வரலாற்றுக் காப்பியம்/வாழிய தமிழ்
வரலாற்றுக் காப்பியம் :
சங்க காலம் :
முன்மொழி :
பொன்மால் இமயத்தில் புலிபொறித்த போர்க் குலமே
வடவர் வேரறுத்த தென்பாண்டி மறக்குலமே
இமயத்தில் வில்லெழுதிய சேரன் குலத்தோன்றலே
உன்னை நீயறிய உலகம் உன்னைத் தெரிய
முன்னைச் சேதிகளைத் தொகுத்து உரைக்கின்றேன்.
பொன்னி பொங்கிவர பொருணை ஆடிவர
பெண்ணை பெருகிவர வைகை நகர்ந்துவர
தென்றலசைந்து வரும் செந்தமிழ் நாடுடையாய்
வங்கக் கடலலையும் உன் வல்லமையே பாடுதடா
வான் நிமிர்ந்த, கோபுரங்கள் உன் வரலாற்றின் படிக்கட்டே
கல்வெட்டும் செப்பேடும் தமிழணங்கின் காற்சிலம்பே.
வரிப்புலியின் குருளைகளே மதகரியின் கன்றுகளே
வில்லேருழவர்கள் தங்கள் வீரகாவியங்களை
மாற்றார் நெஞ்சத்தில் ஈட்டிகொண்டு எழுதினார்
சொல்லேருழவன் ஏகே வேலன் முன்னை
வரலாற்றைக் காப்பியமாய்த் தருகின்றான்.
வாழியரோ!