வண்டிக்காரன் மகன்/ஏழை

3
ஏழை


வன் ஓர் ஏழை—ஏளனத்துக்கு ஆளானவன். 'தொட்டது துலங்காது, கெட்டது நல்லது புரியாது, மாடுபோல் பாடுபடுவான், புத்தி கிடையாது' என்று நண்பர்களே நையாண்டி செய்வார்கள். சில வேளைகளில்தான் அவனுக்குக் கோபமும் துக்கமும் பீறிட்டுக் கொண்டு வரும். பொதுவாகச் சிரித்தபடிதான் இருப்பான்—உள்ளூர அவனுக்கே, தனக்குப் போதுமான அளவு அறிவுக்கூர்மை இல்லை என்ற எண்ணம்போலும். ஆகவே உள்ளதைத்தானே சொல்கிறார்கள், இதற்காகக் கோபித்துக் கொள்ளலாமா என்று எண்ணித் தனக்குத் தானே சமாதானம் தேடிக் கொள்வான்.

அவன் ஏழை. ஆனால் ஏழை என்ற நிலையிலிருந்து விடுபட்டாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும், குடைந்து கொண்டிருக்கும் மனம் கொண்டவன். எதையாவது செய்து எந்தப் பாடாவது பட்டுப் பொருள் பெறவேண்டும்; ஏழ்மையை விரட்டிடவேண்டும்—செல்வவான் ஆகவேண்டும் என்று எண்ணுவான்; கூறுவான்.

'வேலையில் சுறுசுறுப்பு இல்லை, செய்வதிலே தவறுகள் ஏற்பட்டுவிடுகின்றன. சுட்டிக் காட்டினால் இளிக்கிறான் அல்லது கெஞ்சுகிறான். தொலைத்து விடலாம் என்றாலோ பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது' என்று முதலாளி கூறுவதுண்டு பலமுறை. அப்போதெல்லாம், ஏழை எல்லப்பன், எப்படிப் பணக்காரனாவது என்று திட்டமிட்டுக் கொண்டு இருந்தான் என்பது பொருள். அதை எப்படி அவன் கூச்சத்தை விட்டு வெளியே கூறமுடியும்? முட்டாள் என்றுகூட ஏசுவார்கள்—கோபித்துக் கொள்வதிலே பயன் இல்லை என்று மனதுக்கு ஆறுதல் கூறிக் கொள்வான்.

முயற்சியைக் கைவிடக்கூடாது என்று ஒவ்வோர் தோல்வியின்போதும் எண்ணிக் கொள்வான். ஏனெனில் அவன் பார்த்துமிருக்கிறான்; கேள்விப்பட்டும் இருக்கிறான். பணக்காரர் ஆன பலர், ஆவதற்கு முன்பு அறிவுத் திறமையுள்ளவர்கள் என்று புகழ் பெற்றவர்கள் அல்ல என்பதனை.

'மாடு மேய்க்கக்கூடப் பயன்படமாட்டாய். மண்டை முழுவதும் களிமண்தான் உனக்கு' என்று கணக்கு ஆசிரியர், ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லித் தலையிலே குட்டுவார், செல்லப்பன் என்பவனை. எல்லப்பனுடன் படித்தவன். இன்று செல்லப்பன் பெரிய புள்ளி. பணத்திலே புரளுகிறான். சேமியா வியாபாரத்தில் ஆரம்பித்து, செயற்கை வைர வியாபாரம் நடத்தி, இப்போது, செல்லப்பா கம்பெனி ஏற்றுமதி இறக்குமதி ஏஜண்டு என்ற பட்டம்பெற்று, பத்து இலட்சத்துக்கு அதிபதியாகிவிட்டான். வீட்டுக் கணக்குக்கூட அவனுக்கு, எல்லப்பன்தான் போட்டுக் கொடுப்பான், இப்போது செல்லப்பனுக்கு, அடுத்த வருஷம் அமெரிக்காவில் எத்தனை லட்சம் பன்றிகள் இருக்கும் என்ற கணக்கிலிருந்து அவைகளுக்கு எத்தனை டன் சோளமும் உருளைக்கிழங்கும் தேவை என்பது வரையில் கணக்குத் தெரியும் என்கிறார்கள்.

'எப்படித்தான் இவ்வளவு கணக்கையும் கற்றுக் கொண்டானோ, 'மக்கு' என்று பெயர் வாங்கிய செல்லப்பன்' என்று எல்லப்பன் வியப்படைகிறான்; விளங்கவே இல்லை.

"எல்லாம் நான் கொடுத்த தகவல். அதைப் பயன்படுத்திக் கொண்டு எனக்கு உரிய பங்கு கொடுப்பதாகச் சொல்லி நம்பவைத்து, முறைகளை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு, கடைசியில் எல்லாவற்றையும் அவனே சுருட்டிக் கொண்டு என்னை விரட்டியேவிட்டான்; ஈவு இரக்கமற்ற பாவி!" என்று முணுமுணுத்தபடி முடங்கிக் கிடக்கிறான் கந்தப்பன். அவனுடைய கந்தலாடையையும் தள்ளாடும் நடையையும் காண்டவர்கள், என்னமோ பிதற்றுகிறான் என்று எண்ணிக் கொள்கிறார்கள்—நம்ப மறுக்கிறார்கள்.

ந்தப்பன், தகவல்களைத் துருவித் துருவிக் கண்டறிபவன், கணக்குப் போடுபவன், புதுப் புதுத் தொழில்கள் குறித்த திட்டமெல்லாம் போடுவதில் வல்லவன். அதை விளக்குவதிலும் திறமை மிக்கவன். ஆனால் தானாகக் காரியமாற்றுவதற்குத் துளியும் வசதியற்றவன். எனவே செல்லப்பன் போன்றவர்களிடம் சென்றுதான் அவன் தன் திட்டங்களைக் கூறமுடியும். அப்படி அவன் தந்த திட்டங்களிலே ஒன்றினால்தான் செல்லப்பன் சீமானானான் என்று துவக்கத்திலே பலமாக வதந்தி உலவிற்று. செல்லப்பன் மறுக்கவுமில்லை; ஒப்புக் கொள்ளவுமில்லை. ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளேன் என்று கூறிவிட்டுச் சிரிப்பான். அவனுடைய அலட்சியப் போக்கு ஒன்றே, கந்தப்பனின் பேச்சை எவரும் நம்பமுடியாதபடி செய்துவிட்டது. எல்லப்பனிடம் இரண்டொரு முறை கந்தப்பன் புகார் கூறிப் பார்த்தாள், நம்பாதது மட்டுமல்ல, எல்லப்பன் எரிச்சல் காட்டி ஏசித் துரத்தினான்.

