வஞ்சிமாநகரம்/9. கடம்பர் சூழ்ச்சி
உடனிருந்த வீரன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்த குமரன் நம்பி திடுக்கிட்டான். கடம்பர்கள் இன்ன இடத்தில் இவ்வளவு கப்பல்களோடு முற்றுகை இட்டிருக்கிறார்கள் என்பதாக முந்தைய தினங்களில் நேரில் கண்டறிந்து உறுதி செய்த திட்டமெல்லாம் பொய்யாகும்படி அவர்கள் வேறொரு திசையில் முன்னேறி நகரத்தை ஒட்டிய கடற்பகுதிக்குச் சென்றிருப்பது தெரியவந்தது. எதிர்பாராத விதமாகக் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட இந்த உண்மை அதிர்ச்சியை அளிப்பதாய் இருந்தது. தன்னுடைய முன்னேற்பாடும் திட்டங்களும் இப்போது காலங் கடந்தவையாயும் பயனற்றவையாயும் ஆகிவிட்டதை அவன் உணர்ந்தான். சுற்றி இருந்த அனைவர் முகத்திலும் கலவரம் தெரிவதையும் - கலக்கம் படர்வதையும் அவன் உணர்ந்தான்.
இரவு முழுவதும் கண்விழித்து நுணுக்கமாகவும் அரச தந்திரத்தோடும் செய்த ஏற்பாடுகள் எல்லாம் வீணாகிவிட்டன என்றெண்ணும்போது வேதனையாய் இருந்தது. கடற் கொள்ளைக்காரர்களுடைய முற்றுகையைத் தகர்த்துத் தன் ஆருயிர்க் காதலியும் கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகளுமாகிய அமுதவல்லியைச் சிறைமீட்டு - வேளாவிக்கோ மாளிகை என்னும் அரச தந்திரக்கூடத்தில் அமைச்சர் அழும்பில்வேளை வெற்றிப் பெருமிதத்தோடு சந்திக்கலாம் என்ற எண்ணத்திலிருந்த அவனுக்கு இந்த ஏமாற்றம் அதிர்ச்சியை அளிப்பதாயிருந்தது. இனி உடனடியாக என்ன செய்வது என்பதை அவன் விரைந்து முடிவு செய்யவேண்டிய நிலையில் இருந்தான். விடிவதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும் அல்லது கரையடைவதற்கும் திரும்புவதற்கும் முயற்சியாவது மேற்கொள்ள வேண்டும். விடிந்தால் உட்புறக் கடலின் நெடுந்தொலைவில் இருக்கும் இவர்கள் படகுகள் கரையை ஒட்டி இருக்கும் கடம்பர்களுக்கு மிகவும் தெளிவாகத் தென்படலாம். அதனால் அவர்களே இவர்களைக் கரையடைய விடாமல் வழிமறிக்கவும் நேரிடலாம்.
‘என்ன செய்வது?’ - என்று சிந்தனைக் குரியதாக இருந்தது. உடன் வந்தவர்களில் படகோட்டிகளைத் தவிர மற்றவர்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய விரும்பினான் குமரன் நம்பி.
“கொள்ளைக்காரர்களின் மரக்கலங்களை வளைத்து விரட்டுவதற்கு எதுவும் செய்யாமல் இப்படியே இருளோடு இருளாகக் கரைதிரும்புவோமானால் இரண்டு இரவுகள் அயராது கண் விழித்துப் பாடுபட்டது வீணாகிவிடும். மறுபடியும் நாளை நாம் திட்டமிடுவதற்குள் எது-எது எப்படி எப்படி இருக்குமோ? இப்போதே நாம் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் கடம்பர்கள் மகோதைக் கரையை நெருங்கிய முறையில் தங்கள் முற்றுகையை மாற்றிக் கொண்டார்கள். ஆகவே வந்தது வந்துவிட்டோம், முடிந்ததைச் செய்ய முயன்று பார்க்கலாமா? உங்கள் கருத்து என்ன? இதில் எந்த அளவு நீங்கள் என்னோடு ஒத்துழைக்கத் திட்டமாயிருக்கிறீர்கள்?” - என்று அவர்களை நன்கு உணர்வதற்காக வினவினான் குமரன் நம்பி.
“படைத் தலைவர் எப்படிக் கட்டளையிடுகிறாரோ அப்படிச் செய்ய சித்தமாயிருக்கிறோம்” என்றார்கள் அவர்கள். உடனே எல்லாருமாகச் சேர்ந்து விரைந்த முடிவு ஒன்றிற்கு வந்தனர்.
