லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இன்றும் உலகம் போற்றும் இரு பெரும் நாவல்கள்!

இன்றும் உலகம் போற்றும் இரு பெரும் நாவல்கள்!

டல் நலம் பெற்ற எழுத்துலகச் சக்கரவர்த்தியான லியோ டால்ஸ்டாய், தனது சொந்தக் கிராமத்துக்கு மீண்டும் திரும்பினார். 1862-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அப்போது அவருக்கு வயது முப்பத்து நான்கு!

ஒரு டாக்டரின் மகள்; பெயர் பேஹர்; அவளுக்கு வயது பதினெட்டு! தன்னை விட மணப்பெண் பதினாறு வயது சிறியவளாக இருந்தாலும், அவர் அந்தப் பெண்ணையே விரும்பி மணம் செய்து கொண்டார்! தம்பதிகள் இருவரும் எழுதுகோலும் தாளும் போல ஒருவரை ஒருவர் பிரியாமல் மனமொத்து வாழ்ந்து வந்தார்கள்.

இல்வாழ்க்கையை ஏற்ற பின்பும் டால்ஸ்டாய் தனது இலக்கியச் சேவையை மீண்டும் தொடர்ந்தார். கட்டுரைகள், கதைகள், நாவல்கள் போன்றவற்றை எழுதிக் குவித்தார். ஏற்கனவே, ருஷ்ய நாடு முழுவதும், ஏன் அரண்மனைவாசிகள் உட்பட வாசகர்கள் அவருக்கு மிக அதிகமாக இருந்தார்கள்.

இடையிடையே கல்விச் சோதனைகளும், அயல்நாட்டுப் பயணங்களும் அரசுத்துறை இடையீடுகளும், அவரது எழுத்துப் பணியைத் தொடர முடியாமல் செய்தன. இப்போது மாணவாழ்க்கை ஏற்றபின்பு பொருளாதார வளர்ச்சிக்காகவும் அவர் தனது எழுதுகோலை முழுக்க முழுக்க இலக்கியப் பணியிலே ஈடுபட வைத்தார்.

எழுத்துப் பணி செய்வதுடன் அவர் நிற்கவில்லை; இடையிடையே கிராமத்து மக்களுக்குரிய நற்பணிகளையும் ஆற்றிவந்தார். ஏழை எளியோர், அநீதிகளுக்கு ஆட்பட்டோர், பண ஆதிக்கத்துக்குப் பலியானோர், வாழ்க்கைக்கு ஆதரவற்றோர் போன்றவர்கள் அவரது உதவியைத் தேடி வந்தால் அவர்களுக்குரிய பரோபகாரங்களையும் மனிதாபிமானத்துடன் செய்து வந்தார்.

டால்ஸ்டாயும், காலமான அவரது அண்ணன் நிக்கோலசும் அதே கிராமத்தில் வாழ்ந்திருந்த போது அச்சப்பட்டு ஒதுங்கியிருந்த கிராமத்து மக்கள், இப்போது முன்பு போல இல்லாமல் டால்ஸ்டாயிடம் தாரளமாகப் பழகிடும் தன்மை பெற்றனர்.

அதற்குக் காரணம், டால்ஸ்டாய் தனது கிராமத்தில் துவங்கிய ஆரம்பப் பள்ளியின் அருமையின் பெருமையை உணர்ந்ததுதான். அதன் வாயிலாக அவர் மக்கள் நேயமுடைய பரோபகாரி என்று புரிந்து கொண்டதும். மற்றொரு காரணமாகும்.

அவர் வாழ்ந்து வந்த கிராமத்துக்கு அருகிலேயே ஜார் மன்னனது ராணுவப் படை முகாம் பிரிவுகளில் ஒன்றிருந்தது. அந்தப் படையின் அதிகாரி ஒரு முரடன், ஆணவம் கொண்டவன், இரக்க நெஞ்சமற்ற அரக்கனாக இருந்தான். அதனால் படைவீரர்களை அவன் மிகக் கொடுமையாக நடத்தி வந்தான்.