புதிது புதிதாகப் பணக்காரர்களானவர்கள் என்னென்ன செய்து பொருள் ஈட்டினார்கள் என்பதைக் கேட்டுக் கேட்டுச் சுவைப்பது எல்லப்பனுக்கு வாடிக்கை. கந்தப்பன் அந்த விதமான பேச்சுப் பேசும்போது மட்டும், எல்லப்பன் அக்கரை காட்டுவான்; கால் அரை பணம்கூடக் கொடுப்பான்.

"இவ்வளவு தூரம் பேசுவானேன்—இஞ்சிமுறப்பாவில் ஒரு புதுமுறை இருக்கிறது. இருளப்பன் கம்பெனி சரக்கு வெறும் குப்பபை என்பார்கள்! அவ்வளவு தரமுள்ளதாகச் செய்யக்கூடிய முறை எனக்குத் தெரியும். தெரிந்து? வசதி வேண்டுமே?"

"வசதி என்றால் எவ்வளவு தேவைப்படும், சொல்லேன்."

"சொன்னால், நீ என்ன எடுத்துக் கொடுக்கவா போகிறாய்! உன்னிடம் ஏது?"

"ஏது எப்படி என்பது பற்றி உனக்கென்ன கவலை? தொழிலை ஆரம்பிக்க எவ்வளவு பணம் வேண்டும். அதைச் கொல்லு. எப்படியோ பணத்துக்கு வழி செய்து கொள்கிறேன்."

"எப்படி என்றுதான் கேட்கிறேன். ஆசை காட்டிவிட்டு அதை நம்பி நான் புது முறையை உனக்குச் சொல்லியான பிறகு, நீ கையை விரித்துவிட்டால் என்ன பிரயோசனம்."

"எவருக்கும் சொல்லாமல் உன் மனதோடு அந்தமுறையைப் போட்டுப் பூட்டி வைப்பதிலே என்ன இலாபம்?"

"வீணாக ஏன் வம்பு. உன்னால் மூன்றாயிரம் ரூபாய் முதல் போட முடியுமா, அதைச் சொல்லு."

"போட்டால், என்ன இலாபம் கிடைக்கும்."

"முதல் வருஷத்திலேயே பத்து ஆயிரம்."

"மூன்றாயிரம் முதலீடு. பத்தாயிரம் இலாபமா எந்த மடையன் நம்புவான்?"

"நம்பமாட்டான், உன்னைப் போன்றவன். செல்லப்பனிடம் ஒரு பேச்சு சொல்லு, உடனே விவரம் கேட்டுக் கொண்டு காலத்தை ஓட்டமாட்டான். பணத்தை எடுத்துக் கொடுப்பான்; வேலையை மளமளவென்று ஆரம்பிக்கச் சொல்லுவான். தெரியுமா?"

"உன்னைத்தான், உபயோகமற்றவன் என்று ஏசி விரட்டிவிட்டானே! இன்னும் எதற்காக அவனுடைய பேச்சு? விட்டுத் தள்ளு. மூன்றாயிரம் வேண்டும். அவ்வளவுதானே. நாலு நாள் பொறுத்துக்கொள்."

"சரி! உன் பேச்சிலே எனக்கென்னவோ, பலமான நம்பிக்கை ஏற்படுகிறது. இதோ பார், இது ஒரு பிரபலமான அமெரிக்க நிபுணர் தயாரித்த முறை. ஒரு முறை, மகாபலிபுரத்துச் சிற்பங்களைப் பார்க்க அந்த அமெரிக்கர் வந்தபோது, தற்செயலாக அங்கு போயிருந்த நான், அவருக்கு மெத்த உதவியாக இருந்தேன். அப்போது அவர் கொடுத்த முறை இது."

"அமெரிக்காக்காரன், ஏன் அந்த முறையைப் பயன்படுத்தித் தானே அந்தத் தொழிலை நடத்தி இலாபம் தேடிக் கொள்ளாமல் உன்னிடம் கொடுத்தான்? காரணம்?"

"காரணமா! போன ஜென்மத்தில் அவனும் நானும் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள், போயேன். கிளறிக் கிளறித் தேவையற்றதைத்தானே நீ கேட்பது வாடிக்கை. பிழைக்கத் தெரிந்தவன் செல்லப்பன்! உனக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம், குழப்பம். அமெரிக்க நிபுணர் ஆண்டர்சன் முறை என்று கூறினால் போதும்; ஒரு கேள்வியும் கேட்கமாட்டான். தொழிலை நடத்தத் தூண்டுவான். அது செல்லப்பன்!! அவன் என்ன உன்னைப் போலவா! பிழைக்கத் தெரிந்தவன்."-இந்த உரையாடல் நடைபெற்று, கந்தப்பன் கூறிடும் திட்டம் கவைக்குதவாது என்று சொல்லி அனுப்பிவிட்டான் எல்லப்பன். செல்லப்பனிடம் பேசச் சென்றான். தொழில் விஷயமாக அல்ல, பழைய மாணவர் சங்க ஆண்டு விழவுக்குத் தலைமை தாங்க அழைக்கச் சென்றபோது பேச்சின் இடையிலே, கந்தப்பன் கூறியதையும் சொன்னான்.

