லியோ டால்ஸ்டாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/காந்தியடிகளின் வழிகாட்டி மறைந்தார்!


காந்தியடிகளின் வழிகாட்டி மறைந்தார்!

லியோ டால்ஸ்டாய், ஆஷ்டின் மடத்தை விட்டுப் புறப்பட்டார்! எங்கே போகிறோம் என்று தெரியாமல், ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என்பார்கள், அது போல மனம் போனவாறு ரயில் வண்டியில் ஏறிச் சென்று கொண்டிருந்தார்.

பயணம் போகும் போதே அவரது உடல் நிலை சீர்குலைத்து. மருத்துவ சிகிச்சைகள் பெறவும் ரயில் வண்டியில் வசதிகள் இல்லை. காற்றும் மழையும் கலந்து விஷக் காற்றாக வீசிக் கொண்டிருந்ததால், அவருக்குக் குளிரும், காய்ச்சலும் ஏற்பட்டது.

தந்தை படும் நோயின் முனகலையும், வேதனையையும் பார்த்த அவரது மகள் சேஷாவும் நண்பர் டாக்டர் மெகோவிட்ஸ்கியும் மனம் பொறாமல், ஏதாவது ஒரு நாட்டு மருத்துவமாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சிறிய ரயில்வே நிலையத்திலே திடீரென்று இறங்கி விட்டார்கள். அந்த ரயில்வே நிலைய அதிகாரி டால்ஸ்டாயையும் மற்றவர்களையும் தனது அறையில் தங்குவதற்கு அனுமதி அளித்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

தனது குடும்பத்தை விட்டு வெளியேறிய மகான் டால்ஸ்டாயை, துறவு பூண்டு மக்கள் தொண்டாற்றப் புறப்பட்டு விட்ட ஓர் அரிய ஞானியை உலகப் பத்திரிக்கைகள் எல்லாமே பாராட்டியும் புகழ்ந்தும் வியந்தும் சில ஏடுகள் இகழ்ந்தும் கூட செய்திகளைப் பரபரப்புடன் வெளியிட்டன. மனைவி மக்களை நட்டாற்றில் நழுவ விட்டு வெளியேறிய பைத்தியக்காரன் டால்ஸ்டாய் என்று சில பத்திரிகைகள் விமரிசனம் செய்தன. ஆனால் அதே ஏடுகள் கூட, தம்மையுமறியாமல் வயது முதிர்ந்த ஒரு ஞானி, மக்கள் மீது அளவிலா அன்பு வைத்துள்ள ஒரு மனிதாபிமானி, நல்லதொரு இலக்கியச் சீமான், விலைமதிக்க முடியாத அறிவாபி மானத்தால் ஓர் அரக்க ஆட்சியை எதிர்த்த மாவீரன், உடல் நலிந்த நிலையில், தனது மகளுடனும், நண்பருடனும் துறவு பூண்டு விட்டதை எண்ணி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்ததாகச் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்த நிலையிலும், எந்தக் கொள்கைகளுக்காக தனது குடும்பத்தைத் துறந்தாரோ அக் கொள்கைகளை அந்தப் பத்திரிகைகள் பாராட்டிப் போற்றி வரவேற்று வாழ்த்தின.

போற்றுவார் போற்றுவர், புழுதி வாரித்துாற்றினும் தூற்றுவர் என்ற உலகியல் தன்மைகளுக்கு தகுந்தவாறு, அவர் எல்லாவற்றையும் மன நிறைவுடன் ஏற்றுக் கொண்டார்.

அவரது மகளும் நண்பரும் அவருடனிருந்து உடல் எல்லா வசதிகளையும் கவனமாகச் செய்வது மட்டுமன்று, அவரது உடல் நிலையின் தன்மைகளை உடனுக்குடன் கண்காணித்து வந்தார்கள்.

