வஞ்சிமாநகரம்/14. கடம்பன் ஏமாறினான்
கடலுக்குள் சென்று ஆந்தைக்கண்ணனைச் சந்திக்க முன்வந்த ஒற்றனுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் தானே அருகிலிருந்து கவனித்துச் செய்தான் குமரன் நம்பி.
“எப்படியெப்படி எல்லாமோ ஆந்தைக்கண்ணன் உன்னைச் சோதனை செய்வான். முதலில் செவிட்டூமையாக நீ நடித்தால் கடைசிவரை அப்படியே நடித்துவிட வேண்டும். அவ்வாறின்றி அவன் திடீரென்று ஏதாவது இரைய அதைக் காதில் வாங்கிய வேகத்தில் ஊமையாக நடிக்க வேண்டியதை மறந்து உணர்ச்சி வசப்பட்டு மறுமொழி பேசிவிடக்கூடாது.
“நீ கொண்டுபோகிற ஒலையிலேயே இந்த ஒலை கொண்டு வருகிறவன் செவிட்டூமை என்று குறிப்பிட்டிருப்பதனால் நீ கவனமாயிருக்க வேண்டும். அங்கே ஆந்தைக்கண்ணனுடைய மரக்கலத்தில் சிறைப்பட்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்த உடனே உணர்ச்சிவசப்பட்டு நீ எதையாவது பேசிவிடக் கூடாது. நீ தூதனாக வந்திருக்கிறாய் என்று தெரிந்தால் நம்மவர்கள் உன்னை நிச்சயமாக ஆந்தைக்கண்ணனிடம் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். நீயும் பிறர் புரிந்து கொள்ளாதவாறு நம்மவர்களுக்கு நீ அவர்களுக்கு உதவி, அவர்களை மீட்டுக் கொண்டு போக வந்திருப்பதாகவே ஏதேனும் சைகை காட்ட முடியுமானால் நல்லது. அந்தச் சைகையை ஆந்தைக்கண்ணன் பார்த்து விடக்கூடாது. பார்த்தால் அவனுக்கு உன்மேலேயே சந்தேகம் வந்து உன்னைக் கண்டம் - துண்டமாக வெட்டிப் போட்டு விடுவான். கவனமாகப் போய்வா” - என்று கூறித் துதுவனை வழியனுப்பி வைத்தான் அவன். துதுவனோ புறப்படு முன்பாகத் திடீரென்று வேறெரு கேள்வி கேட்டான்.
“ஐயா எனக்கொரு சந்தேகம். இந்த ஒலையை நான் ஆந்தைக் கண்ணனிடம் கொடுத்தவுடன் நீங்கள் நினைப்பது போல அவன் என்னையும், சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளுர் வீரர்களையும் துணையாகச் சில கடம்பர்களையும் இங்கே அனுப்பி வைக்காமல் எல்லா வீரர்களுடனும் தானே புறப்பட்டுவிட்டால் என்ன செய்வது?
“அப்படி நடக்காது, அநேகமாக ஒலையில் எழுதியிருக்கிறபடிதான் அவன் செய்வான். செய்யாமல் அவனே எல்லாரோடும் புறப்பட்டு வருவானாயினும் கவலை இல்லை. அப்படி வரும் போது - நம்மவரும், நீயுமுள்ள படகுகள் பொன்வானியாறு வழியே முன்னால் வருமாறு கவனித்துக்கொள். நானும் வீரர்களும் பொன்வானியாற்றின் இரு மருங்கிலுமுள்ள புதர்களில், மறைந்திருப்போம். எங்களுடைய சாதுரியமான போரினால் உங்களை மீட்டுக் கடம்பர்களை அழிப்போம். ஆந்தைக்கண்ணன் வராமல் ஒலையில் எழுதியிருக்கிறபடி கடம்பர்களையும் சிறைப்பட்டிருக்கும் கொடுங்கோளூர் வீரர்களையும் மட்டுமே உன்னோடு அனுப்பி வைப்பானாயின் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. உங்களோடு வரும் கடம்பர்களைப் பொன்வானி முகத்துவார வழியிலேயே கொன்றோ, சிறைப்பிடித்தோ உங்களனைவரையும் அவர்களிடமிருந்து மீட்டு விடுவோம்.”
“எல்லாம் நல்லது. ஆனால் என்னைத் திருப்பி அனுப்பாமல் அங்கே வைத்துக்கொண்டு, கடம்பர்களையும் கொடுங்கோளூர் வீரர்களையும் மட்டும் படகுகளில், அனுப்பிவிட்டால் என்ன செய்வது?”
