வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/ஏழ்மையைப் போக்க

2
ஏழ்மையைப் போக்க
இலக்கிய சேவை செய்தார்


அப்டன் ஸிங்க்ளர் என்ற பிரபல கதாசிரியரை ஒரு பத்திரிகை நிருபர் காணவந்தார். நிருபர், கதாசிரியரைப் பாராட்டும் தன்மையில் “நீங்கள் ஆங்கில இலக்கியத்திற்கு அபாரமான சேவை செய்கிறீர்கள்” என்றார்.

அப்டன் ஸிங்க்ளர் சிரித்துக்கொண்டு “அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னுடைய வறுமையைப் போக்கிக் கொள்ளவே நான் இலக்கிய சேவை செய்கிறேன்” என்றாராம்.

அப்டன் ஸிங்க்ளர் கூறியதில் பொய்யே இல்லை. அவர் இலக்கிய சேவை செய்யப் புகுந்ததே தம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான். அதே நோக்கத்தில்தான் அவர் இடைவிடாமல் நாவல், சிறுகதை கட்டுரை முதலியவற்றை எழுதி வந்தார்.

அப்டன் ஸிங்க்ளர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனார் சாராயக் கடையில் வேலையில் இருந்தார். அங்கு வேலை செய்து வந்ததன் பலனோ என்னவோ அவரும் ஒரு பெரிய குடிகாரராகிவிட்டார். இதனால் ஏற்கனவே வறுமையில் கஷ்டப்படும் குடும்பம் மேலும் அவஸ்தைப் படலாயிற்று. இந்தக்காரணத்தால் அப்டன் ஸிங்க்ளர் பள்ளிக்குக் கூடப் போக முடியவில்லை. அதனால், வீட்டில் தாயாரிடமே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். ஆரம்பப்பாடங்களைக் கற்றதும், அவர் தன் கைக்கு கிடைக்கும் புத்தகங்களைப் படிக்கலானார். இப்படியே பெரிய பெரிய மேதைகளின் புத்தகங்களைப் படித்து முடித்தார். இச்சமயத்தில் அவருக்கு, பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் உண்டாயிற்று. படிப்பில் ஓரளவு தேர்ந்திருந்ததால், அவர் உயர்தரவகுப்பிலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், பள்ளிக்கு சம்பளம் கட்டவேண்டுமே, என்ன செய்வது? இதற்காக அப்டன் ஸிங்க்ளர் மனம் தளரவில்லை. நகைச்சுவை துணுக்குகள் எழுதி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவர் அனுப்பும் பத்துத் துணுக்குகளில் நிச்சயம் இரண்டு துணுக்குகளாவது பத்திரிகையில் பிரசுரமாகும். அதற்காக அவர்கள் அளிக்கும் சன்மானத்தைக்கொண்டே அவர் பள்ளிச் சம்பளத்தைக் கட்டி விட்டு, தம்முடைய செலவையும் பூர்த்தி செய்து கொண்டு வந்தார்.

உயர்தரப் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றதும் அப்டன் ஸிங்க்ளர் நாவல்கள் எழுதத் தொடங்கினார். பகல் வேளையில் கல்லூரிப்படிப்பு. இரவில் நாவல் எழுதும் வேலை, இப்படியுமாக, அவர் தம்முடைய படிப்பிற்கும், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குமாக முதலிலிருந்தே இலக்கியத்தின் உதவியை நாடினார்.

அப்டன் ஸிங்க்ளர் பெரிய கதாசிரியராக ஆன பிறகு, தம்மைப்போல் கஷ்டப்படும் எழுத்தாளர்களை மறந்து விடவில்லை. அவர் சம்பாதித்த பணத்தைக் கொண்டே ஒரு காலனி ஏற்படுத்தி அங்கே பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரை வந்து குடியேறியிருக்கச் செய்தார்.

அப்டன் ஸிங்க்ளர்இலக்கிய மேதை மாத்திரம் அல்ல. சிறந்த சீர்த்திருத்தவாதியும்கூட. அவருடைய குடும்பம் வறுமையினால் கஷ்டப்பட்டது என்பதுடன், அவருடைய தகப்பனார் குடிகாரராக இருந்ததும் ஒரு காரணம் அதனால் அவர் குடியை வெறுத்தார். மதுபானம் செய்வதையே ஒழிக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர் அப்டன் லிங்க்ளர். சோஷியலிஸ்டு கட்சியில் அப்டன் லிங்க்ளருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அக்கட்சியின் கொள்கைகள் அவருக்கு பிடித்திருந்தது அதனால் அதில் சேர்ந்து சேவை புரியலானார்.

வறுமையில் கஷ்டப்பட்டபோது அப்டன் ஸிங்க்ளர் ஒரு சாதாரண இடத்தில வசித்து வந்தார். ஆனால், பணக்காரரானபிறகும்கூட, அவருக்கு அம்மாதிரியான சிறு இடத்தில் வசிக்கத்தான் அதிக பிரியம், இதற்கு மற்றொரு காரணத்தையும் கூறலாம். அவர் ஏராளமாகப் பணம் சம்பாதித்த பிறகு ஒரு பெரிய மாளிகையை வாங்கினார். அதில் போய்ச் சில நாட்கள் தங்கினார். ஆனால், ஒருநாள் அவர் குடும்பத்துடன் வெளியே போயிருக்கும் சமயம் வீட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டு விட்டது. அப்டன் ஸிங்க்ளர் வெளியிலிருந்து வருவதற்குள் வீடே எரிந்து சாம்பலாகிவிட்டிருந்தது. இதைக் கண்ட பிறகு, அப்டன் ஸிங்க்ளர் பெரிய மாளிகையில் குடியிருப்பதைக்கூடக் குறைத்துக் கொண்டார். அதேபோல, வாழ்க்கையில் ஆடம்பரச் செலவுகளை எல்லாம் வெறுத்தார் ஆடம்பரமாகச் செலவு செய்வதை மிச்சப்படுத்தினால் அதை வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்குக் கொடுக்கலாமே என்பது அவர் எண்ணம்.