வஞ்சிமாநகரம்/6. நள்ளிரவில் நிகழ்ந்தது

6. நள்ளிரவில் நிகழ்ந்தது

கொடுங்கோளுர்ப் படைக் கோட்டத்திற்கு அருகிலிருந்த பொன்வானியாற்றுக் கிளைக் கால்வாயிலிருந்து நள்ளிரவு வேளையில் அந்தப் படகு புறப்பட்டது. படகில் கொடுங்கோளுர் குமரன் நம்பியும் அவனுக்கு அந்தரங்கமானவர்களாகிய படைக் கோட்டத்து வீரர்கள் மூவரும் இருந்தனர். அமைச்சர் அழும்பில்வேளின் ஊழியர்களாகிய வலியனும் பூழியனும் படைக்கோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தெரியாமலே குமரன் புறப்பட்டிருந்தான். முகத்துவாரத்தை நெருங்குகிறவரை அந்தக் கால்வாயின் இருபுறமும் அடர்ந்த  சோலைகள் இருந்தன. இயல்பாக இருண்டிருந்த சூழலை இந்தச் சோலைகள் மேலும் இருளாக்கியிருந்தன. எனவே பிறரறியாமற் செல்வதற்கு அந்தச் சூழ்நிலை மிகவும் துணை செய்தது.

நடுக்கடலுக்குள் அவர்களுடைய படகு சென்றபோது அலைகள் அதிகமாயிருந்தன. கடலில் கடம்பர்களும் ஆந்தைக் கண்ணனும் மரக்கலங்களை நிறுத்தியிருந்த இடமோ ஒன்றரை நாழிகைப் பயணத்துக்குரிய தொலைவு இருக்குமென்று தோன்றியது. கடலில் அந்தப் பகுதியினருகே ஒரு சிறு தீவும் அமைந்திருந்தது. படகில் போய்க்கொண்டிருக்கும் போதே என்ன செய்வது என்பது பற்றிக் குமரன் நம்பி திட்டமிடத் தொடங்கினான். அவன் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் சிந்திக்கத் தொடங்குகிறான் என்பதறிந்த நண்பர்கள் மகிழ்ந்தனர்.

‘இந்த அகாலத்தில் ஆந்தைக்கண்ணன் உட்பட எல்லாக் கொள்ளைக்காரர்களும் தத்தம் மரக்கலங்களில் இருப்பார்களா? அல்லது கலங்களிலிருந்து இறங்கித் தீவில் ஒய்வு கொண்டிருப்பார்களா? தீவில் இருப்பார்களானால் நாம் கலங்களில் நுழையலாம். கலங்களில் இருப்பார்களானால் நாம் தீவில் துழையலாம். இவர்கள் சிறைப்பிடித்து வந்த இரத்தின வணிகளின் மகளை எங்கே தங்க வைத்திருக்கிறார்களென்பதும் நமக்குத் தெரியவேண்டும்’ - என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினான் அவன். மெல்ல மெல்ல அவர்கள் படகு கொள்ளை மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியை நெருங்கியது. தீவில் ஒதுங்கியிருந்த ஒரு பகுதியில் இறங்கிச் சுற்றுச் சூழல்களை அறிந்த பின் மேலே என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதென்று முடிவு செய்தான் குமரன்.

அவர்களுடைய படகு தீவருகே ஒதுங்கியபோது தீவு அமைதியாயிருந்தது. கரும்பூதங்களைப்போல் அடர்ந்த மரங்கள் தென்பட்டன. நால்வரும் படகைக் கரையருகே இழுத்து அது உட்கடலுக்கு நகர்ந்து விடாமல் மரத்துடன் இறுக்கிக் கயிற்றால் பிணைத்தபின் தீவுக்குள் சென்றனர். தீவில் - கொள்ளைக் காரர்கள் யாரும் தங்கியிருப்பதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. தீவோரமாக நிறுத்தியிருந்த மரக்கலங்களில் எந்த மரக்கலத்தில் கொள்ளைக்காரர்கள் தலைவனாகிய ஆந்தைக் கண்ணன் தங்கியிருப்பான் என்று அநுமானம் செய்ய முனைந்தான் குமரன். முதலில் அது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. நேரம் செல்லச் செல்ல கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. இறுதியில் குமரனே தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு அதை மற்றவர்களுக்கு விவரித்தான்.