மூதறிஞர் டால்ஸ்டாய் தனது உடல் நிலை மோசமாகி வருவதை தன்னுடனிருக்கும் மகளுக்கும் நண்பருக்கும் வெளிப்படையாகக் கூறவில்லை. அதற்கு அடையாளமாக அவர் தனக்கிருந்த உணர்வுகளுக்கு ஏற்றவாறு மென்மையாகப் பேசிக் கொண்டே இருந்தார்.

உலக நாடுகளில் இருந்தும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் இருந்தும் நாள்தோறும் தனக்கு வந்து கொண்டிருந்த கடிதங்களைப் படிக்கச் சொல்லிக்கேட்டுக் கொண்டிருக்கும் அவரது பழக்கம் சில நாட்களாக இல்லாததால் மனவேதனையடைந்தார்.

ஞான மகான் லியோ டால்ஸ்டாய், தான் இறக்கும் வரை, ஏதோ ஒன்றிரண்டு அபாய, உணர்ச்சியற்ற நாட்கள் போக, மற்ற நாட்கள் வரை, தனது நாட் குறிப்பு எழுதும் பழக்கத்தை தவறாமல் செய்து வந்தார்.

“உலகில் இருப்பவையாவும், இயங்குபவை எல்லாமே நன்மைக்காகவே இருக்கின்றன. இதனால், எனக்கும் நன்மை, மற்ற எல்லாருக்கும் நன்மை” என்ற தத்துவச் சொற்றொடர்களைத் தனது நாட்குறிப்பின் இறுதி நாள் அவர் எழுதி வைத்துக் கொண்டு இருக்கும்போதே அவரது கை பற்றியிருந்த எழுதுகோல் ஒரு புறமும், நாட்குறிப்பு மற்றோர் புறமுமாக நழுவி விழுந்துகிடந்தன. ஆம்; ஞானி டால்ஸ்டாய் உயிர் அவரை அறியாமலேயே பிரிந்து சென்றுவிட்டது!

லியோ டால்ஸ்டாய் என்ற நிலா மறைந்து விட்டது. ஆனால் அவரது பொது மக்கள் தொண்டு என்ற ஒளி இன்றும் உலகில் பரவிக் கொண்டே இருளில் செல்லும் வாழ்க்கைப் பயணிக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றது.

‘நல்லவனாக இரு’, என்று அவரைக் காணவந்த எல்லாருக்கும் ஒரு வேத வாக்காக டால்ஸ்டாய் கூறினார்! ஊருக்கு உபதேசியாக இல்லாமல், தனது வாழ்க்கையில் மிக மிக நல்லவராகவே வாழ்ந்து காட்டிய ஞான சூரியனாக இன்றும் உலகிடையே அவர் பவனி வந்து கொண்டிருக்கின்றார்.

‘வல்லவனாக இரு’ என்று அவரைப் பார்க்க வந்த நல்லவர்களுக்கு எல்லாம் வேத மொழியாகச் சொன்னார்! அதற்கு எடுத்துக்காட்டாக டால்ஸ்டாய் போர்முனை வீரனாகப் படை செலுத்தும் தளபதியாக வாழ்ந்து காட்டி, போர் முனை ஊழல்களை, அதிகாரிகளது ஆணவப் போக்குகளை எதிர்த்ததோடு நிற்காமல், சிப்பாய்களது நியாயத்திற்கான புயல்போல உருவெடுத்து வாதாடி அக்ரமங்களை வீழ்த்தினார்!

ருஷ்ய நாட்டு ஜார் மன்னனது பரம்பரைக் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து கரை மீறா ஆற்றுப் பிரவாகம் போலப் பெருக்கெடுத்துப் போராடினார். வெள்ளத்தின் சக்தியை மன்னன் உணருமாறு செய்தாரே ஒழிய ஜார் ஆட்சியை எதிர்த்து மக்களையும் தன்னையும் அழித்துக் கொள்ளாமல், அகிம்சைத் தத்துவத்தோடும் அறவழிப் போராட்ட உணர்வோடும் போராடினார்!