கடம்பர்கள் அப்போது கடலில் தங்கள் மரக்கலங்களை நிறுத்தியிருந்த இடம் மகோதைக் கரையிலே பொன்வானி முகத்துவாரத்துக்கு அருகில் இருந்தாலும் விடிவதற்குள் இருளோடு இருளாக அந்த இடத்திற்கே சென்று அவர்களையும் அவர்களுடைய கலங்களையும் வளைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சூழ்ச்சியை நிறைவேற்றி முடிப்பது என்ற உறுதி பிறந்த பின் படகுகள் மறுபடி விரைந்தன. மகோதைக் கரையிலே கொள்ளை மரக் கலங்கள் நின்ற திசையைநோக்கி இந்தப் படகுகள் விரைந்த போது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மித்திரபேத சூழ்ச்சியே இவர்கள் மனதில் நிறைந்திருந்தது.
ஆனால் காரிய அவசரத்திலும், திடீரென்று எதிரிகளின் கலங்கள் இடம் மாறியிருந்ததைக் கண்டதிலும் பரபரப்பு அடைந்திருந்த அவர்கள் சிலவற்றை நிதானமாகச் சிந்திக்கத் தவறியிருந்தார்கள். தீப்பந்தங்களை எல்லாம் அணைத்திருந்ததனாலும், கொள்ளை மரக்கலங்கள் நின்றிருந்த பகுதி சற்றே தொலைவிலிருந்ததனாலும் அருகில் நெருங்கிய பின்புதான் சில உண்மைகள் அவர்களுக்குப் புரியவரலாயின. கடம்பர்களின் தலைவனான ஆந்தைக்கண்ணன் எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தான் என்பது அருகில் நெருங்க நெருங்கத்தான் தெரிந்தது.
கொள்ளை மரக்கலங்களில் உள்ளவர்கள் யாவரும் விழிப்போடிருந்தனர். கலங்களெல்லாவற்றையும் வட்டவடிவில் சக்கரவியூகமாக ஒரு கோட்டைபோல் நிறுத்தியிருந்தனர். நடுவில் நீர் இடைவெளிபட மரக்கலங்களையே வட்டவடிவாக நிறுத்தி ஒரு கடற்கோட்டை கட்டினாற்போல் செய்து ஒவ்வொரு தளத்திலும் வீரர்கள் காவலுக்கு வேறு நின்றார்கள். நடுக்கடலில் இருந்தவரை எப்படியானாலும் கரையை நெருங்கிய பின்பு பாதுகாப்பு அவசியம் என்று எண்ணியதுபோல் ஏற்பாடுகளைச் செய்திருந்தான் ஆந்தைக்கண்ணன். அதனால் இவர்கள் நிலைமை திருப்பத்திற்குள்ளாகியது.
கடவில் ஓர் எல்லைவரை எதிரிகளின் முற்றுகைப் பகுதியை நெருங்கிய பின்பே இவற்றை எல்லாம் குமரன் நம்பியும் உடனிருந்த நண்பர்களும் அநுமானித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் மறுபடி வந்த வழியே திரும்புவதற்கு முடியாது. வந்தது வரட்டும் என்று அவர்கள் துணிய வேண்டியிருந்தது. கடம்பர்களின் மரக்கலங்களாகிய கடற்கோட்டையை தெருங்க நெருங்க விளைவுகள் வேறுவிதமாக மாறத் தொடங்கின. ஒரு குறிப்பிட்ட தொலைவிலேயே இவர்கள் வந்து கொண்டிருப்பதைக் கப்பலில் இருந்தவர்கள் பார்த்து விட்டார்கள் போலும், அதன் விளைவாக கொள்ளைக்காரர்கள் படகுகளில் காத்திருந்து வளைக்கத் தொடங்கினார்கள். திடீரென்று முற்றிலும் எதிர்பாராத விதமாகச் சூழ்நிலை மாறுதல் அடைந்தது. குமரன் நம்பியும் அவனோடு வந்தவர்களும் கடம்பர்களின் மரக்கலங்களை வளைப்பதற்குப் பதில் - அவர்களுடைய சிறு படகுகளை - ஆயத்தமாகக் காத்திருந்த கடம்பர்கள் தங்கள் படகுகள் மூலம் வளைத்துப் பிடித்தனர். குமரன் நம்பியும், நண்பர்களும் எப்படித் தப்புவது என்று யோசிப்பதற்குக்கூட வாய்ப்பில்லாத நெருக்கத்தில் திடீரென்று கடம்பர்களிடம் சிக்கினார்கள்.
குமரன் நம்பி முதலியவர்களுடைய கரங்கள் முறுக்கேறிய தாழங்கயிறுகளால் பிணிக்கப்பட்டன. அவர்கள் ஏறிவந்த படகுகளும் கடம்பர்களால் கைப்பற்றிக்கொள்ளப்பெற்று, அவர்களுடைய மிகப்பெரிய மரக்கலங்களோடு பிணைத்து மிதக்கவிடப்பட்டன.
