வான்மீகர் சூத்திர ஞானம்

சித்தர் பாடல்கள்

நூல் 21

வான்மீகர் சூத்திர ஞானம்

தொகுப்பு நூல் பக்கம் 319

1

இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி

எழுத்து அதனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்

அரு உரவாய் நின்று அதுவே எழுத்து அது ஆகும்

ஆதி அந்தம் அண்ட பிண்டம் அதுவே ஆகும்

திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம்

சிவ சத்தி திருமாலின் ரூபமாகும்

வரும் உருவே சிவ சத்தி வடிவம் ஆகும்

வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே

2

வந்ததுவும் போனதுவும் வாசி ஆகும்

வானில் வரும் ரவி மதியும் வாசி ஆகும்

சிந்தை தெளிந்து இருப்பவனார் அவனே சித்தன்

செகம் எல்லாம் சிலம் என்றே அறிந்தோன் சித்தன்

நந்தி என்ற வாகனமே தூல தேகம்

நான் முகனே கண் முக்குச் செவி நா காக்கும்

தந்தி முகன் சிவ சத்தி திரு மூச்சாகும்

தந்தை தாய் ரவி மதி என்று அறிந்து கொள்ளே

3

அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்

அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்

பிரிந்து வரும் ரேசகமே யோக மார்க்கம்

பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்

மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு

மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு

சிறந்து மனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்

சிவசிவா அவன் அவன் என்று உரைக்கல் ஆமே

4

ஆமப்பா உலகத்தில் பெரு நூல் பார்த்தோர்

அவர் அவர் கண்டதை எல்லாம் சரிதை என்பார்

ஓமப்பா கல் செம்பைத் தெய்வம் என்றே

உருகுவார் பூசிப்பார் கிரியை என்பார்

வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று

வாய் பேசா ஆமையைப் போல் திரிகுவார்கள்

காமப்பா ஞானம் என விண்டு மேலும்

காக்கை பித்தன மிருகம் போல் சுற்றுவாரே

5

சுற்றுவார் பெருநூலைப் பார்த்துப் பார்த்துத்

தூடிப்பார் உலகத்தில் சில் சில்லோர்கள்

தெற்றுவார் அவர் பிழைக்க அனேக வேடம்

தேகத்தில் அணிந்து கொண்டு திரிகு வார்கள்

பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார்

பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார்

கத்துவார் திரிமூர்த்தி தாமே என்று

காரணத்தை அறியாத கசடர் தானே

6

தான் என்ற உலகத்தில் சில் சில்லோர்கள்

சடை புலித்தோல் காசாயம் தாவடம் பூண்டு

ஊன் என்ற உடம்பு எலலாம் சாம்பல் பூசி

உலகத்தில் யோகி என்பார் ஞானி என்பார்

தான் என்ற சிவபூசை தீட்சை என்பார்

திருமாலைக் கண்ணாலே கண்டோம் என்பார்

கான் என்ற காட்டுக்குள் அலைவார் கோடி

காரணத்தை அறியாமல் கதறுவாரே

7

கதறுகின்ற பேர்கள் ஐயா கோடா கோடி

காரணத்தைக் கண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சம்

பதறுகின்ற பேர்கள் எல்லாம் பரா பரத்தைப்

பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கம் அப்பா

உதறுகின்ற பேர்கள் எல்லாம் உலகத்து உள்ளே

உதித்த கலை தம்முள்ளே அறிய மாட்டார்

சிதறுகின்ற பேர்களைப் போல் சிதறிடாமல்

சிலசத்தி வரும்போதே தன்னில் நில்லே

8

நில்லென்ற பெரியோர்கள் பாடை யாலே

நீடுலகம் தன்னுள்ளே நாலு வேதம்

வல்லமை யாய்ச் சாத்திரங்கள் இருமூன்றாக

வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாகக்

கல்லுகளைக் கரைப்பதைப் போல் வேதாந்தங்கள்

கட்டினார் அவர் அவர்கள் பாடையாலே

