வரலாற்றுக் காப்பியம்/நானிலம்

நானிலம்


நீரும் நிலனும் நேர்ந்த இயற்கைக்கு
இசைபட நிலத்தை திணைப்படுத்தினார்
மாலையும் மலைவளம் கொழிக்கும் சாரலும்
குறிஞ்சிமலர் கொண்டு குறிஞ்சி ஆயிற்று
காடும் கார்முகில் பார்த்த நிலனும்
முல்லை மணம் சிறக்க முல்லை ஆயிற்று
ஆறும் ஓடையும் அயல் நின்ற வயல் வெளியும்
மகரந்தம் மிகுந்த மருதத்தால் பெயர் கொண்டது
நெய்தல் மலர் கொண்டோ நெய்தலி மீன் கொண்டோ
கடலடுத்த, மணற்பரப்பை நெய்தல் என்றார்
குறிஞ்சி மகனே வெற்பன் சிலம்பன்
மகளிர் குறத்தி கொடிச்சி ஆவாள்
முல்லை மகன் தோன்றல் நாடன் ஆவான்
மகளிர் ஆய்ச்சி இடைச்சி ஆனார்
மருதத்து உறைவோன் ஊரன் நகரன்
மகளிர் மனைவி கிழத்தி ஆனாள்
நெய்தல் ஆடவன் அளவன் புலம்பன்
பரதவர் கரையர் என்றும் பகர்வார்
மகளிர் பரத்தி நுளைச்சி எனப்பட்டாள்.
தொழிற் படு வகையிலும் அவனுக்குத்திணைப் பாடுண்டு
தேனெடுத்து தினையறுத்தான் குறிஞ்சி மகன்
நிறைமேய்த்து வரகறுத்தார் முல்லைக்காடவர்
சுழலும் உலகம் ஏரின் பின்னதாக
வாழையும் நெல்லும் வளர்ந்தது மருதத்தில்
உப்பெடுத்து முத்துக் குளித்தான் நெய்தலன்
நிலத்துக்கும் அதன் இயல்புக்கும் ஏற்ப
வளமும் வாழ்வும் நால்வகைப் பட்டதால்
நானிலம் என்றார் நாளும் செழித்து
நாகரீகம் மிகுந்த பின்னே
இந்த நானிலத்தை மாநிலம் என்றார்.