வள்ளிநாயகியின் கோபம்/ஆறுமுகம்

 7 

ஆறுமுகம்

“சுகம், துக்கம் இரண்டும் வாழ்க்கைத் தேரின் இரு உருளைகள். கவலையை விடு. கடவுளை நம்பு. அவன் ஆணைப்படியே அனைத்தும் நடக்கும், அவனைத் தொழு, கஷ்டம் நீங்கும், சுகம் பிறக்கும்”

சஞ்சலப்பட்டுக் கூப்பிய கரத்துடன் நின்று, குமுறுகிற நெஞ்சுக்கு ஆறுதல் தேடும், ஏழைக்கு, வேதாந்தி கூறும் உபதேசம் இது.

கடவுளின் முகத்திலே, களிப்பு பிறந்தது. இந்த ஏழை, எங்கே தன் கஷ்டத்தினால், நம்மை மறந்து விடுவது, அல்லது மனம் நொந்து தூற்றுவது என்ற மனப்போக்கு கொண்டு விடுகிறானோ என்று எண்ணினோம், நல்ல வேளையாக, வேதாந்தி, நமக்கு வக்கீலானான். சுகம், துக்கம் இரண்டும் இருக்கத்தான் செய்யும் என்று உபதேசித்தான். ஏழையின் மனம் சாந்தி அடையும் என்று கடவுள் கருதிக் களிப்படைந்தார்.

“ஆட்டுக்கும் அளவறிந்துதானே, ஆண்டவன் வால் வைக்கிறார். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா, பயல், இப்போதுதான், படுகிறான், வேண்டும் அவனுக்கு”

ஏழையின் கஷ்டத்துக்குக் காரணமாக இருந்தவன் ஆண்டவன், ஏழையைத் தண்டித்தான், அது தக்க காரியம் என்று கூறிக் களிக்கிறான். ஆண்டவனின் முகம் கோபத்தால் சிவந்தது. கொடியவன் ஏழையைக் கெடுத்ததுடன் இல்லை, என்னையுமல்லவா, நடுச்சந்திக்கு இழுக்கிறான். அந்த ஏழை. படும்பாடு, என் ஏற்பாடு, அதுவும் சரியான ஏற்பாடு என்று தைரியமாகக் கூறுகிறான். எவ்வளவு துணிவு! ஏழையைக் கெடுத்ததுமின்றி, ஏழையை என் மேலே ஏவுகிறானே, இவ்வளவும் என் ஏற்பாடு என்று பேசி. எவ்வளவு வன்னெஞ்சம் இவனுக்கு என்று எண்ணினார், கோபம், பொங்கிற்று, ஆண்டவனுக்கு.

“அட ஏண்டா தம்பி! ஆண்டவன் ஆண்டவனென்று அடிக்கொருதடவை பிதற்றுகிறே. அந்த அக்ரமக்காரன் செய்த கொடுமையாலே நீ அவதிப்படுகிறே. ஆண்டவன் ஏன் இதைச் செய்யப்போகிறார்?”

ஏழையைக் கொடுமை செய்தவனின் கெட்ட குணத்தை அறிந்த ஒரு நண்பன், ஏழைக்கு வந்த இடருக்கு ஆண்டவன் பொறுப்பாளி அல்ல என்று கூறுகிறார்.

கடவுளின் கோபம் இந்தப் பேச்சினால் குளிர்ந்துவிட்டது. வேதாந்தி கஷ்ட காலத்திலும் என்னை மறக்கக் கூடாது என்ற உபதேசம் செய்தான். அதற்கு நேர்மாறாக, ஏழையைக் கெடுத்த கொடியவன், என் மீது ஏழையை ஏவிவிடப் பார்த்தான். நல்லவேளையாக இந்த நண்பன் வந்தான் என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம், இடர் விளைவித்தவனைப் பற்றி யோசி என்று கூறி, ஏழையின் கண்ணையும் கருத்தையும் அந்தப் பக்கம் திருப்பிவிட்டான்; அது மிக நல்லதாயிற்று, என்று எண்ணி ஆண்டவன் நிம்மதியடைந்தார். முகத்திலே கோபம் போய் தெளிவு பிறந்தது.