"ஆண்டர்சன் முறையா? அமெரிக்க முறை! ஆமாம்; அந்த முறை எங்கள் கம்பெனிக்கல்லவா சொந்தமாகிவிட்டிருக்கிறது. இருக்குமே ஆறுமாதம், ஒப்பந்தம் ஏற்பட்டு. கந்தப்பன் எப்படி உரிமை கொண்டாட முடியும். பாவம்! வழக்குப் போட்டால், வம்பிலே மாட்டிக் கொள்வானே! இப்படித்தான் விவரம் தெரியாமல், எதிலாவது 'எக்கச்சக்கமாக' மாட்டிக்கொண்டு, பிறகு திருதிருவென்று விழிப்பான். அவன் வாடிக்கை அது" என்று செல்லப்பன் கூறினான். எல்லப்பனுக்குக் கோபமே ஏற்பட்டது கந்தப்பன் மீது. வீடு சென்று பார்த்து ஏசினான். கந்தப்பனுக்கே சந்தேகம் வந்து விட்டது. ஆர்வத்திலே முன்பே கூறிவிட்டிருப்போம், நேரிடையாக ஆண்டர்சனுக்குக் கடிதம் எழுதி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கக் கூடும்; சகல தந்திரமும் தெரிந்த செல்லப்பன் என்று எண்ணினான். ஏக்கம் கொண்டான். மறுநாளே ஒரு எச்சரிக்கை விளம்பரம், நாளிதழ்களில் வெளிவந்தது. 'ஆண்டர்சனின் அபூர்வ அமெரிக்க முறை எமக்கே முழு உரிமையுடையது. வேறு எவரேனும் ஆண்டர்சன் முறையைத் தமக்கும் உரியது என்று கூறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எச்சரிக்கிறோம்' என்ற முறையில் விளம்பரம் வந்தது. கந்தப்பனே கலங்கிப் போனான்.

"உன் பேச்சை நம்பிக்கொண்டு, மூன்றாயிரம் முதல் போட்டிருந்தால், நான் என்ன கதிக்கு ஆளாகியிருப்பேன்? நல்ல வேளையாகச் செல்லப்பன் நமக்கு நண்பன். நிலை உயர்ந்தாலும் நட்புடன் இருக்கிறவன். சரியான சமயத்திலே எச்சரித்து என்னைக் காப்பாற்றினான். இல்லையென்றால் ஆபத்தாக அல்லலா போயிருக்கும்" என்று கூறி எல்லப்பன் கண்டித்தான். கந்தப்பனுடைய கோபம், செல்லப்பன் மீது கூடச் செல்லவில்லை. நம்பவைத்து மோசம் செய்தானே, ஆண்டர்சன். நமக்கும் கொடுத்தான். அந்த முறைக்கான உரிமையை; செல்லப்பனுக்கும் அதே உரிமையைக் கொடுத்திருக்கிறானே! பேராசைதானே இதற்குக் காரணம்? சே! பார்த்தால் 'பெரிய மனுஷன்' போலக் காணப்பட்டான். காரியமோ இப்படி மோசமாக இருக்கிறது. நல்லவேளை, செல்லப்பன் முன்கூட்டியே சொல்லிவிட்டான். நாம், மூலதனம் போட்டுத் தொழிலை ஆரம்பித்துச் சில மாதங்கள் கழிந்த பிறகு, வழக்குத் தொடுத்திருந்தால், எனக்கல்லவா தலைவலியும் காய்ச்சலுமாக ஏற்பட்டுவிடும் என்று எண்ணிக் கொள்கிறான். செல்லப்பனோ, அமெரிக்க நிபுணர் முறை என்ன? அதனால் கிடைக்கத்தக்க ஆதாயம் எவ்வளவு என்று விசாரித்தபடி இருக்கிறான். மற்றவர் அம்முறையினைப் பெற்றிட ஒட்டாது தடுத்திடவே, வேறோர் ஆண்டர்சனை அலுவலகத்தில் அமர்த்தி, அவனிடம் ஒரு அமெரிக்க முறை இருப்பதாக எழுதிப் பெற்றுக் கொண்டிருக்கிறான்!

பெரிய இடம்—எனவே மோதிக் கொள்ள எவருக்கும் துணிவு இல்லை! அதிலும் கந்தலாடைக் கந்தப்பன் எங்ஙனம் துணிவு பெறமுடியும்.

பெரிய இடம் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செல்லப்பன் பெற்ற பல வெற்றிகள் விளங்கிக் கொண்டிருந்தன. பட்டமரம் துளிர்விடச் செய்பவன், பாழ் வெளியைப் பழமுதிர்ச் சோலையாக்குபவன் என்று ஒருவனைக் கூறினால் அவன் ஓர் மாயாவி என்று அல்லவா கருத்து இருக்கிறது என்று பொருள். கெட்டுவிட்டது—விட்டு விட்டேன் என்று எவரேனும் ஒரு தொழிலைக் குறித்துச் சொல்லிவிட்டால், அந்த இடத்திலே செல்லப்பன் இருப்பான்—நான் நடத்திக் கொள்கிறேன் என்று கூறிட! நடத்தியும் காட்டுவான். அது எந்து வகையிலேயோ அவனுக்கு இலாபமாகத்தான் முடியும்.

என்ன செய்வானோ தெரிவதில்லை. கணக்கு பார்க்கும்போது இலாபம் இருக்கும். யாராரைப் பிடிப்பானோ, எப்படியெப்படித் திட்டமிடுவானோ எவருக்கும் விளங்காது. ஆனால், இறுதியில் வெற்றிபெற்றுக் காட்டுவான். இந்த முறை தொலைந்தான்! இதிலே சரியாகப் போய்ச் சிக்கிக் கொண்டான். மீளமுடியாது!—என்று ஊரே பேசும். நண்பார்கள் எச்சரித்துப் பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் யாவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ளும் விதமான முறையில் வெற்றிபெற்றுக் காட்டுவான்.

றுமுகம், ஜாதகம் பார்த்து, முகூர்த்த வேளையில் 'கடைக்கால்' போட்டு அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பித்த இரும்புப் பட்டறை ஆறே மாதத்தில் மூடப்பட்டுவிட்டது. தாங்கமுடியாத நஷ்டம் மட்டுமல்ல, ஊர் எதிர்ப்பு அவ்வளவு ஏற்பட்டுவிட்டது. ஊராட்சி மன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டது. இங்கு கிடைக்கும் இரும்புச் சத்துக் கலந்த மண்ணை வெளிநாடுகளுக்கு அனுப்புவதுதான் நல்ல இலாபம் தருமேயொழிய, இரும்புப்பட்டறை அமைத்துவிடுவது தனிப்பட்ட ஆறுமுகம் இலாபம் அடிக்கத்தான் பயன்படும். ஆகவே ஊராட்சி மன்றம் இந்த ஏற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறது என்று ஒரு தீர்மானமும், இரும்புப் பட்டறை ஏற்படுத்தியதால், இதுவரையில் உழவுத்தொழிலிலே ஈடுபட்டிருந்தவர்கள் அதைவிட்டுவிட்டுத் தொழிற்சாலையில் சேர்ந்துவிடுகிறார்கள். உழவுத் தொழிலுக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாகி விட்டது. உழவுத் தொழிலே நாசமாகி ஊரார் சோற்றுக்கே திண்டாடவேண்டி நேரிடும் என்று எச்சரிப்பதுடன், ஊர் மக்களின் நல்வாழ்வை எண்ணி ஆறுமுகம் தமது ஆலையை மூடவிடவேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று மற்றோர் தீர்மானமும், ஊராட்சி மன்றம் நிறைவேற்றிற்று.

