வச்சணந்தி மாலை

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்


முதன் மொழியியல்

0. வெண்பா
தொகுத்துரைத்த மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம்
வகுத்தபா லுண்டி வருணம் - பகுத்தநாள்
தப்பாக் கதிகணமென் றீரைந்தின் தன்மையினைச்
செப்புவதா மும்மொழியின் சீர்.

1. மங்கலப் பொருத்தம்
சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொற்
கார்பரிதி யானை கடலுலகம் - தேர்மலைமா
கங்கை நிலம்பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு
மங்கலமாஞ் சொல்லின் வகை.

2. சொற் பொருத்தம்
வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்
தொகையார் பொருள்பலவாத் தோன்றல் - தகையில்
பொருளின்மை யீறு திரிதலே போல்வ
தருமுதற்சீர்ச் சொற்காகுந் தப்பு.

3. எழுத்துப் பொருத்தம்
தப்பாத மூன்றைந்தே ழொன்பான் தவறிலவென்
றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்கால்
தண்டாத நான்காறெட் டாகா தவிர்கென்று
கொண்டா ரெழுத்தின் குறி.

4. தானப் பொருத்தம்
குறிலைந்துந் தந்நெடில் கொண்டிஉஐ ஒளசேர்ந்
தறிபால னாதியா வைந்து - மிறைவன்பேர்
முன்னெழுத்துப் பாலனில்வைத் தெண்ணிமூப் பேமரணம்
என்னுமிவை தீதென்றே யெண்.

5. பாற் பொருத்தம்
எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம்
பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும் - பெண்ணினோ
டாண் புணர்ச்சிக் கவ்வவ் வெழுத்தே மயங்கினுமா 
மாண்பில்பே டென்றார் மதித்து.

6. உணாப் பொருத்தம்
மதித்த கசதநப மவ்வோடு வவ்வும்
உதித்தமைந்த நாற்குற் றுயிரும் - துதித்தமுதென்
றாதி மொழிக்குந் தசாங்கத் தயலுக்குந்
தீதிலவே யென்றார் தெரிந்து.

7.
தெரிந்த யரலமேற் சேர்ந்தவா வோவும்
புரிந்தவற் றொற்றாய்தப் புள்ளி - விரிந்த
அளவொடுகான் மாத்திரையு மாமென் றறிந்தோர்
உளவென்றார் நஞ்சென் றொழி.

8. வருணப் பொருத்தம்
ஒழியா வுயிரனைத்து மொற்றுமுத லாறும்
அழியா மறையோர்கா மென்பர் - மொழியும்
அடைவேயோ ராறு மரசர்க்கா மென்பர்
படையாத சாதிகளின் பண்பு.

9.
பண்பார் வணிகர்க்காம் பாங்கி லவறனக்கள்
மண்பாவுஞ் சூத்திரர்க்கா மற்றையவை - நண்பால்
அரனரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு.

10. நாட்பொருத்தம்
பேசு முயிரடைவே நான்காரல் பின்னைந்து
மாசிலாப் பூராட மற்றொருமூன் - றாசிலாப்
பேருத்தி ராடமா மென்று பெரிதுணர்ந்தோர்
பாரித்தார் நாளின் பரிசு.

11.
பரிசுடைய கவ்வரியி னான்கிரண்டு மூன்றுந்
தெரிவுடைய மூன்றடைவே செப்பிற் - பிரிவுடைய
ஓணமே யாதிரையே யொண்புநர்பூ சம்பூசம்
பேணி யுரைத்தார் பிரித்து.

12.
பிறிந்த சகரத்து நான்கைந்து பின்மூன்
றறிந்த கலமுதன்மூன் றாகுஞ் - செறிந்த
ஞகரத் தொருமூன்று நன்குணர்ந்தோ ராய்ந்த
புகர்தீ ரவிட்டமாம் போற்று.

13.
போற்றுந் தகரமிரண் டேழ்மூன்றும் பொய்தீர்ந்தோர்
சாற்றுவர் சோதி முறஞ்சதயம் - வேற்றனுடங்
கேட்டைபூ ரட்டாதி கேணகரத் தோராறும்
வாட்டமிலா மும்மூன்றும் வந்து.

14. 
வந்த பகரத்து நான்கிரண்டா றுத்திரந்தொட்
டந்தமிலா மூன்றாகு மவ்வடைவே - வந்ததற்பி
னாறுமக மூன்றுடன்மூன் றாயிலியம் பூரமா
மாறின் மகரத்தின் மாட்டு.

15.
மாட்டும் யகரத்துள் யாவுத் திரட்டாதி
ஈட்டியயூ காரயோ காரங்கள் - காட்டிய 
மூலம் வகரத் தொருநான்கு ரோகணிமான்
தோலாத நான்கெனவே சொல்.

16. 
சொல்லியநாண் மூவொன்ப தாகத் துணிந்தொன்று
புல்லியமூன் றைந்தேழ் பொருந்தாவா - மல்லனவற்
றட்டம ராசி வயினா சியமிவையும்
விட்டொழித்தல் நன்றெனவே வேண்டு.

17.கதிப் பொருத்தம்
வேண்டுங் குறில்வன்மை யீறொழிந்தால் விண்ணோர்க்காம்
ஆண்ட நெடின்முதனான் கந்தமொழித் - தீண்டிய
மென்மையா மக்கட் கிவையிரண்டு மெய்க்கதிக்கு
நன்மையா முன்மொழிக்கு நாட்டு.

18.
நாட்டிய ஒஓ யரலழ நல்வன்மைக்
கீட்டிய வந்த மிவைவிலங்காங் - காட்டா
தொழித்த நரகர்க்கென் றோதினா ரின்ன
வெழுத்தாகா வாதி யிடை.

19. கணப் பொருத்தம்
ஆதி யிடையிறுதி முற்றுநே ராநிரையென் 
றோதுவர்நீர் தீமாக மொண்சுவர்க்கந் - தீதிலோர்
சொற்றார் மதிபரிதி கானிலமா நீர்மதியு
முற்றாகி யாமுன் மொழிக்கு.

20.
முன்மொழி யாகலான் மூவசைச்சீ ரல்லன
நன்மைசால் தெய்வ நவிலாமை - முன்மொழிக்
கீட்டிய தொன்மை யிலக்கணங்க ளிவ்வகையே
காட்டு மகலக் கவிக்கு.

21. வெண்பா
திருமங்கை நின்றகலாள் தெவ்வுநோய் நீங்கும்
தருமங்கள் நீங்கலாச் சார்வார் - இருநிலத்து
மன்னருள்ளார் தாழுந்தாள் வச்சணந்தி மாமுனிவன்
இன்னருளால் நோக்கு மிடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வச்சணந்தி_மாலை&oldid=725" இலிருந்து மீள்விக்கப்பட்டது