28. உழைத்து வாழ்க !




         "நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
          குற்றமும் ஆங்கே தரும்"(குறள் 171)

இந்தத் திருக்குறள் சொற்பொருள் நிறைந்தது. பொருளில் தத்துவமும் அறநெறிக் கோட்பாடும் பொதிந்த திருக்குறள் இது!

'நடுவுநிலை' என்பது ஒர் உயர்ந்த வாழ்வியல் தத்துவம்; கொள்கை; கோட்பாடு! நியாயம்-அநியாயம், நீதி-அநீதி ஆகியவற்றுக்கிடையில் யார் பக்கமும் சாராது நிற்றல் என்பது பொருளல்ல. இங்ஙனம் நிற்றல், அதாவது அநீதிக்கும் நீதிக்கும் இடையே நடுநிலையாக நிற்றல் என்பது அறியாமை; கோழைத்தனம்! இல்லை, அநீதிக்கே துணை போவது போலத்தான் !

ஆதலால் அநீதி-நீதி இவற்றுக்கிடையே மோதல் வந்தால் தற்சார்பு, அச்சம், அவா ஆகியவற்றின் காரணமாக எது நீதியெனத் தெரிந்து கூறாது, சார்ந்து நில்லாது விடுதல் நடுவுநிலையன்று. அதுபோலவே பொருள், உழைப்பால் படைக்கப்படுவது; உரிமையால் பேணப்படுவது.

உழைப்பவர் படைத்த பொருளை உழைக்காமல் அடைய நினைப்பது, உரிமை கொண்டாடுவது நடுவு நிலைமையுடைய சார்பல்ல. உழைப்பவர்க்கே பொருள் உரிமை ! உண்ணும் உரிமை !

"நன்பொருள்" - பரிசுச் சீட்டில் கிடைத்த பொருளல்ல; பிறர் பங்குப் பொருள் அல்ல; சலத்தால் செய்த பொருளும் அல்ல. உழைப்பில் உருவாய பொருள். அதனால் "நன்பொருள்" என்றார்.

ஒருவருடைய உழைப்பின் பொருளை, ஒருவர் திருடிக் கொண்டால் அந்தக் குடும்பம் வளர்ந்து விடாது. ஏன்; பொருளைவிடப் பொருளைப் படைக்கும் உழைப்பாற்றல் விலை மதிப்புடையது, மாறாத் தன்மையுடையது; ஊற்று வளம் நிகர்த்தது. சுரண்டுதல் மூலம் பிறர் பொருள் கிடைப்பின் வாழ்க்கையின் தேவைக்குக் கிடைத்து விடுவதால் உழைக்கும் உணர்வு தலையெடுக்காது.

அதனால் உழைப்பாற்றல் மிக்க புலன்கள், பொறிகள் காலப்போக்கில் தம்முடைய உழைக்கும் தகுதியை இழக்கும். நோய் கொள்முதல் ஆகும்! ஏமாற்றப்படுபவன் விழித்துக் கொண்டால் சுரண்டவும் இயலாமல் போய் விடும்! அப்புறம்?

வாழ்க்கை திண்டாட்டம்தான்! அதனால், வாழ்வு கெடும்! உழைக்கும் இயல்பின்மையால் குற்றங்கள் செய்து வாழும் நிலை உருவாகும். அதனால் திறமை, ஒழுக்கம், பண்பாடு வளர உழைப்பு தேவை! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலே வாழ்வு! உழைக்கும் வாழ்வே அறவாழ்வு ! நலவாழ்வு !

"https://ta.wikisource.org/w/index.php?title=வாழ்க்கை_நலம்/028-061&oldid=1142279" இலிருந்து மீள்விக்கப்பட்டது