வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/உழைத்து உழைத்து
உழைத்து உழைத்து பணத்தை குவித்தார்
யுத்த காலத்தில் எவ்வளவோ அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏழையாக இருந்தவன் லட்சாதிபதியாகி இருக்கிறான். லட்சாதிபதி பிச்சைக்காரனாகி இருக்கிறான். இதெல்லாம் வியாபாரத்தில் ஈடுபட்டுத்தான். ஆனால் போர் மூண்டதின் காரணமாக, ஒருவர் பெரிய கப்பல் கட்டும் முதலாளியாகவும் நிபுணராகவும் ஆனார் என்பது அதிசயமானது. அதிலும் கப்பல் தொழிலைப் பற்றியே தெரியாதவர் அப்படி ஆவதென்றால் நம்பமுடியுமா?
கொண்டிருந்தார். அத் தொழில் மூலமே அவருக்கு நிறையப் பணம் கிடைத்து வந்ததது. கெய்ஸர் அவருக்கு ஒரே மகன். அக்காரணத்தால் மிகவும் செல்லமாகவே வளர்ந்தார்.
கெய்ஸருக்குப் இளமையிலிருந்தே அளவற்ற ஆசையும், எதிலும் சலிப்பின்றியுமிருந்தார். பதினாறு வயதுவரை பள்ளியில் படித்தார். பிறகு நியூயார்க்கில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு, சாமான்களை வீடுகளுக்குக் கொண்டு கொடுக்கும் வேலை அவருக்கு அளிக்கப் பட்டது. கெய்ஸர் பகல் வேளைகளில் அலுவலகத்தில் வேலை செய்துகொண்டே இரவு வேளைகளில் போட்டோத் தொழிலைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்தார் போட்டோ தொழிலில் ஒருவாறு முன்னேறிய பிறகு கெய்ஸர் மனதில் ஒரு புது யோசனை உதித்தது. பூந்தோட்டம், நீர்வீழ்ச்சி, பெரிய அழகான கட்டிடங்கள் முதலியவற்றைப் படம் பிடித்து பல மாதிரிகளில் விற்றால் என்ன என்று யோசித்தார். உடனே அதைச் செய்ய முற்பட்டார். அவருடைய முயற்சிக்கு ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இதைக் கண்டு, கெய்ஸர் மனம் அளவற்ற குதூகலத்தில் மூழ்கியது. போட்டோ தொழிலிலேயே பூரணமாக ஈடுபட எண்ணி கம்பெனி வேலையை விட்டு விலகினார்.
அமெரிக்காவில் பல இடங்களில் போட்டோ பிடிக்கும் கம்பெனிகளை நிறுவினார். இதன் மூலம் அவருடைய வருவாய் அதிகமாகியதுடன் பெயரும் பிரபலம் அடைந்தது. கெய்ஸர் அத்துடன் இருக்கவில்லை. அவர் போட்டோ தொழிலை ஒருவாறாக நடத்த ஏற்பாடு செய்து முடிந்ததும், ஒரு சிமென்ட் கம்பெனியில் வியாபார ஏஜெண்டாக வேலையில் அமர்ந்தார். இக் கம்பெனியில் அவர் திறமையாக வேலை பார்த்து, அதிக ஊதியம் பெற்றார். அவருக்குக் கிடைத்த ஊதியத்தை அவர் செலவு செய்யாமல் சிமென்ட் மூட்டைகளை வாங்கி பத்திரப்படுத்தினார். அதைத் தனியே வியாபாரமும் செய்து வந்தார். இச்சமயத்தில் தான் சிமென்டுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. அப்பொழுது அமெரிக்காவிலேயே கெய்ஸர் ஒருவரிடந்தான் அதிகமாக சிமென்ட் இருந்தது. அதைப் பலர் விலைக்குக் கேட்டும் கெய்ஸர் விற்க மறுத்துவிட்டார். கடைசியாக சிகாகோ நகரத்தைச் சேர்ந்த பிரபல கட்டிட காண்டிராக்ட் கம்பெனி ஒன்று அவரை தமது கம்பெனியில் பங்குதரராகச் சேர்த்துக்கொண்டது. அக்கம்பெனிக்கே கெய்சர் தாம் சேர்த்து வைத்திருந்த சிமென்ட் மூட்டைகளை எல்லாம் நல்ல லாபத்திற்கு விற்றார். இக்கம்பெனி மூலம் கெய்ஸர் கட்டிட வேலைகளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டார். பெரிய பெரிய அணைக்கட்டுகள் கட்டுவதற்கு காண்டிராக்ட் எடுக்கச் சொல்லி, தாமே நேரில் இருந்து கட்டி முடித்தார் பிறகு அந்தக் கம்பெனியிலிருந்து விலகி, சொந்தமாகவே கட்டிட காண்டிராக்ட் கம்பெனியை ஆரம்பித்தார். இக் கம்பெனி ஆரம்பத்தில் அதிக வசதிகள் பெற்றிருக்கவில்லை. ஆனாலும் கெய்சருடைய சலியா உழைப்பின் காரணமாக வெகு சீக்கிரத்திலேயே அது பிரபலம் அடைந்தது. அதிலிருந்து கப்பல் கட்டும் தொழிலை மேற்கொண்டார். அவர் கப்பல் கட்ட ஆரம்பித்த சமயமும் இரண்டாவது உலக போர் மூண்டதும் சரியாக இருந்தது. அதனால் கப்பல்களுக்கு அதிகக் கிராக்கி ஏற்படலாயிற்று. கெய்ஸர் மனத்தில் ஒரு புது யோசனை உதித்தது சாதாரணமாக, கப்பல் கட்ட எல்லாரும் பின்பற்றும் வழியை அவர் கடைபிடிக்க விரும்ப வில்லை. பழைய முறையினால் கப்பல் கட்டி முடிக்க அதிக நாட்கள் ஆகின்றன. போர் காலத்தில், தாமதமாக வேலை செய்வதால் அபாயம் அதிகரிக்கும் அதை தடுக்கப் புதுவழிகள் தேவை என்று கெய்ஸர் தீவிரமாக சிந்தித்தார். மோட்டார் தொழிற்சாலையில் ஒவ்வொரு சாமானையும் வெவ்வெறு இடங்களில் தயாரிப்பார்கள். பிறகு எல்லாவற்றையும் ஒரு இடத்துக்குக் கொண்டுவந்து பூட்டுவார்கள். அந்த முறையை இதில் பின்பற்ற கெய்ஸர் எண்ணினார். முதலில் இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. பலர் அப்படி முடியவே முடியாது என்றும் கூறினர். ஆனால், கெய்ஸர் அதைப் பொருட்படுத்தாமல், தம் போக்கில் வேலையைச் செய்யலானார். சில மாதங்களிலேயே அவருடைய கப்பல் கட்டும் திறமை மிகப் பிரபலம் அடைந்தது. அமெரிக்க அரசாங்கமே அவருடடைய புரட்சிகரமான யோசனையைக் கண்டு அதிசயித்தது.
கெய்ஸர் பல தொழிற்சாலைகள் நடத்தி வந்தார். பணம் அவரைத் தேடிவந்து குவிந்தது. ஆனாலும், அவர் சலியாமல் வேலை செய்துவந்தார் அவரைப் போலவே அவரிடம் வேலை செய்பவர்களும் சோம்பல் என்பதையே தெரியாதவர்களாக இருக்க வேண்டும். தன்னைப்போல் அவர்களும் முன்னுக்கு வரவேண்டும் என்று கெய்சர் விரும்புவார்.