வரலாற்றுக் காப்பியம்/உயிர்க்குலம்

உயிர்க்குலம்

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பர்
குரங்குக்கும் மனிதனுக்குமிடையில்
லெமூர் என்றதொரு நிலை உண்டென்று
விலங்கியலார் தெளிவுபட விளக்குகின்றார்.
டார்வின் எனும் சான்றோனின் கொள்கைக்குச் சான்று
புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி
பறவையாய்ப் பாம்பாகி பல்விருகமாகி
மனிதராய்த் தேவராய் வளர்ந்து வளர்ந்து
செல்லா நின்ற தாவர சங்கம மென்று
உயிரின வளர்ச்சியை உரைக்கின்றது மணிவாசகம்
நீரினத்தில் மீனாகி நீரிலும் நிலத்திலும்
வாழும் விலங்கினத்தில் ஆமையாகி
குறுக்கில் வளர்ந்து குளம்புள்ள இனமாக
குட்டியிட்டுப் பால்கொடுத்த வளர்ச்சியே பன்றி
மிருகமே மனிதன் ஆன கதைக்கு
விளக்கமே நரசிம்மக் கோலம்
ஆதிமனிதன் மிகவும் குள்ளன்
என்ற கணக்கே வாமனம் மற்றபடி
அவன் நெடிய வளர்ச்சியே திருவிக்கிரமம்
காட்டு மனிதனுக்கு சாட்சியம் பரசுராமன்
அழகுக்கும் ஆற்றலுக்கும் தசரதராமன்
அறிவுக்கும் அரசியலுக்கும் கோகுலக் கண்ணன்
மனிதனும் மிருகமாவான் என்பதை
எடுத்துக் காட்ட ஒரு பிறப்பு அசுவத்தாமன்
பகைக்குலத்தை வேரறுக்க வழிவகுத்தான் கண்ணன்

பாண்டவ திருக்குலத்தைக் கருவறுத்தான் அசுவத்தாமன்
இரண்டும் பூபாரம் தீர்த்த புண்ணியமே
ஆக அவதாரம் பத்தும் ஆயிற்று ஆயிற்று
பத்தாவது பிறப்பு இனிமேல் எடுப்பது என்பார்
கல்கி புராண கதையின் படிக்கு
கலியின் பிறப்போடு கல்கியும் பிறந்து போனான்
அவனுக்கு ஆசான் பரசுராமன் என்பதால்
முன்னேயுகத்துக்கு முன்னவனான பரசுராமன்
பின்னையுகத்துக்குப் பின்னாலும் பிறந்து வருவனோ
புராணயுகமே போயிற்று போயிற்று
கல்கிக்குக் குதிரைவடிவம் கற்பித்துள்ள படியால்
அசுவத்தாமனே அந்த அவதாரமாவான்
ஆக உயிர்க்குலத்து வளர்ச்சியை
புராணவழியில் புகலுவதே தசாவதாரம்.