வல்லிக்கண்ணன் நினைவில்
வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார். எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான். எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனித மனத்தின் இயல்பு அது. 85-86 வருடங்கள் வாழ்ந்த மனிதர், நம்மிடையே தம் இருப்பை, பரிச்சய உலகத்திலும் இலக்கிய உலகத்திலும் உணர்த்திக் கொண்டே இருந்தவர். அதுவும் எவ்வளவு காலம்! மூன்று தலைமுறைக்கும் மேல் நீண்டது அது. அவ்வளவு நீண்ட காலமும் படிப்பதற்கும் எழுதுவற்கும் தான் என்று ஒரு தீர்மானத்தைத் தனக்குள் தன் வாலிப வயதிலேயே கொண்டு அந்த பிடிவாதத்தையே ஒரு லக்ஷ¢யமாகப் பற்றி வாழ்ந்து காட்டி விட்டவர்.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் தான். பார்க்கப் போனால் அவருக்கு பெரிய ஆசைகள், கனவுகளோடு வாழ்ந்தவர் இல்லை. வாழ்க்கையில் அவர் கேட்டது, எதிர்பார்த்தது என்று பெரிதாக ஏதும் இருந்ததாகத் தோன்றவில்லை. படிப்பதிலும் எழுதுவதிலுமே அவர் மகிழ்ச்சி இருந்திருக்கிறது. பின் நண்பர்கள். அவர் யாரையும் அவராக விரோதித்துக் கொண்டார் என்று சொல்லமுடியும் என்று தோன்றவில்லை.
திருநெல்வேலிக் காரர். அந்த மண்ணுக்கே உரிய பேச்சும் கிண்டலும், யாரையும் எளிதில் வசப்படுத்திவிடும். அன்னியோன்ய உணர்வைத்தந்து விடும். கிண்டல் சிலரிடம் காலை வாறலாகக் கூடுதல் நிறம் பெறும். வல்லிக்கண்ணன் அப்படியெல்லாம் கிண்டல் செய்ய மாட்டார் என்று தான் நினைக்கிறேன். நான் அவரை ஒரு சில முறைகள், அதிகம் போனால் அரை மணிநேரம் என்று சந்தித்துப் பேசியதுண்டு. அமைதியாக, மிக மெல்லிய குரலில் புன்சிரிப்போடு தான் பேசியதாக என் நினைவு. அதில் கிண்டல் சற்றேனும் கலந்திருக்கவில்லை. திருநெல்வேலிக்காரர் யார் எழுதினாலும், அந்த மண்ணின் மணத்தோடு தன் இயல்பில் பாசாங்கும் வேஷமும் இல்லாமல் எழுதினால் அதில் எனக்கு மிக பிரிய முண்டு. வல்லிக்கண்ணன் கதைகளும், சில திருநெல்வேலி மனிதர்களைப் பற்றிய சொற்சித்திரங்களும் நான் படிக்கும் போது அவை ஜீவனும் உயிர்ப்பும் உள்ள மனிதரை என் முன் திரையோட விடும். அவரது மேடைப்பேச்சுக்கும் கட்டுரைகளுக்கும் நேர் எதிரான சமாசாரம். எப்படி இரு நேர் எதிர் குணங்களை ஒரு மனிதருக்குள் திணித்து வைத்திருக்கிறான் அந்த நெல்லைப்பன் என்று நினைக்கத் தோன்றும். இருமுறை அவர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். தில்லியில் ஒரு முறை. சென்னை வந்த புதிதில் ஒருமுறை. எல்லாம் சாகித்ய அகாடமி உபயங்கள். எழுந்து நின்று ஏதோ மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல வார்த்தைகள் ஒரு தடங்கல் இல்லாமல், வந்து கொட்டிக்கொண்டிருந்தன. முகத்தில், குரலில் எவ்வித உணர்ச்சியும் இல்லாத தகவல்களின் மழை. விவரங்கள் என்பதற்கு மேல் அந்தப் பேச்சுக்களில் ஏதும் இல்லை. இது திருநெல்வேலி மண் இல்லை.
