வள்ளிநாயகியின் கோபம்/கனவில் கீரதர்

 5 

கனவில் கீரதர்

ஆனந்தத் தாண்டவமாடிக்கொண்டிருந்த, பரமசிவனாரின், செவியில், நாரதரின் தம்பூரும் நந்தியின் மிருதங்கமும் ஒலித்த சப்தமும், பக்த கோடிகள், அரகரா—அற்புதம்—என்று பஜிக்கும் சப்தமும், “ஆனந்த நடமாடினார்”-என்று பாடும் தேவமாதரின், கானமும் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் யாரோ விம்மி அழும் சப்தமும் கேட்டது-ஐயன், ஆனந்தத் தாண்டவத்தை நிறுத்திவிட்டார்-யார் அழுகிறார்கள்-ஏன் இந்த விம்மும் குசல்?-என்று ஆச்சரியமடைந்தார்.

மானாட மழுவாட மங்கை சிவகாமி ஆட, ஆடிக்கொண்டிருந்த மகாதேவன், திடீரெனத் தமது தாண்டவத்தை நிறுத்திவிடக் கண்ட தேவர்களும் பூதகணங்களும், நந்தியும் நாரதரும், பயந்தனர்-ஏன் என்று கேட்கவும் அஞ்சியவர்களாய், கைலையை விட்டு நழுவினர்.

கைலைநாதன், மீண்டும் விம்மும் சத்தம் தமது செவியில் வீழ்கிறதா, என்று உற்றுக் கேட்டார்-ஆம்-விம்மும் குரல் கேட்கிறது-பெண்குரல்! பெம்மான், திடுக்கிட்டுப் போனார்-குரல், தமக்குப் பழக்கமானதாகத் தெரியவே! சுற்றும் முற்றும் பார்த்தார்-மேலும் கீழும் பார்த்தார், ஒரு உருவமும் தென்படவில்லை-ஆனால் அழுகுரல் மட்டும் கேட்டது.

இதென்ன ஆச்சரியம் என்று கூறியவண்ணம், உட்கார்ந்தார், புலித்தோல் ஆசனத்தின் மீது-சோகம் கொண்டு, கரத்தைச் சிரத்தருகே கொண்டு சென்றார்.-“போதும், உபசாரம்!” என்று கூறியபடி, கங்காதேவி, அவர் கரத்தைத் தள்ளிவிடவே, ஐயன், “ஓஹோ! மாதரசி! மறந்தே போனேன்! கங்கா தேவி! கதறியது நீயா? காரணம் என்ன? எந்தக் கயவனால், என்ன கேடு நேரிட்டது, கூறு? மனக்கஷ்டமடைய உனக்கு என்ன காரணம் கிடைத்தது! உமையவள், என் உடலிற் பாதி மட்டுமே பெற முடிந்தது-நீயோ, என் உச்சியிலே உறைவிடம் பெற்றாய்! உன் நிலை இவ்வளவு உன்னதமாக இருக்கும்போது, நீ உள்ளம் நொந்து கிடக்கக் காரணம் என்ன? உலகோர், உன் மகிமையைப் போற்றிப் புகழக் கேட்டுப் புளகாங்கிதமடைவது முறையாயிருக்க, புனிதவதி! நீ புலம்பக் காரணம் என்ன?” என்று பரமசிவனார் பரிவுடன் கேட்கலானார்.

கங்கா தேவியார், கைலைவாசனின் ஜடாபரத்தை விட்டுக் கீழே இறங்கிவந்து, ஐயனின் அருகே அமர்ந்து கொண்டு, கண்களைத் துடைத்தபடியே பேசலானார் - கோபமும் சோகமும் கலந்த குரலில்.

“என்னை இந்தக்கதிக்கு ஆளாக விட்டுவிட்டு நீர் ஆனந்தத் தாண்டவமாடுகிறீரோ?ஆண்களின் சுபாவமே இப்படித்தானே? அழுத கண்களுடன் ஆரணங்குகள் இருந்தபோதிலும் ஆடல் பாடலில், விருந்து வைபவத்தில் காலங்கழித்து வரும் கல்மனம் படைத்தவர்கள் தானே ஆண்கள்”

“கங்கா தேவி! மற்ற ஆடவர்களைப் போலவே என்னையும் எண்ணிக்கொண்டாயா? பெண் குலத்தைப் பழிக்கும் பேயன் அல்லவே நான். பெண்பாவாய்! ஏன் வீணாக மனதைக் குழப்பிக் கொள்கிறாய்? உன் மனக் கஷ்டத்திற்கு என்னதான் காரணம்? எந்தத் தீயவன் என்ன தீங்கிழைத்தான்? தேவி! தெரிவி இப்பொழுது! திரிபுரம் எரித்த எனக்கு அத்தீயவன் எம்மாத்திரம்.”