“ஆண்டவனே! எங்களை ஏன் இப்படித் தவிக்க வைக்கிறாயோ தெரியவில்லையே. அந்தப் பாவிக்குப் பக்கத்துணையாகவே இருக்கிறாய்? நியாயமா? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? தெய்வமே! இது அடுக்குமா?” என்று ஏழையின் மனைவி ஆண்டவனிடம் முறையிட்டு, நீதி வழங்கும்படிக் கேட்கிறாள்.

ஆண்டவனின் கண்களிலே இருந்து அவரையும் அறியாமல் நீர் வழியலாயிற்று. “இந்த அபலை, என்னை நீதி வழங்கும்படிக் கேட்கிறாளே. அவள் படும் கஷ்டம் ஒரு அக்கிரமக்காரனால் உண்டானது என்கிறாள், அதுவரையிலே சந்தோஷந்தான், நான்தான் கொடுமைக்குக் காரணம் என்று அம்மை குற்றம் சாட்டவில்லை. ஆனால், என்மீது உடந்தையாக இருக்கும் குற்றத்தைச் சுமத்துகிறார்களே, நான் என்ன செய்வேன்? என் கடமையை நான் செய்யவேண்டுமென்று எனக்குக் கவனமூட்டுகிறாள் அந்தக் காரிகை. முறையிடுகிறாள்! தூற்றிவிடக்கூடாதா? துயர் நேரும்போது, மனதிலே சாந்தி வருவித்துக்கொள்ளாமல், தெய்வத்தை நிந்தித்தாய், ஆகையால் உனக்கு அருள் பாலிக்க முடியாது என்றாவது சொல்லித் தப்பித்துக் கொள்ளலாமே? இந்தப் பெண்மணி, தன் கஷ்டத்தை என்னிடம் முறையிட்டு அல்லவா, நீதி வழங்கச் சொல்கிறாள். ஐயோ! அந்தக் கண்ணீருக்குதான் சமாதானம் சொல்லியாக வேண்டுமே என்ன செய்வேன்” என்று கூறினார். ஆண்டவன் கண்ணிலே இருந்து நீர் தாரை தாரையாகப் பெருகிற்று.

“ஆண்டவனறிய நான் ஒன்றும் தவறு செய்யவில்லை. வீணாக என் மேல் சந்தேகப்படவேண்டாம். அவன் பொய் பேசுகிறான். நான் அவன் சொத்தை அபகரிக்கவில்லை. சாட்சி உண்டா கேளுங்கள். என்னை அவமானப்படுத்த வேண்டாம். ஆண்டவன் சாட்சியாக, நான் அந்த ஏழையின் சொத்தை அபகரிக்கவில்லை” என்று ஏழையைக் கெடுத்தவன் அலறினான், ஏழையின் பக்கம் சிலர், சேர்ந்துகொண்டு அடித்து உதைத்து ஏழையிடமிருந்து அபகரித்த சொத்தை கொடுக்கும்படி வற்புறுத்தும்போது. இந்தக் குரல் கேட்டதும், ஆண்டவன் கண்களைத் துடைத்துக்கொண்டார். முகத்திலே, உறுதி பிறந்தது. ஊரார் நியாயம் கேட்கத் தொடங்கி விட்டார்கள்! ஏழையின் சார்பிலே பரிந்து பேசவும் ஆட்கள் உள்ளனர், இனி நமக்குத் தொல்லை இல்லை, என்று எண்ணினார். உறுதி காட்டும் முகத்துடன் நின்றார்.