அடிக்கிறான் கொள்ளை!

அகப்பட்டதைச் சுருட்டுகிறான்!

நாம் இளித்தவாயர்கள்

நமது பூமியில்தானே இருக்கிறது இரும்பு மண்.

நாம் கொடுத்தால்தானே அவன் வெட்டி எடுக்க முடியும்.

நிலத்தை விற்காதே!

என்றெல்லாம் பேச்சு, முழக்கம், சுவரொட்டிகள்! ஆலைக்கான கட்டிடம் மட்டும் இரண்டு இலட்சம் ரூபாயை விழுங்கிவிட்டது. ஆறுமுகத்தால் சமாளிக்க முடியவில்லை.

இரும்பு கலந்த மண்ணைத் தோண்டி எடுக்கும் தொழிலாளருக்குப் புதுவிதமான நோய் கண்டுவிடுவதாக ஒரு டாக்டர் பலமாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். நோய் வராமலிருக்க வேண்டுமானால், தொழிலாளர்களுக்கு சுகாதார முறைப்படி விடுதிகளைக் கட்டிக் கொடுக்க முதலாளி முன்வரவேண்டும் என்ற கிளாச்சியும் தொடங்கப்பட்டது. தொல்லைகள் தாங்க முடியாத அளவுக்கு ஏற்பட்டுவிட்டது கண்டு, பணம் போனால் போகட்டும், மன நிம்மதியாவது இருக்கட்டும் என்று எண்ணி ஆறுமுகம், இரும்பு ஆலையை மூடிவிட்டார்.

அடுத்த ஆறுமாதத்துக்குள் அந்த ஆலையை மிகக் குறைந்த விலைக்குச் செல்லப்பன் வாங்கினான். ஆறுமுகமே அகப்பட்டுக் கொண்டு விழித்தான். விட்டால்போதும் என்று ஓடிவிட்டான். இவனுக்கென்ன கெடுமதி? விலை கொடுத்துச் சனியனை வாங்கிக் கொள்கிறானே என்றனர், பலரும்! செல்லப்பன் முதலில், ஆலைக்கட்டிடத்தின் வண்ணத்தை மாற்றினான். கண்ணுக்குக் குளிர்ச்சியான பச்சை நிறம்!

"எப்படி! பார்க்கக் குளுகுளு என்று இருக்கிறதல்லவா?" என்று கேட்டான். 'ஆமாம்' என்றனர். ஊர் இது பற்றியே பேசலாயிற்று.

"என்ன இருந்தாலும் செல்லப்பன் கெட்டிக்காரன். முன்பு அந்தக் கட்டிடத்தைப் பார்த்தால் ஜெயில்போல இருக்கும்! காவிக்கலர் அடித்திருக்கும். உள்ளே நுழைகிற தொழிலாளிக்குப் பயமாகவே இருக்கும். இப்போதுதான் பார்வையாக இருக்கிறது. கிளிப்பச்சை நிறம்!"

"அதுமட்டுந்தானா? முன்பு ஒவ்வொரு ஆளாகத்தான் உள்ளே போகலாம். வாயிற்படி அவ்வளவு குறுகல். இப்போது பாரேன். யானை நுழையலாம் தாராளமாக! அப்படித் திருத்தி அமைத்துவிட்டான்."

"ஆறுமுகம் கஞ்சன். செல்லப்பன் அப்படி அல்ல; தாராளமாகச் செலவு செய்வான்; வருகிற இலாபம் மெதுவாக வரட்டும் என்று இருப்பான். இந்த ஆறுமுகம் அப்படி அல்ல. ஒட்டக் கறந்து பசுவை ஓடாக்கிவிடுவான்."

இப்படி ஊரார் உரையாடல். செல்லப்பனிடம் ஆலை வந்ததும் ஏதோ புதிய மாறுதல்! நல்ல நிலைமை ஏற்பட்டு விடுகிறது என்ற எண்ணம் பரப்பப்பட்டது. வண்ணம் புதிதாக அமைக்கவும், வாயற்படியை பெரிதாக்கவும் செலவு அதிகம் ஆகவில்லை. வண்ணம் அடிக்கும் கூலி நூறு ரூபாய் தான்! வண்ணத்துக்குச் செலவு இல்லை. புதிதாகத் துவக்கப்பட்ட வண்ணக் கம்பெனி செல்லப்பன் தயவை நாடித் தங்கள் சரக்குக்கு ஏஜண்டாக இருக்கும்படி கேட்டுக் கொண்டது. 'பார்க்கலாம். ஆனால் முதலில் உங்கள் வண்ணம் எப்படி இருக்கிறது என்பது எனக்கும் தெரியவேண்டும். ஊருக்கும் விளங்க வேண்டும். ஆகையினால் ஏதாகிலும் ஒரு பெரிய கட்டிடத்திற்கு முதலில் வண்ணம் அடித்துக் காட்டுங்கள்' என்று செல்லப்பன் கூறினான். கம்பெனிக்காரர் பெரிய கட்டிடம் எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? தாங்கள்தான் அதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். பெரிய மனது வைத்து, செல்லப்பன் ஆலைக் கட்டிடத்தைக் காட்டினான். வண்ணம் செலவின்றிக் கிடைத்தவிதம் அது.