“போதும் போதும் உங்கள் வீரப் பிரதாபம். யார் என்னை என்ன நிந்தித்தாலும் உமக்கென்ன? இவளுக்காகப் பரிந்து பேச யார் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் யாராரோ என்னை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள், என் கதி இப்படி இருக்கிறது, நீங்களோ ஆனந்தத் தாண்டவமாடுகிறீர்.”

“ஆஹா, உன்னையா இழித்தும் பழித்தும் பேசினார்கள்? எங்கே இருக்கிறது அந்த நாஸ்திகக் கும்பல்? கூப்பிடு ரிஷபத்தை! கொண்டுவா சூலாயுதத்தை! ஒரு நொடியில் துவம்சம் செய்துவிட்டு வருகிறேன்.”

“நாஸ்திகக் கும்பல் என்னைப்பற்றி இழித்துப் பேசினால், நானே அவர்களைச் சம்ஹரித்து விட்டிருக்கமாட்டேனா!”

“அங்ஙனமாயின், ஆஸ்திகச் சிகாமணிகளா, உன்னை இழிவாகப் பேசினர்?”

“ஆமாம் - அதுதான், என் மனதைக் குழப்புகிறது.”

“மாதர் திலகமே!! என்ன கூறினர் - ஆஸ்திகராயிருந்தால் என்ன - நாஸ்திகராயின் என்ன - உன்னை நிந்தித்தவர், எவராயினும் என் விரோதிகளே ஆகின்றனர். யார் அவர்கள், கூறு?”

“தங்கள் ஜடா முடியிலே தங்கும் தவப்பயன் பெற்ற, எனக்குள்ள மகிமை, இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும், போற்றப்பட்டு வருவதாகத்தானே, தாங்கள் கூறுகிறீர்கள் - தேவரும் கூறுகின்றனர்...”

“அதிலென்ன சந்தேகம்! மாந்தரும், ஒப்புக்கொண்ட உண்மையல்லவா அது. உன் பெருமையை அறியாதார் யார் உளர்? உன் புனிதத் தன்மையைப் புகழாதார் யார்? பாசுரங்கள் பல உள்ளன, உன் பெருமையைப் பாராட்ட.”

“பழங்கதைகள் கூடத்தான் உள்ளன - பகீரதன் என்னைக் கொண்டுவரச் செய்த முயற்சி, என்னால் ஏற்பட்ட அற்புதம் ஆகியவைகளைப் பற்றி......”

“ஆமாம் - சகல பாபங்களையும் போக்கிக்கொள்ள, கங்கையில் ஒரு முறை தலை முழுகினால் போதும். பாபம் கரைந்து போகும் - புண்யம் வந்து சேரும் — சர்வரோகமும் தீர்ந்து போகும் — சௌபாக்யம் வந்து சேரும், என்று உன் பெருமையைப் பாரோர் புகழத்தானே செய்கிறார்கள். பரத கண்டத்து மக்கள், எந்தக் கோடியில் உள்ளவர்களாயினும், உன்னைத் தரிசிக்க வருகிறார்களே! கங்கா தீர்த்தம், மகா மகத்துவம் வாய்ந்தது என்று கூறுவார்களே! இதிலே, என்ன சந்தேகம்?”

“இவ்வளவு மகிமையும், பொய்—கங்கா தீர்த்தம், புனிதமானதல்ல, கங்கையிலே தலை மூழ்கினால், பாபம் ஒழிந்துபோகும், என்று கூறுவது தவறு, என்று கூறுகிறார்கள். என் மகிமையைப்பற்றி எவ்வளவோ சுவடிகள் இருந்து என்ன பயன்? கங்கா தீர்த்தத்துக்கு “சகல ரோகங்களையும்” தீர்த்துவிடும் சக்திகூட இல்லை, என்று கூறிவிட்டார்கள்.”

“ஆஹா! இவ்வளவு துணிவுடன் பேசினரா......”

“ஏசினர், என்றுதானே பொருள்!”

“ஆமாம் - உன் மகிமையை மறுப்பவர், மாபாவிகளே! என்ன கூறினர்?”