“நண்பர்களே ! நீங்கள் யாவரும் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் நான் திரும்பி வருகிறவரை கண்டிப்பாக இங்கிருந்து அசையக் கூடாது. நான் திரும்புவதற்குத் தாமதமானால் நீங்களாகவே எனக்கு ஏதேனும் அபாயமென்று கற்பனை செய்து கொள்ளவும் வேண்டியதில்லை. படகைமட்டும் நான் கொண்டு செல்வேன். அடையாளமாக நான்-உங்களை இருக்கச் சொல்கிற இடத்திலேயே நீங்கள் இருக்கவேண்டியது மிகமிக அவசியம். ஏனெனில் நான் எந்த அவசரத்தில் திரும்பி வந்தாலும் நீங்கள் உடனே என்னோடு புறப்பட ஆயத்தமாயிருக்க வேண்டும். திரும்பி வந்து நான் தீவில் இறங்கி உங்களைத் தேடும்படி ஆகிவிடக் கூடாது.”

அவன் கூறியபடியே ஆயத்தமாயிருக்க அவர்கள் இணங்கினர். குமரன் படகில் புறப்பட்டான். அந்தக் கொள்ளை மரக்கலங்களுக்கிடையே செல்வது மிகவும் கடினமாயிருந்தது. சில மரக்கலங்களில் உருவிய வாளுடன் கடம்பர்கள் காவலுக்கு நின்றார்கள். இன்னும் சில மரக்கலங்கள் அமைதியடைந்திருந்தன. தான் அந்த நிலையில் அப்போது மிகமிக அபாயமான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் குமரன் ஒவ்வொரு கணமும் உணர்ந்தான். கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களுக்கு இடையேதான் படகில் செல்வதை அவர்களில் யாராவது பார்த்து விட்டால் என்ன ஆகும் என்பதை நினைக்கத் தொடங்கிய போதே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது.

படகு செலுத்திச் செல்லும்போதும் கவனமாக செலுத்திச் செல்லவேண்டியிருந்தது. இருளின் மிகுதியினால் வழி தெரியாமலோ கவனக்குறைவாகவோ பெரு மரக்கலங்களில் எங்காவது தன் படகு இடித்தோ, மோதியோ, ஓசை எழுந்தால் - உடனே பாய்ந்தோடி வரும் முரட்டுக் கடம்பர்களிடம் தான் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதையும் நன்கு உணர்ந்து, தன் விழிப்போடு இருந்தான் குமரன். ஒன்றும் புரியாமல் புதிர் போலிருந்த பல மரக்கலங்களின் பக்கங்களில் நுழைந்து திரும்பி வந்த பின்நன்கு அலங்கரிக்கப்பட்டதும் மற்றவற்றைக் காட்டிலும் சிறப்பாக வேறுபட்டுத் தோற்றமளித்ததும், மிகப் பெரியதுமான ஒரு மரக்கலம் தெரிந்தது. அதன் உச்சியில் கபாலமும் கொடுவாளுமாகப் பறந்த கடம்பர்களின் குரூரமான கொடி, மேல் தளத்தில் நாட்டியிருந்த தீப்பந்த ஒளியில் மங்கலாகத் தெரிந்தது. எல்லா மரக்கலங்களிலுமே கடம்பர்களின் கொடி பறந்தது என்றாலும் இந்தப் பெரிய மரக் கலத்தில் - மிகப் பெரியதாகவும் அதிக உயரத்திலும் பறந்து கொண்டிருந்தது. தளத்தில் காவலர்களும் நின்று கொண்டிருந்தனர். குமரன் தனக்குள் சிந்தித்தான்.

‘சூழ்நிலைகளையும் தோற்றத்தையும் கொண்டு ஆராயுமிடத்து இதுதான் ஆந்தைக்கண்ணனின் மரக்கலமாக இருக்க வேண்டும். இந்த மரக்கலத்தில் ஏறிப் பார்ப்பதற்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் என் ஆருயிர்க் காதலி அமுதவல்லி எங்கே சிறைப்பட்டிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.’