ஆலையை வாங்குவது என்ற முடிவுக்குச் செல்லப்பன் வந்தபோது, தன் உறவினரில் சற்றுச் சரியானவராக உள்ளவரைப் பிடித்து, "ஊராட்சி மன்றத்தைக் கண்ட பயல்களிடம் விட்டுவிட்டீர்கள். அது பெரிய ஆபத்தாக முடியும். யாராரோ ஊராட்சி மன்றத்திலே நுழைந்துகொண்டு கண்டதற்கெல்லாம் வரி போடுவார்கள். நத்தம் புறம்போக்கு பஞ்சாயத்துக்கு என்பார்கள். காலாகாலமாக உம்முடைய மேற்பார்வையில் புறம்போக்கு இருக்கிறது. மானாவாரி பயிர் செய்து ஏதோ கிடைக்கிறது. அது அவ்வளவும் பாழாகும். ஆகவே, ஊராட்சி மன்றத்தை விட்டு விடாதீர்கள். நம்மவர்களாகப் போட்டுக் கைப்பற்றவேண்டும். இந்த ஊருக்கு ஒரு கலெக்டர் வருகிறார், கவர்னர் வருகிறார் என்றால், ஊராட்சி மன்றத் தலைவரைக் கூப்பிட்டுப் பேசுவாரா, உம்மைக் கூப்பிடுவாரா? ஓரத்தில் ஒதுங்கி நீர் நிற்க வேண்டும். உம்மிடம் கடன்பட்டவன், கவர்னருடன் கைகுலுக்குவான். செச்சே! இப்படி இருக்கலாமா? என்ன பிரமாதமாக செலவாகிவிடப் போகிறது! உமக்கு மனம் இல்லாவிட்டால், என்னிடம் விட்டுவிடும்; நான் பார்த்துக் கொள்கிறேன் செலவு அவ்வளவும்" என்று தூண்டினான். ஊராட்சி மன்றம் செல்லப்பன் கைக்கு அடக்கமாகிவிட்டது. பழைய தீர்மானம் போட்டவர்கள், வெளிநாட்டு வியாபாரிகளிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டவர்கள் என்ற புகார் கிளப்பப்பட்டது. பத்தே ரூபாய்தான் செலவு இதற்கு! தீர்மானங்கள் 'ரத்து' செய்யப்பட்டன. ஆலைக்கு ஏற்பட்ட ஊர் எதிர்ப்பு ஒழிந்துவிட்டது. அடிக்கடி புதிய புதிய ஆட்களுடன் செல்லப்பன் ஆலைப்பக்கம் வரலானான். ஆலை பெரிதாகப் போகிறது—குறைந்தது பத்தாயிரம் பேருக்காகிலும் வேலை கிடைக்கும் என்ற பேச்சும் பரவலாயிற்று.

"விடுதிகள் கட்டத்தான் வேண்டும் டாக்டர் குறிப்புப்படி. தொழிலாளியின் உழைப்புதானே உண்மையான மூலதனம். பணம் என்ன செய்யும்? மண்ணைத் தோண்டுமா, இரும்பை உருக்குமா, சம்மட்டி கொண்டு அடிக்குமா, சக்கரத்தைச் சுற்றுமா! உழைப்பினால்தானே இது முடியும். தொழிலாளர்கள் திடகாத்திரமாக இருந்தால்தானே உழைப்பின் பயன் முழுதும் கிடைக்கும்."

"விடுதி கட்டுவது என்றால் ஏராளமாகச் செலவு ஆகுமே?"

"செலவு செய்தால் என்ன? வாடகை ஈடுசெய்துவிடுகிறது. நிலத்திற்காவது செலவு இருக்கிறது; பலவிதமான செலவு. வீட்டுக்கு என்னய்யா! கட்டிப் போட்டால், வாடகை தானாக வருகிறது, மாதாமாதம்."

"தொழிலாளர்கள் ஒழுங்காக வாடகை கொடுப்பார்களா?"

"அவர்களை ஏன் கேட்கிறாய். அதற்கு நான் இருக்கிறேன். வாடகையை நான் கட்டிவிட்டு, அவர்களின் கூலியில் பிடித்துக் கொண்டு கணக்கைச் சரிசெய்து கொள்கிறேன்."

"அப்படி ஏற்பாடு இருந்தால் மோசமில்லை."

"மோசமில்லையா! பெரிய ஆளய்யா நீ! போட்ட முதலுக்குச் சரியான இலாபம் கிடைக்கும் என்பதைக் கூறக்கூட மனம் இல்லையா! பெரிய அழுத்தக்காரராச்சே."

"ஐயோ, அப்படி எல்லாம் இல்லை; உங்கள் யோசனையின்படியே..."

"எத்தனை வீடுகள் கட்ட உத்தேசம்? ஏனென்றால், இடம் கிடைப்பது சற்றுச் சிரமம்."

"இடத்துக்கு நான் எங்கே போவேன்? ஆலைக்குப் பக்கத்திலேயே, நீங்கள்தான் நிலம் தரவேண்டும்."

"போச்சுடா! என் அடி மடியிலேயே கைவைத்து விட்டீர்களா? சரிதான்! ஆலைக்குப் பக்கத்து நிலத்தை நான் உம்முடைய பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டு விற்றுவிட்டால், நாளைக்கு ஆலை விரிவாக வேண்டுமானால், இடத்துக்கு நான் எங்கே போவது?"

"அப்படிச் சொல்லிவிடக் கூடாது. 200 ஏக்கர் அளவு இருக்கிறது உமக்கு இங்கு. எனக்கு அதிகம் வேண்டியதில்லையே! 20, 30 ஏக்கர் இருந்தால் போதும்."

இந்த உரையாடல், செல்லப்பனுக்கு ஆலை வாங்கச் செலவிட்ட பணத்திலே சரிபாதி கிடைக்க வழி செய்துவிட்டது.

தொழிலாளர்களுக்கான ஓட்டல் நடத்த ஒருவன் வந்தான்—ஐயாயிரம் அதன் மூலம்.

சினிமாக் கொட்டகை நடத்தினால் ஏராளமான இலாபம் வரும் என்ற ஆசையில் போட்டி போட்டுக் கொண்டு இடம் கேட்க வந்தார்கள்—பத்தாயிரம் அதிலே!

இப்படிப் பல வழிகளில் ஆலை ஆரம்பிக்காமலேயே, ஆலைக்காகச் செலவிட்ட பணத்தைப் போல இரட்டிப்பு மடங்கு பணம் செல்லப்பனுக்குக் கிடைத்துவிட்டது.