“அவர்கள், ஆராய்ச்சி செய்து பார்த்தார்களாம் - பாமார் நம்புவதுபோல, கங்கா தீர்த்தத்திலே, ஒருவிதமான மகிமையும் கிடையாதாம். கங்கையிலே நீராடினால், நோய்கள் தீர்ந்துபோகும், ஆரோக்கியம் வரும், என்று கூறுவதுகூட, ஆராய்ச்சி செய்து பார்த்ததில், உண்மை அல்ல என்று தெரிந்துவிட்டதாம்”

“உன் மகிமையை, புனிதத் தன்மையை மறுப்பது மட்டுமல்ல, மாபாவிகள்! நீ, உற்பத்தியாகும் இடம், உன்னதமான இமயம், என்பதையும் மறந்து, கேவலம், நோய்களைத் தீர்க்கும் அளவுக்குக்கூட உனக்கு வல்லமை இல்லை என்று கூறிவிட்டார்களா?”

“ஆமாம் - அது கேட்டது முதல் அடியாளுக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. பலபேர் முன்னிலையில் பச்சையாக இதுபோல் பேசினர் - எவ்வளவுபேர் பரிகசித்தனரோ, தெரியவில்லை; எவ்வளவோ, யுகயுகமாக இருந்து வந்த பெருமையை ஒரு நொடியிலே, அழித்துவிட்டனர்.”

“காலக்கோளாறு, இது, கங்கா! கங்கை என் ஜடா முடியில் இருப்பவள் என்ற உண்மையைப் ‘புராணம்’ என்று, தள்ளிவிட்டாலும்கூட, கங்காதீர்த்தம், விசேஷமானது, மலையிலிருந்து கிளம்பி, மூலிகைகளின் சத்துக்கள் நிரம்பி, உடலுக்கு வலிவூட்டும் தன்மையைப் பெற்றிருக்கிறது, என்ற, முறையிலேயாவது, உன்னைப் பாராட்டக் கூடாதா? என்ன துணிவு! அந்த மகிமையும் கிடையாது என்றா கூறிவிட்டனர்”

“ஆமாம்! இதோ பாருங்கள்!!”

இவ்விதம் உரையாடல், பரமசிவனாருக்கும் கங்கா தேவியாருக்கும் நடைபெற்றது. கங்கா தேவியார், [1950, மார்ச் 17ந் தேதிய ‘இந்து’ இதழிலே இருந்து ஒரு செய்தியைப் படித்துக் காட்டினார்].
“கங்கைத் தீர்த்தத்துக்கு, சகலரோகங்களையும் குணமாக்கும் சக்தி இருப்பதாகப் பாமரர் நம்புவதை, விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த ஆற்றின் தண்ணீரை, விஞ்ஞான முறைப்படி, பரீட்சித்துப் பார்க்கப்பட்டது — 1917 — 1923-ம் ஆண்டுகளில். பீகார் மாகாண சுகாதார இலாக்கா இந்த ஆராய்ச்சியை நடத்திற்று. அந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, கங்காநதித் தண்ணீர் நோய்களைத் தீர்க்கும் சக்தி பெற்றது அல்ல என்ற உண்மை விளங்கிற்று, என்று இன்று டில்லி பார்லிமெண்டில், சுகாதார மந்திரி, ராஜகுமாரி அம்ருத்கௌரி கூறினார்கள்.”

இதனைக் கேட்ட கைலைநாதன், கோபமடைந்தார் — பிறகு, ஓரளவு சாந்தி அடைந்து, சமர்த்தாகப் பேசக்கருதி, “கங்கா! ராஜகுமாரி சொன்னது கேட்டு, நாம் வீணாக வருத்தப்படக்கூடாது. அவர் சொன்னது, நோய் தீர்க்கும் சக்தி உனக்கு இல்லை என்றுதானே தவிர, பாபத்தைப் போக்கும் சக்தி கிடையாது என்று கூறவில்லையே — ஏன் அழ வேண்டும், நீ!” என்றார்.

கங்காதேவி, முன்னிலும் அதிகமான கோபம்கொண்டு, “பேஷ்! அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் தருகிற முறையிலே பேசுகிறீர் போலும்! கேவலம், நோய்களைத் தீர்க்கவே, எனக்குச் சக்தி கிடையாது என்று கூறிவிட்ட பிறகு, பாபத்தைப் போக்கும் மகிமை எனக்கு இருப்பதாக, யார், இனி நம்புவார்கள்? பாமார்கள், பலகாலமாக நம்பி வந்தததை, பாழாய்ப்போன விஞ்ஞானம், அழித்துக் கொண்டு வருகிறது. நோய் போக்கும் நீரல்ல - பாபம் போக்கும் தீர்த்தமல்ல என்று, கூறத் துணிவு கொண்டுவிட்டனர்– பாராள வந்தவர்கள். ஆஸ்திகர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர்.”

