லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்


ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

வ்வொரு இளைஞனும் தனது எதிர்கால முன்னேற்றத்துக்கான வாழ்க்கையைப் பற்றிக் கம்பீரமாக, துணிவாக எதையும் சிந்திக்க வேண்டும். அவற்றைச் செயற்படுத்தும் ஆற்றலோடு பணியாற்றவேண்டும். அந்த செயற்பாடுகளிலே மனித நேயம் பெருமை பெற வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கான நற்பணிகளாக அவை அமைய வேண்டும். சமுதாய மாற்றத்தை உருவாக்கும் வரலாற்றுச் சம்பவங்களாக அவை இருக்க வேண்டும்.

காவியுடை மாவீரத் துறவி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்குச் சென்றிருந்த போது, அவரது சொற்பொழிவுக்கான சில குறிப்புக்களை எடுக்க அங்குள்ள நூலகம் ஒன்றிற்குச் சென்று புத்தகத்தின் பெயரை நூலகரிடம் கூறி எடுத்துத் துருமாறு கேட்டார்.

நூலகர் அதனைத் தேடிப் பார்த்து அது கிடைக்காததால், ‘நாளை தேடித் தருகிறேன் வாருங்கள் சுவாமி’ என்றார் நூலகர். ‘முயற்சி திருவினயாக்கும்’ என்பதற்கேற்ப, மறுநாள் அவர் நூலகம் சென்றபோது, நூலகர் அரும்பாடுபட்டுத் தான் தேடிய நூலைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து மகிழ்ந்தார்.

நூலைப் பெற்ற மகான், அதைச் சில நிமிடங்கள் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்து விட்டு, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, நூலகருக்கு நன்றி கூறிப் புறப்பட்டார் அவர்.

“சுவாமி, நூலைத் திருப்பித் திருப்பிப் பக்கங்களைப் பார்த்துவிட்டுப் போகிறீரே, தாங்கள் தேடிய கருத்துக்கள் நூலில் கிடைத்து விட்டனவா?” என்று நூலகர் அவரைக் கேட்ட போது, “அன்பரே! இந்த நூலைநான் ஏற்கனவே படித்து விட்டேன். தேவையான குறிப்புக்களை மட்டும் மீண்டும் அதன் தலைப்புக்களிலே பார்த்து நினைவு படுத்திக் கொண்டேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இந்த நூலிலே உள்ள ஒரு தலைப்பைக் கூறி, அதில் கூறப்பட்டிருப்பது என்ன? என்று கேளுங்கள் சொல்கிறேன்” என்றார்.

அப்போது, நூலகர் அவர் கூறியது கேட்டு வியந்து போய் மரமாக நின்று, சுவாமி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். உடனே மகான் விவேகானந்தர், “அன்பரே வரிவரியாகப் புத்தகத்தைப் படிப்பதும், பக்கம் பக்கமாகப் படிப்பதும், அத்தியாயம் அத்தியாயமாக அதை அணுகுவதும் சிலருடைய பழக்கம்! ஆனால், நான் புத்தகம் புத்தகமாகப் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிவன்” என்றார்!

எனவே, விவேகானந்தர் எவ்வளவு நூல்களைப் படித்திருந்தால், ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்ததும் அதில் இருக்கும் கருத்துக்கள் இதுதான் என்று கணித்திருப்பார் என்பதை மாணவர்களும் இளைஞர்களும் எண்ணிப் பார்க்கும் போது தான் எத்தகைய ஒரு நினைத்தற்குரிய செயல் இது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்!

மகான் விவேகானந்தரின் இந்த வரலாற்றுச்சம்பவம் போல, பல நிகழ்ச்சிகளை லியோ டால்ஸ்டாய் அவரது மாணவப் பருவத்தில் சந்தித்துள்ளார்.

