வரலாற்றுக் காப்பியம்/செங்கோன் தரைச் செலவு
முதலூழியில் மூழ்காத தனித் திட்டொன்று
முதலூழித்தனியூர் என்ற பெயரோடிருந்தது
ஆங்கே சேந்தன் என்றொரு புலவன்
செங்கோன் தரைசெலவொன்று எழுதினான்
முன்னை மொழிகளில் பயண நூல்களில்
முதலது அதுவே என்பதும் பெருமையே
செங்கோன் ஆனேற்றுக் கொடியுடைய அடலேறு
அவனொரு சூரிய குலத்தோன்றல்
அவன் பெரும்படை வடபுலத்தின் மேல் நடந்தது
என்பதற்கு மேல் எதுவும் தெரிவதில்லை
தொல்லிலங்கையோடு தொடர்ந்திருந்த
இடைகழி நாட்டில் பெருவள நல்லூர் ஒன்று
அவனரசிருந்த மூதூர் அதுவே
முத்தூறும் பேராறும் மணிமலையும் அவன் நாட்டுடைத்து
பெருநூலும் இயல்நூலும் அவன் பெற்றிருந்த தமிழ்ச்செல்வம்
செங்கோடன் நெடுந்துறைவன் சக்கரக்கோ அவைப்புலவர்
என்றின்ன குறிப்போடு இருந்தமிழும் பழந்தீவும்
நெடுங்கடலுள் மாய்ந்ததென்றே முணுமுணுப்பார்
பின்னைப் புலவர்கள் பெருவெள்ளத்தைப் பேச
முன்னை அடிவைத்த முதல் நூல் அதுவே.