வாழ்க்கை நலம்/005-061
மனம்-மொழி-மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து! அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான் மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்வாருக்கே புலப்படும்; அங்ஙணம் உணரமாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை! யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும்! அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்.
பற்றுக்களின்று முற்றாக விடுதலை பெற்றவர்கள் நீத்தார் ஆவர். ஆம்! தற்சார்பான பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவர்கள்! மானுட உலகம் இன்று துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பதற்குக் காரணம் ஆசைகளேயாம். இயல்பாக உயிரினம்-குறிப்பாக மனித இனம் தற்சார்பு நிலையிலே மையம் கொள்ளும். அதன் காரணமாகவே வேலிகள், சட்டங்கள், அரசாட்சிகள், சிறைக் கூடங்கள் மானுட வாழ்க்கையில் இடம் பெறலாயின.
இன்று மனிதன் களிப்பை-அமைதியைத் துய்ப்பதில் வெற்றி கண்டானில்லை. மாறாக அமைதியின்மை துக்கம் இவைகளையே அனுபவிக்கிறான். இந்த அவலம் ஏன்? உலகந் தழீஇய ஒட்பத்திற்கே விரிவு உண்டு. ஊக்கம் உண்டு. இந்த ஒட்பம்-அறிவு தனக்குரிய இயலாமையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை; அலட்டிக் கொள்வதில்லை.
மானிட உலகத்தின் தேவைகள் நிறைவேறாமல் நமது தேவை மட்டுமே நிறைவேறும்பொழுதுதான் தீமைகள் கால்கொள்கின்றன. கடைசியில் இவன் தேவையும் நிறைவேறுவதில்லை. ஒரோவழி நிறைவேறினாலும் துய்க்க இயல்வதில்லை. ஒரே ஒரு மாமிசத்துண்டு. இவற்றிற்கு காத்திருக்கும் பருந்துகளின் எண்ணிக்கையோ மிகுதி. என்ன ஆகும்?
உலகம் இல்லாமையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே சிறந்த கொள்கை-கோட்பாடு. உலகத்தை-இந்த உலகத்தின் இயக்க அமைதிகளை அறிந்துகொண்டு அந்த உலக அமைதிகளுக்கு ஏற்றவருக்கு-இசைந்தவாறு ஒழுகும் உரம் நம்மிடத்தில்லை.
"சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு"
என்பது திருக்குறள்.
மானுட உடலமைப்பில் பொறிகள் ஐந்து. இவை முறையே மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாம். இவை அறிவுக் கருவிகள், நுகர்தலுக்கு-அனுபவித்தலுக்கு உரிய கருவிகள். இவற்றை அறிவுக் கருவிகள் என்று கூறினாலும் இவை முழுமையான அறிவுக்கருவிகள் அல்ல. இவற்றை அறிவு வாயில்கள்-என்று கூறுவதே பொருந்தும். இந்தப் பொறிகளின் இயக்கத்தை அறிவார்ந்தனவாக ஆக்குபவை புலன்களேயாகும். இவை அகநிலைக் கருவிகள். புலன்களின் தகுதிப்பாடே, பொறிகளின் தகுதிப்பாட்டிற்கு அடிப்படை.
இன்று பெரும்பாலும்-புலன்கள் செயலற்றுப்போய்ப் பொறிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. எதுபோலவெனில், எல்லா அதிகாரங்களையும் தமக்கே உடையராகப் பெற்றிருக்கும் மக்கள்-வாக்காளர்கள் அரசியல்வாதிக்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் போல! புலன்களை நெறிப்படுத்தும் இயல்பு-புலன்களின் நுகர்வுக்கு அனுபவத்திற்குரிய பொருள்களைப் பொறுத்தது.
புலன்களின் அனுபவத்திற்குரிய சுவை-ஒளி-ஊறு -ஓசை-நாற்றம் ஆகியவற்றின் இயல்புணர்ந்தோர் அவற்றை-முறைப்படுத்திக் கொள்வன கொள்வர் உயர் அறிவினர்! இவைகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பூத பெளதிகம் அறிந்து-அவற்றின் இயக்கத்துக்கு மாறு படாமலும், முற்றாக உடன்படாமலும் தக்காங்கு ஒத்திசைந்து வாழ்தலே வாழ்க்கை! சிறப்புடைய வாழ்க்கை! இத்தகையாரே நீத்தார்!
புலன்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால் பொறிகள் மிகவும் ஒழுங்கும், ஒழுக்கமும் உடையனவாக அமையும் புலன்களுக்கு அழுக்கினைச் சேர்க்கும் பொறிகளைப் பக்குவப்படுத்த வேண்டும்.
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"
"அவித்தல்" என்றால் அழித்தல்-அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறையின்று. அவித்தல்-பக்குவப்படுத்துதல். உண்ண முடியாத கிழங்கு முதலியவைகளை அவித்துப் பக்குவப்படுத்துதலைப்போல என்று அறிக. பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர் உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும்; பக்குவம் அடையும்; புலன்களும் தூய்மையாக இருக்கும்.
பற்றற்ற நிலை என்று ஒரு சூன்ய நிலை-வாழ்க்கையில் இல்லை. பற்று இல்லாமல் இருக்கமுடியாது. பற்று எதன்மீது வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே சீலம் அமைகிறது; நீத்தாருக்குரிய இயல்பு வந்தமைகிறது. தன்மீதும் தனக்குரிய தேவைகள் மீதும் பற்று வைப்பதற்குப் பதில், மற்றவர்கள் மீதும் மற்றவர்களின் இன்பங்களை நாடும்பொழுதும் - நீத்தார் தன்மை வந்தமைகிறது.
இத்தகு நீத்தார்க்குத் தற்சார்பின்மையால் விருப்பு வெறுப்புக்கள் இல்லை. விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை. சார்பு இன்மையால் சமநிலை சார்பு இல்லையேல் நன்மையும் தீமையும் இல்லை. இத்தகையோரே அறம் இன்னதென நமக்கு உணர்த்தவும் முடியும். இத்தகு நீத்தார் பலர் இன்று தேவை.