வரலாற்றுக் காப்பியம்/வடக்கும் தெற்கும்

433878வரலாற்றுக் காப்பியம் — வடக்கும் தெற்கும்ஏ. கே. வேலன்

வடக்கும் தெற்கும்

தென்னகத்து பேராற்றில் ஒன்று கிருஷ்ணை
அதன்கடல் முகப்பட்டினம் அமராவதி என்ப
அதன் மன்னவரில் ஒருவன் இந்திரன்
கலியரசர் என்று சரித்திரம் சாற்றிய
களப்பிரருக்கு இவனே முதல்வன்
இன்றும் இந்திரகுலம் என்று
பெருமைப்படும் வீர மரபினர் தெற்கிலுண்டு
பாண்டவ குந்தி வனவாசம் வந்தபோது
பார்த்தனைப் பெற்றது இந்த பார்த்திபனுக்கே
வேள்விக்குரிய வேதபுரத்து இந்திரன்
இவனுக்கு பகைவன் அமரவதியைக் கைப்பற்றினான்
ஆரூரில் தன் மகன்மீது தேரூர்ந்த
மனுமுறை கண்ட மன்னவனுக்கு மகன்
பிரமனை சிறைப் பிடித்த வலிய படையாளி
வீரபாகுவின் மருமான் என்ப
ஆரூரில் அரசிருந்த இவனே முசுகுந்தன்
அமராவதிப் பட்டினத்து உரிமை வேந்தன்
இந்திரனுக்காக வேதிய புரந்தரனை
வென்று வாகனமாய்க் கொண்டு வந்த
வரலாறுமுண்டு, வெற்றி கொண்டு மீட்ட
அமராவதியின் பேரால் கரூரும்
ஆகப் பொருனையும் அமராவதி ஆனதுண்டு
குந்தி மைந்தன் என்று கூறும் பார்த்தனும்

தன் தந்தை இந்திரனுக்காக அமராவதி
பட்டினத்தைக் காக்கச் சென்றானென்று
பாரதமும் பரிந்துரைக்கும் சேதியுண்டு
பார்த்தன் தீர்த்த யாத்திரை யாக
தென்னகம் வந்துற்ற போது
நாகைக் கம்பள நாகன் மகளான
உலூபியை மணந்ததை பாரதம் சொல்லும்
பாரதப் போருக்கு களப்பலியான அரவான்
உலூபியின் மணிவயிற்றில் பிறந்த மகனே
நாகையை பாரதமும் உரகபுரி என்றே உரைக்கின்றது
தெற்கில் மணவூர் என்னும் மணிபுரத்தில்
மலையத்துவசன் மகளான அல்லியை
பார்த்தன் மணந்தான் பப்பரவாகன் அவன் மகனே
புலந்திரன் என்றும் புகலுவார் அவனை
பாரதப் போருக்கு ஒரு சேரன் சோறு கொடுத்தான்
மலையத்துவசன் மருகனுக்காக படை கொண்டுபோனான்
படுகளத்தில் பாட்டன் மாண்டதற்கு பகைத்து
ஒரு லட்சத்து நாற்பதாயிரம்
தேராளிகளுடனே படைநடத்தி
புலந்திரன் பாரத புரத்துக்குச் சென்றான்
பாரதம் முடிந்து படுகளமாய்க் கிடந்தது
பாண்டவ கவுரவர் பதினெட்டு
அக்குரோணி படைகளும் மாண்டதற்கு
காரணன் கண்ணன் என்பதறிந்து
துவாரகை மேல் படை நடத்தினான் என்பர்
மலையைக் கொடியுடைய மன்னவனை

மலையத்துவஜன் என்று வழங்கிய படி
கடல் அலையெனக் கொடியசைந்து வர
படை நடத்திய பப்பரவாக னனை
சாகாத்துவஜன் என்று சாற்றினார்
பதிற்றுப்பத்து பாராட்டிய பேராற்றலுடையோன்
வாளில் வலியோன் வள்ளியரில் வள்ளியோன்
தென்புலத்து அக்குரன் வடபுலத்து நூற்றுவர்க்கு
துணை போனான் என்று சங்கத் தமிழுரைக்கும்
வடக்கும் தெற்கும் நெருங்கி நெருங்கி
உறவும் பகையும் கொண்டதற்குச் சான்றுகள்
இதிகாச புராணங்களில் எத்தனையோ உண்டு