தொல் உலகில் நாற் சாதி அநேகம் சாதி

தொடுத்தார்கள் அவர் அவர்கள் பிழைக்க தானே

9

தான் என்ற உலகத்தில் இல்லா விட்டால் 
தன்பெருமை யால் அழிந்து சகத்தில் வீழ்வார்

ஊன் என்ற உடம்பு எடுத்தால் எல்லாம் வேணும்

உலகத்தில் அவர் அவர்கள் பாடை வேணும்

மான் என்ற சிவகாமி சிவனும் கூடி

மாமுனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார்

தேன் என்ற சிவகாமி அருளினாலே

திரட்டினார் வெகு கோடி தேச பாடை

10 தேசத்தின் பாடைதனை அறிந்திடாமல்

தெளிவாகத் தாம் உரைப்பார் பாடை பார்த்தோர்

ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம்

ஆச்சரியம் தனைக்கண்டு மறந்து போவார்

வாசிதனை அறியாத சண்டி மாண்பர்

வார்த்தையினால் மருட்டி வைப்பார் வகை இல்லாமல்

நாசி நுனி அதன் நடுவில் சிவத்தைக் கண்டோர்

நான்முகனும் திருமாலும் சிவனும் தாமே

11

சிவசிவா பதினெண் பேர் பாடற்கு எல்லாம்

திறவு கோல் வால்மீகன் பதினாறாகும்

சிவம்பெத்த சித்தர் எல்லாம் என்னூல் பார்த்துச்

சிவனோடே கோள் சொன்னார் சினந்தான் நாதன்

அவமாகிப் போகாமல் சிவன் உத்தார

அருளினால் திறந்து சொன்னேன் உலகுக்காக

நவமான நவக்கிரகந் தன் உள்ளேயே

நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால்

12

நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால்

நடுவீதி குய்யம் முதல் உச்சி தொட்டுத்

தாக்குவாய் அங்கு என்றே அதிலே மூட்டுத்

தாயாரைப் பூசித்து வேதம் ஓது

வாக்கு வாய் அசையாமல் மவுனம் கொண்டு

வாசி வரும் இடத்தில் மனம் வைத்துக் காத்து

நீக்குவாய் வாசியொடு மனம் தான் புக்கு

நினைவு அதனில் அடங்கி வரும் வரிசை காணே

13

காணரிதே எவராலும் இரு சுவாசம்

காண்பவனே சிவ சித்தன் அவனே யாகும்

பூணரிது இவ்வுலகில் இந்நூல் கிட்டில்

பூலோக சித்தன் என உரைக்கல் ஆகும்

காணரிது சிவசத்தி திரு மூச்சாகும்

காட்டாதே மூடருக்குமே இந்தூல் தன்னை

தோணரிது விழி மயக்கம் சும்மாப் போமே

சொல்லரிய சூட்சுமத்தைச் சொன்னேன் அப்பா

14

சூட்சம் இந்நூல் சொல்லுகிறேன் வாசி காண

சூட்சாதி சூட்சத்தைத் துறக்கப் போகா

சாட்சியில்லை துணையில்லை கேள்வியில்லை

சந்தேகம் ஒன்னும் இல்லை விழியைக் காண

காட்சி என்ன கற்பகத்தில் வசிக்குமாப் போல்

காரணத்தைக் கண்ணாலே கண்டு இருக்க

ஆட்சி தரும் உமையாள் அப்படியே கண்டேன்

ஆனந்தத் திருக்கூத்தின் நடக்கை காப்பே

15

காப்பதற்குப் பத்தியத்தைச் சொல்லக் கேளு

காய்கனிகள் பஞ்சரசம் பரமா அன்னங்கள்

ஏற்கையுடன் உண்டு கொண்டு சிவத்தைக் காத்தே

என் மகனே சித்தருடைக் குருநூல் பாராய்

ஆத்து மத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும்

அவர் அவர்கள் நித்ய கர்மம் நடக்க வேணும்

தீர்க்கமுடன் நின்றவர்க்கு வாசி சித்தி

சிறப்புடனே பதினாறும் பலிக்கும் தானே

16

தான் அவனாய் இருக்க என்றால் வாசி வேணும்

தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும்

வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி

வானுக்குள் மனம் இருக்க மதிபோல் காணும்

தேனவனாம் சித்தருக்குத் தெவிட்டா மூலி

சிரசப்பா உடலுக்குப் பதியே யாகும்

கோன் அவனாய் இருக்க வென்று குறியைச் சொன்னேன்

குவலயத்தில் பதினாறும் குறுகத் தானே
      • முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=வான்மீகர்_சூத்திர_ஞானம்&oldid=975873" இலிருந்து மீள்விக்கப்பட்டது