விடுதி கட்டச் சாமான்கள் சேகரம் செய்து கொண்டிருந்தார் வில்வம்.

சினிமா துவக்க, கட்டிட அமைப்புக்கான வேலையில் ஈடுபட்டார் பாட்சா சாயபு.

பணம் செல்லப்பனிடம் சேர்ந்துவிட்டது.

செல்லப்பன் ஏற்படுத்திய பரபரப்பினைக் கண்டு, வண்ணக் கம்பெனிக்காரனுக்கே சபலம் தட்டிற்று.

'இருவரும் கூட்டாக ஆலையை நடத்தலாம்' என்று பேச்சைத் துவக்கினான்.

"வேண்டாம்! நீயே நடத்து. எனக்கு இதுவரை ஆகியிருக்கிற செலவுடன் ஏதோ ஒரு அளவு இலாபம் கூட்டிக் கொடுத்துவிடு. எனக்கு எதற்காக அதிகமான தொழில்? பலரும் தொழிலில் ஈடுபட வேண்டும். முதல்நாள் உன்னைப் பார்த்தபோதே எனக்கு உன்னை மிகவும் பிடித்துவிட்டது"

ஆலை, கைமாறி விட்டது! இலாபம் செல்லப்பன் பெட்டிக்குச் சென்றது.

விடுதி கட்டுபவனும், கொட்டகை நடத்துபவனும், நடையாய் நடக்கிறார்கள், வண்ணக் கம்பெனி முதலாளியிடம். "எப்போது ஆலை துவக்கப் போகிறீர்கள்? உங்களை நம்பி நாங்கள் நிறையப் பணம் செலவழித்து விட்டோம். கடன்பட்டுவிட்டோம். கை கொடுக்க வேண்டும்" என்று கேட்கிறார்கள். வண்ணக் கம்பெனி முதலாளி வாய் திறக்கவில்லை! காரணம் இரும்புப் பட்டறை நடத்த, டில்லி 'உத்தரவு' தர மறுத்துவிட்டது 'பார்க்கலாம், போய் வாருங்கள்' என்று மட்டுமே அவரால் கூற முடிகிறது.

செல்லப்பனாக இருந்தால், இந்நேரம் ஆலை ஓடிக் கொண்டல்லவா இருக்கும். அவன் கெட்டிக்காரன். நடத்தியிருப்பான். நடுவிலே இந்த ஆசாமி நுழைந்து பேராசை கொண்டு ஆலையை வாங்கிக் கொண்டான். பெரிய மனிதன் கேட்கிறானே என்று செல்லப்பன் ஆலையை விற்றுவிட்டான். வகை இருந்தால்தானே நடத்த? இவனால் நமக்கெல்லாம் நஷ்டம் என்று மற்றவர் பேசிக் கொள்கிறார்கள். செல்லப்பன், ஆலை நடத்துவதாக முன்னேற்பாடுகள் செய்ததன் பலனாகக் கிட்டத்தட்ட இலட்ச ரூபாய் சம்பாதித்துக் கொண்டான்.

"எல்லப்பா! வீணாக ஏன் புதுப் புதுத் தொழிலிலே ஈடுபடுகிறாய்? தனியாகத் தொழில் நடத்துவது கடினம். என் யோசனையின்படி நடந்துகொள்." என்று செல்லப்பன் கனிவுடன் பேசுகிறான். கேட்கும்போதே எல்லப்பனுக்குத் திகில் ஏற்படுகிறது. பயத்துடன், நடுங்கும் குரலில், "ஆபத்தான காரியம்! பாபம்கூட!!" என்கிறான் எல்லப்பன்.

"பைத்தியம், பயப்படாதே! நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்கிறேன். ஒரு ஆபத்தும் வராது."

"பழக்கமற்ற காரியம். மனம் இடம் கொடுக்கவில்லை! கள்ளக் கடத்தல் பெருங்குற்றம்..."

"பிடிபட்டால்தானே! பீதிகொள்ளாதே! நீ செய்ய வேண்டியதெல்லாம் என்ன? நான் குறிப்பிடும் இடத்துக்குச் செல்லவேண்டும்; சரக்குக் கொண்டு வருவார்கள்; பெற்றுக் கொள்ளவேண்டும்; நான் குறிப்பிடும் இடத்தில் வைத்துவிட வேண்டும். அவ்வளவுதானே."

"அதிகாரிகளின் கழுகுப் பார்வையிலிருந்து என்னால் தப்ப முடியாதே."

"கழுகுகளுக்கு இறைச்சித் துண்டுகள் போடப்படும். என்ன விழிக்கிறாய்! ஏற்பாடு இருக்கிறது அதற்கெல்லாம். நிலைமை மோசமாகாது. சிறிதளவு துணிவும் புத்திகூர்மையும் வேண்டும். உனக்கு மேங்கா தெரியுமல்லவா?"

"போலீசில்கூடத் தனிப் பதக்கம் கொடுத்தார்களே, கள்ளக் கடத்தல் பற்றிய துப்புக் கண்டுபிடித்து, அதிகாரிகளிடம் கயவனைக் காட்டிக் கொடுத்துக் கடமையைச்செய்த காரிகை என்று. அவர்களைத்தானே சொல்லுகிறாய்?"

"அதே ஆசாமிதான்! அடேயப்பா! பத்திரிகைகளிலே படங்கள், பாடல்கள், பாராட்டி..."

"துணிந்து கடமையாற்றினார்களே! அறுபது கடிகாரங்களாமே, கள்ளக் கடத்தல்காரன் கொண்டு வந்தவை"

"ஆமாம்! அறுபதுதான் கொண்டுவரச் சொல்லியிருந்தேன்; பறிமுதல் செய்து விட்டனர். மூன்றாயிரம் ரூபாய் நஷ்டம்..."

"என்ன சொல்லுகிறாய்? கள்ளக் கடத்தல், உன் ஏற்பாடா?"