“ஆமாம்-அரோரம்! ஜேசங்கர்!-என்றெல்லாம், பஜிக்கிறார்கள்...”

“பஜிக்கிறார்கள் — அதேபோது, என் மகிமை ஒரு கட்டுக்கதை, பாமரனின் மனமயக்கம், விஞ்ஞானத்தின் முன்பு நிலைக்க முடியாது, என்று நிந்திக்கிறார்கள்”

“ஆமாம்-சிக்கலாகத்தான் இருக்கிறது”

“அதுவும், டில்லி பார்லிமெண்டில், ஒரு மாது கூறுவதா, இப்படி!.........”

“பாரேன் அக்ரமத்தை! ஒரு ஆரணங்கு கூறுவதா?”

“மூதாட்டி - சீமாட்டியுங்கூட...”

“இப்படிப்பட்டவர்கள், மந்திரிகளாக உள்ளனர்.”

“மந்திரிகள் இவ்விதம் பேசினால், மக்கள் எவ்விதம் பேசுவர்!”

“கேவலமாகத்தான் பேசுவர்! உன் கங்கா தீர்த்தத்தின் யோக்யதை தெரியுமா! அதைப் பரிசுத்தமானது என்று பெருமையாகப் பேசிக்கொண்டாயே, மந்திரிவேலை பார்க்கும் அம்மையே கூறிவிட்டார்கள். அப்படி ஒரு யோக்யதையும் கங்கா தீர்த்தத்துக்குக் கிடையாது என்று. இந்த உண்மை தெரியாமல், கங்கா ஜலம், கங்கா ஜலம், என்று நாம் இதுவரை காக்காய்க் கூச்சல் போட்டுக்கொண்டிருந்து விட்டோம், என்றெல்லாம் கேலியாகத்தான் பேசுவார்கள்.”

“என் வயிறு எரியாதா? மனம் பதறாதா?”

“ஆமாம்-ஆனால், ராட்சதப்பயல்களோ, நாத்திகக் கும்பலோ, இவ்விதம் உன்னைப்பற்றிப் பேசினால், ஒரு நொடியிலே துவம்சம் செய்துவிடுவேன்-பேசியிருப்பவர்கள் ஆஸ்திகர்-ஆராய்ச்சிக்காரர்-விஞ்ஞானி-என்று கூறுகிறாயே!”

“இருந்தால் என்ன! விஞ்ஞானத்தின் மீது போர் தொடுத்து, அதனை ஒழித்துவிட வேண்டும்”—என்று கங்கா தேவியார், கூறிடவே, கைலைநாதன் செய்யத்தான் வேண்டும்—கங்கைக்கு வந்த கதி, நாளைக்குக் கைலைக்கும் வரும், என்று கூறிக்கொண்டே, போர்க்கோலம் பூண்டு கொள்ளலானார்.

“விஞ்ஞானத்தின் மீதா படை எடுக்கப் போகிறீர்?” என்று கேட்டுக்கொண்டே கீரதர் வந்து சேர்ந்தார்.

“ஆமாம்” என்றார் ஐயன், அம்மையும் “ஆம்” என்றார்.

“சிரமமான காரியமாயிற்றே! தாங்கள் ரிஷபவாகனம் ஏறிச் செல்லுமுன்பு, விஞ்ஞானி விமானமேறிச் செல்வானே! சூலாயுதத்தை வீசுவதற்குக் குறி பார்க்குமுன்பு, விஞ்ஞானி, அணுகுண்டை வீசிவிடுவானே!” என்று கீரதர் கூறினார்.

“என்னடா தம்பீ! கீரதர்-கீரதர்-என்று கூவினாய்” என்று கேட்டுக்கொண்டே, என் அண்ணன் என்னைத் தட்டி எழுப்பினார். கண்டது கனவு என்று அறிந்தேன்-பக்கத்திலே இருந்த பத்திரிகையிலே, கங்கைத் தீர்த்தம் கவைக்கு உதவாதது-மகத்துவம் இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள், ஆனால் அப்படி ஒன்றும் மகத்துவம் இல்லை-இது விஞ்ஞான ஆராய்ச்சியின் தீர்ப்பு, என்று, டில்லி பார்லிமெண்டில் சுகாதார மந்திரி ராஜ்குமாரி அம்மையார், பேசிய ‘செய்தி’ காணப்பட்டது.