எழுத்து பிரசுரமாக சி.சு. செல்லப்பா ஆண் சிங்கம் என்ற தலைப்பில் வல்லிக்கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியிட்டிருந்தார். அறுபதுகளில் இடைப்பட்ட வருடங்கள் ஒன்றில் என்று நினைப்பு. அந்தக் கதைகள் எனக்கு சுவாரசியமாக இருந்தன. அப்போது தில்லியில் வெளிவந்துகொண்டிருந்த Thought பத்திரிகையில் ண்சிங்கம் பற்றி எழுதினேன். அதில் தான் படித்தேனோ அல்லது வேறு ஏதும் பத்திர்கையில் படித்தேனோ, சாந்தி, சரஸ்வதி, தாமரை இப்படி ஏதோ ஒன்றில், 'பெரிய மனுஷி' என்று வல்லிக்கண்ணனின் ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதைகள் எப்பவுமே மிக சுவாரஸ்யமானவை. எழுதியவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர் என்று ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும். எழுதிகிறவரின் சிரிக்கும் உதடுகளையும் கூட மானசீகமாக அவ்வெழுத்தின் பின் பார்க்கலாம். அவர் நிறைய எழுதியிருக்கலாம். எழுதியும் இருக்கிறார் என்று தான் சொல்கிறார்கள். ஆரம்ப காலமாக அது இருக்க வேண்டும். அதோடு சரஸ்வதி பத்திரிகையில் அவர் புத்தகங்களைப் பற்றி, எழுத்தாளர்களோடு உரையாடியது பற்றியெல்லாம் ஒரிரண்டு பக்கங்கள் எழுதுவார். அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும். 'நான் ஏன் எழுதுகிறேன்" என்று சரஸ்வதி நடந்த காலத்தில் நிறைய எழுத்தாளர்கள் கட்டுரை வாசித்தார்கள் பின்னர் அது புத்தகமாகக் கூட எழுத்து பிரசுரமாக செல்லப்பா வெளியிட்டிருந்தார். அதில் ஒரு குறிப்பு எனக்கு நினைவிலிருப்பது சுவாரஸ்யமானது: 'புதுமைப்பித்தனின் ஒரு வரியில் கருவேப்பிலை கூட உயிர் பெற்றுவிடும். வல்லிக்கண்ணன் பக்கம் பக்கமாக எழுதினால் கூட அதில் ஒன்றும் இருப்பதில்லை' என்று கிட்டத்தட்ட இப்படித்தான் க.நா.சு வல்லிக்கண்ணன் பற்றி எழுதியிருக்கிறார் என்றும் இருந்தாலும் நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் என்று வல்லிக்கண்ணன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். எனக்கு வல்லிக்கண்ணன் அப்படி எழுதியிருந்தது பிடித்திருந்தது.
வல்லிக்கண்ணனை வல்லிக்கண்ணனாக நாம் பார்க்க முடிவது அவர் கதைகளில் தான் என்றாலும் அவர் அப்படி ஒன்றும் நிறைய எழுதியிருக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. கதை எழுதுவது, தன் அனுபவங்களுக்கும் பார்த்துப் பழகிய வாழ்க்கைக்கும் மனிதர்களுக்கும் எழுத்தில் உயிர் தருவது ஒரு மகிழ்ச்சி தரும் காரியம் என்று தான் நினைப்பேன். அதுவும் சம்பாஷணையிலும் வம்பளப்பிலும் கிண்டலிலும் பிரியமுள்ள திருநெல்வேலிக் காரர்களுக்கு. இன்று நாம் நினைத்துப் பார்க்கும்போது அவரை ஒரு விமர்சகராகத்தான் எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. சுமார் நாற்பது ஐம்பது வயதுக்குட்பட்ட தலைமுறை எழுத்தாளர்களின் ஒரு பெரிய கூட்டம் அவரைத் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்திய பெரியவராகத் தான் பார்க்கிறது. அதைத் தான் அவரும் செய்திருக்கிறார். ஆனால் அவருடைய பார்வை, மதிப்பீடு என்று எதுவும் நம் மனதில் எழுவதில்லை. அப்படி ஏதும் பதிவாகவும் இல்லை. சொல்லும்படியாக புத்தக வடிவில் கிடைப்பன அவர் எழுதியுள்ள பெரும்பாலும் தகவல்களை உள்ளடக்கிய வரலாற்று நூல்கள் தாம். புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி வரலாறு, பின் சிறுபத்திரிகைகள் பற்றிய ஒரு வரலாறு எல்லாம் என் நினைவில் இருப்பன. இதற்கு மேல் அவர் எதுவும் எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. எல்லாவற்றிலும் ங்காங்கே சில குறிப்புகள் காணப்படுமே தவிர அவை எதுவும் விமர்சன பூர்வமாக அவர் பார்வையில் மதிப்பீடு என்று சொல்லத்தக்கனவாக இல்லை.
