விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/அக்டோபர் 2017/17
"பல்லவப் பேரரசர்", டாக்டர். மா. இராசமாணிக்கனார் எழுதிய வரலாற்று நூலாகும். இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை-நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின்புறலாம்.
1. பல்லவர் யாவர்? பல்லவர் யாவர்? இக்கேள்விக்குத் திட்டமான பதில் கூறக்கூடவில்லை. பல்லவர் ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகள் தென்னிந்தியாவிற் பேரரசு செலுத்தினவர். அவர்கள் என்றும் அழியாத நிலையில் பல குகைக்கோவில்களை அமைத்திருக்கிறார்கள். பாறைகளையே கோவில்களாக மாற்றியிருக்கிறார்கள்; பிராக்ருத மொழியிலும் வடமொழியிலும் கிரந்த - தமிழ் மொழியிலும் தங்கள் பட்டயங்களையும் கல்வெட்டு களையும் வெளியிட்டிருக்கிறார்கள், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம், குமார மார்த்தாண்ட புரம், பல்லவபுரம் (பல்லாவரம்), மஹேந்திரவாடி, பரமேஸ்வர மங்கலம், மஹேந்திர மங்கலம், மஹாமல்லபுரம் என்று பல இடங்கட்குத் தங்கள் பெயர்களை வழங்கியிருக்கிறார்கள் பல கோவில்கட்கு இராஜசிம்மேஸ்வரம், வித்யாவிநீத் பல்லவேஸ்வரம், பரமேஸ்வர் விண்ணகரம், சத்ருமல்லேஸ்வரம், மஹேந்திரவிஷ்ணுக்ருஹம், மஹேந்திரப்பள்ளி என்று தங்கள் பெயர்களை இட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும், அவர்கள் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் என்பதை உணர்த்துகின்றனவே தவிர, அவர்கள் யாவர்? எங்கிருந்து வந்தவர்? என்னும் கேள்விகட்கு விடை அளிப்பனவாக இல்லை. இதனால், ஆராய்ச்சி அறிஞர் பலவாறு முடிபு கூறி வருகின்றனர். |