய அன்பின் போக்கு ஆனந்தமூட்டிற்று. எது எப்படி இருப்பினும், அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதல்லவா என்று எண்ணிச் சந்தோஷப்பட்டேன். உன் அப்பாவுக்குப் பாபம், என்னை உண்மையாகவே தேள் கொட்டிவிட்டது என்று தெரியாது. நான் அறையை விட்டு வெளியே வரத் தந்திரம் செய்கிறேன் என்றே அவர் எண்ணிக் கொண்டார்.

ஆகவே அவருக்குக் கதவைத் திறக்கத் துளியும் சம்மதமில்லை. என் அப்பாவின் வேண்டுகோளை மறுக்கவும் முடியவில்லை. "ஏ! ரங்கம்! சும்மா இருக்கமாட்டாயா?" என்று மிரட்டினார். "ஐயோ! என்னை வெளியேவிட்டு வெட்டிப் போட்டுவிடுங்கள்! உள்ளேயிருந்து உயிர் துடிக்க என்னால் முடியாது. குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். தேள்தான் கொட்டியது, வாயிலே நுரை தள்ளுகிறது; இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே இருந்தால் உயிர் போகும்; ஐயோ! தண்ணீர் ஒருமுழுங்கு தண்ணீர்! மார் அடைக்கிறது" என்று நான் துடிதுடித்துக் கேட்டேன். என் அப்பாவால் என் கதறலைக் கேட்டுத் தாங்க முடியவில்லை. ஒரே ஆத்திரம் பிறந்துவிட்டது. "யாரடா அவன் மடையன்! உள்ளே உயிர் வேதனையோடு ஒரு பெண் கதறிக் கொண்டிருக்க, செக்கு உலக்கைபோல் நின்று கொண்டிருக்கிறாயே! உன் மனம் கல்லா? மனைவி உள்ளே துடிதுடிக்க வெளியே நின்றுகொண்டு வீண் பேச்சுப் பேசுகிறாய். கதவைத் திறக்கிறாயா உடைக்கட்டுமா இந்தக் கதவை.

பேயாக வருவதாக இருந்தாலும் சரி, என் மகளை நான் இந்த க்ஷணம் பார்த்தாக வேண்டும். திற கதவை" என்று கர்ஜனை செய்தார். ஒரு தேளா, ஓராயிரம் தேள் கொட்டி வலி இருந்தாலும் என்ன! அந்தக் கிழவரின் வீராவேசமும் அன்பும், என்னை ஆனந்த சாகரத்திலாழ்த்திற்று. கொடுமைகள் மலை மலையாய்க் குவிந்தாலும், என் அன்புள்ள அப்பா இருக்கு மட்டும் எனக்குக் கவலையில்லை என்று நான் எண்ணிப் பூரித்தேன் - என் தகப்பனாரின் கோபாவேசத்தைக் கண்ட உன் தகப்பனார் கொஞ்சம் பயந்து போனார் என்பது அவர் பதிலிலே நன்றாகத் தெரிந்தது! "மாமா! என் மனம் கல்லுமல்ல, இரும்புமல்ல! ரங்கம் கதறுவது கேட்டு எனக்கும்தான் பதறுகிறது. என்மேல் நிஷ்டூரம் வேண்டாம். பேயின் சேஷ்டைதான் இது. இந்தச் சமயத்திலே கதவைத் திறந்தால், உண்மையாகவே ஆபத்து நேரிடும்" என்றார் கொஞ்சம் பணிவாகவே. என் அப்பாவின் குரலிலே துக்கம் தோய்ந்திருந்தது.

"அப்பா! உன் மனைவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறை உனக்கு எப்படி இல்லாமற் போகும். என்ன ஆபத்து வந்தாலும் சரி, கதவைத் திறக்கத்தான் வேண்டும். உனக்குத் திகிலாக இருந்தால், சாவியைக் கொடு என்னிடம்; நான் கதவைத் திறக்கிறேன். நீ வெளியே போய் இரு" என்றார். "மாமா! இப்படிப் பேசாதீர். உமக்குமட்டும் ஆபத்து வரலாம், எனக்கு வரக்கூடாது என்பதா என் எண்ணம்" என்று கூறினார். இரண்டோ ர் நிமிஷங்களிலே பூட்டு திறக்கும் சத்தம் கேட்டது. தைரியமாகப் பேசினாரே தவிர, என் அப்பாவுக்குக் கொஞ்சம் அச்சம் இருந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பதற்கு முன்பு அவர், "அம்மா! ரங்கம்! ரங்கம்!" என்று வாஞ்சையுடன் கூப்பிட்டார். அதாவது சாந்தி கூறினார். கதவு திறக்கப்பட்டது. வெளிச்சம் உள்ளே விழுந்தது. அதுவரை என்னை ஏய்த்துக் கொண்டிருந்த தேள் கதவு இடுக்கைவிட்டு, சரசரவென்று சுவரில் ஏறக் கண்ட நான் தாவி வெளியே வந்து, என் தகப்பனாரின் கைத்தடியை எடுத்தேன், தேளை அடிக்க. நான் தடி எடுத்ததுதான் தாமதம், இருவரும் பெருங் கூச்சலிட்டுக் கொண்டு, கூடத்தை விட்டு வேகமாக வெளியே ஓடிவிட்டார்கள்.