அந்தப் படை முகாமிலே சிபனின் என்ற ஒரு போர்வீரன்; அவனுக்கும் அதிகாரிக்கும் எந்த ஒரு விஷயத்திலும் கூட ஒத்துவராத முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். அதிகாரி எப்போது பார்த்தாலும் அடாவடித்தனமாக சிபனிடம் நடந்து கொள்வதும், எரிந்து விழுந்து ஏசுவதும் பேசுவதும், அடிப்பதுமாக இருந்து வருவான். அதனால் இருவரிடையே பகை இருந்து கொண்டே வந்தது.

ஏதோ ஓர் அற்பவிஷயத்துக்காக ஒரு நாள் அதிகாரிக்கும் சிபனினுக்கும் தகராறு மூண்டுவிட்டது. எல்லாவீரர்களின் முன்னிலையிலேயே அதிகாரி அவனை அடித்துவிட்டான் பொறுமை இழந்து, மற்ற வீரர்கள் முன்பு அடிபட்டதை எண்ணி ஆத்திரமடைந்து விட்ட சிபனின், அதிகாரியைத் திருப்பி அடித்துவிட்டான்.

பிறகு என்ன? எரியும் நெருப்புக்கு எண்ணெயை ஊற்றிவிட்ட வீரனின் நிலை எவ்வாறு இருக்கும்? ராணுவ நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விட்டான் அதிகாரி. அந்த வீரனுக்கு யாரும் உதவிபுரிய முன் வரவில்லை. இந்தச் செய்தி அருகிலே உள்ள கிராமத்திலே வாழ்ந்து கொண்டிருந்த டால்ஸ்டாயின் கவனத்துக்கு வந்துவிட்டது. டால்ஸ்டாய் ராணுவத்திலே அதிகாரியாகப் பணியாற்றியவர் அல்லவா? அதனால் அதிகாரிகள் போக்கும், ராணுவ நீதி மன்றத்தின் செயலும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர் தானே அவர்?

அதனால் வீரன் சிபனினுக்காக ராணுவ நீதிமன்றத்தில் வாதாட முன்வந்தார் டால்ஸ்டாய். ஆனால், ராணுவம் சார்பாக வாதாடவோ, தலையிடவோ கூடாது என்று நீதிமன்றம் அவரைத் தடுத்துவிட்டது.

இருந்தாலும், டால்ஸ்டாய் பேசும் போது, வீரன் செய்தது சாதாரணத் தவறு. அதிகாரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் இந்த வீரன் அதிகாரியைத் திருப்பி அடித்து விட்டான். எனவே, அவரை மன்னிக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.

இராணுவ நீதிமன்றம் அவர் பேச்சைக் கேட்க மறுத்து விட்டது. அதிகாரியை அடித்தவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தீர்ப்பளித்தது. எவ்வளவோ முயன்றும் அவனைக் காப்பாற்றிட டால்ஸ்டாயினால் முடியவில்லை. சிப்சனும் சுடப்பட்டு மாண்டான்!

இந்த நிகழ்ச்சி மனித நேயத்தில் தோய்ந்து ஊறிக்கிடந்த டால்ஸ்டாயிக்கு கவலையளித்தது. அதனால் மனச் சோர்வடைந்தார். வீரன் சிப்சன் சுடப்பட்ட சம்பவம் கிறித்துவ மதத்துக்கே அவமானம், இழுக்கு என்று கூறிவிட்டு வீடு சென்றார்.

டால்ஸ்டாய் தம்பதிகளுக்கு 1863 - ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. நாளாக நாளாக அவருக்குப் பல குழந்தைகள் பிறந்தன.

