வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/கனவில் கண்ட
கனவில் கண்ட கடை
‘டார்ஜான் கதை’ ஆப்பிரிக்கா நாட்டு காடுகளில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அக்காடுகளைக் கதைக்குப் பக்கபலமாகக் கொண்டதாலேயே அது பிரசித்தி அடைந்தது என்றும் சிலர் சொல்லுகிறார்கள் ஆனால், அக்கதையை எழுதிய எட்கார்ரைஸ்பர்ரோ என்பவர் ஆப்பிரிக்கா தேசத்தையே பார்த்ததில்லை என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?
எழுத்தாளர்களிலேயே பர்ரோதான் மிகவும் அதிகமாகச் சம்பாதித்தவர். அவர் தமது எழுபத்தி ஐந்தாவது வயதில் காலமானார். அவர் எழுதிய ‘குரங்கு மனிதன்’ மூலம் மாத்திரம் அவருக்கு இருபது லட்சம் டாலருக்கு மேல் கிடைத்திருக்கிறது.
மோட்டார் முதல் சாக்லெட் வரை பல சாமான்களை பர்ரோ வியாபாரம் செய்திருக்கிறார். வியாபாரத்தில் எல்லாம் தோல்வி ஏற்படவே அவர் ஒரு கடையில் குமாஸ்தாவேலையில் அமர்ந்தார். அந்த வேலையும் அவருக்கு சரிபட்டு வரவில்லை. அதனால் அவர் அந்த வேலையையும் விட்டுவிட்டார். இப்படி எல்லாவற்றிலும் அவருக்குத் தோல்வி ஏற்பட்டதால் அவர் மனம் சஞ்சலம் அடைந்தது. இனி என்ன செய்வது என்று சதா அவர் சிந்தித்துக் கொண்டிருக்கலானார்.
பர்ரோவுக்குக் கவலைகள் அதிகமாகவே இரவு நேரங்களில் தூக்கமே வராதாம். அப்படியே கொஞ்சம் தூக்கம் வந்தாலும் கண் மூடிய சிறிது நேரத்திற்கெல்லாம் அவருக்கு பயங்கரக் கனவு ஏற்பட்டுத் தூக்கம் கலைந்துபோய் விடுமாம். கண் விழித்து எழுந்த பர்ரோ தான் கண்ட கனவைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இரவு முழுவதையும் கழிப்பாராம். அப்படித்தான் வழக்கம் போலவே ஒரு நாள் அவருக்கு தூக்கம் வந்தது கண்ணை மூடினார் சில வினாடிகளே ஆகியிருக்கும். ஒரு பயங்கரக் கனவு கண்டு உடனே எழுந்து விட்டார். இந்தச் சமயம் அவர் கண்ட கனவைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அதற்குப்பதிலாக தாம் கண்ட கனவை எப்படிப் பணமாக்குவது என்று யோசித்தார் இரவு முழுவதும் நன்கு யோசித்த பிறகு மறுநாள் காலையில் தாம் கண்ட கனவுகளை கதைகளாக எழுதலானார் அதைப் புத்தகமாகவும் வெளியிட்டார். சொந்தப் பெயரில் அல்லாமல் “நார்மல் பீன்” என்ற புனைப்பெயரிலேயே வெளியிட்டார். கற்பனைக்கும் எட்டாத அக்கட்டுக் கதைகள் முதலில் விலை போகவே இல்லை. பர்ரோ அப்புத்தகங்களை வீடு வீடாக எடுத்துச் சென்று விற்று வந்தார். இதனால் அவருக்கு உணவிற்கு ஓரளவு நடந்து வந்ததே ஒழிய அதிக லாபம் கிடைக்கவில்லை.
பர்ரோ மேலும் சிந்தித்தார். அச்சமயம் ஸ்டேன்லி என்பவர் எழுதிய “இன் டார்க்கஸ்ட் ஆப்பிரிக்கா” என்ற புத்தகம் வெளி வந்தது. அப் புத்தகத்தை வாங்கிப் படித்த பர்ரோவுக்கு, ஒரு யோசனை தோன்றிற்று, அதன்படியே அவர் “குரங்கு மனித”னை உருவாக்கினார். 1912ம் வருஷம் குரங்கு மனிதனின் அவதாரமான “டார்ஜான் கதை” ஒரு பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தது, அதன் பிறகு, அது புத்தகமாக வெளி வந்ததும் மக்ககளிடையே ஏகப் பரபரப்பை உண்டு பண்ணியது.
மக்கள் டார்ஜான் கதையை விரும்புகிறார்கள் என்பதை அறிந்த சினிமாப்படக் கம்பெனிக்காரர்கள் அதைப்படமாகத் தயாரிக்க முற்பட்டனர். அக்காலத்தில் பேசும்படம் இல்லையாதலால் முதலில் எல்மேர் லிங்கன் என்ற பலசாலியை டார்ஜானாகப் போட்டு படம் தயாரித்தனர். டர்க்கிவந்ததும் அதைத் திரும்பவும் பல நடிகர்களைக் கொண்டு படம் தயாரித்தனர். இதுவரை டார்ஜான் கதை இருபத்தி ஐந்து படங்களாக வெளிவந்திருக்கின்றன. அவை அத்தனையும் குரங்குமனிதன் தொடர்ச்சியாக எழுதப்பட்டவை.
சில காரியங்களைச் செய்ய முற்பட்டால், சில சமயங்களில் அது முற்றுப் பெறாது போய்விடும் அதை ஆரம்பித்து வைத்தவராலேயே கூட அதை முடிக்கவும் முடியாது. இந்த வகையைச் சேர்ந்தது டார்ஜான் கதை! பர்ரோ ஒரு சமயம் டார்ஜான் கதையை இதற்கு மேல் ஒரு வரிகூட என்னால் எழுத முடியாது என்று சொன்னாராம். ஆனால் அவரை அறியாமலேயே டார்ஜான் வளர்ந்து கொண்டே இருக்கிறான்.
ஒரு சமயம் அமெரிக்காவில் விளையாட்டு சாமான்கள், சாக்லெட், சோப், பள்ளிச் சிறுவர்கள் எடுத்துச் செல்லும் பைகள், உடைகள் எல்லாவற்றிற்குமே டார்ஜான் பெயர் வைக்கப்பட்டது.
பயங்கரக் கனவுகள் கண்டு, அதைப் புத்தகமாக எழுதி வெளியிட்டு லட்சக் கணக்காகப் பணம் சம்பாதித்த பர்ரோ தாம் இப்படிப் பணக்காரராக ஆவோம் என்று கனவு கண்டாரா என்பது யாருக்காவது தெரியுமா?