குமரன் நம்பியும் அவனோடு சிறைப்பிடிக்கப்பட்டவர்களும் ஆந்தைக்கண்ணனின் கப்பல் தளத்திலே கொண்டுபோய் நிறுத்தப்பட்டார்கள். வாயில் கள் நாற்றமும், உருண்டு உருண்டு விழிக்கும் குரூரமான ஆந்தைக்கண்களோடு கூடிய முகமும், பூதாகாரமான உயர்ந்த தோற்றமுமாக அந்தக் கொள்ளைக்காரர் தலைவன் அவர்களுக்குத் தோற்றமளித்தான். அவனைக் கண்டபோது கயிறுகளால் பிணைக்கப்பட்டிருந்தவர்களது நெஞ்சு ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. அவனோ பாதி கிறங்கிய விழிகளுடன் தளத்தில் வந்து நின்று ஏதோ புழுப் பூச்சிகளைப் பார்ப்பதுபோல் அவர்களைப் பார்க்கலானான். யாரையுமே கருணை நோக்கோடு பார்க்க இயலாதபடி பிறவி இயல்பிலேயே கொடூரமாக அந்தக் கண்களைப் படைத்திருக்க வேண்டும் கடவுள். அந்தப் பேருருவம் வந்துநின்ற விதத்திலேயே கப்பலின் தளம் அதிர்ந்தது. இவர்களைப் பார்த்துக் குரூரமாக ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்தான் அவன்.
“இவர்கள் சேரநாட்டுக் கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்து வீரர்கள். நமது மரக்கலங்களை நோக்கிப் படகுகளில் வந்தார்கள், கைப்பற்றினோம்” என்பதாக ஒரு கொள்ளைக்காரக் கடம்பன் தங்கள் தலைவனான ஆந்தைக்கண்ணனிடம் இவர்களைப்பற்றி எடுத்துக் கூறினான்.
“தெரிகிறது ! தெரிகிறது ! இன்றுள்ள சூழ்நிலையில் இவ்வளவு குறைந்த தொகையுள்ள வீரர்கள் சேரநாட்டிலிருந்துதான் வந்திருக்க முடியுமென்று நன்றாகத் தெரிகிறது. பாவம், சேர நாட்டுப் படை முழுவதும் வடதிசைப் படையெடுப்பிற்குச் சென்றிருக்கிறதுபோல் தோன்றுகிறது; நாம் கொடுத்து வைத்தவர்கள். இந்த வேளை நமக்குத்தான் நன்மையாகவும் சாதகமாகவும் வாய்த்திருக்கிறது. கொடுங்கோளுரையும் வஞ்சிமாநகரையும் ஏன் மகோதைக் கரையிலுள்ள செழிப்பு வாய்ந்த எல்லா நகரங்களையும் - நாம் கொள்ளையிடுவதற்கு இதைவிட வாய்ப்பான நேரம் வேறு கிடைக்க முடியாது. இரத்தின வணிகர்களையும், முத்து வணிகர்களையும் தேடிப் பிடித்துக் கொள்ளையிட வேண்டும்” என்று கேட்க அருவருப்பான கடுங்குரலில் முழங்கினான் ஆந்தைக்கண்ணன்.
குமரன் நம்பி மனம் கொதிக்கப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு நின்றான். அவனோடு உடனிருந்த சேரநாட்டு வீரர்கள் தங்கள் தலைவனான அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனோ எதுவுமே பேசவில்லை. உள்ளே பலவிதமான சிந்தனைகளால் அவன் மனம் தவித்துக் கொண்டிருந்தது. வேளாவிக்கோ மாளிகையின் நடுக்கூடத்தில் வைத்து அமைச்சர் அழும்பில்வேள் தன்னிடம் கூறியவற்றை எல்லாம் நினைவு கூர்ந்தான் அவன். அவ்வளவு திட்டமும் இப்போது இந்த விநாடியில் பாழாகிவிட்டதை உணர்ந்து அவன் மனம் கொதித்தது.
அந்த இரவில் தங்களிடம் சிறைப்பட்டு விட்ட குமரன் நம்பி முதலிய கொடுங்கோளுர் வீரர்களைக் கப்பலின் கீழ்த்தளத்து இருளில் கொண்டுபோய் அடைத்தார்கள் கடம்பர்கள். அதிலிருந்து எப்படித் தப்புவது என்ற வழியே தோன்றாமல் சேர நாட்டு வீரர்கள் இருளில் தவித்தார்கள். அவர்களுடைய மனத்தில் கடம்பர்கள் தங்களிடம் அகப்பட்டுக் கொண்டவர்களை எப்படி எப்படி எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருந்தவை எல்லாம் நினைவுக்கு வந்து பயமுறுத்தின.