‘மேலே என்ன செய்யலாம்? என்ன செய்தால் நான் நினைத்தது கைகூடும்?’ - என்றெண்ணியபடியே அந்தப் பெரு மரக்கலத்தின் நான்கு பக்கத்துச் சூழ்நிலைகளையும் கணித்தறிவதற்காக வலம் வருவதுபோல் படகில் ஒருமுறை சுற்றி வந்தான்.

மரக்கலத்தின் ஒரு பகுதியில் வலிமையான கயிற்று ஏணி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கடற்பரப்பிலிருந்து மரக்கலத்தின் மேல்தளத்திற்கு ஏறிச் செல்வதற்கு அதுதான் ஒரே வழி என்பதை அவனால் உய்த்துணர முடிந்தது. ஆனாலும் அப்படிக் கயிற்றேணி வழியாக ஏறிச் செல்வதற்கு முன், மற்ற மரக்கலங்களில் காவலுக்காகத் தளத்தில் நிற்பவர்களுக்குத் தான் கயிற்றேணியில் ஏறும் காட்சி தெரியுமா? அந்தக் காட்சியினால் அவர்கள் கவரப்படுவார்களா என்பதைச் சிந்திக்க வேண்டியிருந்தது.

நல்லவேளையாகக் கயிற்றேணி தொங்கிய பகுதிக்கு நேர் எதிரே பார்வையிலிருந்த மரக்கலத்தின் தளத்தில் தீப்பந்தங்களோடு காவலுக்கு நின்ற வீரர்கள் அப்போதுதான் பந்தங்களை அவித்துவிட்டு உறங்கப் போகத் தொடங்கியிருந்தார்கள். அதைத் தவிர மற்ற மரக்கலங்களுக்குக் காட்சி தெரியாதபடி ஆந்தைக்கண்ணனின் கலமே மறைத்துவிடும் என்று தெரிந்தது.

தான் வந்திருந்த சிறு படகை ஆந்தைக்கண்ணனின் மரக் கலத்தோடு பிணைத்துவிட்டு கயிற்றேணியில் ஏறுவதற்குத் தொடங்கினான் குமரன். காற்றினால் ஒரு தொல்லை ஏற்பட்டது. அவன் மரக்கலத்தோடு பிணைத்த படகு - காற்றில் மரக் கலத்தோடு உறாயத் தொடங்கியதனால் ஏற்பட்ட ஒசை - வேறு மரக்கலங்களுக்கு எட்டி யாராவது அதைக் கவனிக்க நேரிடுமோ என்று தயங்கினான் குமரன்.

கடல் அலைகளின் ஒசையில் அந்த ஓசை பெரிதாகக் கேட்காததினாலோ அல்லது அப்படி ஒரு சப்தம் பல மரக் கலங்கள் அருகருகே நிறுத்தியிருக்கும் கடற் பகுதியில் இயல் பாகவே உண்டாகும் என்று பிறர் எல்லாம் கருதிவிட்டதினாலோ, குமரனுக்கு ஒர் அபாயமும் ஏற்பட அந்த ஓசை ஏதுவாகவில்லை. கயிற்றேணியில் அடிக்கடி ஏறிப் பழக்கமில்லாத காரணத்தால் விரைவாக ஏற முடியவில்லை. அந்த மன நிலையில் இருந்த பதற்றமும், பழக்கமில்லாத கயிற்றேணியில் ஏறும் காரியமும் சேர்ந்து குமரனை விரைவாக இயங்க முடியாமற் செய்தன. செய்தலும், சுழல்தலுமாகிய நிலையில் கயிற்றேணியைத் தாங்கி மெல்ல மெல்ல மேலேறிய வேளையில் மேலே கப்பவின் மரச் சட்டங்களாகிய தளத்தில் யாரோ நடந்து செல்லும் காலடியோசை கேட்கவே கயிற்றேணியோடு பக்கவாட்டில் ஒண்டிக்கொள்ள வேண்டியதாயிற்று.