ருஷ்யாவிலே இருவேறு பஞ்சங்கள் ஏற்பட்டபோது, ஓர் ஆட்சி செய்ய வேண்டிய பஞ்ச நிவாரணப் பணிகளை தானிய வகைகளைத் திரட்டியும், லட்சக் கணக்கான பணம் வசூலித்தும், தனது குடும்பத்தையும் அதில் ஈடுபட வைத்து செயற்கரிய பணிகளை எல்லாம் செய்து வெற்றி பெற்றார் டால்ஸ்டாய்!

உலகம் போற்றும் தனது நூல்களை, அதன் விற்பனைத் தொகைகளை தனது மனைவி மக்களுக்கே என்று சேர்த்து வைக்காமல், அவற்றின் மூலமாக வரும் வருமானம் அனைத்தையும் ஏழை மக்களின் எளிய வாழ்க்கையின் உயர்வுக்காகவே எழுதி வைத்தார்! இந்த அறவழி உணர்வுகளுக்குத் தனது குடும்பத்தையே பலி கொடுத்துவிட்டார். அத்தகைய ஏழை பங்காளர் மறைந்தார் என்றதும் உலக நாடுகள் எல்லாம் அறிவுக் கண்ணீர்த் துளிகளை உகுத்தன.

இந்திய விடுதலையின் தேசியத் தந்தை என்று இன்றும் உலகத்தவரால் போற்றப்படும் ஞான மகான் காந்தியண்ணல், டால்ஸ்டாய் என்ற மனித நேய ஞானியை, அகிம்சா அறத்தை முதன் முதல் உலகுக்கு ஈந்து அதற்கோர் மரியாதையை, மக்களிடையே உருவாக்கிக் காட்டி மதிப்பும் மரியாதையும் பெற்ற மாவீரன் டால்ஸ்டாயை, தனது குருநாதர் என்று கூறிப் போற்றி அவரது அறவுண்ர்ச்சிச் சுவடுகளிலே வழி நடந்து வெற்றியும் பெற்று வாழ்ந்து காட்டின அத்தகைய அகிம்சா மூர்த்தி காந்தியாரின் குருநாதரான டால்ஸ்டாய் மறைந்து விட்டார்.

உலகம் இன்றும் அவரை ஒரு பெரிய இலக்கிய ஆசிரியராக மதித்துப் போற்றி வருகின்றது. அவருடைய எழுத்துக்களாலான இலக்கியச் செல்வங்கள் அறிவுலகின் முடிகளாகச் சிறந்து விளங்குகின்றன. அவற்றுக்கு உலகம் வணக்கம் செலுத்துகிறது காலத்தையும் தாண்டி லியோ டால்ஸ்டாயிக்கு மதிப்பும் மரியாதையும் நிலைத்து நிற்கும்.

இலக்கியப் பணி அவரது புகழுக்குரிய சிறந்த படிக்கட்டுகளாக அமைந்தது! ஆனால், அந்த மகானின் மனித நேய ஞானத்தின் மக்கட் பணிதான் உலகப் புகழுக்குரிய வைர முடியாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

டால்ஸ்டாய் கருத்துக்கள் வலியவர்களையும். வளமானவர்களையும், ஏழைகள் எளியவர்களையும், அபலைகள் ஆதரவற்றவர்களையும், அரசியல் அறிஞர்களையும் சமுதாயச் சீர்த்திருந்த வாதிகளையும், கற்றறிந்தவர்களையும் கல்லாதவர்களையும் கவர்ந்தது என்பதில் வியப்பில்லை. டால்ஸ்டாய் அகிம்சை வழிக்கு வலுவூட்டினார். மனிதகுலம் வாழும் வரை அவருடைய அகிம்சையின் அறவுணர்ச்சி வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

★★★