இதற்கு அர்த்தம் அவருக்கு மதிப்பீடுகள் கிடையாது, தரம் பற்றிய சிந்தனையே கிடையாது என்பதில்லை. இருந்தது. கு.ப.ரா. புதுமைப்பித்தன், மணிக்கொடி கால மற்ற முன்னோடிகள் எல்லோருடனும் பழகியவர். இளைய சகாவாக இருந்தவர். கிராம ஊழியனில் கு.ப.ரா. வுடன் சிரியப் பொறுப்பில் இருந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் மூன்று தலைமுறையினருடன் வாழ்ந்தவர். வெற்று ளாக இருக்க முடியாது. இருப்பினும் அவர் கறாரான அபிப்ராயங்களைச் சொன்னவரில்லை. தன் உடன்பாட்டையோ மறுப்பையோ கூட தெரியச் செய்தவரில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. வானம்பாடி கவிதைகளைப் பற்றி ஒட்டு மொத்தமாகக் கடைசியில் சொல்லும்போது அவை வெற்று வார்த்தை ஜாலங்கள், அலங்காரங்கள் என்று சொல்லியிருக்கிறார். சிவராமூ கவிதைகளைப் பற்றியும் அவர் ஒரு மாதிரியான கண்டனம் செய்துள்ளார். அவரைச் சிவராமூ சீண்டியதன் விளைவு அது.; அவர் கடைசியாக ஒட்டுமொத்தமாக நிராகரித்தது என்பது என்னையும் சிவராமுவையும் தான். மிகுந்த கசப்பும் கோபமுமாகத்தான் எங்கள் இருவரையும் பற்றி அவர் அபிப்ராயங்கள் கடைசியில் இறுகிப் போயிருந்தன.
எங்கள் இருவர் மீதும் அவருக்குக் கோபம் இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன. அறுபதுகளில் நான் தில்லியிலிருந்து பலமுறை அவர் உதவியை நாடியிருக்கிறேன். பழைய தகவல்கள் வேண்டி. அவர் உடனுக்குடன் பதில் தந்துள்ளார். அவை எனக்கு உதவியாயிருந்துள்ளன. பத்துப் பதினைந்து பேர் ளுக்கு கொஞ்சம் பணம் போட்டு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து, அவரைப் பொறுப்பேற்கக் கேட்டேன். பத்திரிகை தன் காலில் நிற்கும் வரை இலவசமாக எல்லாப் பொறுப்புக்களையும் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். அவருக்கு அவ்வப்போது உதவும் படி நான் கேட்டுக்கொண்ட ஒரு பெரிய எழுத்தாளர், தனக்கு மாதம் 300 ரூபாய் வேண்டும் என்று சொன்னார். இதுதான் வல்லிக்கண்ணனுக்கும் இந்த பெரிய எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரிந்தது. அக்காலங்களில் என் மாத வருமானமே 300 ரூபாய்தான். எனவே அது கைவிடப்பட்டு விட்டது. நடக்கவில்லை. சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்றில் நான் பொறுப்பாக இருந்த யாத்ரா பற்றி சிறப்பாகவே எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் சிவராமூவுக்கும் அவர் கண்ட குப்பைகளுக்கும் தராதரம் அற்று தன் பாராட்டுக்களையும் ரசனையையும் வாரிக்கொட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தது எங்கள் இருவருக்கும் அறவே பிடித்ததில்லை. அதன் காரணம் எனக்குப் புரிந்ததே இல்லை. புதிதாக எழுத வந்தவரிடம் ஏதும் சிறு பொறி தட்டினாலும் அதைக் குறிப்பிட்டு உற்சாக மூட்டலாம். தவறில்லை. ஆனால் வல்லிக்கண்ணனிடம் எந்த குப்பை போனாலும் அதற்குப் பாராட்டு வந்துவிடும். இது மூன்று தலைமுறை இலக்கிய வாழ்வு வாழும் முதியவரிடமிருந்து, மணிக்கொடி கால முன்னோடியிடமிருந்து எதிர் பார்க்கக்கூடிய ஒன்றல்ல.