டால்ஸ்டாயும், அவரது உடன் பிறப்புக்களும் கல்லூரிக் கல்வி கற்றிட மாஸ்கோ நகர் கல்லூரியில் சேர்ந்தார்கள். அந்தக் கல்லூரி, செல்வந்தர்கள், பிரபுக்களின் பிள்ளைகளுக்காகவே நிறுவப்பட்ட கல்லூரியாகும்.

அங்கே கல்வி பயிலும் மாணவர்கள், தங்களது மனம் போன பாதையில் படிப்பவர்களாவர். யாரும் அவர்களைத் தட்டிக் கேட்கவோ, கண்டிக்கவோ முடியாது; தங்களது பாடங்களை விருப்பம் போல மாற்றிக் கொண்டு அங்குள்ள மாணவர்கள் படிப்பார்கள்; அதை எவரும் ஏன் எப்படி என்று கேட்க முடியாது. காரணம், அவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கவலை இல்லாததுதான்!

கல்லூரியை சுற்றிலும், மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும், உணவு விடுதிகள், பொழுது போக்கும் கேளிக்கை மன்றங்கள், ஆடல் பாடல் அரங்குகள், நாடகங்கள் போன்றவை எப்போதும் நடந்து கொண்டே இருக்கும். செல்வச் சீமான்கள், பிரபுக்களின் பிள்ளைகள் படிக்கும் பல்கலைக் கல்லூரி தானே அது அதற்கேற்றவாறு எல்லா ஆனந்தங்களையும் அங்கே அனுபவிக்கும் வசதிகள் உண்டு.

இதே நேரத்தில், டால்ஸ்டாய் வீட்டை நிர்வாகம் நடத்தும் அவரது சிறிய தாயார். தனது வீட்டிலேயே தன்னைச் சார்ந்த ஆண்-பெண் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆடல் பாடல், கேளிக்கை விருந்துகள் நடத்துவாள். அதனால், படிக்கக் கல்லூரி வந்த அவருக்கும் தனது வீட்டிலேயே உறவுக்காரி நடத்தும் எல்லா இன்ப போகங்களிலும் கலந்து கொள்ளும் ஆர்வம், பழக்கம் அதிகமாகி, நாளாவட்டத்தில் வழக்கமான மகிழ்ச்சியாகவும் மாறிவிட்டது. அதனால் அவருக்குப் படிப்பும் கசந்தது; ஊர் சுற்றும் பழக்கமும் உருவானது; எந்தத் தீயப் பழக்கத்திற்கும் அவர் வெளியே போகாமல், தனது வீட்டிலேயே எல்லா மகிழ்ச்சிகளையும் பெற முடியும் என்ற சூழலமைந்தது.

தனது வீட்டிலேயே எல்லாவிதமான ஒழுங்கீனங்களையும் அவர் அனுபவித்து வந்ததால், கல்லூரிக் கழகத்துக்குப் போக மாட்டார். அப்படிப் போனாலும் வகுப்பில் சரியாகப் பொறுமையாக உட்காரமாட்டார், உட்கார்ந்தாலும் ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனமாகப் பின்பற்றமாட்டார், அடிக்கடி ஆசிரியருக்குத் தெரியாமல், கேட்காமல் திடீரென வெளியே ஓடிவிடுவார்.

இவர், இவ்வாறு செய்வதைக் கண்ட கல்லூரி நிர்வாகம், டால்ஸ்டாயைக் கல்லூரியிலேயே பூட்டிச்சிறை வைத்தார்கள். அப்படியும் அவர் திருந்தியபாடில்லை.

கல்லூரிக்கே சரியாக வராத டால்ஸ்டாயிக்கு பரீட்சையில் எப்படித் தேர்வு எண் கிடைக்கும்? அதனால், ஒவ்வொரு தேர்விலும் குறைந்த மதிப்பெண்களையே அவர் பெற்று வந்தார். அதேநேரத்தில் அவருக்கு விருப்பமான பாடவிஷயம் என்றால் மிகவும் ஆழ்ந்து படிப்பார்! அதில் அக்கறையும் செலுத்துவார்.