“செய்வதென்ன? எப்படியேனும் சாமர்த்தியமாகத் தப்ப முயற்சி செய்தே ஆகவேண்டும்.”
“அதுவும் முடியாது. - நான் ஊமையும் செவிடுமாகவே இறுதிவரை நடிக்கவேண்டும்” எனச் சொன்னான்.
ஆந்தைக்கண்ணன் ஒலையைப் படித்து - உடன் அதைக் கொண்டு வந்தவனையும் சிறைப்பிடித்து - ஏற்கெனவே சிறைப் பட்டிருந்த பிற கொடுங்கோளுர் வீரர்களோடு வைத்துக் கொண்டு உண்மை நிலையை அறிவதற்காகக் கடம்பர்களில் ஒரு நூறு பேரைப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அனுப்பினாலும் அனுப்பிவிடலாம். அப்படி அவன் செய்துவிடுவானேயாகில் குமரன் எதற்காக இதைத் திட்டமிட்டுச் செய்தானோ அந்த ஏற்பாடுகள் அனைத்தும் வீணாகிவிடும். ஆனாலும் எதை எதிர் கொள்ளவும் துணிந்திருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு தான் அவன் இருந்தான்.
இதற்கிடையே அவன் இடுகிற ஒவ்வொரு திட்டத்தையும் செய்கிற ஒவ்வோர் ஏற்பாட்டையும் அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களாகிய வலியனும் பூழியனும் அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். கவனிப்பதெல்லாம் நடைபெறுவன பற்றிய செய்திகளை அமைச்சருக்கு அனுப்பவதற்குத்தான் என்பதைக் குமரன் நம்பி விளங்கிக் கொண்டான்.
ஒவ்வொன்றாகச் சிந்தித்துக்கொண்டே வரும்போது, புதிதாக வேறொரு கவலையும் அவனுக்கு உண்டாகியது. கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடலிலுள்ள தங்கள் கொள்ளை மரக்கலங்களில் ஏதாவது ஒன்றில் கடம்பர்கள் சிறை வைத்திருப்பார்களானால் அவளையும் அதிலிருந்து அந்தரங்கமாக விடுவித்தாக வேண்டும். எல்லாக் கடம்பர்களும் ஒரேயடியாக ஆந்தைக்கண்ணனோடு சிறுசிறு படகுகளில் பொன்வானி முகத்துக்கு வந்துவிடுவார்களேயானால் கடலில் அவர்கள் கலங்கள் தனியாயிருக்கும். இரண்டு மூன்று சேரநாட்டு வீரர்களோடு தானோ வேறு யாரோ, அவர்கள் கலங்களை தேடிப் - போனால் அமுதவல்லியை மீட்டிக்கொண்டு வந்துவிடலாமென்று தோன்றியது. ஆனால் கொடுத்தனுப்பியிருக்கும் ஓலைக்கு எதிர் விளைவாக ஆந்தைக்கண்ணன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் பொறுத்தே மேற்கொண்டு எதையும் திட்டமிடலாம் போலத் தோன்றியது. எக்காரணத்தைக் கொண்டாவது கடம்பர்கள் அஞ்சிக் கடலில் பின்வாங்குவார்களேயானால் அவர்கள் தங்கள் மரக்கலங்களைத் திருப்பிக்கொண்டுதான் விரைந்து ஓடுவார்கள். அப்படி ஓடும்போது - மரக்கலங்களில் ஏதாவது ஒன்றினுள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் அமுதவல்லியும் கலத்தோடு போக நேரிடும். அப்படி நேருவதற்குள் முந்திக்கொண்டு விடவேண்டும்.