அவருக்கு தராதரம் தெரியாது என்றும் சொல்வதற்கில்லை. அவர் இந்தக் குப்பைக்காரர்களிடமிருந்து எதுவும் எதிர்பார்த்தார் என்றும் சொல்வதற்கில்லை. எதையும் எதிர்பாராதவர். பகட்டும் பீதாம்பரமும் அவர் பலவீங்களல்ல. மிக எளிய மனிதர். அவருக்கான தேவைகளும் மிகக் குறைவு. சாகித்ய அகாடமி பரிசு அவரைத் தேடி வந்தது தான். மற்றவர்களைப் போல அவர் ள் பிடிக்கவில்லை. யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை. யாரையும் பார்த்துப் பல்லிளிக்கவில்லை. விதி விலக்குகள் என ஒரிருவர் இருக்கலாம் தான். ஆனால் தமிழ் மரபு இதுதான். தனக்கு மிக நெருங்கி அன்னியோன்யமாக இருந்தவர்களைப் பற்றிக்கூட மிக அபூர்வமாக ஆனால் மீகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மணிக்கொடிக் காலத்தைத் தாண்டி புதியவர்கள் எவரையும் படிப்பதில்லை. கண்டு கொள்வதில்லை என்று சி.சு. செல்லப்பாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இது செல்லப்பாவைப் பற்றிய கடைசி பத்து வருஷகாலத்திற்கு மாத்திரமான உண்மை. அந்த உண்மை வல்லிக்கண்ணனுக்கும் பொருந்தும். எழுத்து பத்திரிகை நடத்தியவரை, புதுக்கவிதையைத் தமிழுக்குத் தந்தவரைப்பற்றி அப்படிச் சொல்லக்கூடாது. ஆனால் வல்லிக்கண்ணன் சொல்லியிருக்கிறார். செல்லப்பா அவரைச் சீண்டியவரில்லை, என்னையும் சிவராமுவையும் போல. புதுக்கவிதை வரலாறு புத்தகம் போட்டு உடன் பணம் கொடுக்க முடியாது, தாமதமாக பல வருஷங்கள் கழித்து செல்லப்பா பணம் கொடுக்கும் வரை வல்லிக்கண்ணன் ஏதும் சொன்னவரில்லை. செல்லப்பா எழுத்துப் பிரசுரங்களை விற்க ஒவ்வொரு கல்லூரியாக சைக்கிளில் செல்லப்பாவை இட்டுச் சென்றவர் வல்லிக்கண்ணன். பின் ஏன் அப்படி எழுதினார்?
அதற்காக செல்லப்பா வல்லிக்கண்ணனை விரோதித்துக் கொள்ளவில்லை. இதே வல்லிக்கண்ணன் தான் சாகித்திய அகாடமி பரிசுக்கான் கடைசித் தேர்வுப் பட்டியலில் சுந்தர ராமசாமியும் செல்லப்பாவும், இமையுமும் இருக்கும் போது இவர்களையெல்லாம் உதறி விட்டு தி.க. சிவசங்கரனுக்கு பரிசு சிபாரிசு செய்தவர். மனித மனத்தின் இரகசிய ழங்களை அவ்வளவு சுலபமாகவா கண்டறிந்து கொள்ள முடியும்? தமிழிலேயே தலை சிறந்த படைப்பு என்று நான் நினைக்கும் தி. ஜானகிராமனின் மோகமுள் பக்கம் பக்கமான வம்பளப்பு என்றோ இல்லை கதையளப்பு என்றோ என்னவோ எழுதியிருக்கிறார். திருநெல்வேலிக்காரர் வம்பளப்பையும் கதையளப்பையும் கண்டனம் செய்கிறார் என்றால் அதிசயம் இல்லையா அது?.