எந்த ஒரு பிரச்னையிலும் அவருக்குத் தெளிவான அறிவும், கூர்மையான பற்றும் இல்லாமல் எதிலும் வௌவால் புத்தியோடு சஞ்சலப்படுவார். டால்ஸ்டாய் இளமைப் பருவம் நன்றாக இருந்தது. அதற்குக் காரணம் பெற்றோர்களது முழுப் பாதுகாப்பும் அக்கறையுள்ள கவனமுமே. ஆனால், தாய் தந்தையாரை இழந்து, உயிருக்கு உயிராகப் பற்றுதலோடு பாதுகாத்த அத்தையையும் இழந்து, யாரோ ஒரு தொலைதூர உறவுக்காரி, அவர் குடும்பத்துள் பேய் புகுந்தது போல் நுழைந்ததால், டால்ஸ்டாய் சஞ்சல புத்தியோடு மட்டுமல்லாமல் தீய பழக்க வழக்கங்களின் பிறப்பிடமாகவே திகழ்ந்தார்.

அதனால் அவரது மாணவர் பருவம் அமைதியே இல்லாத கானல் நீரானது. என்றாலும், மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தானும் திருந்த வேண்டும் என்ற எண்ணம் பிடாரன் பெட்டிக்குள்ளே உள்ள பாம்புபோல அடங்கியும் சீறிக் கொண்டும் இருந்தது. எனவே, அவருக்கு வழக்கமாகிவிட்ட தீய பழக்கங்களை அவரால் கைவிட முடியவில்லை.

ஆனால், ஒரு நல்ல பழக்கம் அவரிடம் இருந்து வந்தது. என்ன தடைகள், குறுக்கீடுகள் ஏற்பட்டாலும், அன்றாடம் நடக்கும் அவரது நிகழ்வுகளை நாட்குறிப்பாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டே வருவது தான், அந்த நல்ல பழக்கமாகும். தான் சாகும் வரை இந்தப் பழக்கத்தை அவர் மறவாமல் கடைப்பிடித்து வந்ததால், அந்த நாட்குறிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பிற்காலத்தில் அச்சாகி புத்தகமாக வெளிவந்தது. அதை இன்றும் படிக்கலாம். அதைப் படிப்போருக்கு மட்டும்தான்்டால்ஸ்டாயின் இளமைப்பருவ, மாணவர் பருவ மனப்போக்கையும், மன வளர்ச்சியையும் புரிந்து கொள்ள முடியும்.

1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்...

நான் எனக்குள் பல மாறுதல்களைச் செய்து கொண்டேன். படிப்பில் நான் வெற்றிபெற விரும்பும் முன்னேற்றங்களை இதுவரை அடைய முடியவில்லை. நான் செய்ய விரும்புவதைத்தான் செய்கிறேன். ஆனால், இதை செம்மையாக செய்ய முடியவில்லை. அதற்கு நான் எனது நினைவுச் சக்தியை நன்றாகப் பயன்படுத்தவில்லை. இதற்காகச் சில விதிகளைத் தயாரித்துக் கொள்கிறேன். இந்த நாட்குறிப்பின் படி நடந்தால் எனக்கு மிகுந்த நம்பிக்கையான நன்மை ஏற்படும் என்று நம்புகிறேன். இங்கே நான் என்பது மாணவன் டால்ஸ்டாயைக் குறிப்பதாகும்.

1. ஒருவன் எடுத்துக் கொண்ட காரியத்தை தடையின்றி முடிக்க வேண்டும்.

2. செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும்!

3. படிக்கும் பாடத்தில் மறதி ஏற்பட்டால் புத்தகத்தைப் புரட்டக் கூடாது; படித்ததையே நினைவுபடுத்த முயற்சிக்க வேண்டும்.

4. மூளையை சுறுசுறுப்பாக இயக்க, அதற்கு நாம் நிறைய வேலைகளைத் தரவேண்டும்.

5. எந்தப் பாடத்தையும் உரத்துப் படிக்க வேண்டும். காலத்தோடு தூக்கத்திற்குச் செல்லவேண்டும்.