பெற்றக் குழந்தைகளை வளர்ப்பதிலே தாயும், கல்வி கற்பிப்பதிலே தந்தையும் அக்கறை கொண்டார்கள். அதனால், தனது எழுத்துப் பணிக்கு இடையூறு இருப்பதை எண்ணி, குழந்தைகளைப் பாதுகாத்துப் பேணிட ஆங்கிலேயத் தாதிகளையும், ஜெர்மானியப் பணிப்பெண்களையும் வேலைக்கு அமர்த்தினார். ஓய்வு நேரத்திலே குழந்தைகளுக்குரிய கல்வியைக் கற்பிப்பார்.

டால்ஸ்டாய், தான் முன்பு துவங்கிய பள்ளியில் கல்விச் சோதனைகளை எவ்வாறு திட்டமிட்டு அமல்படுத்தி மக்கள் இடையே நல்ல பெயரையும் புகழையும் பெற்றாரோ, அது போலவே தனது குழந்தைகளை அடிக்காமலும், அதட்டமாலும், திட்டாமலும் அவர் வளர்த்தார். அது போலவே, பிறரும் தனது குழந்தைகளை மிரட்டாமலும், ஏசாமலும், அடிக்காமலும் பார்த்துக் கொண்டார். அவரது பிள்ளைகள் ஏதாவது தவறுகளைச் செய்வதால் அவற்றை அவர் அலட்சியம் செய்து விடுவார்; பொருட்படுத்த மாட்டார்; மீண்டும் பிள்ளைகள் தொடர்ந்து தவறுகளைக் செய்தால், பிள்ளைகளிடம் பேசாமல் அவர்கள் திருந்தும் வரை பகிஷ்கரிப்பார்!

எழுத்துலக ஞானியான லியோ டால்ஸ்டாய் தனது பண்ணைப் பணிகளிலே ஈடுபட்டுக் கடுமையாக உழைப்பார்; வயலுக்குச் செல்வார்; மண்வெட்டி ஏந்தி வரப்புகளை அமைப்பார், வயல்களைக் கொத்துவார், களை எடுப்பார், நீர் பாய்ச்சுவார், பயிரிடுவார், தோட்டப்பாத்திகளைக் கட்டுவார்; பிறகு அறுவடை செய்வார்; இப்படிப் பட்ட பணிகளை அவர் செய்யும் போது தனது குழந்தைகளையும் உடன் சேர்த்துக் கொண்டு வேலைகளைச் செய்வார்.

இவ்வளவு இடைவிடாத வேலைகளுக்கு இடையிலேயும் தனது குடும்பத்துக்கான பணிகளையும் மனைவியுடன் சேர்ந்து கொண்டு களைக்காமல் செய்வார்! மனைவியின் வேலைகளாயிற்றே என்று அவரும் கணவன் காரியங்களாயிற்றே என்று மனைவி பேஹரும் அவர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வு பாராமல் குடும்ப சமத்துவத்தோடு, ஒருவருக்கொருவர் உதவிகளைச் செய்து கொள்ளும் பண்புடன் குடும்பக் கடமைகளைச் செய்து கொள்வார்கள்.

இந்நிலையில் எல்லா வேலைகளையும் தொடர்ந்து வந்து வந்த டால்ஸ்டாய் பெருமகன், தனது இலக்கியச் சேவைகளையும் தொய்வின்றிச் செய்துவந்தார். எந்த சேவைகளை எப்போது செய்ய வேண்டும் என்ற கால அட்டவணையைத் தயாரித்துக் கொண்டு, அந்தக் காலத்திற் கேற்ற படி தவறாமல், அந்தந்தப் பணிகளை அந்தந்த நேரத்தில் செய்து கொண்டே இலக்கியப் பணியை இடைவிடாமல் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்க ஒரு செயலாகும்.

இவ்வாறு காலக் கிரமப்படி பணி செய்து கொண்டே வந்த உழைப்பாளியான மேதை டால்ஸ்டாய், பதினெட்டு ஆண்டுகளாக அரும்பாடுபட்டு, தனது அனுபவச் சிந்தனைகளை எல்லாம் தொகுத்து, நூலறிவுகளின் உதவிகளோடு, உலகம் போற்றும் இரண்டு மாபெரும் நாவல்களை ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதி வெளியிட்டார்.