குமரனுடைய உள்ளத்திலே எவ்வளவோ கவலைகள் இருந்தாலும் ஒரு சிறு நம்பிக்கையும் மின்னி மின்னி மறைந்தது. கொடுங்கோளுர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லி கடம்பர்களால் சிறைப்படுத்தப்பட்டிருந்தால் இதே மரக்கலத்திலோ, அல்லது இங்குள்ள வேறு மரக்கலங்களிலோ தேடி இருப்பிடம் அறிய முயலலாம் என்பதுதான் அந்த நம்பிக்கையாயிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்ததும் அவர்கள் மறுபடியும் கப்பலின் தளத்தில் ஆந்தைக்கண்ணனுக்கு முன்பு கொண்டு போய் நிறுத்தப்பட்டார்கள். அவர்களில் குமரன் நம்பியின் தோற்றத்தைக் கொண்டும், மற்றவர்கள் அடிக்கடி அவன் முகக் குறிப்பையே எதிர்பார்த்ததில் இருந்தும், அவன்தான் குழுவின் தலைவன் என ஆந்தைக்கண்ணனால் அநுமானிக்க முடிந்தது. எனவே அவன் சேர நாட்டு நிலைபற்றியும், கொடுங்கோளூர் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியுள்ளன என்பது பற்றியும் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். குமரன் நம்பி அந்தக் கேள்விகளுக்கு எல்லாம் மறுமொழி கூறாமல் மெளனம் சாதிக்கவே ஆந்தைக்கண்ணனின் விழிகளில் சீற்றம் பன்மடங்காகியது.
“கடம்பர்களிடம் சிறைப்பட்டவர்கள் உயிரோடு மீண்டு செல்ல நேர்ந்ததில்லை என்று நீ கேள்விப்பட்டிருப்பாய் !”
“ஆம் ! அதே கடம்பர்களை எங்களுடைய பேரரசர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவர் பலமுறை ஓட ஓட விரட்டியிருக்கிறார் என்பதையும் சேர்த்துதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”
“இருக்கலாம் இளைஞனே ! ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்குவதற்குத்தான் இப்போது சமயம் பார்த்து வந்து இந்த மகோதைக் கரையை முற்றுகையிட்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதே-” என இடி முழக்கம் போன்ற கடுமையான குரலில் குமரன் நம்பிக்கு மறுமொழி கூறிவிட்டுக் கடகடவென அரக்கச் சிரிப்புச் சிரித்தான் ஆந்தைக்கண்ணன். பேச்சோடு பேச்சாக அவனிடம் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கொடுங்கோளுரில் இருந்து சிறைப்பிடித்து வந்த கொடுமையைக் கடிந்து குமுறலாமா என்றெண்ணி அப்படி எண்ணிய சுவட்டோடு அதை அடக்கிக் கொண்டான். ஒரு வேளை அமுதவல்வி அங்கே சிறைப்பட்டிருப்பாளேயாகில் தான் குமுறுவது காரணமாகவே ஆந்தைக் கண்ணன் அவளைத் தன்னோடு சேர்த்து உணர்ந்து - அவள் தன்னைச் சேர்ந்தவளே என்ற கருத்தினாலேயே - அவன் அவளைக் கொடுமைப்படுத்தக் கூடுமோ என அஞ்சி அந்த எண்ணத்தைக் குமரன் நம்பி கைவிட்டான். “நாளை இரவில் உங்கள் கொடுங்கோளுர் நகரைச் சூறையாடுவோம். அப்படி உங்கள் அருமையான நகரம் சூறையாடப்படுவதை நீங்களும் இதே கப்பலின் மேல் தளத்திலிருந்து காணலாம். உங்களை இந்தக் கப்பலின் பாய் மரங்களிலும் சட்டங்களிலும் கட்டி வைத்துவிடுவோம்...”
“ஒருநாளும் இது நடை பெறப்போவதில்லை.”
“நிச்சயமாக நாளை நடைபெறப் போகிறது! அதை நீயும் பார்க்கத்தான் போகிறாய் இளைஞனே!” என்று தன்னுடைய ஒரு கையில் இன்னொரு கைவிரல்களை மடக்கி ஓங்கிக் குத்தியபடியே கூறினான் ஆந்தைக்கண்ணன். ஒவ்வொரு தடவை பேசி முடிக்கும் போதும் அவன் பற்களை நறநறவென்று கடித்து ஓசை எழுப்புவது கேட்கக் கோரமாக இருந்தது.