ஏழையின் சொத்து திரும்பக் கிடைத்தபிறகு, அவன் களிப்புடன் காணப்பட்டான். எல்லாம் அவன் செயல்! என்று கூறி நின்றான். அவனுக்கு உதவியாக வந்தவர்கள் “அதுசரி அப்பா! அந்தக் கொடியவனிடமிருந்து, உன்னை மீட்டோமல்லவா? அப்பப்பா எவ்வளவு கடினமான காரியம்!” என்றனர். “அநீதி நிலைக்குமா? ஆண்டவன் அக்ரமக்காரனை விட்டுவைப்பானா?” என்றான் களிப்புடன் அந்த ஏழை. “சரி நேரமாகிறது, எங்கள் சிரமத்துக்குத் தர வேண்டியதைக் கொடுங்கள்” என்றனர் உதவிபுரிந்தோர். “நான் தருவதா? ஆண்டவன் உங்கட்கு நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் குறைவற்ற செல்வமும் தருவார்” என்று ஏழை கூறினான். உதவிபுரிந்தவர்களுக்குப் பொறுமை இல்லை. கொஞ்சம் கோபத்தோடு கேட்டனர், “இருக்கட்டுமப்பா! ஆண்டவன் கொடுக்கிறபோது கொடுக்கட்டும், இப்போது நீ தரவேண்டியதை எடு, கொடு” என்றனர். “கொடுப்பதுப்பற்றித் தடை இல்லை, ஆனால் ஆண்டவனின் அருஞ் செயலை நான் மறுத்ததாக முடியுமே என்பதுபற்றித்தான் கவலைப்படுகிறேன். அவனன்றி ஓரணுவும் அசையாதே என்றான் அந்த ஏழை. உதவி புரிந்தவர்கள் கோபம் தாங்க முடியாமல் ஒரு பலமான அறை கொடுத்தனர்; “அவனன்றி இந்த அறையும் கிடைக்காது” என்று கொக்கரித்தபடி. ஆண்டவன் தன் முகத்தைச் சுளித்துக்கொண்டார், வேகமாகத் தேவியாரின் அறைக்குச் சென்றுவிட்டார். அன்றுமட்டும் ஆண்டவன் ஆறு திருக்கோலம் கொண்ட அருமையை வியந்து என் குறிப்பேட்டில் ஆறுமுகம் என்ற தலைப்பிலே அன்றைய நிகழ்ச்சியை எழுதி முடித்தேன்.