6. மற்றவர்கள் இடையூறுகள் நீ படிக்கும் போது ஏற்பட்டால், அல்லது இருந்தால், அவர்களிடம் அதைச் சொல்ல வெட்கப்படாதே.

7. முதலில் ஜாடை மாடையாகக் கூறு! அதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களிடம் பணிவாக மன்னிப்புக் கேட்டுக் கொள். தெளிவாகவே அவர்களிடம் சொல்லிவிடு.

8. சிறு பிராயத்துச் சிந்தனைப் பழக்கம்; மாணவப் பருவத்திலும் தொடர்ந்து நீடிக்கும் பழக்கமாக இருக்க வேண்டும்.

9. என் நாட்டு மக்களும், உலகமும் என்னை உயர்ந்தவன் என்று போற்றும்படி நல்ல பணிகளைச் செய்யவேண்டும். அதற்குரிய சிந்தனைகள் மாணவப் பருவத்திலேயே தோன்ற வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனைகளையே மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.

10. உலக மக்களுக்கு நன்மை விளைவிக்கும் அல்லது வளம் உருவாக்கும் ஒரு நல்லவழியை விரும்பும் எந்தத் துறையிலாவது மாணவர்கள் கண்டு பிடித்து, அதற்கான நெறிமுறைகளோடு பழகிக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

மேற்கண்ட நோக்கங்கள் அனைத்தையும் டால்ஸ்டாய் மாணவப் பருவத்தில் கடைப்பிடித்தார்; அவற்றைத் தனது டைரியில் எழுதினார் உலகுக்கு ஒரு பாடமாக்கி அதற்கு நாட்குறிப்பு நிகழ்ச்சிகள் என்று பெயர் சூட்டினார்.

இந்தக் குறிக்கோள்களால் தூண்டப்பட்ட டால்ஸ்டாய், கிழக்கு நாடுகளது மொழிகளை எல்லாம் கற்றார். அரபு, துருக்கி மொழிகளைப் படிக்க விரும்பினார்.

பிறகு, சட்டம் படித்தார்; ஆனால் அவருக்கு சட்டம் கற்பித்த ஜெர்மன் பேராசிரியருக்கு ருஷிய மொழி நன்றாகத் தெரியாது; மாணவர்களுக்குப் புரிய வைக்கக் கூடிய அளவுக்கு அவருக்கு ரஷ்ய மொழி தெரியவில்லை. அதனால், சட்டக் கல்வியைப் பாதியளவோடு நிறுத்திக் கொண்டார்.

இவற்றுக்கெல்லாம் பிறகு வரலாறும் அறநூல்களும் படிக்க ஆசைப்பட்டார். ஆனால், வரலாறு படிப்பதால் என்ன பயன்? என்ற சிந்தனை அவர் மனதை உறுத்தியது. அதனால், அதையும் படிக்காமல் கைவிட்டார்.

அறநூலாவது படிக்கலாமா என்று அவர் நீண்ட நெடு நாட்களாகச் சிந்தித்துப் பார்த்தார் என்ன காரணமோ அந்த ஆர்வமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. அறநூல் படிக்க முடியாமல் ஊக்கம் குன்றியதற்கு என்ன காரணம்?

சிறுவயதில் தன் பெற்றோர்களுடன் நாள்தோறும் கிறித்துவத் தேவாலயம் சென்று வழிபட்ட டால்ஸ்டாய், ஆலயக் குருமார்கள் செய்யும் ஜபத்தினை ஊக்கமுடன் கேட்டு அதற்கேற்ப பக்திவேத பாராயணம் செய்து வந்தார். அவரது சிறு வயது மத நம்பிக்கை; வயது வளர வளரக் குன்றியதால், இப்போது நாத்திகராய் நடமாட ஆரம்பித்த அவருக்கு இப்போதைய தெளிவான வாழ்க்கையின் சிந்தனையில் எக்கல்வியும் சுவையூட்ட வில்லை. குழம்பியது மூளை! சஞ்சலமடைந்தது மனம்; அதனால், கற்ற கல்வியே போதும் என்ற மனதோடு கல்வியை அவர் துறந்து விட்டார்.

