வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/உலகம் அதிசயிக்கத்தக்க

11
உலகம் அதிசயிக்கத்தக்க செயல் புரிந்தவர்


ஒருவர் இளமையில் மந்தமாகவோ, விளையாட்டுத் தனமாகவோ இருப்பதைக் கண்டு அவர்களுடைய பிற்காலத்தைப் பற்றி எவ்விதமாகவும் முடிவு கட்டமுடியாது. ஏதோ சில சமயங்களில்தான் அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்திலும்கூட இளமையிலிருந்ததைப் போலவே இருப்பார்களே அல்லாமல் எல்லோரும் அப்படியே இருக்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக ரேடியோவைக் கண்டு பிடித்த பிரபல விஞ்ஞானி மார்கோனியின் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்லலாம்.

மார்கோனி சிறுவனாக இருந்த சமயம், அவருக்கு உலகத்தில் உள்ள பலவகைப்பட்டவர்களையும் பார்க்க வேண்டும், அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற அவா அதிகமாக இருந்தது. ஆனால், பல இடங்களுக்குச் சென்று பலரைப் பார்க்க அவருக்கு வசதிதான் இல்லாமல்

இருந்தது. அதனால் அவர் தாம் இருக்கும் உருக்கு அருகிலிருக்கும் இடங்களுக்கு அடிக்கடி போய் வருவார். இப்படி அவர் வீணே சுற்றி வருவதைக் கண்டு அவருடைய தகப்பனார் மனம்வருந்தினார். பையன் இப்படித் திரிந்து கொண்டிருந்தால் பிற்காலத்தில் எப்படிப் பிழைக்கப் போகிறான் என்று பெரிதும் கவலைப்பட்டார். அதே சமயம் பையனுடைய மனதிலும் ஒரு யோசனை தோன்றியது. பணவசதி இல்லாததால் வெளி நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை. அங்குள்ளவர்களின் பேச்சைக் கேட்க முடியவில்லையே. ஆனால் ஆசையோ விட்டபாடில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டுமே என்று கருதினார். தேசங்களைப் பார்க்காவிட்டாலும் ஒரு நாட்டிலிருப்பவன் வேறு நாட்டிலிருப்பவனுடைய பேச்சையாவது கேட்க வழி கண்டுபிடிக்க முயற்சி செய்தார்.

மின்சாரத்தின் மூலம் ஒரு கருவியைச் செய்து அதன் மூலம் எல்லா நாடுகளிலும் பேசுவதைக் கேட்கலாம் என்று அவர் மனதிற்குத் தோன்றியது அதற்கு இணங்க தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆனால், அவர் ஆராய்ச்சியில் வெற்றி கானும் வரை, தம்முடைய எண்ணம் ஈடேறும் என்று நம்பவே இல்லை. அவருடைய தகப்பனாரும் அவருடைய முயற்சி வீண் என்றே கூறிவந்தார். வெகு நாட்களுக்குப்பிறகு, மார்கோனியின் ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தது. வெற்றியைக் கண்டதும் மார்கோனிக்கு, அதைத் தம் வீட்டின் கூரைமீது ஏறிநின்று உரத்த குரலில் எல்லோருக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்குத் தைரியம்தான் வரவில்லை. மக்கள் அவர் சொல்வதை நம்புவார்களா என்று சந்தேகப்பட்டார். அவர் சந்தேகப்பட்டது போலவே, மக்களும் முதலில் நம்பவில்லை, நிதர்சனமாகக் காட்டிய பிறகே நம்பினர். அப்பொழுதும் கூட மார்கோனியின் தகப்பனாருக்கு தம்முடைய பிள்ளையின் ஆராய்ச்சியின் மீது சந்தேகமே இருந்து வந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் மார்கோனி கண்டுபிடித்த ரேடியோ சாதனத்தின் உரிமைகளை 50,000 பவுன்களுக்கு வாங்கிய பிறகே அவருடைய சந்தேகம் தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.

மார்கோனி தம்முடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ள ரேடியோ சாதனத்தை கண்டுபிடித்தார். அதன் மூலம் தகப்பனார் கொண்டிருந்த கவலைகளையும் போக்கினார். ஆனால் ரேடியோவை கண்டுபிடித்த பிறகு அவருக்கு பல அபாயங்கள் தோன்றாமல் இல்லை. ரேடியோ இயங்குவதால் தங்களுடைய உடலில் மின்சாரம் பாய்வதாக பலர் குற்றம்சாட்டி, பயமுறுத்திக் கடிதங்கள் எழுதினார்கள். அதில் ஒரு ஜெர்மானியன் இங்கிலாந்துக்கே வந்து அவரைக் கொல்லப் போவதாகவும் கடிதம் எழுதியிருந்தான். ஆனால், அக்கடிதம் ரகசியப் போலீசாரிடம் ஒப்படைத்தல் மூலம் அவன் பிடிக்கப்பட்டு பின்னர் காவலில் வைக்கப்பட்டான்.

இன்று மார்கோனியால் உலகத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நாம் கேட்கிறோம். அவரைப் புகழ்ந்து பேசுகிறோம். பிற்காலத்தில் மார்கோனி இப்படிப் பிரபலம் அடைவார் என்று அவருடைய தகப்பனாரோ, மற்றும் அவரை இளமையில் கண்டவர்களோ கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்கள். ஏன், அவரே கூட கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார் அல்லவா?