வல்லிக்கண்ணனிடமிருந்தே வந்திருக்கக் கூடிய அவரிடமிருந்து வந்துவிட்ட ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் சொல்லவேண்டும். வல்லிக்கண்ணன் தமிழக முற்போக்குகளுடன் மிக நெருங்கி இருந்தவர். வல்லிக்கண்ணையும் தம்மவராக அவர்கள் கருதினார்கள். சரஸ்வதி ஒரு இலக்கியப் பத்திரிகையாக, கட்சி சாராது தன்னை இருத்திக்கொண்டது கட்சிக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் சரஸ்வதி சிரியர் அவர்களோடு சேர்ந்தவர் தான் முற்போக்கு தான். இருப்பினும் சரஸ்வதிக்கு போட்டியாக தாமரை பத்திரிகையை கட்சி துவங்கியது. சரஸ்வதி அச்சானது கட்சியைச் சேர்ந்த அச்சகத்தில். அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டு சரஸ்வதி அச்சாவதைத் தாமதப்படுத்திக் கடைசியில் அது கடைமூடச் செய்தனர். இந்த உண்மை சரஸ்வதி வரலாற்றில் வல்லிக்கண்ணனால் பதிவு செய்யப்படுகிறது.ம் இந்த உள்கட்சி விவகாரம் வல்லிக்கண்ணன் வெளிக்கொணர்ந்திராவிட்டால் உலகம் அறிந்திராது. சரஸ்வதியை மூடச் செயதவர் நாம் மரியாதை செய்யும் ஜீவா அவர்கள். இதை வெளிக்கொணர்வதில் வல்லிக்கண்ணனுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. வெகு அதிசயமாக இந்தச் செய்கையால் வல்லிக்கண்ணன் யாருடைய கோபத்துக்கும் ளாகவில்லை. இது எப்படி நிகழ்ந்தது?
1993-94 இந்தியா டுடே மலரில் அவர் மிக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். எல்லாம் பொத்தம் பொதுவான விமர்னங்கள். ஆனால் மிகக் கடுமையானவை: ' தமிழ் மொழியில், இலக்கியத்தில் ஒரு மந்த குணம் நிலவுகிறது. அது தான் எண்பதுகளிலும் தொடர்கிறது'; 'புரியாத விதத்தில், புதுமை என்ற பெயரில் எதை எதையோ எழுத வேண்டியது எனும் போக்கும் இப்போது தலையெடுத்துள்ளது. இதை நான் - லீனியர் ரைட்டிங்' என்றும், 'போஸ்ட் மாடர்னிஸம் என்றும் பெருமையாகச் சொல்கிறார்கள்;. 'இது அபத்தப் போக்கு மட்டுமல்ல அராஜகப் போக்கும் கூட;....'இப்படி எழுதுகிறவர்கள் எழுத்துக்களில் அழகும் இல்லை. கலையுமில்லை. அர்த்தமுமில்லை. செய் நேர்த்தியுமில்லை. பைத்தியக்காரனத்தனம், போதைப் பிதற்றல்கள் என்று சொல்லப்படவேண்டிய விதத்தில் தான் இருக்கின்றன இவ்வகையில் எழுதப்படும் எழுத்துக்கள்."சமீப காலமாக, விரும்பத்தகாத வேறு அலைகளும் தமிழ் எழுத்து - பத்திரிகை உலகத்தில் தலை தூக்கி விளையாடுகின்றன;. பிராமண எழுத்தாளர், பிராமணர் அல்லாத எழுத்தாலர், பண்டித மனோபாவம் உள்ளவர், தனித்தமிழ் பற்றாளர், வட்டார வழக்கு மன்ப்பண்பை வளர்ப்பவர், சுத்த இலக்கியப் போக்கினர், சமூகப் பார்வை உடைய முற்போக்கு இலக்கிய வாதிகள், அர்fஅசியல் கட்சி