வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்/விரும்பாத கதை

15
விரும்பாத கதை வெற்றியைத் தந்தது


ஒருவர் தாம் எழுதிய கதையிலேயே தம் மதிப்புக்கு அகௌரவம் ஏற்பட்டுவிடும் என்று பயந்தார். பிற்காலத்தில் அக்கதையே உலகப் பிரசித்தம் அடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார் என்றால் இதுவே ஒரு சுவாரஸ்யமான கதை அல்லவா?

சுமார் எழுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் “அற்புதத் தீவில் அலைஸ்” என்ற புத்தகம் வெளிவந்தது. அதன் ஆசிரியர் “லூயிஸ் கரேல்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது. அலைஸ் கதை நம்பத்தகாத முறையில் கற்பனை போன போக்கில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், உலகத்து சிறுவர், சிறுமிகளுக்கு அக்கதை மிகவும் பிடித்தமாகி விட்டது. அதனால், அப்புத்தகத்திற்கு பெரிய கிராக்கி ஏற்படலாயிற்று. இதுவரை “அற்புதத் தீவில் அலைஸ்”, 169 பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. பதினான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

“அற்புதத் தீவில் அலைஸ்” என்ற புத்தகத்தை எழுதியவரின் உண்மைப் பெயர் சார்லஸ் எல். டாட்ஸன். அவர் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கதைப் பேராசிரியராக இருந்தார். அத்துடன் அவர் ஓய்வு நேரங்களில் மதப் பிரச்சாரமும் செய்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் டாட்ஸன், தேம்ஸ் நதியில் ஒரு படகில் போய்க்கொண்டிருந்தார். அவருடன் மூன்று சிறுமிகளும் இருந்தனர். அவர்கள் டாட்ஸ்னை ஒரு கதை சொல்லும்படி வேண்டிக்கொண்டனர். தேம்ஸ் நதியில் உல்லாசமாப் படகில் போய்க்கொண்டிருந்த அவர் அற்புதமான கதை ஒன்றைச் சொன்னார். அதைக் கேட்ட அச்சிறுமிகள், அதையே ஒரு புத்தகமாக எழுதினால், நன்றாக இருக்கும்; தங்களைப் போன்ற சிறுவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று வேண்டிக்கொண்டனர்.

பேராசிரியர் வீடு திரும்பியதும் அவர் படகில் சொன்ன கதையை எழுதத் தொடங்கினார். கற்பனையில் தோன்றியபடியெல்லாம் அவர் எழுதினார். அன்று அவருடன் வந்த சிறுமிகளில் ஒருத்தியான அலைஸ் என்பவளுடைய பெயரையே அப்புத்தகத்திற்கு தலைப்பாக வைக்க எண்ணினார். அதன் பயனாக அப்புத்தகத்திற்கு “அற்புதத் தீவில் அலைஸ்” என்று தலைப்புக் கிடைத்தது. ஆனால், அக்கதையை அவர் எழுதி முடித்த பிறகு, படித்துப்பார்த்தார். கதையின் போக்குப்படி அலைஸ் எனற சிறுமி தூங்கப் போகிறாள். பிறகு, ஒரு முயலினுடைய வலையில் இறங்கிப்போய் ஒரு அற்புதத் தீவை அடைகிறாள். அங்கு கண்ட அதிசயங்கள் பல. அதைப் படித்து முடித்த பிறகு, புத்தகமாக வெளியிட அவர் விரும்பவில்லை. அதனால் தம்முடைய மதிப்பே போய்விடும் என்று கருதி, ஒரு மூலையில் அக்கதையின் கையெழுத்துப் பிரதியைப் போட்டுவிட்டார்.

பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஒரு நண்பர் அவரைக் காணவந்தார். நண்பர் கண்ணில் “அற்புதத் தீவில் அலைஸ்” தென்பட்டது. அதை எடுத்துப் படித்தார். கதைப்போக்கு அவருடய மனதைக் கவர்ந்தது அதனால் அதைப் புத்தகமாக வெளியிட அவர் விரும்பினார். டாட்ஸ்னோ அதை வெளியிட விரும்பினாலும், தம்முடைய பெயரை உபயோகிக்கக்கூடாது என்று கூறினார் அவர் விருப்பப்படியே லூயிஸ்கரேல் என்ற புனைபெயரில் அப்புத்தகம் வெளியாயிற்று.

மதிப்பே போய்விடும் என்று எண்ணிய டாட்ஸ்ன் பிற்காலத்தில் “அற்புதத் தீவில் அலைஸ்” இவ்வளவு பிரபலமாகும் என்பதைக் கற்பனைகூடச் செய்து பார்த்திருக்க மாட்டார் அல்லவா?