“குறிப்பு எழுதினாயா, குறிப்பு! எவ்வளவு குறும்பு உனக்கு!”-என்று கூறிக் கோபித்திடும் அன்பர்கள், என் மனக்கண்முன் தெரிகிறார்கள். வீணாக அவர்களின் கோபத்தைக் கிளறி நான் காணப்போகும் பலன் என்ன! கோபித்திடும் அன்பர்கள், யோசிக்கவேண்டும், மனிதர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உடனுக்குடன் குறிப்பெடுக்க, ஒரு “சித்ரபுத்ரன்” இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறதல்லவா-பகுத்தறிவுக்குப் பொருத்தமானதா, அந்தப் புராணம்? எங்கள் ஊரிலே கோயிலே இருக்கிறது, சித்ரபுத்ரனுக்கு. யாருக்காவது ஆபத்தான நிலை என்றால், அந்தக் கோயிலுக்கு விளக்கேற்றித் தொழுவார்கள். என்ன பொருள்? என்ன நோக்கம்! “ஐயனே! சித்ரபுத்ரா! என் வீட்டிலே, நோய்வாய்ப்பட்டுத் துடிக்கும் இன்னவரை, அங்கே அழைத்துக்கொள்ளாதே, தயை செய்து காப்பாற்று-உனக்கு இதோ நெய் விளக்கு ஏற்றுகிறோம்”-என்று பிரார்த்திக்கிறார்கள். சித்ரபுத்ரன் வேலையோ, இன்னின்னவர்கள் இன்ன நாளில் பிறந்து இன்ன நாளிலே இறந்து தீர வேண்டும் என்ற “ரிகார்டுகளை” சர்வ ஜாக்ரதையாகக் காப்பாற்றி, அவ்வப்போது கவனித்து, அந்த “பிரமலிபீயின்”படி அவரவர்களை அழைத்துவர, யமகிங்கிரர்களை அனுப்பிவைப்பது! விளக்கு ஏற்றிவைத்து வீழ்ந்து வணங்குபவர்களின் கோரிக்கையோ, “அப்பனே! காப்பாற்று! அழைத்துக்கொண்டு போய்விடாதே!” என்பது! அதாவது, உன்னிடமுள்ள ரிகார்டைக் கொஞ்சம் தள்ளிவிடு, என் மனுவை ஏற்றுக்கொள், என்பது பொருள். சுருக்கமாகச் சொல்வதானால், ‘தப்புக் கணக்கு’ போடும்படி சித்ரபுத்ரனைக் கேட்டுக்கொள்கிறார்கள் — கலெக்டர் ஆபீசிலே கிளார்க்கிடம் கனதனவரன்கள் சொல்வதில்லையா, “நம்ம பேப்பரை கட்டிலே, மேல் பக்கம் வைத்து விடு, தம்பி! நாகலிங்கம் பேப்பரைக் கட்டிலே அடிபாகத்திலே வைத்துவிடு”—என்று. அதுபோல! இப்படிக் குறிப்பெடுக்கும் கடவுளாக மட்டுமல்ல, எடுத்த குறிப்பைத் திருத்தவும், மாற்றவும், உரிமை பெற்று, அதற்காக ‘பூஜை’யைப் பரிசாகப் பெற்று விளங்கும் சித்ரபுத்ரனைப் பற்றிப் புராணம் பேசும்போது, ஏன் கோபம் வருவதில்லை! சிந்திப்பதில்லை அப்போது! புராணம் எழுதினவன், புத்தியிலே மட்டும் நமக்கு மேலானவன் என்று எண்ணிக் கொள்வதில்லையே, அவன், குலத்திலே மேலானவன், குணத்திலே மேலானவன், கடவுளிடம் நேரிடையாகப் பேசுபவன், என்றெல்லாம் நம்பிவிடுவதால், புராணீகன் புளுகுகளை மலை மலையாகக் குவித்தாலும், கன்னம் கன்னம் என்று போட்டுக்கொண்டு, “இருக்கும், இருக்கும்! நமக்கெப்படிப் புரியும்! இல்லாமலா சொல்வார்! சந்தேகிப்பது பாபம்!” என்று பயந்து பயந்து பேசிக் கொள்கிறீர்கள். அந்த அச்சம், அறிவுக் கண்ணை மறைத்து விடுகிறது. ஆனால், ஆண்டவனின் அன்றாட நடவடிக்கைகளை நான் குறிப்பெடுத்தேன்—ஒருநாள் நிகழ்ச்சி இது—என்று நான் ஒரு புனைந்துரை கூறினால், கோபம் வருகிறது! ஏனெனில், நம்மைப் போன்ற ஒருவன்தான் எழுதுகிறான் என்ற எண்ணம் பலமாக இருக்கிறது, நான் எழுதுவதைப் படிக்கும் போது. கண்டிக்கத் தைரியம் பிறக்கிறது! ஆராய ஆற்றல் சுரக்கிறது! இந்தப் போக்குடன், புராண இதிகாசக் கதைகளையும் அலசிப்பாருங்கள்—உண்மை துலங்கும். அந்தச் சிந்தனைத் தெளிவு பிறக்கவேண்டும் என்பதற்காகவே தீட்டப்பட்டது “ஆறுமுகம்”. ஆண்டவனிடம் ஒரு குறிப்பேட்டுக்காரன் இருப்பதை நீங்கள் நம்ப மறுத்தால், நிச்சயமாக, சித்ரபுத்ரன் குறிப்பெடுத்தபடி இருக்கிறான் என்ற புராணப் புளுகையும் நம்ப மறுத்தாக வேண்டும்.