வச்சணந்தி மாலை - III

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

மூன்றாவது பொதுவியல்.

1. நாற்பாச் சாதி இடம் நிறம்
வேறுமறை யோராதி நாற்சாதி வெள்ளைமுதல்
கூறுநிலை முல்லை குறிஞ்சியே - மாறா
மருதநிலம் நெய்தல்நிறம் வான்மையே செம்மை
கருதரிய பொன்மையே கார்.

2. நாற்பா நாள் இராசி
கார்த்திகை மாசிபனை குன்றாதி காட்டுகநாள்
மூத்த விராசிநான் மூன்றினையும் - நீர்த்தசீர்
மேதினிமே லாசிரியம் வஞ்சிகலி வெள்ளையென
ஓதியமே டாதியா லோட்டு.

3. நாற்பாத் தேவதையாதி
ஒட்டுமதி பொன்வெள்ளை யொண்கதிரோன் சேயகவல்
காட்டியமால் காரி கலிக்காகும் - ஈட்டும்
புகர்பாம்பு வஞ்சிக்காம் பூவிரையோ டாடை
பகர்நிறத்தாற் கொள்கவணி பாட்டு.

4. பாடும் விதம்
பாட்டுடையோ னூர்ப்பே ரியற்பேர் படவெதுகை
நாட்டிடினு மப்பேர் நவிலடியின் - காட்டுமுதற்
சேர்ந்த வனுவாகச் சீர்முன் னியற்றிடினும்
வாய்சிறப் பென்கை வழக்கு.

5. உறுப்புச் செய்யுள்
வழக்குள் மரபியலுள் நேர்ந்து வழுவா
திழுக்கி வடவெழுத்தை யின்பம் - வழுக்காது
முன்னையோர் பாட்டிற் பயின்ற மொழியன்றோ
சொன்ன வுறுப்பின் துணிபு.

6.
துணிதற் கரிது பொருளென்றுஞ் சோர்வு
பணிவுற்ற சொன்மேற் பகுத்தும் - அணிபொருட்டால்
மற்றுமுண் டென்று முரைப்போர் வழுச்சொல்லின்
இற்றன்றோ பாவி னிழுக்கு.

7. அகலக்கவி புகல்வோர்
இழுக்கிலா நாற்குலத்தோ ரெப்பொருளுந் தேர்ந்தோர்
ஒழுக்கறந் தெய்வ முடையோர் - விழுக்கவிகள்
ஈரிரண்டு முத்தமிழும் வல்லோரே யெஞ்ஞான்றும்
சீரார் கவியுரைப்போர் சென்று.

8.
சென்றவிரு பான்தொடங்கிச் சேருமெழு பானளவும்
நின்றபரு வத்துறுப்பு நீங்காதோர் - ஒன்றில்
அகலாப் பிணியில்லோ ரன்றோபாக் கொண்டு
புகலப் பெறுவார் புகழ்ந்து.

9. நல்லவை
புகழுந் தருமநெறி நின்றோர்பொய் காமம்
இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்
எல்லா முணர்ந்தோ ரிருந்த விடமன்றோ
நல்லா யவைக்கு நலம்.

10. நிறையவை
நலனடக்கஞ் செம்மை நடுவுநிலை ஞானம்
குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர்
சென்று மொழிந்தனவுங் கேட்போர் செறிந்தவிடம்
அன்றோ நிறைந்த அவை.

11. தீய அவை
அவையின் திறமறியா ராய்ந்தமர்ந்து சொல்லார்
நவையின்றித் தாமுரையார் நாணார் - சுவையுணரார்
ஆய கலைதெரியா ரஞ்சா ரவரன்றோ
தீய அவையோர் செருக்கு.

12. அந்தணரியல்பு
குன்றாநூ லங்கைமறை கோவணங்கோன் முத்தீயும்
நன்றாய வேள்வி நளினமும் - அன்றிக்
குடைசமிதை குண்டிகைபுற் கோத்திரமென் றின்ன
உடையாரை யந்தணரென் றுன்னு.

13.
உன்னல ரன்கழலை யோங்கியசீ ரங்கியயன்
என்னவுவ மித்த லிவரென்றே - நன்மறைகள்
ஓதலே யோதுவித்தல் வேட்டலே வேட்பித்தல்
ஈத லிரத்தலென் றேத்து.

14. மன்னரியல்பு
ஏத்திய பூவைநிலை யெல்லோன் கழல்வாழ்த்தல்
காத்தன்முடி சூட்டல் களம்வேட்டல் - தீத்தொழில்கள்
வெண்குடைசெங் கோல்கவரி வெற்றியரி யாசனமும்
மண்குலவு மன்னர் வளம்.

15.
வளர்த்தல் குடிகமையஞ் சாதுரங்கம் வாய்மை
விளைத்தல் பொருணெறியா மெய்ந்நூல் - அளத்தலே
உம்ப ருவமை யுரைகோ ளிவையுடையார்
இம்ப ருலகுக் கிறை.

16. பூவைசியரியல்பு
இறையஞ்சா தேருழல் வித்தீதல் புரிந்து
மறைகொண் டழல்வளர்த்து வாய்மை - பொறையுடைமை
என்றிவையுங் காத்து நிரையோம்ப லென்பவே
குன்றா வணிகர் குணம்.

