வாழ்க்கை நலம்/016-061
வரலாற்று ஆசிரியன் சென்ற காலத் தலைமுறைகளை விவரித்துப் பேசுவான். ஆனால் இலக்கியப் படைப்பாளன் எதிர்வரும் தலைமுறையினரைப் பற்றிச் சிந்திப்பான்; எழுதுவான். எப்போதும் அறிஞர்களுடைய கவலை அடுத்த தலைமுறையைப் பற்றியதாகவே அமையும். திருக்குறள் ஒரு முழுதுறழ் இலக்கியம், அறநூல்; வாழ்க்கை நூல். ஆதலால் திருக்குறள் எதிர்காலத் தலைமுறையினரை பற்றிப் பேசுவது வியப்பல்ல. அதுமட்டுமல்ல இன்று வாழ்பவர்களுக்கு எதிர்காலத்தைச் சிறப்புற அமையச் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துகிறது.
இன்று வாழ்வோரின் கடமை, இவர்கள் வாழ்ந்து முடிப்பது மட்டுமல்ல, அடுத்து வரும் தலைமுறையினர் சிறப்போடு வாழ்தலுக்குரிய சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பது திருக்குறளின் கருத்து; முடிவும்கூட. மனையற வாழ்க்கையின் மாண்பு, காதல் சிறப்பில் இல்லை; சுவைமிக்க உணவில் இல்லை; செய்து குவித்த பொருளில் இல்லை. வேறு எதில்தான் இருக்கிறது மனையறத்தின் சிறப்பு? ஆம்! அறிவறிந்த மக்களைப் பெறுவதில்தான், மனையறத்தின் மாண்பு பொருந்தியிருக்கிறது.
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற"
என்பது திருக்குறள். 'அறிவறிந்த' என்ற சொல்லை மக்களுடன் சேர்த்து அறிவறிந்த மக்கள் என்பார்கள் உரையாசிரியர்கள். அறிவு, கல்வி கேள்விகளாலும், வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலும் தோன்றுவது. ஆதலால் மக்கள் பிறந்து வளர்ந்த பிறகுதான் அறிவறிந்த ம க் க ளா த ல் இ ய லு ம். ஆதலால் அறிவறிந்த என்ற சொல்லை மக்களின் பெற்றோர்கள் பால் சேர்த்துக் கூறுவதே பொருத்தம். ஆம்! பெற்றோர்கள் காதல் மனையற வாழ்க்கையை அறிவறிந்த நிலையில் நடத்துதல் வேண்டும். காமக்களியாட்டமாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அறிவார்ந்த நிலையில் அன்பும் அறமும் கலந்த ஊனை, உயிரை, உணர்வினைக் கடந்த நிலையில் கூடுதல் நிகழுமாயின் அறிவறிந்த மக்கள் தோன்றுவர்.
பிறப்பில் கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அதைப் போலவே வளர்ப்பிலும் கவனமாக இருத்தல் வேண்டும். பொதுவாக நமது நாட்டில் கிராமப் புறங்களில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை. அவர்களாகவே வளர்கிறார்கள். அதனால்தான் நமது சமுதாயத்தில் தரம் குறைந்திருக்கிறது.குடும்பம் மனையறத்தில் சிறந்து விளங்கினால் அக்குடும்பம் மனிதகுல வரலாற்றிலேயே இடம்பெறும். ஒருவர் தமது முன்னோரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் வளர்ச்சியின்மையைக் குறிப்பதாகும். மாறாகத் தனக்குத்தானே அறிமுகமாக விளங்கி வாழ்பவர்கள், தமது குடும்பத்திற்கும் விளக்கம் தருகிறார்கள். இவரைப் பெறுவதற்கு இவருடைய தந்தையும், தாயும் என்ன தவம் செய்தனரோ என்று வியக்கும் அளவுக்கு வாழக்கூடிய தகுதி, திறன்களுடன் மகவை வளர்க்க வேண்டும். நல்ல தாய், நல்ல தந்தை என்று பெயர் விளங்க வாழ்தலே சிறப்புற அமைந்த மனையற வாழ்க்கை.
"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லென்னுஞ் சொல்"