இவ்வாறு நீண்ட நேரம் முயன்று மேல்தளத்தை அடைந்தான் குமரன். மேல் தளத்திலிருந்து படிகளில் இறங்கி உள்ளே மரக் கலத்தின் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அந்தப் படி இறங்குகிற வழியில் உருவிய வாளுடன் கடம்பன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் கண்ணயர்கிறவரை குமரன் நம்பி காத்திருந்தான் ‘படிகளில் இறங்கும்போது யாராவது எதிரே வந்தால் என்ன செய்வது?’ என்பதையெல்லாம் சிந்திக்க நேரமோ வாய்ப்போ இல்லை. மரக்கலத்தின் உட்பக்கத்தில் ஒவ்வொரு தடுப்பாகத் தடுக்கப்பட்டிருந்த அறைகளில் எதிலாவது கொடுங்கோளுர் இரத்தின வணிகரின் மகளும் தன் ஆருயிர்க் காதலியுமாகிய அமுதவல்லி சிறை வைக்கப்பட்டிருப்பாளா என்று கண்டுபிடிப்பதே அவனுடைய முதன்மை நோக்க மாயிருந்தது.

படியிறங்கியதும் முதற் கூடத்தில் பூதம் படுத்து உறங்குவது போல் பெருங்குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான் ஆந்தைக்கண்ணன். அந்த மாமிச மலையின் அருகே மதுக்குடங்கள் கவிழ்ந்து கிடந்தன. விகாரமாகக் கால் பரப்பி வீழ்ந்து கிடக்கும் அந்தக் கொள்ளையர் தலைவனைப் பார்ப்பதற்கே பயமாகவும் அரு வருப்பாகவும் இருந்தது. கொள்ளையடிக்கிற பொருள்களையும், பொன், மணி, முத்து முதலியவற்றையும் பாதுகாப்பாக நிறைத்து வைக்கிற பகுதிகளையும் அந்த மரக்கலத்தினுள்ளே சுற்றிப் பார்த்தான் குமரன்நம்பி பலநாள் முற்றுகைக்குரிய உணவுப்பொருள்களும், ஏற்பாடுகளும் அந்த மரக்கலத்தில் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் அமுதவல்லியைப் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. வேறு சில மரக்கலங்களிலும் அவன் ஏறி இறங்கினான். ஒரு பெரிய முற்றுகைக்கும், கொள்ளையிடலுக்கும் வேண்டிய எல்லா ஏற்பாடுகளுடனும் அந்தக் கலங்கள் வந்திருப்பது விநாடிக்கு விநாடி உறுதிப்பட்டது. அவன் மனதில் ஆள் வலிமையும், ஆயுதங்களின் வலிமையும் கூட அவர்களிடம் மிகுதியாய் இருப்பதை அவன் அங்கே தெளிவாகக் கண்டுணர்ந்தான். ஒற்றறிவதற்காக ஏறி இறங்கிய மரக்கலம் ஒன்றில் காவலுக்கிருந்த கொள்ளை வீரர்கள் இருவருடைய உரையாடலை அவன் ஒட்டுக் கேட்க நேர்ந்தது.

“இந்த முற்றுகையினால் நமக்குப் பெரும் பயன் வரப் போகிறது. நல்ல வாய்ப்பு இது. சேர வேந்தர் செங்குட்டுவர் வட திசையில் குயிலாலுவம் வரை படைத் தலைவர்களுடனும், சேர சைன்யத்தின் பெரும்பான்மையான வீரர்களுடனும் படையெடுத்துச் சென்றிருக்கிறார். கொடுங்கோளூரிலோ வஞ்சிமா நகரத்திலோ வீரர்கள் அதிகமில்லை. இந்த இரண்டு பெருநகரங்களிலும் உள்ள செல்வங்களைக் கொள்ளையிட இதைவிடப் பொன்னான சமயம் நம் தலைவருக்கு வாய்க்காது” என்றான் முதற் கடம்பன்.

“ஆம்! நேற்றிரவுகூட நம்மவர்களிற் சிலர் கடலிலிருந்து பொன்வானியாற்று முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளுரின் நிலையை ஒற்றறிவதற்காகச் சென்று வந்தார்களாமே? எப்படி இருக்கிறது நிலைமை?” என்று முதல்வனைக் கேட்டான் இரண்டாங் கடம்பன்.

இந்த இடத்தில் குமரன்நம்பியின் புலன்கள் கூர்ந்து ஒன்றாகி அந்தப் பேச்சை உற்றுக் கேட்டன. அப்படி பொன்வானி முகத்துவாரத்தின் வழியே ஒற்றறியச் சென்ற கடம்பர் குழுவினரால்தான் அமுதவல்லி சிறைப்பட்டிருக்க வேண்டு மென்று அவனால் யூகிக்க முடிந்தது.