"விவரமாக இதுபோன்ற விஷயங்களைப் பேசக் கூடாது. என்றாலும், உனக்குத் துணிவு பிறக்க வேண்டும்; என்னிடம் நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன். கேள்; மேங்கா காட்டிக் கொடுத்துப் பதக்கம் பரிசாகப் பெற்றாளல்லவா, கடிகாரம் கள்ளக் கடத்தல் செய்தவனை. பெயர் சிங்காரம். அவன் என் ஆள்தான். என் ஏற்பாட்டின்படிதான் அவன் கடிகாரங்களைக் கள்ளத்தனமாகக் கொண்டுவந்தான். மேங்காவுக்கும் அது தெரியும். அவளும் என் அலுவலகப் பணியில் ஈடுபட்டவளே. இருந்துமா, சிங்காரத்தைக் காட்டிக் கொடுத்தாள் என்றுதானே கேட்கத் துணிகிறாய். அதுவும் என் ஏற்பாடுதான். திகைப்பா? விவரம், தெளிவளிக்கும். இருவரும் என்னால் அனுப்பிவைக்கப்பட்டவர்கள். என் திட்டப்படி, செயலாற்ற சிங்காரம் கடிகாரம் கடத்துவது! அதனை மேங்கா, அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுப்பது என்பது என் ஏற்பாடுதான். இருவரும் சிலோன் போகும்போதே, அதிகாரி ஒருவர் தொடர்கிறார் என்பது எனக்குத் தெரியும். அதற்காகவே இலங்கை ஓட்டல் ஒன்றில், சிங்காரத்திடம் சச்சரவு இடும்படி மேங்காவிடம் கூறியிருந்தேன். தேனொழுகப் பேசுகிறாளல்லவா, மேங்கா? அன்று தேளாம் அவள் பேச்சு! சிங்காரமே ஒரு கணம் திகைத்துப் போயிருக்கிறான். அதிகாரி இதனைக் கவனித்திருக்கிறார்."

"இருவரும் பகைவர் என்று எண்ணிக்கொண்டுவிட்டார்."

"ஆமாம்! எவருக்கும் அந்த எண்ணம்தானே தோன்றும்! சிங்காரம் கைத்தடியை ஓங்குகிறான், மேங்காவைத் தாக்க. அந்தப் போக்கிரிப் பெண்ணோ காலணியைக் கழற்றினாள், அவன்மீது வீச! அதிகாரி என்ன முடிவுக்கு வருவான்? பகை என்ற முடிவுக்குத்தானே! நான் சொல்லியனுப்பியபடி, அவரவருக்கிட்ட வேலையை முடித்துக் கொண்டு கப்பலில் கிளம்பினர். இங்கு வந்து இறங்குமுன்னம், மேங்கா, பரபரப்புடன் அதிகாரியை அணுகி, இரகசியம் கூறுகிறாள். 'சிங்காரத்தின், கைத்தடியில் கடிகாரங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. கள்ளக்கடத்தல். கண்ணால் கண்டேன். என் காலணியால் அடிபட்டிருக்க வேண்டிய கயவன்! கள்ளக் கடத்தல் பேர்வழிக்கு, வாய்த்துடுக்கு எவ்வளவு தெரியுமா! நீங்கள் பார்த்திருக்க முடியாது. தற்செயலாக, ஓட்டல் சென்றேன் சாப்பிட! வெறியன் என்னிடம் நெருங்கி வந்தான், சரசமாட! சீறினேன்! தடியை ஓங்கினான்! மரியாதையைக் கெடுத்துவிடத் திட்டமிட்டேன, பயல் தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான், கப்பல் தட்டிலே ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அவன், கைத்தடியிலே ஏதோ திருகு இருக்கும்போல் தெரிகிறது; அதைக் கழற்றிக் கடிகாரங்களை நுழைத்தான். சொல்லிவிட வேண்டும் என்ற ஒரே துடிப்பு எனக்கு. பயல், பழி தீர்த்துக் கொள்வானே என்று வேறு பயம். துணிந்து கடமையைச் செய்வோம் என்று சொல்லிவிட்டேன்' என்று கூறினாள். மேங்காவிடம் நீ பேசினதில்லையே. மஞ்சளைக் கருப்பு என்று அவள் சொன்னால், நம்பித்தான் தீர வேண்டும்! அவ்வளவு கனிவும் குழைவும் இருக்கும். இசைபோலக் குரல்! தாளம் தவறாத பாட்டுப்போல இருக்கும் வாதங்கள்! அதிகாரி பூரித்துப்போனான்! மூன்று மாதங்களாக ஒரு பறவைகூட அவன் விரித்த வலையில் விழவில்லை. வலைவீசத் தெரியவில்லை என்று மேலதிகாரி சீறுகிறார். நல்லவேளை, ஒரு பறவை கிடைத்தது என்று எண்ணினான்; சிங்காரம் பிடிபட்டான்; சீறியதைப் பார்க்க வேண்டுமே! மேங்காவுக்கு போலீஸ் பாதுகாப்பு! போலீஸ் வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு அவளை விடுதிக்கு கொண்டு போய் விட்டுவிட்டு வணக்கம் கூறிவிட்டு வந்தார்கள் பெரிய அதிகாரிகள். பத்திரிகைக்காரர்கள் படம் எடுத்தார்களாம், புன்னகையுடன் இருங்கள் என்று கூறிவிட்டு. பைத்யக்காரர்கள்! மேங்கா எப்போதுமே புன்னகையுடன்தான் இருப்பாள்! போட்டோவுக்காகவா இருக்க வேண்டும்! அதிகாரிகள் சென்ற பிறகு, மேங்கா, தன் காலணியைக் கழற்றி, பேழையில் வைத்து எனக்கு அனுப்பிவைத்தாள். திகைக்கிறாய் அல்லவா. பைத்யக்காரா! மேங்காவின் காலணி சாமான்யமானது என்றா எண்ணிக் கொண்டாய்! இலட்ச ரூபாய் பெறுமானமுள்ள வைரம் அதிலே ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. கள்ளக் கடத்தல்! அதற்காகவே அவள் அனுப்பி வைக்கப்பட்டாள்—என்னால், சிங்காரத்தைப் பிடித்துக் கொடுத்ததன் காரணமாக, அதிகாரியின் நல்லெண்ணத்தை-நேசத்தைப் பெறமுடிந்தது. அதனால் மேங்காவிடம் நம்பிக்கை அதிகாரிகளுக்கு. எவளைப் பிடித்து, கள்ளக் கடத்தல் வைரத்தைக் கைப்பற்றியிருக்க வேண்டுமோ அதே மேங்காவுக்கு போலீஸ் பாதுகாப்பு, உபசாரம்!! ஒரு இலட்சம் பெறுமானமுள்ள வைரம், காலணியில்! கடிகாரம் பறிமுதலானதால் மூவாயிரம் நஷ்டம்! இலாபம், ஒரு இலட்சம் எனக்கு! மேங்காவுக்குப் பாராட்டு, பதக்கம், பத்திரிகையில் படம்!! பார்த்தாயா நமது ஏற்பாடு, எவ்வளவு நேர்த்தியானதாக இருக்கிறது! இனியும் என்ன பயம் உனக்கு! இந்தா - இதோ, முகவரி! இது குறிச்சொல்! சரக்கு வரும், பெற்றுக்கொள். சமாராதனை நடக்கும் இடம், காய்கறிகள் தேவையல்லவா! பூசணையிலும் சுரைக்காயிலுமாக, வைரம் வைத்தனுப்பப்படும்! சங்கரமடத்துச் சாதுக்களுக்குச் சமாராதனை! என் தர்மம்! காய்கறியைப் பெற்றுக் கொண்டதும், சமையலறையில், என் ஆள், வைரத்தைப் பத்திரப்படுத்திவிடுவான்! பஜனை நடந்தபடி இருக்கும், நான் 'தரிசனம்' செய்ய வருவேன். என் கழுத்திலே உருத்திராட்சமாலைகள் போடுவார், பெரிய சாமியார்! கருப்பையன் என்று போலீஸ் ரிகார்டு! காவியுடையில், பெரியசாமியார் என்பது பெயர்! 'இந்த வேலையைச் செய்! மாதம் ஆயிரம் உனக்கு சம்பளம்' என்று கூறமாட்டேன். அன்பளிப்பு என்று வைத்துக் கொள்ளேன். நீயும், இந்த நாலு வருஷத்தில் எட்டு இடம் மாறிவிட்டாய், வேலை செய்வதில். ஒரு இடத்திலும் நிலைத்து இருப்பதில்லை என்ற கெட்ட பெயர் வேறு உனக்கு..."