சிந்தனை சிதறியது; குழம்பியது மூளை, அது மட்டுமல்ல; உடல் நலமும் குன்றியது; எனவே, 1847-ஆம் ஆண்டு நிறுத்தினார் படிப்பை, வெளியேறினார் பல்கலைக் கல்லூரியை விட்டு; போனால் போகட்டும் என்றனர் பல்கலை அதிகாரிகள்; எனவே, முற்றுப் புள்ளியை வைத்துவிட்டார் டால்ஸ்டாய் தனது கல்விக்கு!

இந்த நேரத்தில், டால்ஸ்டாயும், படிப்பை முடித்து விட்ட அவரது மூத்த அண்ணனும் தமது கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்கள் சரி, என்ன செய்யலாம் என்ற சஞ்சலத்திலே மிதந்தார்கள்.

கிராமத்துக்கு வந்தவர்கள், அங்குள்ள வேளாண் மக்களது நிலையைப் பார்த்து வேதனைப்பட்டார்கள். ஜார் மன்னன் பரம்பரைகளது கொடுங்கோல் கொடூரங்கள், அதிகாரிகளின் அட்டுழியங்கள், சட்டங்களின் சதிராட்டங்கள், இவற்றைப் பொறுக்க முடியாமல் கிராமத்து விவசாயிகள் சொல்லொணா வேதனைகள் அனுபவிப்பதை டால்ஸ்டாய் சகோதரர்கள் பார்த்து பரிதாபமடைந்தார்கள்!

இந்தக் கொடுமையான சூழலையுடைய ருஷ்யாவிலே பஞ்சம். பஞ்சமோ பஞ்சம், சோற்றிக்கும் பஞ்சம், வேலைக்கும் பஞ்சம்; லியோ டால்ஸ்டாய் பிறபகுதிகளில் இக் கூக்குரல்களைக் கேட்டார் என்று கூறுவதைவிட; தனது கிராமப் பகுதியிலேயே நேரிடையாகப் பார்த்து அவர் மனம் கொதித்தார். உடனே கிராம மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய நம்மால் முடியுமா என்று எண்ணமிட்டார்.

பஞ்சமோ பஞ்சமென்று பரிதவிக்கும் மக்களுடைய நெஞ்சை நனைத்துக் கொள்ள, ‘நா’வை-குளிராக்கிக் கொள்ள; தண்ணீர் இல்லை எனும் போது, பயிர்கள் விளைய மட்டும் தண்ணீர் கிடைக்க வழி எது? மழைபொழிய மறுத்துவிட்டது.

பசிக்கு உணவில்லை; உணவு உற்பத்தியும் இல்லை; உற்பத்தியின்மைக்கு மழை பொய்த்தது பெரும் காரணமாயிற்று! இந்த நிலைகளுக்கு இடையே டால்ஸ்டாய் புகுந்து ஏதாவது மக்கள் வேலை செய்யத் தயாரானார்!

லியோ டால்ஸ்டாயின் குடி பரம்பரையான பெருங்குடி ராஜவிசுவாசம் பெற்ற பிரபுக்கள் குடியில், செல்வம் பெருக்கெடுத்த பணக்கார வம்சத்தில்; இளவரசி மேரியின் புகழ்வயிற்றில் பிறந்ததால் அன்பு, இரக்கம், கருணை, மனிதாபிமானம், பசி, தாகம், அனைத்தையும் அறிந்து கொள்ளும் சக்தியுடையவர்களாக இருந்தார்கள்.

எனவே, ஏழை மக்களுக்கு ஏற்றதைச் செய்யலாம்; பசி, பஞ்சங்களைத் தவிர்க்கலாம் என்ற திறந்த மனதுடன் கிராம விவசாயிகள் இடையே தங்களாலான சேவைகளை அவர்கள் செய்தார்கள்.