சார்பு உடையவர்...... இப்படி பல அடிப்படையில் எழுத்துக்கள் கவனிக்கப்பட்டு, அபிப்பிராயங்கள் உருவாக்கப்படுவதும் பிரசாரம் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது". கடுமையான வார்த்தைகள் தான். ஆனால் எந்த ஒரு எழுத்தையும் எழுத்தாளரையும் இது குறிப்பிட்டுச் சொல்லாததால், யாரும் இது தனக்கில்லை என்று மூக்கு உயர்த்தி ராஜ நடை போட முடிகிறது. வல்லிக்கண்ணனுக்கு அன்பளிப்பாக வரும் புத்தகங்களில் இவ்வகை எழுத்தோ, எழுத்தாளரோ இருப்பின் அவர் தன் கருத்தைச் சொல்லியிருக்கவேண்டும் அல்லவா? அப்படி ஏதும் செய்தி நமக்குக் கசியவில்லை. அங்கும் தான் ரசித்து மகிழ்ந்த செய்திக் கார்டு தான் போயிருக்கும். ஏன் இப்படி? நெல்லையப்பனுக்கே இந்த ரகசியம் தெரிந்திருக்காது தான்.
வல்லிக்கண்ணனுக்கு பயம் என்றில்லை. தராதரம் தெரியாது என்றில்லை. வெகு அபூர்வமாக, வேண்டாத இடங்களில் அவர் தன் அபிப்ராயங்களைச் சொல்லியிருக்கிறார். செயலிலும் காட்டியிருக்கிறார். அவருக்கும் கறாரான அபிப்ராயங்கள் உண்டு. ஆனால் சொல்வதில்லை என்று தோன்றுகிறது. அப்படி அவர் சொல்லத் தேர்ந்தெடுக்கும் இடங்கள் ஒரு சீரான பார்வையற்றதாகத் தோன்றும். மோகமுள்ளையும் சிவராமு கவிதைகளையும் உதறித் தள்ளும் வல்லிக்கண்ணன் எப்படி வரும் குப்பைகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் தரமுடிகிறது? ஏன் தன் பலமான திருநெல்வேலி வாழ்க்கைப் புனைவுகளைப் பின்னொதுக்கி தன் உள்ளார்ந்த ரசனைக்கு மாறாக, ரெடி மேட் பாராட்டுக் கார்டுகள் வழங்கும் காரியத்திலேயே, தன் பிற்கால வாழ்க்கையைச் செலவிட்டார்? சிறப்பான ஒரு வல்லிக்கண்ணனை நாம் இழந்து விட்டோம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனும் எந்தத் துறையில் தன் வாழ்க்கையைச் செலவிட்டாலும், தன்னில் சிறந்ததைத் தான், தன் இயல்பான ஒன்றைத்தான் தரவேண்டும். அப்படித்தான் வாழவேண்டும் என்று நான் நினைக்கிறேன். வல்லிக்கண்ணன் தன்னின் சிறந்ததை மறுத்துக்கொண்டு விட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எளிமையே உருவான மனிதர், சைகள் ஏதுமற்றவர், தான் தீர்மானித்துக்கொண்ட லக்ஷ¢யத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டது போல வாழ்ந்தவர், ஏன் தன் இயல்பில் வாழவில்லை? ஏன் தன்னின் சிறப்பானதைக் கொடுக்கவில்லை? தமிழ் நாட்டின் மற்ற பெரிய எந்தத் துறைப் பிரமுகர்களையும் போல பணத்துக்கோ, பிராபல்யத்துக்கோ தானல்லாத வேஷம் தரித்தவரில்லை வல்லிக்கண்ணன். வல்லிக்கண்ணனின் இழப்பு அது. நமது இழப்பும் தான். எத்தனை பெரிய மனுஷிகள் அவர் தந்திருக்கக் கூடும்!
குறிப்புகள்
தொகு- 22.11.06