17. தனவைசியரியல்பு
குணங்கோடாக் காத்தல் கொழுநிதிக்கோன் தன்னை
வணங்க லவன்புகழே வாழ்த்தல் - அணங்கார்
இடத்தேகி வாணிகத்தா லீட்டலெரி வேட்டல்
படைத்தோர் வணிகரென் பார்.

18. சூத்திரரியல்பு
பார்திகழு மூவர் பணித்த பணியொழுகல்
ஏருழுத லீதல் பிழையாமை - பார்புகழக்
கோட்ட மிலாமை யொருமைக் குணம்பிறவும்
காட்டினார் சூத்திரர்தம் கண்.

19. சிறப்புப்பாயிர இலக்கணம்
கண்ணாய தெய்வ மிறைஞ்சிக் கருதுநூல்
பண்ண அதிகாரம் பாரித்தல் - எண்ணும்
மதியோர் சிறப்பென்பர் வானவரை வாழ்த்தா
அதிகார முஞ்சிறப்பென் றாக்கு.

20.
ஆக்கியோன் பேர்வழி யேயெல்லை யாப்பந்நூற்
போக்கிடஞ்சொல் வோர்நுதலிற் றாயபயன் - தாக்கியவிவ்
எட்டினொடுங் காலங் களங்கள ரணமியம்பப்
பட்டாலு மப்பெயரே பன்னு.

21.
பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
துன்னும் பயனறவுஞ் சொல்லினும் - முன்னைச்
சிறப்பா மவற்றுட் சிலவேறி னாலும்
பெறப்படுமா முன்னைப் பெயர்.

22. பொதுப்பாயிரத்திலக்கணம்
பெயரார்நூ லீவோ னியல்பீயும் பெற்றி
அயராது கொள்வோ னளவும் - அயர்வின்றிக்
கோடன்மர பீரிரண்டுங் கூறல்பொதுப் பாயிரமாம்
பாடல்சால் நூலின் பயன்.

23.
பயனான்காய் மூவகைத்தாய்ப் பன்மூன் றுரைத்தாய்
இயலுடைத்தாய் மூவாம லேழு - செயன்மதத்தாய்ப்
பத்தாய்க் குணங்குற்றம் பத்தொழிந் தெண்ணான்காம்
உத்தியது நூலென் றுரை.

24.
உரைத்தநதி சீயமோ டொண்பருந்து தேரை
நிரைத்ததொழிற் சூத்திரத்தி னின்று - விரைக்குழலாய்
செம்பொருள் ஞாபகமாஞ் செய்தி நியதியாம்
கம்பமிலா நூலின் கருத்து.

25.
கருத்தெச்ச நுட்பம் பொழிப்பகலங் காட்டி
உரைத்த வுதாரணமு முண்டேல் - விருத்தியாம்
பூண்ட கருத்தும் பொழிப்பு முதாரணமும்
காண்டிகையென் றோதல் கடன்.

26. அகலக்கவி கேட்பிக்கும் முகூர்த்தம்
கடனா மகரவா காரங் கதிரோன்
உடனா யெழுங்கடிகை யோராறு - இடனாகி
ஏனை யுயிர்ககூறு மிவ்வகையால் வந்துதித்தால்
ஆனமுதன் மூன்று மழகு.

27.
அழகாக முன்மொழிக்க ணாராய்ந் தனவும்
அழகாகச் சொல்லினவு மன்றி - அழகாகச்
செய்யுட் குரைத்தனவு மெல்லாஞ் செயிர்தீரச்
செய்யினன் றன்றாயிற் றீது.

28.
தீதிலா நூலுரைத்த தீதிலாச் செய்யுளைத்
தீதிலோர் நல்லவையிற் சேர்த்ததற்பின் - ஆதிசொல்
பாவிற் கியைய வுரைக்கிற் பலபொருளும்
தாவில் பொருளோடுஞ் சார்ந்து.

29.
சாந்தின் மெழுகித் தரளத் திரள்பரப்பிக்
காந்தி மணிகனகங் கண்ணுறீஇ - வாய்ந்தலர்ந்த
தாமமு நாற்றி விளக்கிட்டுச் சாறவிசில்
நாமகளை யேற்றுவித்த னன்கு.

30. நன்குணர்ந்தோ ராய்ந்த தமிழ்நூலின் நன்னெறியை
முன்புணர்ந்து பாட்டியனூன் முற்றுணர்ந்து - பின்புணரும்
நல்லார்முன் னல்லாய் நலமார் கவியுரைக்க
வல்லாத லன்றோ மதி.

அவையடக்கம்
என்களங்கம் யாவையும் நீக்கி யினிதருளி
நன்களந்தை நூலோடு நாட்டுவரால் - தென்களந்தை
மன்பெயரான் வண்புகழான் வச்சணந்தி மாமுனிவன்
தன்பெயரால் நாட்டுந் தமிழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=வச்சணந்தி_மாலை_-_III&oldid=486180" இலிருந்து மீள்விக்கப்பட்டது