“போரும் அமைதியும்”, ‘ஆன்னா கரீனனா’ என்ற நாவல்களே அவை. இந்த இரு பெரும் நாவல்கள், டால்ஸ்டாயின் பெயரைப் புகழேணியில் ஏறவைத்து எழுத்துலகச் சிகரத்தில் நிறுத்தி அழகு பார்த்தன என்றால் மிகையல்ல.

உலகத்தின் எல்லா நாடுகளும் அந்த நூல்கள் இரண்டையும் படித்து டால்ஸ்டாயைப் பாராட்டி மகிழ்ந்தன. அந்த நாவல்களைப் படிக்காத வாசகர்கள் எந்த நாட்டிலும் இருக்க முடியாது என்ற நிலையை அந்த நாவல்கள் நிலைநாட்டி விட்டன. அவரது புகழை மென்மேலும் அவை பெருக்கிவிட்டன.

டால்ஸ்டாய் உலகப் பெரும் எழுத்தாளர்களின் வரிசையில் தலையாயவர் என்று பிற நாட்டுப் பேரறிஞர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள். இவ்வாறு அவரது நூல்களைப் படித்த மேதைகளிலே ஒருவர்தான் நமது இந்திய விடுதலைத் தந்தையான மகாத்மா காந்தியடிகள்! அதனால் தான் காந்தியண்ணல் தென்னாப்ரிக்காவிலே வழக்கறிஞராகப் பணியாற்றச் சென்றிருந்தபோது, அங்கே டால்ஸ்டாய் சிற்றுண்டி விடுதியைக் கூட்டுறவு முறையிலே நடத்திக் காட்டினார்.

டால்ஸ்டாய் எவ்வாறு ஒவ்வொரு வேலையிலும் தனது கவனத்தைச் செலுத்தி ஆழ்ந்து ஊக்கத்துடன் பணியாற்றினாரோ, எல்லா வேலைகளிலும் தனது முத்திரை முயற்சி இருக்க வேண்டும் என்று ஓய்வு ஒழிச்சலின்றிக் கடுமையாகவே உழைத்தாரோ, எந்தப் பணியும் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செய்து காட்டினாரோ, கல்வித் துறையில் ஒரு புதிய தத்துவத்தையே வளர்த்தாரோ, ஆசிரம வாழ்க்கை வாழ்ந்து தனது வேலைகளைத்தானே செய்து கொண்டு தன் கையே தனக்கு உதவி என்று நம்பி அவரது பணிகளைப் பிறர் உதவியின்றித்தானே செய்து கொண்டாரோ, தனது குடும்பப் பணிகளிலே எப்படிப் பொறுப்புடன் கடமையாற்றினாரோ- அதே போலவே, அண்ணல் காந்தியடிகளும் டால்ஸ்டாய் பெருமகளைப் பின்பற்றி நடந்து காட்டினார்!

மேற்கண்ட சான்றுகள் போல, மேலும் பல எடுத்துக் காட்டுக்கள் காந்தியடிகள் வாழ்விலே ஒளிவிடுவதால்தான், டால்ஸ்டாயை அண்ணல் தனது வழிகாட்டி என்று பகிரங்கமாக பெருமையுடன் குறிப்பிட்டும் அவர் வாழ்ந்து காட்டியும் புகழ்பெற்றார்.

இதற்கிடையே ஞானி லியோ டால்ஸ்டாய் ஓய்ந்து விடவில்லை, மேலும் தொடர்ந்தார் தனது எழுத்துப் பணிகளை. “க்ரூசர் சோனடா” என்ற வேறொரு குறு நாவலை எழுதினார். அந்தச் சிறு நாவலும் இலக்கிய உலகின் விண்மீனாக இன்றும் ஒளிவீசுவதால், இலக்கிய உலகம் அதனையும் போற்றிக் கொண்டே இருக்கின்றது.