‘இவ்வளவு அரும்பாடுபட்டும் இறுதியில் என் உயிர்க் காதலியை நான் இழந்துவிடக் கூடாது என்று நினைத்தான் குமரன் நம்பி. ஆந்தைக்கண்ணனுடைய எதிர்விளைவு எப்படியானாலும் அதற்கேற்பத் திட்டங்களை நினைத்துவைத்துக் கொண்டபின் அவனும் பொன்வானி முகத்துவாரத்துக்குச் சென்று பதுங்கி இருந்தான். நேரம் ஆக ஆகக் கவலை அதிகமாகியது. நடுஇரவும் கடந்தது. முகத்துவாரத்தில் படகுகள் எவையுமே தென்படவில்லை. தாங்கள் எதிர்பார்க்கிற நேரத்தை விட்டு விட்டு எல்லாரும் அயர்ந்தபின் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று வந்து தாக்கலாமென்ற எண்ணத்தில் ஆந்தைக் கண்ணன் தாமதம் செய்கிறானோ என்றும் தோன்றியது. குமரன் நம்பியைப் போலவே போர் நிலை அறிந்து வேளாவிக்கோ மாளிகைக்கு உடனுக்குடன் அறிவிப்பதற்காக அமைச்சர் அழும்பில்வேளின் ஆட்களும் பொன்வானி முகத்துவாரத்துப் புதர்களில் பதுங்கியிருந்தனர். குமரன் பதுங்கியுருப்பதை அவர்களும், அவர்கள் பதுங்கியிருப்பதை குமரனும் முதலில் கவனிக்கவில்லை என்றாலும் சிறிது நேரத்தில் இருசாராருமே சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. முதலில் வலியன் தான் குமரன் நம்பியிடம் பேசினான்:-
“கடம்பர்களிடமிருந்து தப்பி வந்ததற்காகவும் படைத் தலைவருக்குத் தமது மனம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்குமாறு கூறியனுப்பியிருக்கிறார் நம் அமைச்சர் பெருமான்”
“இதில் என்னைப் பாராட்டுவதற்கு எதுவும் இல்லை! சந்தர்ப்பம் ஒத்துழைக்காமல் போயிருந்தால் நானே தப்பியிருக்க முடியாது. நான் தப்பி வந்துவிட்டாலும் என்னோடு சேர்ந்து சிறைப்பட்ட கொடுங்கோளுர் வீரர்கள் இன்னும் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களிலேதான் சிறைப்பட்டு வாடியிருக்கிறார்கள். அவர்களை இனியும் காலதாமதமின்றி மீட்கவேண்டும். இல்லாவிட்டால் என் உயிருக்கு ஆசைப்பட்டு நான் மட்டும் தப்பி விட்டேன் என்பதாக எண்ணி அவர்கள் மனங்குமுற நேரிடும். இந்த நிலைகள் எல்லாம் தெளிவாக வேளாவிக்கோமாளிகைக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ, எனக்குத் தெரியாது!’ என்று குமரன் நம்பி கூறியவுடனே அவனுக்கு மறுமொழி கூறாமல் வலியனும் பூழியனும் தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சிறிது நேர மெளனத்துக்குப் பின் குமரன் நம்பியை நோக்கி “கொடுங்கோளுர் வீரர்களையும் காப்பாற்றவேண்டும், இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியையும் தேடிப் பிடித்துக் காப்பாற்றி மீட்டு வரவேண்டும் என்பதை அதற்குள் மறந்துவிட்டீர்களா, படைத்தலைவரே?” என்று அவர்கள் இருவரும் கேட்டனர்.
குமரன்நம்பி உடனே சிறிதும் தயங்காமல் “ஒரு வேளை நான் மறந்துவிட்டாலும், கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைப்பற்றி எனக்கே அடிக்கடி நினைவூட்டுவதற்கு நீங்களிருவரும் இருக்கும்போது நான் ஏன் கவலைப் படவேண்டும்” என்று குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே கூறினான். படைக்கோட்டத்துத் தலைவனான அவன் அவ்வாறு கூறியதை அவர்களும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
“ஒரு பேச்சுக்காக இப்படி மறுமொழி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறோம் படைத் தலைவரே உண்மையில் உங்கள் இதயம் இவற்றை எல்லாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியுமா, என்ன?” பதிலுக்கு வினவினார்கள் அவர்கள்.
அதற்குப்பின் குமரன் நம்பி அவர்களிடம் எதுவும் பேச வில்லை. கீழ்த்திசை வெளுத்து விடிந்துவிடுமோ என்று பயப்படுமளவுக்கு நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. போனவனோ, படகுகளோ ஏன் இன்னும் திரும்பவில்லை என்று குமரன் நம்பிக்குச் சந்தேகம் தட்டியது. ஒலையை எடுத்துச் சென்ற செவிட்டூமை என்ன ஆனான், அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைப்பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதது கவலைக்கிடமாக இருந்தது. அந்த வேளையில் பொன்வானி முகத்தில் துடுப்புகள் நீரை அளையும் ஒலி தொலைவில் மெல்லக் கேட்கலாயிற்று. எல்லாரும் செவிகளைத் தீட்டிக்கொண்டு கேட்கலாயினர். புதரில் மறைந்திருந்த வீரர்களை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் இருக்குமாறு வேண்டினான் குமரன் நம்பி.