"அதுமட்டுமல்ல, செல்லப்பா! நான் தொட்டது துலங்குவது இல்லை என்ற கெட்ட பெயரும் எனக்கு ஏற்பட்டுவிட்டது. எட்டு இடத்திலும் குட்டுப்பட்டு விட்டேன்."

"இங்கே வெற்றிதான் உனக்கு. இந்தத் தொழிலில் வெற்றி கிடைத்தே தீரும்."

"அப்படிச் சொல்வதற்கு இல்லையே! கெட்டுவிட்டதே இப்போதே."

"கெட்டுவிட்டதா! எது? ஏன்? என்ன சொல்கிறாய்?"

"வைரம் கடத்திவரச் சொல்லி என்னை அனுப்ப ஏற்பாடு செய்கிறாயே, அது கெட்டுவிட்டது என்றுதான் சொல்கிறேன். எனக்கு வேலை கொடுக்கத்தான் நீ விரும்புகிறாய்! எனக்கும் இலாபகரமான ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடத்தான் விருப்பம். பொன்னான வாய்ப்பு அளிக்கிறாய் என்று எண்ணிப் பூரித்தேன்...ஆனால்..."

"ஆனால் என்ன, ஆனால்...!"

"இருவருக்குமே வேறு வேலை வந்துவிட்டதே! உன்னைக் கைது செய்யும் வேலை எனக்கும், உள்ளதை உள்ளபடி ஒப்புக் கொண்டு போலீசில் சரண் அடையும் வேலை உனக்கும்! திகைக்காதே செல்லப்பா! நான் இந்த வட்டாரத்தில் பணியாற்றும், துப்பறியும் மேலதிகாரி! அதுதான் என் நிரந்தரமான வேலை! அதற்குத் துணையாக, அவ்வப்போது சில வேலைகளிலே ஈடுபடுவதுண்டு. எட்டு இடங்கள் என்றாயே, உண்மை! அவைகளிலே இருந்து அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நிரம்ப! தகவல்கள் கிடைக்கும்வரையில்தானே அந்த வேலையில் ஈடுபடவேண்டும். பிறகு ஏன்? தொட்டது துலங்காது என்று கூறினாய் அல்லவா! உண்மை என்ன தெரியுமோ? என் நிரந்தர வேலை, துப்பறிதல்; தீயோரைக் கைப்பிடியாகப் பிடித்தல். எட்டு இடங்களிலும் இதேதான் வேலை! எழுந்திரு தகறாரு செய்யாமல், போலீஸ் வண்டி தயாராக இருக்கிறது. மேங்காவும் அதிலேதான்!!"

செல்லப்பன், அதிர்ச்சியுற்றான். அப்பாவிபோல நடித்து வந்த எல்லப்பன், எவர் வலையிலும் விழாமல் தப்பித்துக் கொண்டு வந்த தன்னைச் சிக்கவைத்துவிட்டானே என்ற அதிர்ச்சி.

இந்த வேலையையும் இழந்துவிட்டான்! வேறு ஊருக்கே போய்விட்டான்! எவன் இந்தத் 'தூங்கு மூஞ்சி'யை நம்பி வேலை கொடுப்பான்? என்னமோ பாவம், ஏழையாக இருக்கிறானே என்று இரக்கம் காட்டி வேலை கொடுத்தோம், கொஞ்சமாவது சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை இருந்தால்தானே!—என்று பேசிக்கொள்கின்றனர், மூட்டை முடிச்சுக்களுடன் வேற்றுார் கிளம்பும் எல்லப்பன் பற்றி தொழிலகத்தில்.

'ஏழை' எல்லப்பன் வேறு ஊரில், வேறு வேலையில் அமர்ந்து கொள்ளச் செல்கிறான்—சீவல் பாக்குக் கம்பெனிக்கு விளம்பர அலுவலாளராக!

சீவல் பாக்குக் கம்பெனி சிவராமன், பெரிய அளவில் அபின் கள்ளக்கடத்தல் செய்து வருகிறாள் என்பது தகவல்! கண்டறியச் செல்கிறான் எல்லப்பன், ஏழைக் கோலத்தில்!

"https://ta.wikisource.org/w/index.php?title=வண்டிக்காரன்_மகன்/ஏழை&oldid=1753599" இலிருந்து மீள்விக்கப்பட்டது