23. பொறையுடைமை

பொறுமை-பொறுத்தாற்றுதல், பொறுமை பலவகை. துன்பம் வந்துற்றபோது பொறுத்துக் கொள்ளல், நோய் வந்தபோது பொறுத்துக் கொள்ளல், பிறர் கூறும் பழிச்சொற்களைப் பொறுத்துக் கொள்ளல், பிறர் செய்யும் ஊறினைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளல் என்று பல வகையாகப் பிரித்துணரலாம். ஆ யி னு ம் பொறுத்தாற்றுதல் என்பது ஒரே பண்புதான். தன்னைச் சார்ந்து தன்னாலேயே உருவாக்கிக் கொள்ளப் பெற்ற துன்பங்களுக்கு காரணம் அவரவரே. இதனை அவர்கள் தாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த இடங்களில் பொறுமை இயற்கை. ஆனால் இந்த இடங்களில் கோபம் வந்தால் கூட ஒரே வழி வரவேற்கலாம். இங்கே தங்களுடைய துன்பங்களுக்குக் காரணமான தவறுகளை - அறியாமை, வறுமை முதலியவற்றை நினைந்து அவற்றினோடு போராடத் துணியலாம். இந்த வகையில் வர வேற்கத் தக்கதேயாம்.

ஆனால் பிறர் தன்னை இழித்துப் பேசியபொழுது, பிறர் தமக்குக் கொடிய துன்பங்களைச் செய்த பொழுது-உடலுக்கு ஊறு முதலியன செய்த பொழுதும் பொறுமையை மேற்கொள்ளல் அரிது. இந்த மாதிரித் தருணங்களில் பொறுமை காட்டலே பொறுமை எனப்படும். போற்றுவதற்குப் பதிலாகத் தூற்றுபவர்களிடம் பொறுமையாக இருத்தலே பொறையுடைமை. "பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்" என்றது கலித்தொகை. நாடவர் பழித்துரையைப் பூணாக ஏற்றுக்கொண்டாலே உய்தி பெறலாம் என்பது திருவாசகக் கருத்து. பண்புகளில் சிறந்தது பொறையுடைமை. அதே போழ்து பொறையுடைமைப் பண்பு ஆளுமையைச் சார்ந்து விளங்க வேண்டும். ஆளுமை இல்லாதவர்களிடம் உள்ள பொறையுடைமைப் பண்பு ஆகாது. இதற்குப்பெயர் கோழைத்தனம். நாட்டு மக்கள் பொறையுடைமையின் பெயரால் கோழைகளாகக் கூடாது. ஆளுமைப்பண்பு தழுவிய பொறையுடையவராய் இருத்தல் வேண்டும். இதுவே திருக்குறளின் கருத்து.

ஆடாது, அசையாது — கற்களாக உடைத்தாலும் பொறுமையாக இருக்கும் மலையைப் பொறுமைக்குச் சான்றாகத் திருக்குறள் கூறவில்லை. திருக்குறள் பொறையுடைமைக்கு எடுத்துக் காட்டாக நிலத்தைக் கூறுகிறது. ஏன்? நிலம் உழப்படுகிறது. உழுவதன்மூலம் நிலத்திற்கு ஊறு செய்யப்படுகிறது. நிலம் மண்வெட்டி கொண்டு கொத்தப்படுகிறது; வெட்டப்படுகிறது, நிலத்தின் பரப்பில் கீறல்கள், வெட்டுப் பள்ளங்கள் தோன்றுகின்றன. ஆயினும் நிலம் இத்துன்பங்கள் செய்தாரைச் சினப்பதில்லை; அவருக்குத் தீமை செய்வதில்லை. மாறாகத் தனக்குச் செய்யும் ஊறுகளையே ஆக்கமாக எடுத்துக் கொண்டு நிலம் செழுமையை அடைகிறது; வளம் கொழிக்கிறது. அந்த வளத்தினைத் தனக்குத் தீமை செய்த மனித குலத்திற்கே திரும்பத் தந்து விடுகிறது. அவர்கள் வாழ்க்கையை வளமாக்குகிறது; உயர்த்துகிறது மலைக்கு இந்த இயல்பில்லை. மற்றவர்கள் மலையைக் குடைந்து கல் உடைத்து எடுத்தால் மலை பொறுத்துக் கொள்வது உண்மை; ஆனால் தன்னை அழித்துக் கொள்கிறது; கல் உடைப்பவனுக்கும் நெடிய பயன் தருவதில்லை. ஆனால் உழப்பெறும் - கொத்தப்பெறும் நிலம் அழிவதில்லை, த ன க் கு ஏற்பட்ட அழிவையே ஆக்கமாக மாற்றிக் கொண்டு வளம் கொழிக்கிறது; வாழ்விக்கிறது; நிலையாக வாழ்விக்கிறது. அதுபோல் பொறுமைப் பண்பின் மூலம் ஒரு மனிதன் அல்லது ஒரு இனம் அழிந்துவிடக் கூடாது; வளர வேண்டும். பொறுத்தல் என்ற பண்பு ஆக்கத்தின் பாற்பட்டது. "பொறுமையும் சா ந் த மு ம் ஒருவனுக்கு ஆற்றிலைக் கொடுப்பன" என்றார் லேஹண்ட்.

      "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
       இகழ்வார்ப் பொறுத்தல் தலை"(குறள்—151)

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_நலம்/023-061&oldid=1142274" இலிருந்து மீள்விக்கப்பட்டது